இரண்டு கால்கள்
நான்கு கால்கள்
பதினாறு கால்கள்
கொண்ட அன்பை
இங்கே
நான் எப்படிப் பாதுகாத்துப் பராமரிப்பேன்?
ஒரு முக்காலி போடும் அளவே இடமுள்ள
கிரகத்தில் கூட
குட்டி இளவரசனால்
தனது நேசத்துக்குரிய
ரோஜாவை
ஒரு ஆட்டின் துர்வாயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை
எனும்போது…
நான் எப்படி என் அன்பைப் பாதுகாத்துப்
பராமரிக்கப் போகிறேன்?
முந்தின தினத்தின் முடிவில்
முளைத்திருந்த களைகளையெல்லாம்
புன்னகையுடன் பிய்த்தெறிகிறேன்
நீர் ஊற்றிய பிறகு என் விரலின் நுனியால்
அதன் தலையைத் தட்டிக் கொடுக்கிறேன்
வீட்டுக்கு வெளியே வழிகள் நீள்வது
புதிராவது
அங்கே மனிதர்கள் அன்னியர்கள் என்பதால்
வாசல் கதவை நன்றாகப் சாத்திவைக்கிறேன்
காகிதம் பிளாஸ்டிக் குப்பை உலோகங்கள் உணவு
எதையும் பிரித்துப் பார்க்க
என் அன்பின் நாவுக்குத் தெரியாது
குனிந்து குனிந்து தரையில் பொறுக்கியபடியே
நடக்கிறேன்
காலிடுக்கில் ஒரு உடைந்த பிளேடைப் பார்த்து எடுக்கும்போதுதான்
உணர்ந்தேன்
எத்தனை பிளேடுகள்
எத்தனை கூர்முனைகளை அகற்றி
எனதிந்த அன்பைப் பாதுகாத்துப் பராமரிக்கப் போகிறேன்
எட்டுத் திசைகளிலும்
ஓட்டைக் கதவுகள்
உயரம் குறைந்த வலுவற்ற சுவர்கள்
பரிச்சயமற்ற அந்நியர்கள்
வீடு திரும்ப முடியாமல்
என் அன்பை ஆக்கும் இந்திர ஜாலங்கள்
இந்த உலகில்
என் அன்பை எப்படிப் பாதுகாத்துப் பராமரிக்கப் போகிறேன்?
ஆம்
என் அன்புதான் என் அன்பை
தனித்துவமாக்குகிறது
என் அன்புதான் எனக்கு
அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தருகிறது
என் ரோஜாவை
என் நேசத்தைப் பரிச்சயம் செய்தபின்னர்தான்
அனைத்து ரோஜாக்களிலும்
என் நேசத்தின் சாயல் தெரிகிறது
ஆம், முரணானது தான்
இந்தக் கிரகத்தில்
காதல் விடைபெறும்போது
காதல் தப்பிக்கும்போது
காதலை அதீதமாக உணர்வது
அன்பே
அன்பே
அன்பே
குட்டி இளவரசனைப் போல்
தனிமையாக உணர்கிறேன்
நானும்
பிரியம் கொண்ட ரோஜாவிடமிருந்து
மிக மிகத் தொலைவில் இருக்கிறேன்.
Comments