ஷங்கர்ராமசுப்ரமணியன்
பறக்கும் ரயில்
நிலையத்தின்
தண்டவாள இடுக்கில்
நிற்கிறது
ஒரு புறா
ரயில் கடந்துசென்ற
பிறகு
மெதுவாக
தண்டவாளக் கட்டைகளிடையே
நடக்கிறது
முதுமையோ நோயோ
தெரியவில்லை
இனி அதனால் பறக்க
இயலாது
ரயில்
தண்டவாளத்தின்
கருத்த
மசித்தடங்கள்
வழியாக
குறைவான
வெளிச்சத்தில்
மெதுவாக நடக்கிறது
கழுத்தில்
கண்களில்
அலகில்
சிறகில்
எந்தத் துடிப்பும்
இல்லை
இன்னும் சில
தப்படிகள் தூரத்தில்
ஜன்னல்கள்
நிர்மலமான நீலவானம்
கடல் வெளிச்சம்
எல்லாம் இருக்கிறது
அவை இன்று வேறு
புறாக்களால்
நிரப்பப்பட்டு
விட்டன
இந்தப் புறா தன்
வாழ்வில்
நோயைத் தவிர
வேறு எந்த ஒரு
குற்றமும் இழைக்கவில்லை
ஆனாலும் அது
தன் வாழ்க்கையின்
மகத்தான
குற்றமூலையில் நிற்கிறது
Comments