மகாபாரதத்தை
உலகளாவிய காப்பியமாக உணர்ந்து ஒன்பது மணிநேர நாடகமாக்கி, ஐரோப்பாவில் அதை நிலைபெறச்
செய்த பீட்டர் ப்ரூக்கின் மரணம் குறித்த செய்தியை அறிந்தபோது, பீட்டர் ப்ரூக்குடன்
சேர்ந்து அந்த நாடகத்தை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜான் க்ளாட்
கேரியர், யுனெஸ்கோ கொரியருக்கு 1989-ல் அளித்த நேர்காணல் ஒன்று நினைவுக்கு வந்தது.
மதுரையில் நண்பர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவர் சேகரிப்பில் இருந்த தமிழ் யுனெஸ்கோ
கொரியரில் தற்செயலாக 2006-ம் ஆண்டில் எனக்குப் படிக்கக் கிடைத்த நேர்காணல் அது. பீட்டர்
ப்ரூக்கின் மகாபாரத நாடகத்தை எழுதி நிகழ்த்துவதற்காக 11 ஆண்டுகளை ஒரு யாத்திரை போல
அவர் விளக்கிய நேர்காணல் அது. எனக்கு அந்தச் சமயத்தில் மிகுந்த பிரமிப்பையும் உந்துதலையும்
ஏற்படுத்திய அந்த நேர்காணல் அடங்கிய பிரதியை சில ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பின்னர்
தொலைத்துவிட்டேன். நேற்று முன்தினம் அந்த நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இணையத்தில் தேடியபோது
மீண்டும் அதைக் கண்டுகொண்டது சமீபத்திய மகிழ்ச்சிகளில் ஒன்று. திரும்ப ஆங்கிலத்தில்
படித்து முடித்தபோது, அப்போது ஏற்பட்ட வியப்பு குன்றவில்லை.
விவிலியத்தை விட 15 மடங்கு பெரிதான மகாபாரதம் காப்பியத்தை ஐரோப்பா அறிந்துகொண்ட
வரலாற்றை தனது நேர்காணலில் முதலில் கூறுகிறார். பிரெஞ்சில் மகாபாரதத்தை மொழிபெயர்க்க
முயன்ற இருவர் அதை முடிக்காமல் இறந்துபோன தகவலைச் சொல்கிறார்.
வெள்ளையர்கள், கருப்பர்கள், இந்தியர்கள், சீனர்கள் என பல இனத்தவர்களும் நடிகர்களாக
நடித்த நாடகத்தில், திரௌபதியாக நடித்தவர் இந்தியாவின் பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய்.
வியாசரும் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதும் கதாபாத்திரமாக வரும் விநாயகரும்
ஆங்கிலம் பேசியபடி நாடகம் தொடங்கும்.
உலகத்தின் மீது அழிவு இறங்கிக் கொண்டிருக்கிறதென்ற சந்தேகத்துக்கு இடமற்ற
உணர்வா? செயலின் உண்மையான தாத்பரியம் என்ன? எது சரியானது? என்ற இடைவிடாத தேடலா? என்னவென்று
தெரியவில்லை என்றும், ஐரோப்பிய பார்வையாளர்களை மகாபாரத நாடகம் மிகவும் ஈர்த்துவிட்டதையும்
நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். கடவுள் அவதாரங்களாக இந்தப் பூமியில் பிறந்த கதாபாத்திரங்கள்,
தங்கள் பூர்விகத்தை மறந்து இங்குள்ள அன்றாட அல்லல்களுக்குள் நுழைந்துவிட்ட அவலக்கதையாக
ஐரோப்பியர்களை, கிரேக்கக் காப்பியங்களை ஒத்த மகாபாரதம் கவர்ந்திருக்கலாம் என்கிறார்.
சமஸ்கிருத அறிஞரான பிலிப் லெவஸ்டைனோடு தற்செயலாக பீட்டர் ப்ரூக்குக்கும்
கேரியருக்கும் ஒரு சந்திப்பு நிகழும்போதுதான் மகாபாரதம் பற்றிய பரிச்சயம் கிடைக்கிறது.
