பாகிஸ்தானியக் கவிஞர் சைதுதீன்
இந்த பூமியில் எத்தனை மைல்கள்
எறும்புகள் நடக்கின்றன
எத்தனை எறும்புகள் நம் பாதங்களின் கீழே
நசுக்கப்படுகின்றன
அவை எண்ணமுடியாதவை
ஆனால் நமது உடலின் மீது
எறும்புகள் ஊரும்போது
நம்மால் அவற்றை எண்ணமுடியும்
அவற்றின் பயணங்களைப் பற்றி
ஓரளவு மதிப்பீட்டைச் செய்யமுடியும்
உங்கள் உடலிலிருந்து
ஒரு கடிக்கும் எறும்பை
எப்படி அகற்றுவீர்கள்
அதை ஒரு எறும்போ
அல்லது அதன் முறிந்த உறுப்புகளோ
சொல்வதற்கு முடியலாம்
எறும்புகளின் வீடுகள் பற்றி
வேறு எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது
அவை கதவுகளின் இடைவெளிகளில் வசிக்கின்றன
அல்லது சுவர் விரிசல்களில்
அல்லது இரவு முழுவதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் அவை எங்கே கூடுகின்றன
என்பதையும்
ரகசியக் கூட்டங்களை நடத்தும் இடம் பற்றியும்
உங்களால் அறிய இயலாது.
ஆனால் நீங்கள் விரும்பும் தேன்
சர்க்கரை சீசா
அல்லது ஒரு இறைச்சித் துண்டு
அவற்றின் உணவு சேமிப்பாக மாறிவிடும்
எண்ணமுடியாத அளவில் அவை கூடிவிடும்
உங்களை எண்ணற்றத் துண்டுகளாக்கி
தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும்
அத்துடன்
கதவுகளின் இடைவெளிக்குள் இருக்கும் சிறுதுவாரங்களையும்
உங்களுக்குக் காண்பிக்கும்
அத்துடன் சுவர்களின் விரிசல்களையும்
அத்துடன்
அவை ரகசியமாய் சந்திப்புகளை நடத்தும்
மூலைகளையும் கூட.
(எழுத்தாளர்கள் நிர்மல் வர்மாவும் யு.ஆர்.அனந்தமூர்த்தியும் சேர்ந்து
கொண்டு வந்த ‘யாத்ரா’ இதழில் வந்த கவிதை இது. இந்தப் பழைய இதழைக் கொடுத்த நண்பன்
தர்மராஜனுக்கு நன்றி)
Comments