Skip to main content

நகுலனில் 'சலிப்பு'



ப்ரவுனியையோ என்னையோ நினைவில் காடுள்ள மிருகம் என்று சொல்ல முடியுமா?

உயிர் மரபில் எங்கோ காடு சலிக்கப்பட்டு, காட்டின் சாயல் மட்டும் ப்ரவுனிக்கு மிஞ்சவோ போதவோ செய்திருக்கிறது என்றே கருதுகிறேன். அத்தனை பிரமாண்டமான பழைய காட்டை என் சின்ன ப்ரவுனியின் மேல் எதற்கு சுமத்த வேண்டும்.

ப்ரவுனிக்குக் காட்டின் சாயல் போதும். 


பூ
னை
சலித்தது
பூ
முகம் 

ஆனது

அவள்.

இரண்டு ஓட்டைக் கண்கள், ஒரு வாய் சேர்ந்ததுதான் முகம் என்றால் பூனையும் ஓயாமல் உரையாடிக் கொண்டேயிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர்தானே. எல்லாம் முடிவதற்கு முன்னர், சாவுக்கு முன்னரே, எல்லாவற்றையும் முடிப்பது எப்படி என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. நள்ளிரவில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தேய்ந்த கருப்புவெள்ளை முகத்தைப் பார்க்கும்போது, முகம் சலித்து, அவர் ஒரு கபாலத்தின் நிழலாக மாறிவிடுகிறார். கபாலத்தில் கண்கள் மட்டும் உயிர்தரித்து என்னிடம் வாழ்வைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது. 

உயிர் சலிக்கிறது உடல் சலிக்கிறது இயற்கை சலிக்கிறது நிலம் சலிக்கிறது வேளை சலிக்கிறது பருவம் சலிக்கிறது. இது நிகழ்ச்சி. 

போதும், என்னை விட்டுவிடேன் என்ற சலிப்பு; அது உணர்வு. 

விரல்களால் அளைந்து, தட்டித் தட்டி, அசைத்து அசைத்து, நீக்கி நீக்கி, களைந்து களைந்து, தள்ளித் தள்ளி,  நுணுகி நுணுகி ஒரு உள்ளடக்கத்தை, ஒரு பொருளைக் கண்டடைதலைக் குறிப்பது சலிப்பு, சலித்தல் எனப்படுகிறது. அது செயல். 

சலிப்பை, சலித்தலை நகுலன் திரும்பத் திரும்ப அணுகியபடி தனது படைப்புகளில் இருந்திருக்கிறார். பகல் சலிப்பதை, மரம் சலிப்பதை, ஆள் சலிப்பதை, பொருட்கள் சலிப்பை அனுபவமாக அவர் ஆக்கியிருக்கிறார்.

நிகழ்ச்சியாக உணர்வாக செயலாக சலிப்பு நகுலனிடம் தொழில்படுகிறது. 

களத்து மேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன;
அவன்
மீசையை
எறும்புக் கூட்டங்கள்
அரித்தன;
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.

- நகுலன்

சலித்தல் என்னும் நிகழ்ச்சி 'மாவீரன்' மீதும் இந்தக் கவிதையில் நிகழ்கிறது. சலித்தல் என்ற அந்த நிகழ்ச்சியை நிகழ்த்துவது போலத் தெரியும் மாவீரனின் முகமும் மகா சாவதானமாக இந்தக் கவிதையில் காண்பிக்கப்படுகிறது. 

மாவீரனின் உள்ளடக்கத்தைச் சுற்றி இயற்கை ஓயாமல் அரித்துச் சலித்துக் கொண்டிருக்கிறது. 

அது பொம்மை என்பதாலா, அதற்குத் தனது அழிவைப் பார்த்து இத்தனை சாவதானம்?

அவன் மாவீரன் என்பதாலா, தனது அழிவைப் பார்த்து இத்தனை மகா சாவதானம்?

தெரியவில்லை. 

அந்த சாவதானத்தை எது பார்க்கிறது. அந்த 'அது' தான் நகுலனில் பார்த்துக் கொண்டிருக்கிறது. நகுலன் ச                          லித்துக் கண்டெடுத்த 'அது'.


அது


காதலுக்குப் பின்
தொழிலின் இறுதியில்
உலகைவிட்டுப் பிரிகையில்
சாவுக்கு அப்பால்
முதலுக்கும் முடிவுக்கும்
முன்னும் பின்னும்
முழுவதுமாகப்
பின்னிப் பிணைந்து
நில்லாமல் நிற்பது
இல்லாமல் இருப்பது
தெரியாமல் தெரிவது
சொல்லாமல் சொல்லிக் கொள்வது
எல்லாரும் நினைப்பது
யாரையும் கடந்தது
புலனுக்குப் புரியாதது
பொருளுக்குச் சிக்காதது
என்றுமே கேள்வியாக
எஞ்சி நிற்பது
அது அதுவே.

- நகுலன்

சற்று முன்னர் பாரதியில் இந்தச் சலிப்பு குறித்த குறிப்பைக் காண்கிறோம். பாரதியின் கவித்துவம், படங்களாக உருமாறி நம்முன்னர் துடிக்கும் சிறந்த உரைநடை எழுத்துகளில் ஒன்றான பகவத் கீதை முன்னுரையில் சலிப்பு பற்றிய இந்தக் குறிப்பு வருகிறது. 

சூரியக் கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் - 

கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியா? அன்று, அநந்தம், எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் கணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் கணந்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இது அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.  

இந்தத் தீபாவளியின் அதிகாலையைச் சலித்துக் கொண்டிருக்கும் மழையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இருந்தவர்கள் சென்றவர்களின் அரவங்களைக் கொளுத்தி வெடித்துக் கொண்டிருக்கிறது இந்த மழை.

Comments

praveenpagruli said…



செயல் , உணர்வு, நிகழ்ச்சி என முக்குணங்களில் நகுலனின் சலித்தலை அணுகித் திறக்கும் கண்டறிதல் அற்புதம். தொடர்ந்து நகுலனை அணுகும் திறவுகளை அளிக்கிறீர்கள்.
மலையிலிருந்து மலையைத் தாண்டுவது போல நகுலனில் இருந்து பாரதிக்கு, அபாரமான ஓர் உள்முடிச்சு. சலித்தலை சிருஷ்டியாக, அழித்தெழுதலாக கடவுளின் வினைப்பாடாக பாரதி கண்டிருக்கும் இடம் அபூர்வம். இந்தப் பதிவின் இறுதி வரிகளில் பிரபஞ்ச ரீதியான ஓர் அடி சூட்சமத்தைத் தொடும் போதை பீறிடுகிறது..நன்றி...

செயல் , உணர்வு, நிகழ்ச்சியில் நிகழ்ச்சியே பிரதான சலித்தலாகுமோ. செயல், உணர்வு இரண்டும் கூட நிகழ்ச்சியின் உட்பகுதிகள்தான் எனும்போது..மனிதப்பாட்டுக்கும் பிரக்ஞைக்கும் அப்பால் நிகழ்ச்சிதானே நித்தியம்..மனமும் ஒரு நிகழ்ச்சிதான் என்று கொண்டால்.

எண்ணங்களை தொடர்ந்து கிளர்த்தும் பதிவுகளுக்கு நன்றி..