Skip to main content

ஷோபா சக்தி தீட்டியிருக்கும் ஒரு அகதியின் இன்னுமொரு கதை

 


நினைவுதான் வாழ்வு என்று கூட ஒரேயடியாக தலையில் போட்டுவிட வேண்டியதில்லை. ஆனால் வாழ்க்கை தொடர்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது நினைவுதான். அந்த நினைவின் நிலத்தில், ஒரு சுயம், தன் கால்களை நீட்டி, ஆசுவாசமாய், தொடர்ச்சியின் பாதுகாப்பில் பயணிக்க இயலாமல் அவன் காலடியில் துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் போது, உருவாகும் நிச்சயமற்ற சுயத்தின் பெயர்தான் அகதி என்றும் அந்த அகதியின் கதைகள் வேறு வேறாகத் தெரிந்தாலும் ஒரே கதைதான் என்பதையும் ‘ஸலாம் அலைக்’ நாவல் வழியாக ஷோபா சக்தி வெளிப்படுத்துகிறார். அவனது, அவளது கதை எப்போதும் ஒன்றுதான். பெயர்கள்தான் மாறுபடுகின்றன. காஃப்காவின் யோசப் க.வும் ஸலாம் அலைக்கில் நாம் காணும் சர்வதேச அகதிகள் அனைவரின் கதையும் ஒன்றுதான். 

இல்லாமல் செய்யும் கூர்மையின் முன்னால், இல்லாமல் போவதற்கு முன்னர் ஏற்படும் வலியின் முன்னால் ஒரு சுயம் என்னென்னவாகவெல்லாம் மாறுகிறது என்பதன் விதவிதமான சித்திரங்கள்தான் ‘ஸலாம் அலைக்’.    

அகதி தனது உடன்பிறந்த சகோதரிகளின் பெயரைக் கூட மறந்துபோகும் மரத்த நிலை ஏற்படுகிறது. ஞாபகம் இருக்கும் பெயர்களை தாளில் எழுதிவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பலாலித் தீவில் விமானக் குண்டுக்குப் பலியான கதைசொல்லியின் தங்கையின் சடலத்தைப் பார்த்து அவளுக்கு உரிய இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி விட்டால் அந்தச் சாவின் நினைவைக் கடந்துவிடலாம் என்று நினைக்கிறது அந்தக் குடும்பம். குடும்பம், சாதி, மதம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை வளச் சடங்குகள் எல்லாம் கட்டப்பட்டுள்ள இடம் நினைவு. மனத்தை முற்றாகக் கடப்பதற்கு அல்ல; கொதித்துப் பொங்கிக் கொண்டேயிருக்கும் மனத்தை சில நொடிகள் தணிக்க வைப்பதற்கு சடங்குகள் தற்காலிகமாக உதவுகின்றன என்கிறார் ராபர்ட்டோ கலாசோ.

ஷோபா சக்தியின் சமீபத்திய நாவல்களிலும், சிறுகதைகளிலும் மதமும், சடங்குகளும் இந்த நிலையிலிருந்து ஆதூரமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. நீல அட்டையிலிருந்து தொடங்கும் கதையின் சொல்லி, ஒரு சடலத்தை வைத்து, உப்பைப் போட்டு, பூக்கட்டும் பண்டார சாதியினரின் இறுதிச் சடங்கைக் கனவாய் விஸ்தாரமாக காண்கிறான்.    

இந்த நினைவுகளே அவன் ஆதியிலிருந்து கூட்டாகச் சேர்த்த செல்வங்களின் மகத்தான குதிராகவும், இந்த நினைவுகளே அவன் அழிவதற்கான வெடிமருந்துகள் பதுங்கியிருக்கும் பாண்டமாகவும் மாறுவதைத் தான் ஷோபா சக்தி என்னும் கதை சொல்லி நமக்குத் தொடர்ந்து பல்வேறு சுவாரசியமான கதைகள் வழியாக ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?

