Skip to main content

ஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்

ஒரு பூனையை தொலைத்தல்!



தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சி:

நாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; கர்ப்பமாக இருந்து எனது பெற்றோர்கள் அதன் குட்டிகளையும் பராமரிக்க இயலாதென்று கருதியிருக்கலாம். இந்தப் புள்ளியில் எனது நினைவு அத்தனை துல்லியமாக இல்லை. பூனைகளை இப்படி விடுவது என்பது வழக்கமானதே; அதற்காக யாரும்  விமர்சிக்கவும் போவதில்லை. பூனைகளின் கருப்பையை அகற்றும் யோசனையெல்லாம் யாருக்கும் உதிக்கவேயில்லை. நான் அந்தச் சமயத்தில் நடுநிலைப்பள்ளியில் ஆரம்ப வகுப்புகளில் இருந்தேன். 1955-ம் ஆண்டாகவோ அதற்கு சற்றுப் பின்னரோ இருக்கலாமென்று கருதுகிறேன். எங்கள் வீட்டுக்கு அருகே அமெரிக்க விமானங்களால் குண்டுபோடப்பட்ட ஒரு சிதிலமான வங்கிக் கட்டிடம் இருந்தது- போரின் அப்பட்டமான வடுக்களைக் கொண்ட சில கட்டிடங்களில் ஒன்று.

என் அப்பாவும் நானும் அந்தக் கோடை நாள் மதியப்பொழுதில் பூனையை விடுவதற்காக கடற்கரைக்குப் புறப்பட்டோம். அப்பா, சைக்கிள் ஓட்ட, நான் பூனையை வைத்திருந்த பெட்டியை மடியில் வைத்தபடி பின்னால் அமர்ந்திருந்தேன். நாங்கள் சுகுகவா நதியின் வழியாகப் பயணித்து கொரோயின் கடற்கரைக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்த மரங்களுக்கு நடுவே பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, திரும்பிக்கூடப் பார்க்காமல், வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் வீட்டிலிருந்து கடற்கரை இரண்டு கிலோமீட்டர்கள் தூரமாவது இருக்கும்.

அந்தப் பூனைக்காக வருத்தப்பட்டபடி, எங்களால் என்ன செய்யமுடியும் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டு வீட்டின் முன்னால்  இறங்கினோம். இறங்கி, முன்கதவைத் திறந்தபோது, நாங்கள் அப்போதுதான் விட்டுவிட்டு வந்த பூனை, எங்களைத் தனது சினேகமான மியாவுடன் வாலை விரைத்துவைத்துக் கொண்டு வரவேற்றது. எங்களுக்கு முன்னாலேயே வீட்டுக்கு வந்துவிட்டது. எத்தனை முயற்சித்தும் அந்தப் பூனை அதை எப்படிச் செய்தது தெரியவேயில்லை. நாங்கள் சைக்கிளில் தான் வந்தோம். என் அப்பாவும் ஆச்சரியப்பட்டுப் போனார். சிறிது நேரம் நாங்கள் இரண்டுபேரும் அங்கே பேசாமல் நின்றிருந்தோம். வெறும் விந்தையைக் காட்டிய என் அப்பாவின் முகத்தில் பெருமை படர்ந்து இறுதியில் நிம்மதியாக மாறியது. திரும்பவும் அந்தப் பூனை எங்களது செல்லமாக மாறிவிட்டது.

எங்கள் வீட்டில் பூனைகள் இருந்தன. அவற்றை நாங்கள் விரும்பவும் செய்தோம். எனக்கு சகோதரர்களோ சகோதரிகளோ கிடையாது. பூனையுடன் தாழ்வாரத்தில் சூரியவெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பதை மிகவும் விரும்பினேன். அப்படியிருக்கும் போது, நாங்கள் ஏன் பூனையை கடற்கரைக்குக் கொண்டுபோய் விட்டுவிட நினைத்தோம்? நான் ஏன் அதை எதிர்க்கவில்லை? இந்தக் கேள்விகளோடு சேர்ந்து அந்தப் பூனை எப்படி எங்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்ததென்ற கேள்விக்கும் இன்னும் பதில்களே இல்லை.

எனது தந்தை பற்றிய இன்னொரு நினைவு இது:

தினசரி காலை, காலையுணவுக்கு முன்னால், எங்கள் வீட்டில் உள்ள பூஜை மாடத்துக்கு முன்னர் அமர்ந்து, பவுத்த சூத்திரங்களைக் கண்களை மூடி உச்சாடனம் செய்வார். அது வழக்கமாக வீடுகளிலுள்ள புட்சுடான் அல்லவென்றாலும், அங்கே சிறிய உருண்டையான கண்ணாடிக் குடுவைக்குள் அழகாக செதுக்கப்பட்ட போதிசத்துவரின் உருவம் இருக்கும். அந்தக் கண்ணாடிக் குடுவைக்கு முன்னர் அமர்ந்து ஒவ்வொரு நாள் காலையும் என் தந்தை ஏன் சூத்திரங்களை உச்சாடனம் செய்தார்? எனது பதிலற்ற கேள்விகள் பட்டியலில் அதுவும் ஒன்று.

