Skip to main content

பைரவ பிச்சாடனர்




இரண்டு ஆசாமிகளும் சிவ மூர்த்தங்கள்தான்
ஒருவன் துளியிலிருந்து முளைத்தவன்
பிந்தையவனோ சிவனையும் துறக்க தோஷம்பிடித்து அலைந்தவன்
அதனால் தான் அவன் கையில் துள்ளிய
மான் கீழே இறங்கியது
பிச்சாடனரின் கை அருகம்புல்லை
கவ்வத் துள்ளும்போது
பைரவரின் நாயாகி விடுகிறது
பைரவரின் நாய்
இப்போதும்
பிச்சாடனரின் மான் ஆவது
சொல்லாமல் விடுபட்டது
பைரவர் கை இறைச்சியைத்
தொடரத் தொடங்கியபோதுதான்
நாயுடன் தொடங்கியிருக்க வேண்டும்
எமது சகவாசம்
இரைக்குத் துள்ளும் கணத்தில்
நாய் மான்
மான் நாய்.
பைரவர் கையில் அருகம்புல்
பிச்சாடனர் கையில் இறைச்சி
நாய்கள்
மான்கள்

உயிர்
துள்ளும்
அழகு

உயிர்
துள்ளும்
கலை

உயிர்
துள்ளும்
அறிவு

உயிர்
துள்ளும்
விடுதலை

பசி என்று பெயர் கொண்டது
பசி என்று பெயர் கொண்டது
பசி என்று பெயர் கொண்டது.

(. ஜயபாஸ்கரனுக்கு)

Comments