நினைவு தேவை; நினைவு தேவையும் இல்லை. நினைவுக்கும் நினைவற்ற இடத்துக்கும், மனத்துக்கும் மனமற்ற பகுதிக்கும் நடுவில், நுழைந்து நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது வாழ்வு.

புணரும் போது நினைவை விட்டும், திரும்பச் செலுத்தியும் தான் புணர வேண்டியிருப்பதைப் போல இருக்கிறது இருப்பு. மனம் போகிறது. மனம் வருகிறது. மனம் போகிறது. மனம் வருகிறது. 

ஆனால் அகதியாகிவிட்ட ஒருவனுக்கு அந்த நினைவும் போர்க்களமாக, பலிபீடமாக மாறுகிறது. வரலாற்றில் மனிதன் தான் சேர்த்த அத்தனை உடைமைகளையும் இழந்தாலும், அவனுக்கு எஞ்சியிருக்கும் ஒரே இடம் சுயம் என்னும் மேடையும் அதில் அவன் சதா நடத்திக் கொண்டிருக்கும் எண்ணம் மற்றும் நினைவு ஆடும்  கூத்தும்தான்.

 விதைப்பை உதைக்கப்படுவது போல உதைக்கப்பட்டு, சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுவது போல, அந்த இடமும் மயங்கிக் கலப்பதை ஷோபா சக்தி, இன்னொருபடி மேலே போய் கலையாக மாற்றியுள்ள நாவல்தான் ஸலாம் அலைக்.

 000

 ஷோபா சக்தி, அகதியின் ஒரு கதையைத் தான் பல்வேறு கதைகளாகத் தீராமல் தனது படைப்புகளில் பெருக்கிக் கொண்டே இருக்கிறார். அகதியாவதற்கு முன்பும் அகதியான பின்புமான கதைகள் அவை.

 000

 நாவலின் இரண்டு பக்கங்களிலிருந்தும் கதை தொடங்குவதால் நான் முதலில் கொஞ்சம் அசந்துபோய் விட்டேன். அதைப் பதிப்பித்திருக்கும் நண்பர் நீலகண்டனைக் கூப்பிட்டு, எங்கேயிருந்து படிக்கத் தொடங்கலாம் என்று ஆலோசனை கேட்டேன். அவர் நீலமுதுகிலிருந்து தொடங்குங்கள் என்றார். இப்படித்தான் விஷயங்களை நான் எனக்கு மிகவும் எளிமைப்படுத்திக் கொள்கிறேன்.

நான் ஏன் ஷோபா சக்தியின் புதிய சிறுகதையை, புதிய நாவலை வந்தவுடன் வாசித்துவிட மெனக்கெடுகிறேன். ஷோபாவின் உலகம் எனக்கு இன்னும் வசீகரம் குன்றாமல் ஏன் இருக்கிறது?

ஷோபாவிடம் எனக்கு இருக்கும் விமர்சனம் என்ன?

குற்றம், வன்முறை, செக்ஸ், திகில், அபத்தம், அருவருப்பு, மர்மம், மாயத்தன்மை அனைத்தையும் ரசங்களாகத் திறன்பட மாற்றியுள்ளான் ஷோபா சக்தி என்னும் கதைசொல்லி. ஒரு அனுபவத்துக்கு, ஒரு உணர்வுக்குப் பழகிய உறுப்பில் மீண்டும் அத்துமீறிக் கையைப் போட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்த முயலும்  ஆபாச வித்தையை இதுவரை ஷோபா சக்தி அவர் படைப்புகளில் காண்பிக்கவேயில்லை.  

மனம், மனித நடத்தை, அதுபோடும் எல்லையற்ற கோலங்கள், அனுபவப் பாங்குகள் சார்ந்த கூர்மை ஷோபா சக்தியில் கூடிக்கொண்டே வருகிறது. பாக்ஸ் நாவலுக்குப் பிறகு கவித்துவம் கூடிய நாவல் என்றும் ஸலாம் அலைக்-ஐச் சொல்வேன். கவித்துவம் என்று சொன்னால் ஷோபாவின் வாயில் நகை அரும்பும் என்று தெரிந்தேதான் இந்தக் கூற்றைச் சொல்கிறேன். அப்புறம் ஸலாம் அலைக் நாவலில்தான் மையபாத்திரமானவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக எப்போதும் அழும்நிலையில் இருக்கிறான்.  