எப்படியாக இருப்பினும், ஒவ்வொரு நாளின் தொடக்கத்தைக் குறிப்பதற்கான முக்கியமான சடங்காகவே அவருக்கு இது இருந்தது. அவரது ‘கடமை’ என்று சொல்லிக் கொண்டதை அவர் செய்வதற்கு ஒருபோதும் தவறியதேயில்லை; அத்துடன் அதில் தலையிட யாரையும் அவர் அனுமதித்ததும் இல்லை. மொத்தச் செயலிலும் தீவிரமான கவனம் இருக்கும். ‘தினசரி வழக்கம்’ என்று அதை வெறுமனே முத்திரையிடுவது அதற்கு நியாயம் செய்வதாகாது.

நான் குழந்தையாக இருந்தபோது, யாரிடம் அவர் பிரார்த்திக்கிறார் என்று கேட்டேன். போரில் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதாகப் பதிலளித்தார். அவரது ஜப்பானிய ராணுவ சகாக்களுக்காகவும், அவர்களுக்கு எதிரிகளாகவிருந்த சீனப் படையினருக்காகவும். அவர் அதற்குமேல் பேசவில்லை, நானும் அவரை அதற்குமேல் அழுத்தவும் இல்லை. நான் கேட்டிருந்தால் அவர் கூடுதலாகத் திறந்திருக்கக் கூடும். ஆனால் நான் கேட்கவில்லை. அந்த விஷயத்தைக் கிளறாததற்கு எதுவோ என்னைத் தடுத்திருக்க வேண்டும்.

எனது தந்தையின் பின்னணி குறித்துச் சிறிது விளக்க வேண்டும். அவரது தந்தையார், பென்சிகி முராகமி, ஆய்ச்சி மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் பிறக்கும் இளைய மகன்களை அனுப்பும் வழக்கப்படி, எனது தாத்தாவும் அருகிலுள்ள ஆலயத்துக்கு பூசாரியாகப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவரென்பதால் பல்வேறு கோயில்களில் தன் பயிற்சிகளை முடித்து கியாடோவில் அன்யோஜி கோயிலில் தலைமைப் பூசாரியாக நியமிக்கப்பட்டார். இந்தக் கோயில்பற்றில் நானூறு அல்லது ஐநூறு குடும்பங்கள் இருந்ததால், அவருக்கு இது பணி அளவில் நல்ல உயர்வுதான்.

நான் ஒசாகா- கோப் பிராந்தியத்தில் வளர்ந்ததால், எனது தாத்தாவின் வீடாக இருந்த இந்த கியோட்டோ கோயிலுக்குப் போவதற்கு அதிகம் வாய்ப்பில்லாத நிலையில் அவரைக் குறித்து மிகச் சில நினைவுகளே இருக்கின்றன. இருப்பினும்  குடியில் நாட்டம் கொண்டவரென்று அனைவருக்கும் தெரியும் வண்ணம் சுதந்திரமான சங்கோஜமற்ற நபராகவே அவரை நான் புரிந்துவைத்திருக்கிறேன். அவரது முதல் பெயரில் உள்ள  ‘பென்’ குறிப்பது போலவே அவர் சரளமாக வார்த்தைகளைக் கையாள்பவர்; திறன்வாய்ந்த பூசாரியாக இருந்ததோடு பிரபலமாகவும் இருந்திருக்கிறார். கம்பீரமான குரலுடன் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராக அவர் இருந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது.

என் தாத்தாவுக்கு ஆறு மகன்கள்( ஒரு மகள் கூட இல்லை). ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தவர். ஆனால், எழுபது வயதில் காலை எட்டு ஐம்பது மணிக்கு, 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி, கியோடோவையும் ஒட்சுவையும் இணைக்கும் கெய்சின் பாதை தண்டவாளத்தைத் தாண்டும்போது ரயில் மோதி பலியானார். யமடா-சோவில் உள்ள ஆளற்ற ரயில்வே கிராசிங் அது. இந்தக் குறிப்பிட்ட நாளில் தான் கிங்கி பிராந்தியத்தை மிகப்பெரிய புயலொன்று தாக்கியது. அன்று கனமழை பெய்ததால், என் தாத்தா குடையைக் கொண்டு போயிருந்ததால், அவரால் வளைவில் வந்துகொண்டிருந்த ரயிலைப் பார்க்க முடியாமல் போயிருக்கலாம். அவருக்குக் கொஞ்சம் காதும் கேட்காமல் இருந்தது.

தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தியை எங்கள் குடும்பம் அன்று இரவு தெரிந்துகொண்டது. என் அப்பா உடனடியாக கியோடோவுக்குப் புறப்பட வேகமாகத் தயாரானார். என் அம்மாவும் அழுதார். என் அப்பாவைக் கட்டிக்கொண்ட படி, கெஞ்சினார். “கோயில் பொறுப்பை என்ன ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளவே கூடாது.” அப்போது எனக்கு ஒன்பது வயதுதான். ஆனால் அந்தச் சித்திரம், ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் காட்சியைப் போல எனது மூளையில் பொறிக்கப்பட்டுள்ளது. எனது தந்தையோ முகத்தில் எந்தச் சலனமுமின்றி அமைதியாகத் தலையை ஆட்டினார். அவர் ஏற்கெனவே தனது மனத்தைத் தயார் செய்துகொண்டிருக்க வேண்டும். அதை என்னால் உணரமுடிகிறது.

எனது தந்தை 1917-ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி கியோடாவில் உள்ள அவடா- குச்சியில் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது அமைதியான டைஷோ ஜனநாயக அரசு முடிவுக்கு வந்துகொண்டிருந்தது; அதைத் தொடர்ந்த  பொருளாதார மந்த நிலை, அடுத்து மூழ்கடிக்க வந்த இரண்டாம் சீன- ஜப்பானிய யுத்தம், இறுதியாக இரண்டாம் உலக யுத்தத்தின் கொடுமை, போர் முடிந்தவுடன் ஏற்பட்ட குழப்பத்திலும் வறுமையிலும் எனது தந்தையின் தலைமுறையினர் வாழ்வதற்கே போராட வேண்டியிருந்தது. ஏற்கெனவே நான் சொன்னதுபோல, என் தந்தை ஆறு மகன்களோடு ஒருவராகப் பிறந்தவர். அவர்களில் மூன்றுபேர் கட்டாய ராணுவ சேவையில் இரண்டாம் சீன- ஜப்பானியப் போரில் சண்டையிட்டு, அதிசயகரமாக, தீவிரமான காயங்கள் ஏதுமில்லாமல் தப்பினார்கள். ஆறு மகன்களுமே கோயில் குருக்களாக இருப்பதற்கான ஓரளவு தகுதியைப் பெற்றவர்கள். அவர்கள் அந்தவிதமான கல்வியைப் பெற்றிருந்தனர். எனது தந்தையார், கோயில் குருவாக உதவிநிலை தகுதியைப் பெற்றிருந்தார் எனில் ராணுவத்தில் இரண்டாம் நிலைத் தளபதி பதவிக்குக் கிட்டத்தட்ட சமானமானது. கோடைப் பருவத்தில், குடும்ப மூதாதையர்களைக் கவுரவிக்கும் வருடாந்திரத் திருவிழாக் காலமான ஓபான் பருவத்தில் ஆறு சகோதரர்களும் கியோடாவில் கூடி, கோயில்பற்றைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீடுகளுக்குத் தனித்தனியாகப் போய்வருவார்கள். இரவில், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மதுவருந்துவார்கள்.

எனது தாத்தா இறந்துபோனபின்னர், கோயிலில் யார் குருக்களின் கடமைகளுக்குப் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலான மகன்களுக்கு ஏற்கெனவே திருமணமாகி வேலையிலும் இருந்தனர். அத்தனை சீக்கிரமாக திடீரென்று தாத்தா இறந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மூத்த மகனும் எனது பெரியப்பாவுமான ஷிமெ முராகமி, விலங்கு மருத்துவராக விரும்பியவர். ஆனால் போருக்குப் பின்னர் ஒசாகாவில் உள்ள வரி அலுவலகத்தில் வேலையேற்று அப்போது சப்செக்ஷன் தலைவராக ஆகியிருந்தார். என் தந்தையோ கோயோ ககுயின் ஜூனியர் அண்ட் சீனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுத்தார். மற்ற சகோதரர்கள், ஆசிரியர்களாகவோ, பவுத்தம் சார்ந்த கல்லூரிகளில் படித்துக்கொண்டோ இருந்தனர். சகோதரர்களில் இரண்டுபேர், அப்போதிருந்த வழக்கப்படி பிற குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பப் பெயர்களும் வேறு. அவர்கள் கூடிப் பேசியபோது எவரும் எந்த நிலையிலும் கோயில் பொறுப்பை ஏற்பதற்குத் தயாராக இல்லை. ஒரு பெரிய கோயிலொன்றின் தலைமைக் குருவாக ஆவது அத்தனை எளிதான பொறுப்புமில்லை. எவரது குடும்பத்துக்கானாலும் அது பெரிய சுமைதான். அதை சகோதரர்கள் அனைவரும் நன்றாக அறிந்திருந்தனர். விதவையாகி விட்ட என் பாட்டியோ ஒழுங்குகளில் கடுமையானவள்; முட்டாளென்று சொல்ல முடியாது. தலைமைக் குருவின் மனைவியாகச் சேவை செய்யும் சிரமத்தை உணரக்கூடிய ஒரு பெண் அவளிடம் அப்போதும் இருந்தாள். எனது அம்மாவோ ஒசாகாவில் உள்ள சென்பாவில் நன்கு அறியப்பட்ட வர்த்தகக் குடும்பத்தின் மூத்த மகள். கியோடாவில் உள்ள தலைமைக் குருவுக்கு மனைவியாக இருப்பவளின் தகுதிகள் எதுவுமில்லாத நவீனப் பெண் அவர். கோயில் பொறுப்பை ஏற்கவே கூடாது என்று என் அம்மா, எனது தந்தையாரிடம் கண்ணீருடன் இறைஞ்சியதில் அதிசயம் ஒன்றுமில்லை.

