Skip to main content

நான் பிறந்த க-வி-தை -ழாக் ப்ரெவர் - இன்னலின் கரும்பலகையில் வரையப்பட்ட மகிழ்ச்சியின் முகம்


முன்னிலையற்ற காதல், குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கத்தின் பாதை உருவாகாத கவிதை லட்சியம் - இரண்டும் உருவாக்கிய உத்வேகம், மகிழ்ச்சி, ஆற்றலின் குழந்தையாக அப்போது இருந்தேன். வேலை, அந்தஸ்து, பொருள், இணை சார்ந்த விழைவு எனப் புறம் அளிக்கும் நிர்ப்பந்தங்கள் அனைத்தையும் என் சின்ன அகத்தின் வாசலில் செருப்புகளைப் போலத் தைரியமாக, அதேவேளையில் அனிச்சையாகக் கழற்றிப் போட்டிருந்தேன். சற்றே உடல் அளவில் வளர்ந்திருந்த, ஊரிலிருந்து நகரத்துக்குக் கிளம்பிவந்து புதிது கொடுக்கும் எல்லாவற்றையும் பேதம் பார்க்காமல், ஆசையோடும் பரபரப்போடும் நடுக்கத்தோடும் கலாசார விலக்கமாக மொழிபெயர்க்கப்படாத அச்சத்தோடும் வியப்போடும் பருகிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ் புதுக்கவிதையில் குழந்தையின் கள்ளமற்ற தன்மையோ, விளையாட்டோ போதுமான அளவு ஏன் பதிவாகவில்லை என்ற கேள்வி எனக்கு இருந்தது. 

ஒரு உணவோ, ஒரு நாய்க்குட்டியின் முகமோ, பெயரே தெரியாமல் தெருவின் திருப்பத்தில் நம்மைச் சிறியதொரு வாஞ்சையால் அங்கீகரித்துவிட்டுப் போகும் யுவதியின் வதனமோ கொடுக்கும் தற்செயலான நிறைவு ஏன் தமிழ் கவிதையில் அதிகமாகப் பதிவுசெய்யப்படவில்லை. துயரமும் வலியும் வாழ்வின்மையும் மட்டுமே தமிழ் கவிதையின் ஈர்ப்புடன் தரையிறங்கும் பாதுகாப்பான அடைக்கலமாக உள்ளது என்பதை லக்ஷ்மி மணிவண்ணனும் நானும் உட்கார்ந்தும் நடந்தும் பேசி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதி தெருக்களை விடியவும் இருளவும் வைத்திருக்கிறோம். அந்தத் தெருக்களில் ஒன்றில்தான் என் கவிதைகளில் ஆரம்பத்தில் தென்பட்ட மாலதி இருந்தாள்.

இந்தச் சமயத்தில்தான் வாழ்வு உண்டு என்று அன்றாடத்தின் போஷாக்கு அத்தனையையும் உட்கொண்ட பிரெஞ்சு கவிஞராக ழாக் ப்ரெவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலியான்ஸ் பிரான்சேஸ் வளாக அரங்கத்தில், தனது நூற்றாண்டில் அறிமுகமானார். எனது கலாசார சுரணையையும் நுண்ணுணர்வையும் சினிமாக்கள், புத்தகங்கள், நிகழ்ச்சிகள் வாயிலாக அறிமுகப்படுத்திய இடங்களில் ஒன்று அது. ழாக் ப்ரெவரின் போஷாக்கு மிகச் சரியாக இறங்கிய இன்னொரு தமிழ் கவிஞன் பி.ஆர். மகாதேவன். காத்திரமான ஒரேயொரு தொகுப்பைக் கொடுத்துவிட்டு, கவிதையிலிருந்து அவன் நீங்கி வேறு பாதைகளில் போய்விட்டான். ழாக் ப்ரெவரின் செழுமை இறங்கிய கவிதைகள் ‘ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது’. 