ஸலாம் அலைக் நாவலில் முதல்முறையாக, வாசிப்பவனின் அனுபவம் மொழியின் வழியாகவே உருக்கொண்டு, கதை மேல் கதையாக, வலி மேல் வலியாக மரத்த தன்மைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மொழிதாண்டிய மயக்கத்தை ஏற்படுத்துவதும் எனக்கு நிகழ்ந்தது.

எல்லாரும் எல்லாரையும் சந்தேகிக்கும், யாரும் யாராகவும் மாற வேண்டிய, மாறக்கூடிய தருணங்கள் இந்த நாவலில் அதிகம். இந்திய அமைதிப் படை வந்தபிறகு, அதன் சார்பாக தமிழ்ப் படைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை அழைத்துச் சென்று சித்திரவதை புரிகிறார்கள். அவர்களில் உயிர்பிழைத்து வந்தவர்களை புலிகள் தேடிவந்து பிடித்துச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு எதிரியாகும் அவலமும் மயக்கமும் அங்கே நிகழ்கிறது.       

பொய் உண்மை, எதார்த்தம் கனவு, ஆவணம் புனைவு, எண்ணம் நடப்பு, தன் அனுபவம் பிறனின் அனுபவம், உண்மை பொய், வாழ்வு மரணம், சந்தோஷம் துக்கம், வலி கிளர்ச்சி, சுயம் சுயம் அல்லாதது எல்லாம் மயங்குகிறது.

ஓரிடத்தில் எண்ணமெல்லாம் வேதிப்பொருட்களின் சுரப்புதான் என்கிறான் கதைசொல்லி.

ஆனால், சமீபத்திய அவரது நாவல்களைப் படித்து முடிக்கும்போது, ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற ஒரு மேம்பட்ட ஹாலிவுட் திரைப்படத்தின் திரைக்கதைத் தொழில்நுட்பத்தைத் தான்(அது அத்தனை சாதாரணமல்ல எனினும்) ஷோபா வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறாரோ என்றும் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. பாக்ஸ் நாவலிலிருந்து அந்தப் பதிவு என்னைத் தொடர்கிறது. பாவ்லோ கொய்லோவின் சாயலை மட்டும் உருவிக்கொண்டு ஷோபா சக்தி தன் உலகத்தை நெசவு செய்த படைப்பு அது.

ஏனெனில் கைவினைஞன் போடும் தேர்ந்த தையல்கள் ஷோபா சக்தியின் நாவல்களில் தொடர்ந்து தெரிகிறது.

 ஷோபா சக்தியின் சிறுகதைகளில் தொழில்நுட்பத்தின் தையல்கள் அந்தளவு தெரியவில்லை. மெய்யான ஆட்டக்களம் அதுவேயாகவும் ஷோபாவுக்கு இருக்கக்கூடும்.   

 தையல்கள் மயங்கிய படைப்பொன்றை நான் ஷோபா சக்தியில் எதிர்பார்க்கிறேனா? அது தவறான எதிர்பார்ப்பா? எனக்கு சொல்லத் தெரியவில்லை.  

 அனைத்தும் சரியான இடத்தில் அமர்வது யோகம் எனப்படுகிறது. எல்லாம் அமர்ந்தும் எல்லாம் கூடியும் ஆனால் எதுவுமே தெரியாமல் இருப்பதுபோலச் செய்வதை படைப்பில் எதிர்பார்ப்பது பழைய ஒரு ஆளின் மனநிலையா?

கதைகெட்டுப் போன சமகாலத்தின் கதை என்றும், கதைகெட்டுப் போன மனிதனின் கதை என்றும் ஷோபா சக்தியின் கதைகளைச் சொல்லலாம்.    

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக