அவன் சிறுவனாக இருந்தபோது, பொருட்கள் எப்படி வேலை
செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் பேராவல் கொண்டிருந்தான். கையில் கிடைப்பதை
அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதன் இயக்கத்தைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம்
அதிகம். அவன் வளர்ந்தபிறகும் தன் வேலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அந்த
வேலையின் வீச்சு வேறு. பொம்மை ரயில்களை உடைக்காமல் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது
என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வெற்றியும் கண்டான். அவன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். பிரபஞ்சத்தின்
தோற்றம், கருந்துளைகள், காலம்-வெளி தொடர்பான சில புதிர்களுக்கு விடையளித்தவர்; அறிவியல் மீது சாமானிய வாசகர்களிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர்
ஸ்டீபன் ஹாக்கிங். சமீபத்தில் மறைந்துபோன அவரது இறுதி நூல் ‘ஆழமான கேள்விகள்
அறிவார்ந்த பதில்கள்’.
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு
தோன்றியது? மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? உள்ளிட்ட பத்து முக்கியமான
கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்துள்ள ஆழமான பதில்கள் தான் இந்த நூல். இளம்
தலைமுறையினர், மாணவர்கள், குழந்தைகளை நோக்கி எளிமை, சுவாரசியம், விந்தை, நேசம்,
ஆழம், நகைச்சுவையுடன் உரையாட முயலும் இறுதிக் கடிதம் இந்தப் புத்தகம். கல்லூரிப்
பருவத்திலேயே உடலின் அங்கங்கள் படிப்படியாகச் செயலிழக்கும் ‘மோட்டார் நியூரான்
வியாதி’ இருப்பது கண்டறியப்பட்டு இரண்டு வருடங்களே மீதி என்று நாள்
குறிக்கப்பட்டும் நம்பிக்கை தளராமல் சக்கர நாற்காலியிலேயே தனது பெரும்பகுதி
வாழ்க்கையைக் கழித்தும் தன் கற்பனையால் உலகையளந்த சாகசக் காரர். அவர் இந்த நூலில்
எழுதியிருக்கும் கடைசி கட்டுரையான ‘வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?’,
வருங்காலம் தொடர்பான நல்லுணர்வையும் தான் விட்டுச்செல்லப் போகும் உலகத்தின் மீதான
பிடிப்பையும் தெரிவிப்பதாகும்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகள் லூசி ஹாக்கிங் எழுதியுள்ள
சிறப்புரை, அதிகபட்ச உடல்நலக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை மகிழ்வித்த தந்தையான
ஸ்டீபன் ஹாக்கிங்கை நமக்கு நெகிழ்ச்சியாக அறிமுகப்படுத்துகிறது. நோபல் பரிசு பெற்ற
இயற்பியலாளர் கிப் எஸ். தார்ன், ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஆளுமை உருவான சூழலை நேரடி
அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறார்.
முதல் அத்தியாயமான ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?’
இந்தப் பிரபஞ்சம் உருவாகியிருக்கும் சூழலை படிப்படியாக விவரிக்கும் அவர், மூன்று
மூலப்பொருட்கள் கொண்டு உருவான பிரபஞ்சத்தின் சமையல் குறிப்பைக் கொடுக்கிறார்.
அங்கே கடவுளுக்கான அவசியமே இல்லை என்பதை நிரூபித்துவிடுகிறார். ஆனால், அதே
நேரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் சூன்யத்திலிருந்தே உருவாகியிருக்க வேண்டுமென்பதையும்
நமக்கு விளக்குகிறார்.
‘ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து ஆற்றலும் வெளியும் அடங்கிய
அற்புதமான, பிரமாண்டமான ஒரு பிரபஞ்சம், பெருவெடிப்பின் மையத்திலிருக்கும்
மர்மமாகும்’ என்ற புதிரையும் நம்முன்னர் விட்டுத் தனது விசாரணையைத் தொடர்கிறார்.
20-ம் நூற்றாண்டில் பல கேள்விகளுக்கு பதில்களை ஐன்ஸ்டீன் சொன்னார். 21-ம்
நூற்றாண்டில் ஸ்டீபன் ஹாக்கிங் பல புதிர்களுக்குப் பதில் சொன்னதோடு, கூடுதலான
கேள்விகளையும் விட்டுச் சென்றுள்ளார் என்று கிப் எஸ். தார்ன் சொல்வது சரிதான்.