என்னுடைய பார்வையின் அடிப்படையிலிருந்தாவது, நேர்மையும் பொறுப்பும் கொண்ட நபராகவே, எனக்கு என் அப்பா தெரிந்தார். அவர் தனது தந்தையின் வெளிப்படைத் தன்மையைப் பெற்றிருக்காவிடினும்(கொஞ்சம் அதிகப் படபடப்பு கொண்டவர்) அவரது நல்லியல்பும் அவர் பேசும் முறையும் மற்றவர்களை நிம்மதியாக உணரவைப்பதாகும். அவருக்குத் தீவிரமான மதநம்பிக்கையும் இருந்தது. அவர் நல்ல கோயில்குருவாகவும் ஆகியிருக்க முடியும்; அது அவருக்கும் தெரிந்தேயிருக்குமென்று நினைக்கிறேன். அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் அந்த யோசனைக்கு அவர் மறுப்பு சொல்லியிருந்திருக்க மாட்டார் என்பதே என் கணிப்பு. ஆனால் தன்னுடைய சிறியக் குடும்பத்தின் விஷயத்தில் சமரசம் கூடாது என்று அவர் எண்ணியிருக்க வேண்டும்.

கடைசியில், எனது பெரியப்பா தனது வரி அலுவலக வேலையை விட்டு, அன்யோஜி ஆலயத்தில் தலைமைக் குருவாக என் தாத்தா வகித்த பொறுப்பை ஏற்றார். அவருக்குப் பின்னார் அவரது மகனும் எனது ஒன்றுவிட்ட சகோதரனுமான ஜுனிச்சி அந்தப் பொறுப்புக்கு வந்தான். ஜுனிச்சியைப் பொறுத்தவரை, மூத்த மகனாக இருந்த பொறுப்புணர்வின் காரணமாகவே எனது பெரியப்பா தலைமை குருவாவதற்குச் சம்மதித்தாராம். அதைத் தவிர அவருக்கு வேறு வழியும் கிடையாது என்று நான் சொன்னபோது அவன் அதை ஒப்புக்கொண்டான். அந்தக் காலத்தில் கோயில்பற்று கொண்ட குடும்பங்கள் இப்போதுள்ள நிலையை விட செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அவரைத் தப்பிக்க விட்டிருக்கவே மாட்டார்கள்.

என் தந்தை சிறுவனாக இருந்தபோது, நரா பகுதியில் எங்கோவொரு கோயிலில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். அங்குள்ள குருவின் குடும்பத்தாருடன் இருக்கப் பழகிக்கொள்வார் என்ற புரிதலில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது பயிற்சிக்காலம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அங்கிருந்த குளிர் அவரது ஆரோக்கியத்தை வெளிப்படையாகப் பாதித்த்திருந்ததென்றாலும், அவரால் புதிய சூழ்நிலைக்கு அனுசரித்துச் செல்ல முடியவில்லையென்பதே பிரதான காரணமாகும். வீடு திரும்பிய பின்னர், பெற்றோருக்குப் பிரியமான மகனாகவே இருந்தார். ஆனால், ஒரு ஆழமான உணர்வு வடுவாக அந்த அனுபவம் அவருடனேயே இருந்திருக்கிறதென்றே நான் கருதுகிறேன். அதற்குக் குறிப்பிட்டதொரு சாட்சி என்று எதையும் காண்பிக்க முடியாவிட்டாலும், அவர் தொடர்பான ஏதோவொன்று அப்படி என்னை உணரச் செய்கிறது.

நாங்கள் தொலைத்துவிட்டு வந்த பூனை எங்களை முந்தி வீட்டுக்கு வந்தபோது, முதலில் ஆச்சரியப்பட்டு பின்னர் பெருமிதமாகி கடைசியில் நிம்மதியான என் அப்பாவின் முக வெளிப்பாட்டை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

இதுபோன்ற ஒன்றை நான் ஒருபோதும் அனுபவித்ததேயில்லை. ஒரேயொரு குழந்தை உள்ள குடும்பத்தில் எவ்வளவு தாராளமாக அன்பு கிடைக்குமோ அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன். அதனால் நடைமுறை ரீதியாகவோ உணர்வுரீதியாகவோ ஒரு குழந்தை அதன் பெற்றோர்களால் கைவிடப்படும்போது அது என்னவிதமான உளவியல் வடுக்களுக்குக் காரணமாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாது. என்னால் அதை மேலோட்டமான அளவிலேயே கற்பனை செய்யமுடியும்.

பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ரூபோ, தனது இளமையில் பெற்றோரிடமிருந்து தனியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டது குறித்துப் பேசியிருக்கிறார். இந்தக் கைவிடப்படுதல் என்னும் கருவை தன் திரைப்படங்களில் தன் வாழ்நாளெல்லாம் கையாண்டு கொண்டே இருந்தார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனால் மறக்கவே முடியாத இதுபோன்ற மன அழுத்தம் தரும் சில அனுபவங்கள் சில பெரும்பாலான பேருக்கு இருக்கிறது.