இன்றைக்கு இருப்பதைப் போலத் தொலைப்பேசி தகவல்கள், மின்னஞ்சல் தொடர்பு எதுவும் இல்லாமல்தான் அந்த மாலையில் தற்செயலாக அலியான்ஸுக்குப் போய்ச் சேர்ந்தேன். இரண்டாவது மாடியில் சுமார் ஆறரை மணிக்குப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கியது. க்ரியா பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. க்ரியா ராமகிருஷ்ணனும் மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராமும் அங்கே இருந்தனர். முதலிலேயே ழாக் ப்ரெவர் எழுதிய ‘சொற்கள்’ கவிதை நூலை வந்திருந்தவர்களுக்குக் கொடுத்தனர். அமரர் ழாக் ப்ரெவரின் கவிதை நூலுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் வேலைகள் தொடங்கப்பட்டு, ழாக் ப்ரெவரின் இரண்டு மனைவியரின் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக, முதல் பதிப்பை விலையில்லாத பதிப்பாகவே க்ரியா ராமகிருஷ்ணன் வாசகர்களுக்கு வழங்க முடிவுசெய்திருந்தார் என்பது பின்னர் தெரிந்துகொண்ட தகவல். பின்னர் சமரசம் ஏற்பட்டு, அனுமதி வழங்கப்பட்டு அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

க்ரியாவின் வழக்கமான நேர்த்தி, அழகுடன் அந்தப் பதிப்பைக் கையில் வைத்துப் பார்த்துத் தீராமல் இருந்தது எனக்கு. அப்போது, பிரெஞ்சிலும் தமிழிலும் ஐந்து கவிதைகளை வெ. ஸ்ரீராம் நூலிலிருந்து தேர்ந்தெடுத்து வாசித்தார். அதில் ஸ்ரீராம் ‘பார்பரா’ வாசித்தபோது அவர் எப்படி உச்சரித்தார் என்பது இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது. ‘பார்பரா’ வழியாக ப்ரெவர் முழுமையாக என்னை அந்த இரவின் ஒளியைப் போலவே ஆட்கொண்டார். ஸ்ரீராமைப் போலவே, அடுத்த சில மாதங்களுக்கு, என் பையில் எப்போதும் வைத்திருந்த ‘சொற்கள்’ நூலை எடுத்து, அரசாங்க மது விடுதிகளின் வெற்றுத்தரைகளில் எழுந்து நின்று, சக நண்பர்கள் - கவிஞர்களுக்கு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் பணிவுடன் வாசித்துப் பகிர்ந்திருக்கிறேன்.

பரிச்சயம் ஆகாத பெயர் மட்டுமே தெரிந்த, ஆனால் வாழ்வின் அடையாளமாக பார்பரா நமக்கு அறிமுகமாகிறாள். போரால் தொலைந்த ஒரு வாழ்க்கையின் அந்திம வேளையில் எங்கே இருக்கிறாய்? என்று கவிதையின் மறுபகுதியில் நினைவு கூரப்படுகிறாள் பார்பரா. கிட்டத்தட்ட ஒரு பாடல் போல இசைத்தன்மை கொண்டது இந்தக் கவிதை.





நினைவுபடுத்திப்பார், பார்பரா,

ப்ரெஸ்ட் நகரத்தில் அன்று

இடைவிடாமல் மழை பெய்தது

புன்னகையுடன் நீ நடந்து சென்றாய்

மலர்ந்து மகிழ்ந்து நீர் வழிந்தோட

மழையிலே நனைந்து

நினைவுபடுத்திப்பார், பார்பரா

ப்ரெஸ்ட் நகரத்தில் இடைவிடாமல்

மழை பெயதது

சியாம் தெருவில்

உன்னை நான் கடந்து சென்றேன்

நீ புன்னகைத்தாய்

நானும்தான் புன்னகைத்தேன்

நினைவுபடுத்திப்பார், பார்பரா

யாரென்று எனக்குத் தெரிந்திராத நீ

நான் யாரென்பதையும் அறிந்திராத நீ

நினைவுபடுத்திப்பார்

 

பிரெஞ்சு பண்பாடு கொடுத்த தனிமனித சுதந்திரம், தாராளம், வாழ்வூட்டம் எல்லாம் கலந்த மனத்தடையற்ற கொண்டாட்டம் ழாக் ப்ரெவரின் கவிதைகள். காதல், காமம், பிறப்பு, மரணம், பிரிவு, குழந்தைமை, விந்தை, குறும்பு எல்லாம் சேர்ந்து சுழித்து நுரைக்கும் அன்றாடத்தின் மது ழாக் ப்ரெவரின் ‘சொற்கள்’. 


பார்க்கத்தான் போகிறீர்கள்


கடலில் நீந்துகிறாள் ஒரு நிர்வாண மங்கை

நீரின் மேல் நடக்கிறார் ஒரு தாடிக்காரர்

எங்கே அந்த அற்புதங்களின் அற்புதம்

மேலுலகத்தில் அறிவிக்கப்பட்ட அதிசயம்?

