Skip to main content

யவனிகா ஸ்ரீராம் நேர்காணல்

வர்க்கமும் வறுமையும் அழகியல்தானே

சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்தமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இது...

உங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்…

பாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர்.

இப்படியான சூழலில் நூலகத்தில் ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமையையும் பசுவய்யாவின் நடுநிசி நாய்களையும் எடுத்துப் படித்தேன். நான் முன்பு படித்த கவிதைகளைவிட இவை யதார்த்தமாகத் தோன்றியது. திராவிட இயக்கம், மார்க்சிய சார்புள்ளவனாக இருந்தாலும் அந்த இயக்கங்களைப் பகடி செய்து எழுதிய ஞானக்கூத்தனை எனக்குப் பிடித்திருந்தது. மேசை நடராசர், காலவழுவமைதி, அம்மாவின் பொய்கள், பாரதி, பாரதிதாசன், வானம்பாடிகளைத் தாண்டி வேறு ஒரு பரம்பரை கவிதைகளில் செயல்படுவதைத் தெரிந்துகொண்டேன். ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் எனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள். அத்துடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெக்டின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. ‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதனால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டும்’. அதிக ரொட்டிகளைச் சுடும் திறன் மீது அவனுக்குப் பெருமை இல்லை. அத்தனை ரொட்டிகளுக்குத் தேவை இருக்கிறது என்பதே அவனது அக்கறை. கவிஞனுக்குக் கவிதையும் ரொட்டியும் ஒன்றாகவே இருக்கிறது.


உங்களது கவிதைகளில் வரும், தமிழ் நவீன கவிதைக்கு மிகவும் புதுமையான நிலப்பரப்புகளை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் பெற்றீர்களா?

சிறுவயதிலிருந்து வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வெளியேற முயல்பவனாகவே இருந்திருக்கிறேன். வீடு என்பது  நான் இறக்கிறவரை இப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. குடும்பம் எல்லா ஆசாபாசங்களையும் தணிக்கை செய்யக்கூடிய இடம் என்று அறிந்துவிட்டேன். எனது கவிதைகளில் வீட்டைப் பற்றி நான் எழுதியதேயில்லை. அது எல்லாருக்கும் பொது அனுபவம்தான்.

பள்ளி இறுதி வகுப்பில் நான் தோல்வி அடைந்தவன். 15 வயதிலேயே நான் வணிகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டேன். காபிக்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலையில் காபிக்கொட்டை மூட்டையைச் சுமந்து அலைந்திருக்கிறேன்.

பன்றி மலையின் இயற்கையோடு என்னை ஆழ்த்திக்கொண்டேன். மலையிலிருந்து மூட்டையை இறக்கி பேருந்து நிலையத்திற்கு குதிரைகளுடன் போகமுடியும். அங்குள்ள மரங்கள், பூச்சிகள், இலைகள் என இயற்கையோடு எனது மனம் இயல்பாக இணையத் தொடங்கியது. அதனால் எனது கவிதைகளில் வரும் நிலப்பரப்புகள் உள்ளேயும் இருக்கவே செய்கிறது. காபிக்கொட்டை வியாபாரம் பருவநிலை சார்ந்தது. ஆறுமாதம் தான் சீசன்.

மிச்ச நாட்களில் ஜவுளி வியாபாரம் பார்த்திருக்கிறேன். அரபிக்கடலோர கிராமங்கள் அத்தனையிலும் நான் சேலைகளை விற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க எனது கால்தடங்கள் பதிந்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியேறும் ஆசையை நான் இப்படித்தான் தீர்த்துக் கொண்டேன். 

