கவிஞர் ஆத்மாநாம், தனது இறுதிநாட்களில் படித்த நூல் ஏ. கே. ராமானுஜன் மொழிபெயர்த்த ‘SPEAKING OF SHIVA’. கவிஞர் பிரம்மராஜன் எழுதிய சிறு வாழ்க்கைக் குறிப்பில் தெரியவரும் தகவல் இது. பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற வசன கவிகளின் கவிதைகளை அந்த நூலின் வாயிலாக மொழிபெயர்த்து மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார் ராமானுஜன். ஆத்மாநாமின் கவிதைகள் பற்றி அவர் இறந்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து அறிந்துகொண்ட ராமானுஜன், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. கவிஞர் ந. ஜயபாஸ்கரன் இந்தக் கவிதையை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு தளர்வான மொழிபெயர்ப்பையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். நான் இதைத் திரும்ப மொழிபெயர்த்திருக்கிறேன்.
ந ஜயபாஸ்கரனின் கட்டுரை, மொழிபெயர்ப்பைப் படிக்க : https://www.shankarwritings.com/2021/03/blog-post_11.html
எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்
பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர்
சிவனைப் பற்றிப் பாடிய துறவிகளின் கவிதைகளை
இருபது ஆண்டுகளுக்கு முன்னர்
நான் மொழிபெயர்த்த போது
என்னைப் பற்றிய சிந்தை எனக்கில்லை
மதராஸைச் சேர்ந்த ஒரு இளைஞன்
பத்து ஆண்டுகளுக்கு
முன்னர் அவற்றைப் படிப்பான்
என்பதையும் நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை
ஒரு சக்கரத்தின் மீது மாறும் வண்ணங்கள்
அவன் கண்களில்
எனது வார்த்தைகள் வாயிலாக
இரவும் பகலும்
அவனது கை
மாத்திரைகளை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது
அவற்றை கவிதைகளோடு அவன் விழுங்கிக் கொண்டிருந்தான்
அவனைப் பற்றிய எண்ணமில்லாதவை அவை
நானும் அவனைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கவில்லை
இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் இடையே
பகலுக்கும் மணிக்கட்டில் குத்தப்பட்டிருந்த ஊசிகளுக்கும்
இடையே
பனிமூட்டத்தில் மூச்சுத் திணறியபடி
என்னைப் பற்றிய சிந்தையுடனிருந்த
அவனைப் பற்றிய
எந்த எண்ணமும்
எனக்கு இல்லாது
நான் வாசிப்பதற்கும்
இந்த வாரம் எடுத்து மொழிபெயர்ப்பதற்கும்
அவனது கவிதைகளை
விட்டுச் சென்றான்.
சிவனைப் பாடிய அந்தத் துறவிகள்
எனது வார்த்தைகள் வாயிலாக
அவனிடம் பேசத்தான் செய்தனர்
ஆனாலும்
அவனிடம்
ஏதொன்றையும்
ஏதொன்றையும்
அவர்கள் சொல்லவேயில்லை.
Comments