 


வாழ்வின் கதகதப்பு


மேசையின் மேல் ஒரு ஆரஞ்சுப் பழம்

தரைவிரிப்பின் மேல் உன் ஆடை

என் கட்டிலில் நீ

நிகழ்காலத்தின் இனிய வெகுமதி

இரவின் புத்துணர்ச்சி

என் வாழ்வின் கதகதப்பு.

 


முதல் நாள்


அலமாரியில் வெண்ணிற விரிப்புகள்

கட்டிலில் சிவப்பு விரிப்புகள்

தன் தாயில் ஒரு குழந்தை

அதன் தாய் பிரசவ வலியில்

தந்தை வராந்தாவில்

வராந்தா வீட்டில்

வீடு நகரத்தில்

நகரம் இரவில்

அலறலில் சாவு

வாழ்க்கையில் குழந்தை.

 

இந்த மூன்று கவிதைகளையும் மீறி ழாக் ப்ரெவரின் உலகம் என்னவென்று மேலும் விரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நவீன மக்கள் கவிஞன் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ழாக் ப்ரெவரைப் போன்ற லட்சிய உதாரணம் வேறு இருக்க முடியாது. பாப்லோ நெரூதா அவருக்கு இணையாக உடனடியாக எனக்கு ஞாபகத்துக்கு வருகிறார்.

ழாக் ப்ரெவர் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தற்போது என்னில் மங்கிவிட்ட நிலையில், ‘சொற்கள்’ தொகுப்பை மீண்டும் எடுத்துப் பார்த்தால், ழாக் ப்ரெவர் நமக்கு அந்நியர் ஆகிவிடுவாரோ என்ற பயத்தில் சில ஆண்டுகளாக அந்தப் புத்தகத்தைத் தொடவே இல்லை. தற்போது இதை எழுதுவதற்காகப் பார்க்கும்போது, என்னை அப்போது ஈர்த்த கவிதைகள் இன்னும் முழுமையாகப் புதுமை மாறாமலேயே இருப்பதை உணர்ந்தேன். குறிப்பாக ‘மக்குப் பையன்’ கவிதை. தமிழ் நவீன கவிதையின் இருட்டில் சிறுவனின் சிரிப்பை நான் வரைவதற்கு ஊக்கம் தந்த கவிதை அது. வெ. ஸ்ரீராம் அந்தக் கவிதையை அந்தப் பொன் அந்தி மாலையில் படித்தபோது, அந்த மக்குப் பையன் நான்தான் என்று உணர்ந்தேன். அந்த மக்குப் பையனில் என்னை இப்போதும் அடையாளம் காண்கிறேன்.


மக்குப் பையன்


வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்

ஆனால் சரி என்கிறது அவன் இதயம்

அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’

ஆசிரியருக்கு ‘வேண்டாம்’

நின்றுகொண்டிருக்கும் அவனிடம்

கேள்வி கேட்கப்படுகிறது

எல்லாப் பிரச்சினைகளும்

அவன்முன் வைக்கப்படுகின்றன

திடீரென ஒரு பைத்தியக்காரச் சிரிப்பு

அவனைப் பற்றிக்கொள்கிறது

எல்லாவற்றையும் அழிக்கிறான்

எண்களை சொற்களை

தேதிகளை பெயர்களை

வாக்கியங்களின் சிக்கல்களை

பிறகு ஆசிரியரின் மிரட்டலையும் மீறி

மேதைச் சிறுவர்களின் ஆரவாரத்தினூடே

பல வர்ண பென்சில்களைக் கொண்டு

இன்னல் என்னும் கரும்பலகையில்

அவன் வரைவது மகிழ்ச்சியின் முகம்.


படைப்பு மற்றும் வாழ்க்கையில் ஊக்கமோ நம்பிக்கையோ அற்ற மலட்டுப் பருவத்தைக் கடந்துகொண்டிருக்கும் எனக்கு, ழாக் ப்ரெவரின் ‘சொற்கள்’ தொகுப்பை எடுத்துப் பார்க்கும்போது, வாழ்வு இன்னொரு தளத்தில் சுரந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் செயலூக்கத்தைத் தூண்டும் அனுபவத்தை இன்னமும் தருகிறார் ழாக் ப்ரெவர்.

ஆசை, நிராசை, நப்பாசைகளின் வரிகள் கோடுகளாக பள்ளங்களாகச் சுமையேற்றியிருக்கும் அவனது உடலில் உள்ள அலட்சியம் செய்யப்பட்ட சிறுவனை சந்தோஷத்தின் மாயக்குச்சியை வைத்துத் தட்டி தூண்டுகிறார் ப்ரெவர்.

