Skip to main content

கீழ்தாடை உடைந்த நாய்



நகரத்தின் ஈரச்சந்தையில் அன்றைக்குக் கிடைக்கும் உயிர்களின் சகல அங்கங்களும் சமையலாகும் உணவு விடுதி இருக்கும் தெருவுக்கு, கீழ்தாடையில் பாதியை நிரந்தரமாய் இழ்ந்த நாய் அடைக்கலமாய் வந்து சேர்ந்துள்ளது. தெற்கத்திய கிராமங்களிலிருந்து வந்த நாரைகள், ஆழ்கடலிலிருந்து வந்த இறால்கள், சுடச்சுட ருசிக்கப்பட்ட முயல்களின் எலும்புகளோடு வெளியே மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் வழிய வழியக் கொட்டப்படுகின்றன. உபரியை விருந்தாய் வயிறுகளில் கொட்டிக் கழிப்பது வரலாறாய் தொடர்வது இன்றும் நகரங்களில் குப்பைகளாலேயே நினைவூட்டப்படுகிறது. பகட்டின் கொழுப்பு மின்னும் இறைச்சி ஒட்டிய எலும்புகளை, விளிம்பு உடைந்த சட்டியைப் போல வாயை வைத்திருக்கும் தாடை உடைந்த நாய், தன் நாக்கால் தொட்டுத் தொட்டு இன்றும் தடவிக் கொண்டிருக்கிறது. விருந்தை விள்ளவோ கொள்ளவோ முடியாத மௌனம் தடித்த இரவுகளை, அந்த கீழ்தாடை உடைந்த நாய் கடக்கிறது. உணவை ஒரு நிழலைப் போல நக்கி நிறைவுறும் நிலையில், இத்தெருவில் கழிப்பது துரதிர்ஷ்டமானதும் அபத்தமானதும் கூட. உங்களைப் போல, என்னைப் போல யாரிடமும் பகிரவோ, கவிதையாக எழுதி இறக்கிவைக்கவோ அதற்கு முடியாது. காமம், உணவு, வன்மம், வருத்தத்தைத் திட்டவட்டமாகப் பிரித்துச் சமைக்கக்கூடிய அறிநினைவின் கிண்ணங்கள் அடுக்கப்பட்ட விஸ்தாரச் சமையலறை அல்ல, அதற்கு மூளை. ஒரு விபத்தில் நொறுங்கி, அதன் தாடையே அடையாளமாகிவிட்ட அந்தக் நாய், இந்தத் தெருவுக்கு வந்து சேர்ந்திருப்பதும் கடவுளுக்கு நேரும் அஜீரணம் போன்றவொரு விபத்தே. நாய் என்று சொல்வதற்கு, மற்ற நாய்களுடன் நாயாகச் சேர்ந்திருப்பதற்கு அடையாளமான ஒரு அங்கத்தையும் இழந்துவிட்ட அது, தன்னைப் பூர்வத்தில் நாயாக இருந்த உயிரென்று மட்டும்தான் தற்போது சொல்லிக் கொள்ளமுடியும். அது  இங்கிருந்துதான், இனி தனது கனவுகளைக் காண வேண்டும்; ஒரு நாளின் நிகழ்ச்சிநிரலை இந்த நொறுங்கிய தாடையுடன் தான் அது வரைய முயல வேண்டும், அந்தக் கீழ்தாடை உடைந்த நாய்...            


Comments