இத்தொகுப்பில் ப்ரெளனி அலாதியாகப் பரவியிருக்கிறது. சமூகத்துக்கு விரோதமான தளத்தில் அல்ல, ஒரு அசமூக இடத்தை ப்ரெளனியைத் துணையாகக் கொண்டு தற்காலிகமென்றாலும் உருவாக்குகிறேன்.
திருவண்ணாமலையில் நள்ளிரவு தன் வேலையை முடித்துக்கொண்ட திருடன் ஒருவன், பேருந்து கிடைக்காமல் ஓய்வுக்காக ரமணர் ஆசிரமத்துக்குப் போனான். உறக்கம் வராமல் விழித்திருந்த ரமணர், அவனை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், தண்ணீர் விட்ட சோற்றைக் கொடுத்து உறங்கவைக்கிறார்.
திருடன், காலையில் ரமணரிடம் விடைபெற்று ஆசிரமத்திலிருந்து இறங்கித் திரும்ப ஊருக்குள் கலந்துவிட்டான். ரமணரின் பகல் வேறு; அந்தத் திருடனின் பகல் வேறு. திருவண்ணாமலையில்தான் ஆசிரமமும் உள்ளது. திருடன் தனது ஊழியத்துக்கு வரும் இடமாகவும் திருவண்ணாமலையே உள்ளது.
நேசத்தின் கிடைமட்டப் பரப்பாக நீதியை உணர்ந்த கவிதைகள் இப்படித்தான் இறங்கி ஊரில் கலக்கின்றன. நேசமும் நீதியும் தொட்டும் தொடப்படாமலும், இல்லாதது போல இருக்கும், தெரியாதது போலத் தெரியும் ஒரு மலைக்குடிலிலிருந்து தனியாக இறங்குகின்றன.
***
மனத்தையே வல்லிசாகத் துடைத்தகற்றக் கூடிய சக்தி கொண்ட நில, நீர் வெளிகள் உண்டு என்பதை அந்தமான் தீவுகளுக்கு நண்பர் சுப்பிரமணியன் அழைத்துச் சென்றபோது உணர்ந்தேன். அந்தமான் தீவுத்திட்டுகளில்தான், இன்னும் கடவுள் பிறக்கவேயில்லை என்ற உணர்வு தோன்றியது. நீலமும் வெண்மணலும் அலை முடியும் இடத்திலேயே தாவரப் பெருங்கூட்டமாகத் தொடங்கும் மலையும், கசிந்து இறங்கி கடலுக்குள் ஓடும் கோடிக்கணக்கான தெள்ளிய அருநீர்ச் சுனைகளும், கிளிஞ்சல்களும், பவளப் பாறைகளும், என்னை வந்து விசாரித்துவிட்டுப் போன குட்டி பச்சைப் பாம்பும் நான் இழந்திருந்த பிரகாசத்தை எங்கேயென்று கேட்டிருக்க வேண்டும். நான் போன ராதா நகர் கடற்கரையையும் கடலையும் இரவில் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கரையிலுள்ள தென்னை மரங்களினூடாக இரவில் நிலவு கடலில் தனியாகக் கிடந்து ஒளிர்வதை என் கவிதைகளினூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஞாபகத்திலும் நண்பர் இன்பா அவர்களின் அறிமுகத்திலும் எழுதப்பட்ட கவிதைதான் ‘கடலைச் சிறுபடம் எடுக்கும் பாம்பு’. ஒரு டினோசாரைக் கூட சடுதியில் அழித்துப் பதங்கமாக்கிவிடக் கூடிய உஷ்ணம் கொண்ட எரிமலைக் குழம்புதான் இத்தனை தண்மையையும் ரம்மியத்தையும் உயிர்வளத்தையும் கொண்ட நிலத்திட்டுகளாக, வசீகரத் தீவுக்கூட்டமாக ஆகியுள்ளது.
எரிமலைகள் நமக்கு எதை உணர்த்துகின்றன?
அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்படாத எரிமலையை அதன் சகல குணங்களோடும் நெருங்கிப் பார்க்க உதவியது, சமீபத்தில் எனக்கு நெருக்கமான திரைப்படப் படைப்பாளியாக உணர்ந்த வெர்னர் ஹெர்சாக்கின் ஆவணப்படமான ‘இன் டூ தி இன்பெர்னோ’. அவர் திரைப்படங்களில் படைக்கும் கதாபாத்திரங்களில் விலங்குகளின் ஏக்க மூச்சுகளை நெருங்கிக் கேட்கச் செய்கிறார்.
எனக்குத் தெரிந்த பருவடிவில் அம்மா இந்த உலகத்தில் எங்கேயும் இல்லை என்ற ஞாபகத்துடன் எனது கவிதைத் தொகுப்புக்கு எழுதும் முன்னுரை இது.
இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளிலும் அவளது நினைவுகளையும் கூடுதல் சானித்தியத்தையும் உணரும் நாட்கள் இவை. அவள்தான் நிழல் உகந்தவள் என்று அவள் நீங்கிய பிறகு தெரியும் வெயில் நாட்கள்.