கருத்து, நம்பிக்கை, பந்தம், பிடிப்பு, ஆசை என எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட சுதந்திரத்தின் மாயப்பிரம்பால் ழாக் ப்ரெவர் உருவாக்குவது மகிழ்ச்சியை. உலகத்தைத் தொட்டுத் தொட்டு தொடாமல், உறவைத் தொட்டுத் தொட்டுத் தொடாமல் மாயத்தை நிகழ்த்தும் கவிதைகள் தான் ழாக் ப்ரெவரின் கலை. 

இன்னல் என்னும் கரும்பலகையில் இன்னமும் மகிழ்ச்சிகளின் முகங்களை நானும் அவனும் சேர்ந்து வரையவேண்டும். ழாக் ப்ரெவர் உரைத்ததைப் போல வாழ்க்கையில் தான் குழந்தை இருக்கிறது; வாழ்வின்மையில் அல்ல. அது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதற்குக் காரணம் எந்த அனுபவமும் நிபந்தனையாக்காத சுதந்திரத்தில், அது குழந்தையாக இருப்பதுதான்.

இன்னொரு உலகம் பிறக்காமல், இன்னொரு உலகம் அறிமுகமாகாமல் இருந்த அந்தச் சிறுவனுக்கு அறிமுகமானவர் என்பதால் ழாக் ப்ரெவர் என்ற பெயர் எனக்கு எப்போதும் விசேஷமானதுதான்.

‘பார்பரா’வின் தாக்கம்தான் பின்னர் ‘வள்ளுவர் கோட்டத்துக்கும் மகாத்மா காந்தி சாலைக்கும் இடையே’ கவிதையாக மாறியிருக்க வேண்டுமென்பதை இப்போது ஊகிக்கிறேன்.


வள்ளுவர் கோட்டத்துக்கும் 

மகாத்மா காந்தி சாலைக்கும் இடையே


புதிய நிறங்கள்

புதிய புரட்சிகள்

கேஎப்சியில் கோழி வறுபடும் நறுமணம்

காற்றில்

எண்ணைக்கான யுத்தங்கள்

சொல்கிறார்கள்

வனங்கள் அருகிவிட்டன

தண்ணீர் விஷமாகிவிட்டது

புலிகள், குட்டிகள்

தலைகுனிந்து

கடவுளிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றன

என்று சொல்கிறார்கள்

போக்குவரத்து சிக்னல்களில்

அலை அலையாக யாசிக்கும் பசி

எமது காமத்தைவிட வன்மைகொண்ட

ஆனால்

மென்மையானதும்

நுட்பமானதுமான

ஆடைகள்

உள்ளாடைகள்

நட்பும் காதலும்

சிக்கலும் புதிருமாக மாறிய

அந்தத் திருப்பத்தில்

நாகலிங்க மரநிழலில்

அவன் அவளுக்காகக் காத்திருந்தான்

இன்னும் சில நொடிகளில்

முழுவதும் இருட்டப் போகிறது

அவனை நோக்கி தெற்கிலிருந்து வந்தாள்

அவளின் முகம் தெரியவில்லை

எல்லாம் கோடுகளாகி விட்டன

தூத்துக்குடி

சிங்காநல்லூர்

பிரம்மபுத்ராவின் கரையோரம்

சியரோ லியான்

எந்த முகமாகவும் இருக்கலாம்

புறங்கழுத்திலிருந்து உயரும் காலர்கொண்ட

ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்

அவள் அவனை நோக்கி வரும்போதே

தோள்களை உயர்த்திவிட்டாள்

அவனும் உற்சாகத்தில்

முன் நகர்ந்தான்

நான் பரவசம் கொண்டேன்

ழாக் ப்ரெவரைப் போல

ஒரு தருணத்துக்குத் தயாரானேன்

அன்றைய மாலையில்

எனக்கு இரண்டாவது நற்செய்தி

அவர்கள் அந்த நாகலிங்க மரத்தின் அடியில்

வள்ளுவர் கோட்டத்திற்கும்

மகாத்மா காந்தி சாலைக்கும் நடுவில்

குதிகாலை உயர்த்தி

ஆரத்தழுவிக் கொண்டார்கள்

இந்தக் கவிதையை நான் இப்படி

இங்கிருந்து எழுத

எனக்கு இத்தனை நூற்றாண்டுகள்

தேவைப்பட்டன.

(நன்றி : அம்ருதா)


Comments