Skip to main content

எருமைப் பாலுக்கு என்ன ஆனது?



என் சிறுவயதில் பால் வாங்கப் போகும்போது, பசும்பால் வேண்டாம் என்றும் எருமைப்பால் வாங்க வேண்டும் என்றும், டம்ளரைக் கொடுக்கும்போதே  அம்மா ஞாபகப்படுத்துவாள். எருமைப்பால் தான் உடம்புக்கு நல்லது, கூடுதல் சத்துள்ளது என்ற பொது உணர்வு தொழில்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தூய பசும்பால் என்ற பெயரில் ஒரு பெரும் வர்த்தகம் தொடங்கியுள்ளது. வேளச்சேரியிலேயே பண்ணையிலிருந்து பசும்பாலைத் தருவித்துத் தருவதற்காக மூன்று கடைகள் உள்ளன. 'மரம்' என்ற பெயரில் பசும்பாலைக் குப்பிகளில் கொடுக்கும் பிராண்ட் ஒன்று வேளச்சேரியை முன்னிட்டு இயங்குகிறது. தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருவது தகவல் தொழில்நுட்பத் தொழிலுக்கு விடைகொடுத்து நம்மாழ்வாரின் தாக்கம்பெற்ற தெற்கத்தி வாலிபர் ஒருவர். வேளச்சேரியின் பூர்விகப் பெயர் வேதஸ்ரேனி என்ற ஒரு புராணிகமும் கடந்த பத்தாண்டில் தண்டீஸ்வரம் கோயிலில் தொடங்கி, ஊர் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. வேதஸ்ரேனி என்ற பெயரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும் எழுந்துவருகிறது. வேளச்சேரி வேதஸ்ரேனி ஆவதற்கும், புரதச்சத்து வாய்ந்ததாக ஒரு காலம்வரை கருதப்பட்ட எருமைப்பாலைக் கடந்து  மேன்மையான பாலாக பசும்பால் மாறியதற்கும் தொடர்பு இருக்கிறது. காஞ்ச அய்லய்யா எழுதி, கவின்மலர் தமிழில் மொழிபெயர்த்து, தலித் முரசு - கருப்பு பிரதிகள்  வெளியிட்டிருக்கும் 'எருமை தேசியம்' நூலைப் படித்தபோது உடன் தோன்றிய எண்ணங்கள் இவை. நட்பு சக்திகள் எதிரெதிர் திசைகளுக்குத் தள்ளப்பட்டு, ஒவ்வொரு அடையாளமும் ஒவ்வொரு சமூகமூம் ஒவ்வொரு தரப்பும், வெறுப்பு மற்றும் சந்தேகங்களால், பிரித்தாளும் உபாயத்துக்கு எளிதாக இலக்காகியுள்ள நிலையில் காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல் கண்டுகொள்ளப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. 

ஏனெனில் தலித்களையும் பிற்படுத்தப்பட்டோரையும் சிறுபான்மைச் சமூகங்களையும் அவர்களது இயக்கங்களையும் இணைத்து அவர்களோடு உரையாடலை நடத்துபவதாக காஞ்ச அய்லய்யாவின் எழுத்துகள் உள்ளன. அம்பேத்கர், பெரியாரால் தாக்கமுற்றவர். காஞ்சா அய்லய்யா எழுதி, அருணா ரத்னம் மொழிபெயர்த்த 'பானை செய்வோம் பயிர் செய்வோம்' புத்தகம் என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடம் இருக்கும் கைவினைத்திறன், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நூல் இது. ஆங்கிலத்தில் நவயானா பதிப்பகம் ஓவியங்களுடன் வெளியிட்ட நூலை, தாரா பதிப்பகம் தமிழில் வெளியிட்டது. 

பசுவை ஆதிக்கத்தின் முக்கிய அடையாளமாக உருவாக்கி, இந்தியா முழுவதும் நடக்கும் ஆன்மிக பாசிசத்துக்கு மாற்றாக, தலித் பகுஜன் அரசியலின் அடையாளமாக எருமையை முன்வைத்து இந்தப் புத்தகத்திலுள்ள  கட்டுரைகள் பேசுகின்றன. 