நெய்தல் நில வாழ்க்கை உங்கள் கவிதைகளில் இடம்பெற இந்த வாழ்க்கை துணைபுரிந்தது எனச் சொல்லலாமா

சாயங்காலத்தில் நான் கடலைப் பார்த்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருப்பேன். கடலை நெருக்கமாக உணர்ந்தது அப்போதுதான். இரவில் நானும் கடலும் தனியாக இருக்கும் நிலைகளை அனுபவித்திருக்கிறேன். இருட்டில் கடல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். காட்சியில் அறுபட்ட கடலின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பேன். கடல் சார்ந்த மெல்லுடலிகள், மீனவர்களின் வாழ்க்கை எல்லாம் என் மனதில் அந்த வயதிலேயே தோய்ந்துவிட்டன. கைத்தொழிலிலிருந்து அந்நியப்படாத கடல்சார் வாழ்க்கை இன்னும் எனக்கு வசீகரமாகவே இருக்கிறது. ஒரு நாடோடியாக இருந்த எனக்கு இயல்பாகவே மார்க்சிய தத்துவ அறிமுகமும் ஏற்பட்டு விட்டது. எல்லாவற்றையும் வர்க்கச்சார்புடனேயே பார்க்கக் கற்றுக்கொண்டேன்.


மார்க்சியம் ஒரு தர்க்கச் சட்டகத்தோடு தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஆனால் கவிதை தர்க்கத்தை மீற முனையும் அறிதல் முறை இல்லையா?

கவிதை வழியாக தீவிரமான அரசியலைப் பேசும்போது அழகியல் பிரச்சினைகளும் வரவே செய்கின்றன. ஆனால் வறுமையும், வர்க்கமும் அழகியல்தானே. அழகியலையும், பாலியலையும் ஏதோ ஒருவகையில் எல்லா வகையான துன்பத்துக்கும் இடையிலும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பரவச நிலையில் இருப்பதை விரும்புகிறார்கள்.

இந்தியா முழுவீச்சுடன் தாராளமயத்திற்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் வியாபாரத்துக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டீர்கள் அல்லவா?

80-களின் இறுதியில்தான் சிங்கப்பூர் போகத் தொடங்கினேன். பத்துக்கும் மேற்பட்ட தடவை போயிருக்கிறேன். சிங்கப்பூர் ஏற்கனவே திறந்த சந்தையாக மாறிவிட்டது. சீனா மற்றும் ஜப்பானியர்களின் மூலதனம் அங்குள்ள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடிகள் பெரும் வலியைக் கொடுப்பதாக இருந்தன. குடும்ப உறவுகளில் பெரும் திரிபுகள் தொடங்கிய காலம் அது. பாலியலே சந்தைமயமாகி விட்ட சூழல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அநாதைகளாக, பைத்தியங்களாக நகரில் அலையும் சீனர்களைப் பார்த்தேன்.  அங்கு நான் பார்த்த வாழ்க்கைமுறை, பெரும் கட்டுமானங்கள், நகர்மயமாதல், கிராமங்களிலிருந்து பெருந்த எண்ணிக்கையில் புலம்பெயர்தல் காட்சிகள் சீக்கிரத்தில் இந்தியாவிலும் நடக்க இருக்கும் மாற்றத்தை எனக்குத் தெரிவித்தது.

மனிதகுல வரலாற்றிலேயே 20-ம் நூற்றாண்டை அதிகபட்சமான மாற்றங்கள் நடந்த காலகட்டமாகப் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் சார்ந்த துயரத்தைப் பாடும் நாடோடிப் பாடல்கள் என்று உங்கள் கவிதையைச் சொல்லலாமா?

பொருள்வயமான தட்டுப்பாடு என்பது  ஒருவகையான ஆன்மிகரீதியான வறுமை என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் கலாசார ரீதியாக சுதந்திரமாக இருக்கத்தான் மனிதன் விரும்புகிறான். ஆனால் கலாசார ரீதியாக அவனுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அவனது மனமோ கட்டற்ற சுதந்திரத்தை விரும்புகிறது. எல்லா இயல்பூக்கங்களையும் காயடிக்கும் அமைப்பைச் சமூகம் என்ற பெயரில் வைத்திருக்கிறோம். அடிப்படை உணர்வுகளை ஒடுக்கும் அமைப்பில் நாம் வாழ்கிறோம். சமூகம், அரசு போன்ற நிறுவனங்கள் உயிரற்ற தன் உட்கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காக உயிருள்ள மனிதர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறது. அந்த துயரத்தைத் தான் என் கவிதைகளில் பேசுகிறேன். 