தனியாக ஒரு ஒற்றைக் கவிதை, அதிகம் கவனிக்கப்பட்டு பேசப்படாத இந்நாட்களில், எனது ‘அருவிக்குப் போகும் பெண்’ கவிதைக்கு நெடுங்காலத்துக்குப் பிறகு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் ஊக்கத்தையும் பாராட்டையும் பெற்றேன். அந்தக் கவிதைக்கான கரு, நான் சிறுவனாக தென்காசியில் இருந்த வருடங்களில் செவிவழியாகக் கேட்ட கதையிலிருந்து உருவானது. நண்பர் சமஸோடு ஒரு சீசனுக்குக் குற்றாலத்துக்குச் சென்றிருந்தபோது, பிரதான அருவிக்குப் போகும்போது அதைப் பகிர்ந்துகொண்டேன். அவர் கொடுத்த ஊக்கத்தாலேயே திரும்பத் திரும்ப எழுதி மேம்படுத்தியது. சமீப வருடங்களாக எனது கவிதைகள் குறித்து ஏமாற்றத்தையே தெரிவித்துவந்த கவிஞர் விக்ரமாதித்யனையும் ‘அருவிக்குப் போகும் பெண்’ ஈர்த்தது எனக்கு ஆசிர்வாதம். பிரதான அருவியில் குளித்தபடி, அருவிக்குப் பின்னுள்ள இடைவெளியில் மூச்சுவாங்க நிற்கும்போது, நனைந்தூறிக் கொண்டிருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் லிங்கங்களை, விக்கிரமாதித்யனிடம் காட்டிய சந்தர்ப்பம் நினைவுக்கு வருகிறது. குற்றாலத்தையும் அருவிகளையும் அம்மாவைப் போலவே எனது மூலகமாகக் கருதுகிறேன்.
இந்தக் கவிதையில் அந்த மூலகத்தை நோக்கிய எனது விந்தை முழுமையாக மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. அம்பேத்கர் எழுத்தில் பயன்படுத்திய ஒரு படிமத்தின் தாக்கத்தில் இத்தொகுதியில் உள்ள ‘ஆரோகணம்’ கவிதையை எழுதியுள்ளேன். படிகள் இல்லாத கோபுரம் என்று இந்து சமூகத்தை அவர் சொல்லியிருக்கிறார்.
எனது கவிதையில் களவாடப்பட்ட படிக்கட்டுகளின் கோபுரமாக அது ஆகியுள்ளது.
“இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது.”
முல்லாவைக் கதாபாத்திரமாக வைத்து நான் இரண்டு புதிய கதைகளை உருவாக்கினேன். அதில் ஒன்றை இத்தொகுதியில் சேர்த்திருக்கிறேன். தேவதச்சன் அதைப் படித்துவிட்டு, முல்லாவுக்குப் பதிலாக தனது கவிதையில் வரும் வினோதராட்சஸன் ஆக அந்தக் கதாபாத்திரம் இருக்கட்டும் என்றார். நான் அந்தப் பெயரை மாற்றிவிட்டேன்.
பெருந்தொற்றுக் காலத்தில், எல்லாரும் எல்லாமும் நிச்சயமின்மையின் புலத்துக்குள் நுழைந்துவிட்ட சூழலில், நண்பர் அரவிந்தனைப் பற்றி அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. எனது பார்வைகள், எனது இயல்பு, எனது மனோகதிக்குத் தொடர்பே இல்லாதவராக இருந்தும் என்னை அனுசரித்து வந்திருக்கிறார். சென்னைக்குள் புதியவனாக வேலைதேடி நுழைந்தபோது, முதல் வேலையை வாங்கித் தந்தவர் அவர்தான். ஒரு பத்திரிகையாளனாக எனது பணியைத் தேர்ந்தும், பல ஆண்டுகளாக அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்த முடியாமல், அவதியில் தொடர்ந்த என்னை ஆதுரத்துடன் இந்து தமிழ் திசை நாளிதழ் பணிக்கு அழைத்துச் சென்றவர் அவர். எனக்கு நெருக்கமாக, அணுக்கமாக இருப்பவர்கள் எல்லோரும் தவிர்க்க முடியாமல் அனுபவிக்க நேரும் இக்கட்டுகளை அவருக்கு அதிகமாகவே நான் அளித்தேன்.
அரவிந்தனுக்கு இத்தொகுதியை சமர்ப்பணம் செய்வது இந்தக் கட்டத்தில் நிறைவைத் தருவது. வாழ்விலும் தாழ்விலும் கூடவே இருக்கும் நண்பர்கள் எனக்குக் கொத்துக் கொத்தாக இருக்கிறார்கள்; அதில் பெரும்பகுதியும் அவர்களது நற்குணத்தின் பாற்பட்டது என்ற போதமும் அடக்கமும் எனக்கு எப்போதும் தேவை.
சாம்ராஜ் வழியாக அறிமுகமாகி எனது பகுதியாக ஆகிவிட்டவர் நண்பர் வரதன். இசை, சினிமா, ஓவியம் என எனக்குப் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கும் புதிய உலகங்களின் நீட்சியாக இந்தக் கவிதைப் புத்தகத்துக்கு ஒரு அட்டையை அவரிடம் கேட்டேன். அதில் எங்கள் இருவருடைய உலகங்களும் தனிமங்களைப் போல வினைபுரிந்திருக்கின்றன. நண்பர் மிஷ்கினும் வரதனுடன் அட்டையில் இணைந்திருக்கிறார்.
இத்தொகுதியை சென்ற ஆண்டே நான் கொண்டுவரத் துணிந்த நிலையில், பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தள்ளிப்போடச் சொன்னவர் நண்பரும் கவிஞருமான வே.நி.சூர்யா. அவர் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 20 கவிதைகளை நீக்கியிருக்கிறேன். புதிதாக எழுதிய பத்து கவிதைகளைச் சேர்த்திருக்கிறேன்.
இந்த நூலை அழகிய முறையில் கொண்டுவரும் ஜீவ கரிகாலனுக்கும், நண்பர் வேதநாயக்குக்கும் கவிதைக்காரன் இளங்கோவுக்கும் எனது நன்றி.
Comments