எனது தந்தை ஹிகாஷியாமா ஜூனியர் உயர் நிலைப்பள்ளியில் 1936-ல் படிப்பை நிறைவுசெய்துவிட்டு, 18 வயதில் செய்ஷான் சமயகல்வியைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு ராணுவ சேவையிலிருந்து நான்கு ஆண்டு கால விலக்கு பொதுவாக உண்டு. ஆனால் அவர் நிர்வாக ரீதியாகச் செய்ய வேண்டிய ஒரு நடைமுறையைச் செய்வதற்கு மறந்துபோனதால் இருபது வயதில் 1938-ல் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார். அதுவொரு சிறிய தவறென்றாலும், அப்படி ஒரு தவறு நடந்துவிட்டால் வெறுமனே மன்னிப்புக் கேட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. அதிகாரவர்க்கத்திலும் ராணுவத்திலும் அதற்கென பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன.

என் அப்பா பதினாறாவது டிவிஷனின்  20-வது தரைப்படைப் பிரிவில் இருந்தார்.  பதினாறாவது டிவிஷனுக்குள் நான்கு தரைப்படைப் பிரிவுகள் உண்டு: ஒன்பதாவது தரைப்படைப் பிரிவு(கியோடோ), இருபதாவது தரைப்படைப் பிரிவு (புகுஷியாமா), 33-வது தரைப்படைப் பிரிவு( சு நகரம், மி மாநிலம்) மற்றும் 38வது தரைப்படைப் பிரிவு( நரா). ஏன், கியோடா நகரவாசியான எனது தந்தையை உள்ளூர் படைப்பிரிவான ஒன்பதாவது ரெஜிமெண்டில் நியமிக்காமல் தொலைவில் உள்ள புகுஷியாமா ரெஜிமெண்டில் நியமனம் செய்தார்கள் என்று புலப்படவில்லை.

இப்படித்தான் நீண்டகாலமாக நான் கருதிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்பாவின் பின்னணியை ஆழமாக ஆராய்ந்தபோது அது தவறென்பதைக் கண்டுகொண்டேன். அவர் இருபதாவது படைப்பிரிவில் கூட இருந்ததில்லை. பதினாறாவது டிவிஷனின் இன்னொரு அங்கமான பதினாறாவது போக்குவரத்துப்பிரிவில் அவர் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் இப்படைப்பிரிவு புகுஷியாமாவில் இல்லாமல் கியோடோ நகரத்தின் புகாகுஷா/புஷிமியில் தலைமையிடத்தைக் கொண்டது. இருபதாவது தரைப்படைப் பிரிவில் என் தந்தை இருந்தார் என்ற பதிவு எனக்கு ஏன் இருந்தது? நான் இந்த விஷயத்தைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

நான்ஜிங் நகரம் வீழ்ந்த பின்னர் முதலில் நுழைந்ததாக அறியப்பட்ட படைப்பிரிவு இருபதாவது தரைப்படைப் பிரிவாகும். கியோடோவிலிருந்து வந்த ராணுவப் பிரிவினர் அனைவரும் நாகரிகமாக வளர்க்கப்பட்டவர்களாகப் பார்க்கப்பட்டனர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவினரின் நடவடிக்கைகள் ஆச்சரியப்படுமளவுக்கு கொடூர நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்றது. நான்ஜிங் நகரத்தின் மீது நடந்த தாக்குதலில் என் தந்தை பங்குபெற்றிருந்தாரென்று வெகுகாலம் நினைத்திருந்தேன். மேலதிகமாகத் விவரங்களைத் துருவித் துலக்குவதற்குத் தயக்கமும் இருந்தது. அவரிடம் நானும் ஒருபோதும் கேட்காமல், அவரும் என்னிடம் சொல்லாமல் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 90 வயதான நிலையில்  இறந்தார்.

1938-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கட்டாய ராணுவ சேவைக்கு என் தந்தை பணிக்கப்பட்டார். இருபதாம் தரைப்படைப் பிரிவின் பிரபலமான அந்த அணிவகுப்பு அதற்கு முந்தின வருடம் நான்ஜிங்கில் டிசம்பர் மாதம் நடைபெற்றது. என் தந்தை ஒரு வருடத்துக்குப் பின்னரே சேர்ந்துள்ளார். நான் இதைத் தெரிந்துகொண்ட போது, பெரும் சுமை இறக்கப்பட்ட நிம்மதி இருந்தது.