இந்தியா போன்ற நாடுகளில் உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தனித்துவமான தாக்கம் என்றால் எதைச் சொல்வீர்கள்?


இந்தியாவைப் பொறுத்தவரை சாதியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் இறுக்கமானவை . இந்தியா திறந்த சந்தையான பிறகு அதிகமாகக் கிடைக்கும் பொருளாதாரத்திற்காக மக்களிடம் நுகர்வுத் தன்மையை மட்டும் அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டுமீறிய நுகர்வுக்காக  அடித்தள மக்களை வெறுமனே நுகர்வோர் ஆக்கும் சூழல் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது.  தாராளவாதச் சந்தை அதிகம் வாங்கும் திறனற்ற மக்களின் முன்பாகவே திறந்துவிட்டிருக்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்களில் வர்க்கரீதியாகப் பெரும்பகுதி பேர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பத்து சதவீதம் பேர் மகா கோடீஸ்வரராகும் நிலைமை இங்கே உள்ளது. இங்கே நிலபிரபுத்துவத் தன்மை தொடர்ந்துகொண்டே இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய சட்டங்கள் மனிதனை மட்டுமே ஒடுக்குகின்றன. மூலதனத்திற்கு திறந்த கதவுகள் மனிதர்களுக்கு மட்டும் சிறைக்கதவுகளா? இங்கே பொருளாதார தாராளவாதம் மட்டுமே இருக்கிறது, கலாசார தாராளவாதம் இல்லை. மையப்படுத்தப்பட்ட ஆதிக்கக் கருத்துநிலையிலிருந்து நமது மார்க்சியர்கள்கூடத் தப்பவில்லை.

தேசிய விடுதலை போன்ற சூழல்களில் தான் பாரதி, நெரூதா போன்ற மகாகவிகள் உருவானார்கள்.  லட்சியவாதமே கேலியாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில் கவிஞனின் வேலை என்னவென்று பார்க்கிறீர்கள்?

ஒரு தேசத்திற்கான ஒருங்கிணைவுக்காக, எல்லா தேசிய அரசாங்கங்களுக்கும் தேசியக் கவிஞர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பாரதி போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இன்றைய கவிஞர்கள் நிராகரிக்கவே வேண்டும். எந்த விதமான ஒருங்கிணைப்புக்கும் நான் எதிரியாகவே இருக்கிறேன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பையும் என்னால் உணரமுடியவில்லை. மொழியா, நீளமா, தூரமா, முகங்களா என்று என்னால் சொல்ல முடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கவிகள் சொல்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் வடவேங்கடம் முதல் தென்குமரி என்று நில அமைப்புசார்ந்து ஒரு தேசியத்தை வரையறுக்கிறார்கள். இந்த வரையறைக்குள் வராத பழங்குடிகள்,  மொழிச் சிறுபான்மையினர், உதிரிகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என எத்தனையோ மற்றமைகள் தேசியத்துக்குள் வராமல் இருக்கின்றன.

உலகம் ஒற்றைக் கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கவிஞனாக அதை நான் பன்முகத்தன்மை கொண்ட கிராமமாக மாற்றுவேன். அங்கே ஒரே உலகம் இல்லை. நூற்றுக்கணக்கான உலகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வேன்.

90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட தமிழ் புனைவுகள், கவிதைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லுங்கள்?

 
பன்னாட்டு மூலதனத்தின் கீழே இந்தியா வேகமாக வருகிறது. வாழ்க்கையின் சகல பிரிவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீனத்துவத்தின் கோளாறுகள் தெரியத் தொடங்குகின்றன. பொது மனசாட்சியை பாவனை செய்த நடுத்தர வர்க்கமும் அந்த பாவனையையும் தவறவிட நேர்கிறது. நடுநிலைமை என்றே எதுவும் கிடையாது. என்றாகிறது.

