எம். டி. முத்துக்குமாரசாமியின் புதிய கவிதைத் தொகுதியான ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தேர்ந்த நடிகனின் மொழி பாவிப்புகள் இவரது படைப்புகள் என்ற பதிவு ஏற்பட்டது. உணர்ச்சி, மொழி, வெளியீடு எல்லாம் தீவிரமாக வெளிப்பட்டாலும் எல்லாமே பாவனை என்ற உணர்வை வாசிப்பவனிடம் ஏற்படுத்தியபடியே தான் வாசிப்பைத் தொடரச் சொல்பவை அவரது புனைவுகள். ஆனால் உணர்ச்சியோ, மொழியோ, வெளியீடோ, படிமங்களோ கேலிச் சித்திரமாகாமல் படைப்பு உத்தேசிக்கும் விளைவையும் எம் டி முத்துக்குமாரசாமி, நம் கலாசார நினைவுகளை மொழிவழியாக அதீதமாகப் பெருக்கி உருவாக்கி விடுகிறார்.
ஒரு கதாபாத்திரம்
தன் கதையிலிருந்து அவ்வப்போது நழுவி விழும்போது, ஒரு கதாபாத்திரம் தன் கதையையே சந்தேகப்படும்
போது நாடகம் தொடங்குகிறது. இது உண்மை
அல்ல பொய்;
இது உண்மை அல்ல நடிப்பு;
இது உண்மை அல்ல பாவனை; இது உண்மை அல்ல ஒரு கூத்து; இது கதை அல்ல, கதையின் மேல் நிகழ்த்தப்படும் உரை; மொழிவழியாக தானே இங்கு எதுவும் நிகழ்வதில்லை;
நிகழ்த்தப்படுகிறது. இந்த உணர்வை எம். டி. முத்துக்குமாரசாமியின் சிறுகதைகளும், கவிதைகளும்,
கட்டுரைகளுமே கூட தருகின்றன.
தன் செயலின் மீது, தான் பங்குகொள்ளும் நிகழ்வுகளின் மீது,
இடைவெளியும் சந்தேகமும் தட்டும்போது ஏற்படும் நாடகத்தை, அங்கே உருவாகும் அபத்த உணர்வை
நமக்கு ஏற்கெனவே ந. முத்துசாமி தன் சிறுகதைகளில் தனித்துவமாக இங்கே நிகழ்த்திச் சென்றிருக்கிறார்.
அதுதான் எம். டி. முத்துக்குமாரசாமியின்
மரபு என்று தோன்றுகிறது.
நாம் இனி
வெறுமனே கதையை நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. எண்ணற்ற கதைகளும், கதைச் சட்டகங்களும் நிலைத்து வாழ்ந்து
பின்னர் உளுத்துப் புதைந்து அழிந்துவிட்ட ஒரு கலாசார நினைவில், கதை மேல் கதைபோன்ற ஒன்றை,
கவிதைமீது கவிதை போன்ற அறிவின் திடத்துடன், புலமையோடு சேர்த்து உருவாக்குகிறார் எம். டி. முத்துக்குமாரசாமி. அங்கே எம்டிஎம்,
போர்ஹேசையும் ஞாபகப்படுத்துகிறார்.
எம். டி. முத்துக்குமாரசாமியின் மைத்ரேயி சிறுகதையில் வரும்
முன்னிலை ஏன் கட்டுரையை எழுதுபவனாக இருக்கிறது?
புதுமைப்பித்தனும், வண்ணநிலவனும், வண்ணதாசனும் எழுதி எழுதி
எழுப்பி, நமக்குப் பழக்கப்பட்டுப் போன கல்யாணி ஆச்சியை, அவள் வசிக்கும் கைலாசபுரத்தை,
அவள் இட்லிக் கடை போடும் திருநெல்வெலி ஜங்ஷன் பகுதியை வெறும் வார்ப்படமாக வைத்துக்கொண்டு, முற்றிலும்
அறிவு தொனிக்கும் ஒரு கதையாக ‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’ சிறுகதையை, தன் தனித்துவத்துடனான அதிநவீனக் கதையாக இப்படித்தான் மாற்றிவிடுகிறார் எம்.டி.எம்.
நூற்றாண்டு சாதனையைச் சுமந்து கொண்டிருக்கும் தமிழ் சிறுகதை
மரபில் ஒரு வெற்றிகரமான இடையீடாகவும் அதேநேரத்தில், கலாபூர்வமாக அழுத்தமான விளைவையும்
ஏற்படுத்தும் சிறுகதை ‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’.
‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’ கதை திரும்பத் திரும்ப
வாசிப்பதற்கு இழுக்கக் கூடியது.
கதையுடன் ஒன்றுவது போல வாழ்க்கையில் ஒன்றி, தன் வாழ்க்கையைப்
பற்றிய விசாரணையோ, சந்தேகமோ, அதனால் எழும் துக்கமோ இல்லாமல் இட்லிக்கடையுடன் சலிப்பில்லாத நிறைவான தாம்பத்யம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள் கல்யாணி ஆச்சி. கால உணர்வற்று வாழ்ந்து
கொண்டிருக்கும் அவளுக்கு காலத்தை ஞாபகப்படுத்தியும் மறக்கவைத்தும் கொண்டிருப்பவன் வளர்ப்பு
பிள்ளையும் அரைப்பைத்தியமும் ஆன சங்கர வேலு. அவளுக்கு இட்லிக் கடையில் உதவியாளாக நெடுநாட்களாக
இருக்கும் சுப்பிரமணிதான், அவளது கதையில் அல்லது அவளது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை
என்ற சந்தேகத்தை, ஏதேன் தோட்டத்துக்குள் வரும் பாம்பைப் போல உருவாக்குகிறான். படிப்படியாக
அறிவின் விஷத்தை அவளுக்கு சுப்பிரமணி, தன்னையறியாமல், தன் நலத்தையும் கருதாமல், ஏற்றி
கல்யாணி ஆச்சியைக் கொன்றுவிடும் கதைதான் ‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’.
கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் கதையும் கதாபாத்திரங்களும் திருநெல்வேலி சிறுகதைப் பிராந்தியத்தில் ஏற்கெனவே அறிமுகமானவைதான். ஆனால், அந்தச் சிறுகதைச் சட்டகத்தை மேடையாக்கி அந்தக் கதாபாத்திரங்களை ஆட்டும் சூத்ரதாரியின் விரல்களும் நூலும் நோக்கமும் செயல்படும் அறிவுகளும் வேறு. அப்படி நிகழ்த்தி நிகழ்த்தி கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் கதையை ஊழியின் தினங்கள் போன்று வாசகன் உணருமாறு எம். டி. முத்துக்குமாரசாமி செய்துவிடுகிறார். தன் அறிவின் வாயிலாக கல்யாணி ஆச்சியின் அன்றாடத்தில் இடையீடு செய்வதன் வாயிலாக சுப்பிரமணி தன் தலையில், தனது ஒரே வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுகிறான்.
ஏன்?
ஏனெனில் கதை, இப்படித்தான் இருக்கிறது. கதை இப்படித்தான் புதிராக மாறிவிடுகிறது.
எம். டி. முத்துக்குமாரசாமியின் படைப்பு
உத்தேசங்கள் என்னவென்று நெருங்கிப் பார்ப்பதற்கு, எனக்கு உதவியாக இந்த சுப்பிரமணி இருக்கிறான் . அறிவு கலையின் மேல் செய்ய எண்ணும் மேலான விளைவு தான் அந்த உத்தேசம்
போலும்.
எம். டி. முத்துக்குமாரசாமி,
வனநினைவு கவிதையில் எழுதிச் செல்வது போல,
வனநினைவு வெட்டப்பட்ட விருட்சங்களுக்கில்லை
என ஏன் நினைக்கிறாய்?
முண்டந்துறையின் காடு
அம்பாசமுத்திரம்
மரச் செப்பு சாமான்களிலும்
கடைசல் தொட்டில் கம்பிலும்
ஏன் கோவில் தேர்களிலும் கூட
ஒளிந்திருப்பது
காலத்தின் புதிர்
காலம் மரங்களைக் கற்களாக்கிய பின்னும்
மரக்கற்கள் கரியானபின்னும்
கரி வைரமான பின்னும்
அதன் உயிர் நினைவின் ஒளிர்வு மங்குவதில்லை
நினைவே காலம் அதுவே புதிரும் கூடக்
கண்ணீரின் தெளிவு நினைவுக்கு இருப்பதில்லை
அதன் அதிசயத்தைக்
கடிகார அந்தியும் விடியலும் சொல்வதில்லை
அருகிவிட்ட புலியின் உறுமல்
வனநினைவின்
ஒரு பாவனை
ஒரு புனைவு
ஒரு ஒளிர்வு.
ஆமாம், வாய்சாலக்கில் இனி சிந்துபூந்துறையைக் கட்டவே முடியாது எம்டிஎம். நாம் கடந்து செல்வோம், நிலமற்ற கடைத்தெருவாக மாறியிருக்கும் காலத்தில்.
Comments