இந்தியாவில் தலித்கள் மற்றும் பகுஜன்கள், எருமைகளின் அந்தஸ்தில்தான் உள்ளனர் என்கிறார் காஞ்சா அய்லய்யா. பசுக்களை விட அளவிலும் சத்திலும் அதிகப் பாலைக் கொடுத்து, ஆனால் வர்ண அடுக்கில் கீழ்நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் காஞ்சா அய்லய்யா. 

நூலின் ஆரம்பத்தில் இந்தியாவின் வரலாற்றில் நடந்த மிக துயரகரமானதும், நீடித்த இருட்டைக் கொண்டுவந்ததுமான பாபர் மசூதி நிகழ்ச்சியை நினைவுகூர்கிறார் காஞ்ச அய்லய்யா. ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கு திரட்டப்பட்ட ஆட்படைகளை ஒட்டுமொத்தமாக பிற பிற்படுத்தப்பட்டவர் சமூகங்கள் தான் கொடுத்தன. கலவரம் சார்ந்து சிறையில் அடைக்கப்பட்டவர்களில் உயர்சாதி கலவரக்காரர்கள் குறித்த எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால், இன்றுவரை கலவரங்களில் மோதிக்கொண்ட பிற பிற்படுத்தப்பட்டவர்களும் முஸ்லிம்களும் தனியார் துறைகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட கலவரங்களில், மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களே அழைத்துவரப்பட்டதை இங்கே நினைவுகூர வேண்டும். பாட்டி தாத்தா கதைகள் வழியாக மட்டுமே அந்தப் பழங்குடிகளுக்கு அறிமுகமானவர்கள் முஸ்லிம்கள். ஒரு முஸ்லிமைக்கூட நூற்றாண்டுகளாகப் பார்க்க வாய்த்திராத அந்தப் பழங்குடி கிராமங்களில் இருந்துதான் குஜராத்தின் நகரங்களுக்கு கலவரத்தில் ஈடுபடுவதற்காக பழங்குடி மக்கள் மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர். தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு கிறிஸ்தவர்களைப் பார்த்து இஸ்லாமிய அறிவுஜீவிகள் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறார் காஞ்ச அய்லய்யா. குஜராத் கலவரம் போன்ற நிகழ்ச்சி இனி நடைபெறுவதைத் தடுக்க, ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமை தான் ஒரே வழி என்கிறார். தலித்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான கசப்பும் வெறுப்பும், வரலாற்று காலமாகத் தங்களை ஒடுக்கும் உயர்சாதியினருடன், தலித்கள் கைகோர்ப்பதில் சென்றுவிடக்கூடாது என்கிறார் காஞ்ச அய்லய்யா. அது தலித் அரசியலுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் ஒவ்வொரு சிறுபான்மை சித்தாந்தத்துக்கும் முடிவைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கிறார் காஞ்ச அய்லய்யா.

பெரும்பான்மை மதவாத அரசியலும், சர்வாதிகாரமும், சாதி, அடையாள ரீதியான பிரிவினைவாத சக்திகளும் இன்று தேசத்தை அச்சுறுத்தி வரும் சூழலில் காஞ்ச அய்லய்யாவின் 'எருமை தேசியம்' நூல் படித்துப் பரவலாக விவாதிக்கப்பட வேண்டியது; நமது மௌடீகத்தால், நமது வழக்கமான மௌனத்தால், நமது அலட்சியத்தால் கடந்துவிடக்கூடாதது.

பசு எங்கெல்லாம் நின்றுகொண்டிருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும்போது, தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் உச்சத்தில் இருந்தபோது, காஞ்சிப் பெரியவர், மகாத்மா காந்தியை கேரளத்தில்  சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் சாயங்கால வேளையில் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் இதுவரை பகிரங்கமாக்கப்படவில்லை. ஆனால், கோயில் நுழைவுப் போராட்டம் சார்ந்த தனது நிலைப்பாட்டை காந்திக்குத் தெரிவிக்கவே காஞ்சிப் பெரியவர், அவரைச் சந்தித்தார் என்பது தெளிவு. அ. மார்க்ஸ் இந்தச் சந்திப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். 

 மகாத்மா என்று தேசம் மதிக்கும் காந்தியைச் சந்திக்க மகாபெரியவர், தேர்ந்தெடுத்த இடம் ஒரு மாட்டுத் தொழுவம். அங்கே பசுதான் இருந்தது என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. 

Comments