மற்றவர்கள், மற்ற சமூகங்கள் மீது கரிசனம் காட்டிய படைப்புகள் வரத்தொடங்குகின்றன. பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை மற்றும் சமூகப்பின்னணிகளிலிருந்து எழுத்துகள் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. பெண் கவிஞர்கள் எழுதவந்தார்கள். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகிய கோட்பாடுகள் பரவலாவதற்கு இந்தப் படைப்புகள் உதவிபுரிந்திருக்கின்றன. லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், பாலை நிலவன், பிரான்சிஸ் கிருபா, கரிகாலன் உள்ளிட்ட பத்துப் படைப்பாளிகளைப் பிரதானமாகச் சொல்வேன்.

 உங்களைப் பொறுத்தவரை பாரதி முதல் எழுத்து மரபுக் கவிதைகளை சுமையாகவே பார்க்கிறீர்கள்...


நவீன கவிதையைப் பொறுத்தவரை, 90க்கு முன்பான கவிதையாக்கத்தையும், அதற்குப் பிறகான கவிதையாக்கத்தையும் இரண்டு  பிரிவுகளாகப் பார்க்க வேண்டும். பாரதியில் தொடங்கி மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, பிரமீள், பசுவய்யா, நகுலன், சி.மணி ஆகியோர் அகரீதியான விசாரணைத் தன்மையில் கவிதைகளை எழுதினார்கள். ஆனால் புற உலகம் தொடர்பான விவரங்கள் அவற்றில் மிகவும் சொற்பமாகவே இருந்தன. தனிச்சுற்றுக்காக எழுதப்பட்ட, குழுக்குறியாகவே அவர்களின் படைப்பாக்கம் இருந்தது என்று கருதுகிறேன். ஒருவிதமான லட்சிய நிலையில் எழுதப்பட்ட கவிதைகளாக இருந்தன. மேல்தட்டு வர்க்கத்தினரின் உயர்தொழில்நுட்ப ஆன்மிகம் என்றே அந்தக் கவிதைகளைச் சொல்லமுடியும். அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு. அதை இந்தியத் தன்மை என்றும் சொல்லலாம். புறவாழ்க்கை சித்திரங்கள், மற்றவர்கள், மற்ற சமூக குழுக்களின் அனுபவங்கள் எதுவும் அவற்றில் பதிவாகவேயில்லை. 
ஞானக்கூத்தன், ஆத்மாநாம் வரை அந்த அம்சம் தொடர்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, பெட்ரண்ட் ரஸல் ஆகியோரின் தாக்கமும் இந்திய அனுபூதிவாதமும் சேர்ந்து தொழிற்பட்ட கவிதைகள் அவை. இந்தப் போக்கில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியவர் கலாப்ரியாதான். அவரது மொழியில் ஒரு  ஆதிமனிதத் தன்மையும், வன்முறையும் இருந்தது. மனதிலிருந்து உடலைப் பிரித்துப் பார்க்கும் தீவிரம் இருந்தது. அலங்காரம் அற்ற சொற்களில் அவர் தனது கவிதைகளை உருவாக்கினார். 


 ஆறுமுகா காபி ஒர்க்ஸ்

 யவனிகா ஸ்ரீராம்

 

எனது தேசம் விடுதலையின் கனவுகளில்
இருந்தபோது பிறந்தவன் நான்
அப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்
கிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்
வெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள்
சுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்
நைச்சியமாய் கைகுலுக்கி விடைபெற்றார்கள்
மக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு
நீர்நிலைகளுக்கு கிராமச் சாலைகளுக்குத் திரும்பினார்கள்
நான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்
ஒரு இயந்திரத்திற்கு உரிமையாளனானேன்
எனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்
தறியில் நெசவாளியாக அமர்ந்தான்
சிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்
கோவில்களில் மங்கல விளக்குகளும்
ஆலயங்களில் மெழுகின் தீபமும்
மசூதிகளில் பாங்கும் இழைய
எனது தேசம் அணைகளில் பாய்ந்து
ஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது
ஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்
வேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்
அதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்
கடைபெருகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்
விறுவிறுவென சந்தைக் காடானது
இந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ
தாராளமாய்க் கடன் கொடுத்தார்கள்
இப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்
என் கையைவிட்டுப் போனது
என் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்
விடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்
மனைவியோடு ஒரு வாடகை வீடு
காப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி
பவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்
கல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன
புகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு.

Comments