‘பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது’ கட்டுரையிலும் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக்
காரண-காரிய அடிப்படை என்ற ஒன்று இல்லை என்று போட்டுத் தகர்க்கிறார். காரண- காரியம்
இல்லாத வெட்டவெளியில் கடவுள் நுழைந்துவிடுவாரோ என்று, பொருள்முதல்வாதத்தையே
மதவாதமாக ஆக்கிய சோவியத் விஞ்ஞானிகளுக்கு தான் வாழ்ந்த காலத்தில் கிலியையும் தந்திருக்கிறார் ஸ்டீபன்
ஹாக்கிங். உண்மை, எல்லா முதல் வாதத்தையும் தாண்டக்கூடிய வலுவுடனேயே இருக்கிறது.
கடவுளின்மையின் அந்தர வெளியில் ஹாக்கிங் நிற்கிறார். ஆனால் இயற்கை,
இயற்கை நிகழ்வுகள், பிரபஞ்சம் இயங்கும்விதம் சார்ந்த விந்தையுணர்வு எதுவும் அவரிடம் குறையவேயில்லை.
பிரபஞ்சம் தற்செயலான முறையில் செயல்படுகிறது என்பதை
மறுத்த ஐன்ஸ்டீன் ‘கடவுள் பகடை ஆடுவதில்லை’ என்ற புகழ்பெற்ற கூற்றைச் சொன்னார். அதை மறுக்கும் ஹாக்கிங் ‘கடவுள் பகடை ஆடவே
செய்கிறார்’ என்று விளக்குகிறார். ஒரு மாபெரும் பகடையாட்டத்தில் பகடைகள்
உருட்டப்படுவதுபோலவோ அல்லது சூதாட்ட அரங்கில் உள்ள சூதாட்ட இயந்திரத்தில்
இருக்கும் சக்கரங்கள் சுழல்வதுபோலவோதான் பிரபஞ்சம் செயல்படுகிறதென்கிறார்.
அறிதலின் மீது வாத்சல்யம் கொண்டு ஸ்டீபன் ஹாக்கிங், பிரெக்சிட்
போன்ற அரசியல் விவகாரங்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள், சினிமா எனப் பல துறை
அறிவுகளைக் கலந்து, கருந்துளை சார்ந்த சிக்கலான விஷயங்களையும் விளக்க
முற்படுகிறார். கருந்துளை ஒன்றுக்குள் இடப்பட்ட செய்தி அப்படியே இருக்கும் என்று
கூறப்பட்டதை மறுக்கும் ஹாக்கிங், அதற்கு எளிய உதாரணத்தைத் தருகிறார். ‘செய்தி
முழுமையாக அழிந்துபோகாது. ஒரு கலைக்களஞ்சியத்தை எரித்துவிட்டு சாம்பலையும்
புகையையும் வைத்துக் கொள்வது போன்றது அது’ என்று உதாரணம் தருகிறார்.
தற்போதைக்கு அதிபுனைவில் மட்டுமே சாத்தியப்படும்
காலப்பயணம், வேற்றுக்கிரகக் குடியேற்றம் குறித்த ஸ்டீபன் ஹாக்கிங் மிகுந்த
நம்பிக்கையுடன் பேசுகிறார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து அங்கே மக்கள்
குடியேறியது எத்தனை இயல்பாக இருக்குமோ, அதேபோல மனித குலத்தின் அடுத்த நடவடிக்கை
குடியேறுவதற்குத் தகுந்த இன்னொரு கிரகத்தைத் தேடுவதாகத்தான் இருக்கும் என்கிறார்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் அதற்கான சாத்தியமும் வசதிகளும் ஏற்படும் என்று கூறும்
அவர் அதற்கான ஏற்பாடுகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இன்னொரு கிரகத்தைக்
கண்டுபிடித்துக் குடியேறும்போதுதான், மதம், தேசம் என பிரிவினைகளில் உழலும்
மனிதகுலம் ஒற்றுமையையும் இந்தப் பூமி என்னும் அற்புதக் கிரகம் குறித்த
பொறுப்புணர்வையும் அடையும் என்கிறார்.
கற்பனையும் விந்தையும் அறிதலுக்கான ஆசையும் ஒரு
மனிதனிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஸ்டீபன் ஹாக்கிங்கும்
அவரது இந்த எழுத்துகளும் ஒரு உதாரணம். கற்பனையின்மையும் படைப்பாற்றலின்மையிலும்
உறைந்து சாதி, மத, இன, அரசியல் அடையாளங்கள் கூர்மையாகி முரண்பட்டுப் போரிட்டுக்
கொண்டிருக்கும் உலகில் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு உயிலைப் போல இந்த இறுதிப்
புத்தகத்தை எழுதிச் சென்றிருக்கிறார் ஹாக்கிங். எதிர்காலம் நல்லதாகவே இருக்கும்;
அதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் நகைச்சுவையுடன் சொல்கிறார்.