16-வது போக்குவரத்து ரெஜிமெண்டின் இரண்டாம் வகுப்பு தனிப்பிரிவில், 1938-ம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி உஜினா துறைமுகத்தில் இதர பட்டாளத்தினருடன் சேர்ந்து ஷாங்காய்க்கு ஆறாம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவரது படைப்பிரிவினர் இருபதாவது தரைப்படைப் பிரிவினருடன் சேர்ந்துகொண்டனர். ராணுவத்தின் போர்க்கால டைரக்டரி சொல்வதைப், பதினாறாவது போக்குவரத்துப் படைப்பிரிவின் முதன்மைப் பணி பொருள்களை வழங்குவதும் பாதுகாப்பு வேலையும்தான். படைப்பிரிவினரின் நடமாட்டங்களைத் தொடர்ந்தால், நம்பமுடியாத தொலைவுகளை அவர்கள் கடந்திருப்பதைப் பார்க்க முடியும். மோட்டார் வசதி இல்லாமல், போதுமான எரிபொருள் இல்லாமல் குதிரைகள் மட்டுமே பிரதானப் போக்குவரத்தாக இருந்த நிலையில் அத்தனை தூரப் பயணம் அதீதமாகக் கடுமையானதாகவே இருந்திருக்கும். போர் முனையில் சூழ்நிலை கொடியது: எந்தப் பொருட்களையும் கொண்டு போகமுடியாது; உணவுக்கும் வெடிமருந்துக்கும் நீடித்த தட்டுப்பாடு இருந்தது. வீரர்களின் சீருடைகள் கந்தலான நிலையிலிருந்தன. சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காலரா மற்றும் இதர தொற்றுநோய்கள் பரவுவதற்குக் காரணமாக இருந்தது. தனது வரம்புக்குட்பட்ட சக்திகொண்டு சீனா போன்ற மிகப்பெரிய நாட்டைக் கட்டுப்படுத்த ஜப்பானால் இயலவில்லை. ஜப்பானிய ராணுவத்தால் அடுத்தடுத்த நகரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தாலும் நடைமுறை ரீதியாகப் பார்த்தால் மொத்தப் பிராந்தியங்களையும் ஆக்கிரமிப்பதற்கு முடியாத நிலையே இருந்தது. இருபதாவது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் அந்தச் சூழ்நிலையின் பரிதாபத்தைத் துல்லியமாகத் தருகின்றன. போக்குவரத்துத் துருப்பினர் போர் முன்னணியில் நடக்கும் சண்டையில் ஈடுபடவேயில்லையெனினும் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் குறைந்த அளவே ஆயுதம் வைத்திருந்தவர்கள்( வெறும் துப்பாக்கி முனை ஈட்டி). பின்னாலிருந்து எதிரிகள் தாக்கும்போது அவர்கள் பெரும் சேதத்தை அடைந்தனர்.

செய்ஷான் பள்ளியில் படிக்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே, எனது தந்தை ஹைகூ எழுதுவதிலுள்ள சந்தோஷங்களைக் கண்டுபிடித்து ஹைகூ வட்டத்தில் இணைந்தார். ஹைகூவுக்கு ஒரு நவீன உள்ளடக்கத்தைக் கொடுப்பதற்கு ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். அவர் ராணுவ வீரராக இருந்தபோது எழுதிய பல கவிதைகள் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட ஹைகூ இதழில் வெளியிடப்பட்டன; யுத்தமுனையிலிருந்து பள்ளிக்கு அவர் தபாலில் அனுப்பியிருக்க வேண்டும்.

பறவைகள் இடம்பெயர்கின்றன
ஓ அவை போகும் இடம்
எனது தாயகமாக இருக்கவேண்டும்.

ஒரு ராணுவ வீரன், கோயில் குருவும் தான்
பிரார்த்தனையில் என் கைகளை
இறுக்குகிறான்
நிலவை நோக்கி.

நான் ஹைகூ நிபுணன் அல்லவென்பதால் அவரது சாதனை என்னவென்று சொல்வது என்னால் ஆகாதது. இந்தக் கவிதைகளை இணைப்பது தொழில்நுட்பம் அல்ல; அவற்றுக்கு அடியில் உள்ள நேர்மையான உணர்வுகள் தான் என்பது தெளிவு.

கோயில் குரு ஆவதற்காக எனது அப்பா ஆத்மார்த்தமாகப் படித்தார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், எழுத்துப் பூர்வமாக ஏற்பட்ட எளிய தவறு அவரை ராணுவ வீரர் ஆக்கியது. அவருக்கு டைப் 38 வகை ரைஃபிள் தரப்பட்டு, துருப்புகள் போகும் கப்பலில் கொடூரமான பயிற்சியளிக்கப்பட்டு அச்சம் அளிக்கும் போர்கள் நடக்கும் முனைக்கு அனுப்பப்பட்டார். அவரது அணி தொடர்ந்து, சீனத் துருப்புகளையும் கடுமையான எதிர்ப்பை வழங்கும் கொரில்லாக்களுடனும் மோதி நகர்ந்துகொண்டேயிருந்தது. எப்படிக் கற்பனை செய்தாலும் கியோடோ மலையில் அமைதியான கோயில் பணி சார்ந்த வாழ்க்கைக்கு நேர் எதிரான வாழ்க்கை இது. அவர் பிரமாண்டமான மனக்குழப்பத்தாலும் ஆன்மிகக் கொந்தளிப்பாலும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இவையத்தனைக்கும் மத்தியில் ஹைகூ எழுதுவது ஒருவேளை அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். கடிதங்களில் எழுதவே முடியாத விஷயங்களை, அல்லது தணிக்கையைக் கடக்க முடியாததை, அவர் சங்கேதக் குறியீட்டில் ஹைகூ வடிவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்- அவரது உண்மையான உணர்வுகளை அங்கேதான் அவர் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