பகவத் கீதை பற்றி மட்டுமே அவர்களுக்கு அதற்கு முன்னர் தெரிந்திருக்கிறது. பகவத் கீதையில்
வரும் அர்ஜூனன் யார் என்று ஜான் க்ளாட் கேரியர் கேட்க லெவஸ்டைன் சொல்லத் தொடங்குகிறார்.
இப்படியே மகாபாரதம் பற்றிய பேச்சு வாரம் இருமுறை பயணித்துப் பார்க்கும் சந்திப்புகளின்
வழியாக பல மாதங்கள் நடக்கிறது. மகாபாரதத்தைப் பற்றி அறியத் தொடங்கி ஒரு ஆண்டுக்குப்
பிறகு மகாபாரத நாடகத்தின் முதல் வரைவை எழுதியிருக்கிறார் கேரியர். மகாபாரதம் நாடகத்தின்
இறுதி வடிவத்துக்கு வர அவர்கள் 1974 முதல் 1985 வரை வேலை செய்கின்றனர். 1982-லிருந்து
மகாபாரதம் படைக்கப்பட்ட இந்தியாவுக்கும் பலமுறை பயணித்திருக்கின்றனர். தெய்யம், கதகளி
மற்றும் யக்ஷகான நாடகக் குழுக்களைப் பார்த்துப் பேசியுள்ளனர். இந்தியாவில் அரண்மனைகள்
முதல் சிற்றூர்களின் பிம்பங்களை தங்கள் நாடகம் உள்வாங்க வேண்டுமென்று பீட்டர் ப்ரூக்,
கேரியர் குழுவினர் விரும்பியிருக்கின்றனர். துணி விற்பவர்களைப் பார்த்திருக்கின்றனர்.
ஒரு துண்டுத்துணியின் ஊடும் பாவும் அது பயன்படுத்தப்படும் கலாசாரத்தைப் பற்றி எழுதும்
எழுத்தாளனுக்கு உதவக்கூடியது என்கிறார் கேரியர்.
Unconscious என்று சொல்லப்படும் வார்த்தையைப் பயன்படுத்தினால், அது இருபதாம்
நூற்றாண்டில் ப்ராய்ட், யுங் ஆகியோர் பயன்படுத்திய அர்த்தங்கள் பொதிந்துவிடும் என்பதால்
Deep Heart என்று பயன்படுத்தியதாகக் கூறுகிறார். நீ இதயத்தின் ஆழத்தில் உணரவில்லையா
பீஷ்மா என்று கேட்கிறார் கிருஷ்ணர். எல்லா கலாசாரங்களுக்கும் இடையில் சாதாரணமாக உலவும்
வார்த்தைகளைத் தேடிப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார். உதாரணத்துக்கு ரத்தம் என்ற வார்த்தை.
ஆங்கிலத்திலும் அந்த வார்த்தை உடலில் ஓடுவதையும், உறவையும், தரத்தையும் குறிக்கிறது.
இதயம் என்ற வார்த்தையும் அதேபோல வெளிப்படக்கூடியது என்கிறார்.
கிருஷ்ணன் தெய்வீக அவதாரமாக இருப்பினும் மகாபாரதத்தில் பல நிகழ்வுகளில்
கிருஷ்ணனுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று தெரிவதில்லை. ஒரு கடவுளுக்கு அது எப்படி
சாத்தியம் என்று காஞ்சிப்பெரியவரைச் சந்திக்கும்போது ஜான் க்ளாட் கேரியர் கேட்டிருக்கிறார்.
இறுதியில் போர்க்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கிருஷ்ணனால் ஏன் ஊகிக்க முடியவில்லை
என்பதுதான் அந்தக் கேள்வி. அப்படிக் கேட்பது மனிதர்களின் பலவீனம்தான் என்று காஞ்சிப்
பெரியவர் பதில் அளித்திருக்கிறார்.