உடல், தசைகள் படிப்படியாக கழுத்துவரை தன் இயக்கத்தை
நிறுத்தி, ஒருகட்டத்தில் பேச்சும் பறிபோய் மூளையில் மட்டுமே நிலைக்க முடிந்த
ஸ்டீபன் ஹாக்கிங்கை நவீன அஷ்டாவக்கிரன் என்கிறார் கவிஞர் புவியரசு. உடல் அவருக்கு
அனைத்துத் திசையிலும் தோல்வியைத் தந்தபோது அறிவின், அறிதலின் பரிசான கற்பனையின்
பிரமாண்டத்தில் சஞ்சரித்தவர் அவர்.
இந்தப் புத்தகத்தைப் படித்த பாதிப்பில் அவரது வாழ்க்கை
வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ‘The theory of everything’ திரைப்படத்தைப்
பார்த்தேன். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அந்தப் படத்தின் கடைசிக்
காட்சிக்கு முந்தைய காட்சி சித்தரிக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங் என்ற மனிதனின் முழு ஆளுமையையும் அவரது உலகப் பார்வையையும் ஒட்டுமொத்தமாக வெளியிட்டுவிடுகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங், தனது புத்தகமான ‘எ ப்ரீப் ஹிஸ்டரி ஆப்
டைம்’ நூலை எழுதிமுடித்த பின்னர் உலகப்புகழ் பெற்றார். அதையொட்டி அவர்
பங்கேற்கும் உரைநிகழ்ச்சி ஒன்றில், கேள்வி-பதில் பகுதியில் பங்கேற்கும் காட்சி அது. அவர் இருக்கும் மேடைக்குக் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் அழகிய யுவதி தனது கையிலிருந்து
அவளது பேனாவைத் தவறவிடுகிறாள். அதைப் பார்த்தபடி சக்கர நாற்காலியில்
அமர்ந்திருக்கும் ஸ்டீபனின் மனம், அந்தப் பேனாவை எடுத்துத் தர விழைகிறது. தனது
கற்பனையில் மேடையிலிருந்து இறங்கிப் போய் எடுத்தும் தந்துவிடுகிறது. ஆனால்,
எதார்த்தத்தில் அவளிடம் சென்று பேனாவை எடுத்துத் தர இயலாத ஸ்டீபனோ தனது கையறு நிலையில் உடைந்தழும்
நிலையில், தனது உடலின் சிறைக்குள் உணர்கிறார்.
அப்போது, “கடவுளை நம்பாத உங்களுக்கு வாழ்க்கை குறித்து தத்துவம் ஏதாவது இருக்கிறதா?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. மொத்தமாகக் கைவிடப்பட்டதாக உணரும் நிலையிலிருந்து நொடிநொடியாகத் தன்னைத் தேற்றியபடி பேசத்தொடங்குகிறார்.
அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அங்கே பொய்யோ மிகையோ பாசாங்கோ வெளிப்பட இயலாது.
அப்போது, “கடவுளை நம்பாத உங்களுக்கு வாழ்க்கை குறித்து தத்துவம் ஏதாவது இருக்கிறதா?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. மொத்தமாகக் கைவிடப்பட்டதாக உணரும் நிலையிலிருந்து நொடிநொடியாகத் தன்னைத் தேற்றியபடி பேசத்தொடங்குகிறார்.
அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அங்கே பொய்யோ மிகையோ பாசாங்கோ வெளிப்பட இயலாது.
“மனித எத்தனத்துக்கு எல்லைகள் இருக்கமுடியாது. நாம்
அனைவரும் வித்தியாசமானவர்கள். வாழ்க்கை எத்தனை மோசமாகத் தெரிந்தாலும்,
செய்வதற்கும் அதில் சாதிப்பதற்கும் ஏதோ ஒன்று உள்ளது. வாழ்வு இருக்கும் வரை
நம்பிக்கையும் இருக்கும்.” என்று சொல்கிறார்.
மனித விழைவுக்கும் மனிதனின் எல்லைகளுக்கும் இடையே நடக்கும்
மகத்தான போராட்டம் அந்தக் காட்சி. நமது கற்பனைக்கும் மெய்மைக்கும் இடையில்
இருக்கும் முரண் அந்தக் காட்சி. விதிக்கப்பட்டதன் எல்லையில் நின்றுகொண்டே அறிவால்
அறிதலின் வேட்கையால் தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வை தனது சிருஷ்டியை தனது எதார்த்தத்தை மகத்துவப்படுத்த முடியும் என்பதன் உதாரணம் ஸ்டீபன் ஹாக்கிங்.
இந்தத் தமிழ் புத்தகத்தில் ஹாக்கிங்கின் குரல் கேட்கிறது. அதைச் சாத்தியப்படுத்தியுள்ளார் மொழிபெயர்ப்பாளர் பிஎஸ்வி குமாரசாமி. மஞ்சுள் பதிப்பகம் இந்த நூலை அழகாக வெளியிட்டுள்ளது.
Comments