எனது தந்தையார் போரைப் பற்றி ஒரேயொரு முறைதான் பேசியிருக்கிறார். பிடிக்கப்பட்ட சீனப் படை வீரனுக்கு அவரது அணியினர் மரண தண்டனை அளித்ததைப் பற்றிய கதை அது. அதை என்னிடம் சொல்லத் தூண்டியது எதுவென்று எனக்குத் தெரியாது. ஒரு தனித்துவிடப்பட்ட நினைவாக ரொம்பா காலத்துக்கு முன்பு நடந்த ஒன்றென்பதால் பின்னணி தெளிவாகத் தெரியவில்லை. நடுநிலைப் பள்ளியில் நான் கீழ் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த மரண தண்டனை எப்படி அளிக்கப்பட்டது என்று தற்செயலாக விவரிக்க ஆரம்பித்தார். சீன ராணுவ வீரருக்குத் தான் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் அவர் போராடவோ அச்சத்தைக் காண்பிக்கவோ இல்லை. அவர் கண்களை மூடியபடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். அத்துடன் அவர் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மனிதனின் நடத்தை ஆச்சரியமானதென்று என் தந்தை சொன்னார். அந்தச் சீனப் படைவீரனிடம் அப்பாவுக்கு ஆழமான மரியாதையுணர்வு தெரிந்தது. அவரது அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் அவரும் சேர்ந்து இந்த மரண தண்டனை நிகழ்வைப் பார்த்தாரா அல்லது நேரடியாக ஈடுபடுவதற்கு அவர் தள்ளப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. எனது நினைவு மங்கலாக இருப்பதால் அதை எப்படியானதென்று நிர்ணயிக்க முடியவில்லை. எனது தந்தை அந்தச் சம்பவத்தை வேண்டுமென்றே குழப்பமான முறையில் விளக்கினாரா என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் வெளிப்படையானது. ராணுவ வீரராக மாறிய இந்த கோயில் குருவின் ஆன்மாவில் நெடுங்காலமாக வேதனையையும் தொந்தரவையும் இந்த அனுபவம் விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

புதிய படைவீரர்களையும், அப்போதுதான் பணியமர்த்தப்பட்டவர்களையும் ஈடுபடுத்தி பிடிக்கப்பட்ட சீன வீரர்களுக்குத் தண்டனையளிக்கும் கொலைப் பயிற்சியைத் தருவது அப்போது வழக்கமாகவே இருந்துள்ளது. நிராயுதபாணியான கைதிகளைக் கொல்வது சர்வதேச விதிமுறை மீறல்தானென்றாலும், ஜப்பானியப் படையினர் அதை சர்வசாதாரணமாகச் செய்தே வந்தனர். ராணுவ யூனிட்களிடம் கைதிகளைப் பராமரிப்பதற்கான வளங்களும் இல்லை. இவற்றில் பெரும்பாலானவை துப்பாக்கியால் சுடப்பட்டோ, துப்பாக்கி முனை ஈட்டியால் குத்தப்பட்டோ நிறைவேற்றப்பட்டன. என் தந்தை சொன்ன இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் தண்டனை தருவதற்கு வாள் பயன்படுத்தப்பட்டது.

என் தந்தையார் சொன்ன, வாளால் தலைவெட்டப்பட்ட  ஈரக்குலையை நடுங்கவைக்கும் இந்தக் கதை எனது இளம் மனத்தில் ஆழமாகப் பதிந்ததென்று நான் சொல்லத் தேவையில்லை. இன்னொரு வகையில் சொல்லப்போனால், என் தந்தை சுமந்த கனத்த சுமையான ஒரு துயரத்தின் ஒருபகுதி, அவரது மகனுக்குக் கையளிக்கப்பட்டுவிட்டது. அப்படித்தான் மனிதத் தொடர்புகள் வேலை செய்கின்றன, அப்படித்தான் வரலாறு செயல்படுகிறது. அது ஒருவகையான உணர்வு மாற்றீடு மற்றும் சடங்கு ஆகும். எனது அப்பா தனது போர்க் கால அனுபவங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. இந்த தண்டனை குறித்து நினைவுகூர்ந்து என்னிடம் பேசியது ஆச்சரியமானதுதான். இரண்டு பேருக்கும் பொதுவான ஆறாத வடுவாக இருக்கப் போகிறதென்றாலும், அவரது  சதையும் ரத்தமுமான மகனுக்கு இந்தக் கதையைத் தொடர்புறுத்துவதற்கான கட்டாயத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

என் தந்தை பணியாற்றிய யுனிட்டுடன் சேர்ந்து இருபதாம் தரைப் படைப்பிரிவு ஜப்பானுக்கு 1939-ம் ஆண்டு ஆகஸ்ட் இருபதாம் தேதி வந்து சேர்ந்தது. ஒரு வருடம் படைவீரராக இருந்துவிட்டு என் அப்பா செய்ஷான் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அந்தச் சமயத்தில் கட்டாய ராணுவ சேவை இரண்டு ஆண்டுகள். ஆனால் என் தந்தையோ ஒரேயொரு வருடம் தான் சேவை செய்தார். ஒருவேளை அவர் மாணவராக இருந்தபோது ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டதைக் கணக்கில் எடுத்திருக்க வேண்டும்.