திருவெளிப்பாடுகள் என்று கருதப்பட்ட வேதங்களிலிருந்து மகாபாரதம் போன்ற
காப்பியங்கள் விலகியவை என்கிறார் கேரியர். ஒரு படைப்பும் ஒரு படைப்பாளியும் அங்கே தெரிகிறார்கள்.
எழுத்தாளன் என்பவன் அறிமுகமாகும்போதே அதில் மனித அம்சம் சேரத் தொடங்கிவிடுகிறது. இங்கிருந்துதான்
கடவுளிலிருந்து மனிதர்கள் விலகத் தொடங்குகின்றனர். இங்கேதான் சமூகம் தோன்றுகிறது. மகாபாரதத்தில்
அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் அவ்வளவுபேரும் தெய்வ அவதாரங்கள்தான். கடவுளின் குழந்தைகள்
என்ற நினைவிலிருந்து அவர்களைச் சீக்கிரத்திலேயே மறதி பீடித்துவிடுகிறது. தேவலோகத்திலிருந்து
அவர்களைப் பிணைத்த தொப்புள் கொடியை அறுத்து அவர்கள் காம, குரோதங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
தனிநபர்களாக அவர்கள் போராடத் தொடங்கும்போது குடிமக்களாகவும் அவர்கள் ஆகின்றனர். மனிதர்களாகச்
சேர்ந்து வாழ நேர்ந்துவிட்ட இந்த பூமியின் குழப்படிக்குள் அவர்கள் நிலைத்து நிற்க அவர்களுக்கு
ஒழுங்கும் தர்மமும் தேவையாக உள்ளது. அந்த இடத்தில் தான் இலியட், ஒடிசி, மகாபாரதம் என்னும்
காப்பியங்கள் தோன்றுகின்றன என்கிறார் கேரியர். தொடங்கும்போது தெய்வீகமான தன்மையில்
ஒளி எங்கும் படர்ந்திருக்கத்தான் மகாபாரத நாடகமும் தொடங்குகிறது. பூமியில் உள்ள வாழ்க்கையின்
ஈர்ப்பில் படிப்படியாக கனம் கூட, தெளிவான அவநம்பிக்கையில் மகாபாரதம் முடிகிறது.
ஜான் க்ளாட் கேரியர், பரீத் அல்தின் அத்தர் கவிதையொன்றை தனது அனுபவத்தோடு
ஒப்பிடுகிறார்.
மூன்று பட்டாம்பூச்சிகள் மெழுகுவர்த்தியின் இயல்பைப் பற்றி விவாதிக்கத்
தொடங்குகின்றன.
ஒரு பட்டாம்பூச்சி மெழுகுவர்த்தியை எட்டிப் பார்த்துவிட்டு ‘ஒளியாக இருக்கிறது’
என்றது.
இரண்டாவது பட்டாம்பூச்சி எரியும் மெழுகுவர்த்திக்கு அருகே சென்றுவிட்டு
தனது இறக்கையைத் தீய்த்துவிட்டு வந்து ‘அது எரிக்கிறது’ என்றது.
மூன்றாவது பட்டாம்பூச்சி மெழுகுவர்த்திச் சுடருக்குள்ளேயே சென்றது, திரும்பவேயில்லை.
பிரமிளின் ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையில் சொல்லப்படும் வண்ணத்துப்
பூச்சியைப் போல.
ஜான் க்ளாட் கேரியரிடம் நேர்காணல் செய்பவர் நாடகம் என்பது இரண்டாவது வண்ணத்துப்
பூச்சியின் அனுபவக் கட்டமா என்று கேட்கிறார். அதற்கும் கேரியர் ஒரு கவிதை வழியாகவே
பதிலளிக்கிறார்.
“நேற்று இரவு என் காதில் ஒரு குரல் கிசுகிசுத்தது:
இரவில் காதில் வந்து கிசுகிசுக்கும் ஒரு குரல் பூமியில் இல்லவே இல்லை’
Comments