ராணுவ சேவைக்குப் பின்னர், எனது தந்தை ஹைகூ எழுதுவதை உற்சாகமத் தொடர்ந்தார். இந்தக் கவிதை 1940-ம் ஆண்டில் ஜப்பானுக்கு நல்லெண்ணப் பயணமாக வந்த ஹிட்லர் யூத் இயக்கத்தினரின் வருகையால் தாக்கமுற்றதாக இருக்க வேண்டும்.

மானை அருகே வரவைப்பதற்காக
அவர்கள் கூவினர், பாடினர்
ஹிட்லர் யூத்.

தனிப்பட்ட வகையில், நான் இந்த ஹைகூவை மிகவும் விரும்புகிறேன். வரலாற்றின் அரூபமான தருணத்தை நுட்பமாகவும் அசாதாரணமான வழியிலும் இக்கவிதை பிடிக்கிறது. வெகுதூரத்தில் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் கோரமான யுத்தமோதலுக்கும் மானுக்குமிடையிலான முரண் காண்பிக்கப்படுகிறது. நரா பூங்காவில் உள்ள மானாக இருக்கலாம். தங்களது குறுகிய ஜப்பானியப் பயணத்தில் மகிழ்ந்து களித்த ஹிட்லர் யூத்கள், கிழக்கு முனையில் மோசமான குளிரில் அழிந்து போயிருக்க வாய்ப்புள்ளவர்கள் தான்.  

இந்தக் கவிதையும் என்னைக் கவர்ந்தது:
இஸ்ஸாவின் மரண நாள்
நான் அவரது துக்கமான கவிதைகளுடன்
இங்கே உட்கார்ந்திருக்கிறேன்.

உலகம் மிகுந்த அமைதி, சாந்தத்தோடு சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும் குழப்படி உணர்வு மிச்சமுள்ளது.

என் அப்பா இலக்கியத்தை எப்போதும் நேசிப்பவராக இருந்தார். அவர் ஆசிரியரான பின்னர் பெரும்பாலான நேரத்தை வாசிப்பில் செலவிட்டார். எங்கள் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்திருந்தன. எனது வளரிளம் பருவத்தில், வாசிப்புக்கான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். செய்ஷான் பள்ளியில் எனது தந்தை ஹானர்ஸூடன் கூடிய பட்டம் பெற்றார். 1941-ம் ஆண்டு மார்ச் மாதம் கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் சேர்ந்தார். பவுத்த சமயக்கல்வியை முடித்த ஒருவர், சிறந்த கல்வி நிறுவனமான கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்வது அத்தனை சுலபமல்ல. “உன் அப்பா மிகப் பெரிய அறிவாளி” என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். அவரது அறிவுத்திறன் குறித்து எனக்குப் பெரிதாகத் தெரியாது. வெளிப்படையாகச் சொல்லப் போனால் அது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. என் போன்ற பணியில் ஈடுபடுபவருக்கு கூர்மையான உள்ளுணர்வை விட அறிவுத்திறன் என்பது குறைந்த முக்கியத்துவம் கொண்டதே. அப்படியே இருப்பினும் எனது தந்தையார் பள்ளித் தேர்வுகள் அனைத்திலும் சிறப்பான மதிப்பெண்களெடுத்துத் தேறியவர் என்பது கண்கூடு.

அவரை ஒப்பிடுகையில், எனக்குப் படிப்பில் அதிக விருப்பம் இருந்ததேயில்லை; எனது மதிப்பெண்கள் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் சுமார்தான். நான் விரும்பும் விஷயங்களை மட்டுமே தொடரும் இயல்பு கொண்டவன் நான் என்பதால் வேறெதைக் குறித்தும் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. நான் மாணவனாக இருந்தபோதும் இப்போதும் அதுதான் நிஜம்.

இது எனது அப்பாவை ஏமாற்றமடையச் செய்தது, அந்த வயதில் இருந்த தன்னை என்னுடன் அவர் உறுதியாக ஒப்பிட்டுப் பார்த்திருப்பார். ஒரு அமைதியான காலத்தில் நீ பிறந்திருக்கிறாய் என்று அவர் நிச்சயமாக நினைத்திருப்பார். நீ விரும்பிய மாதிரி படிப்பதற்கு உனக்கு எந்தத் தடையும் கிடையாது. அப்படியிருந்தும் ஏன் கூடுதலாக முயற்சி செய்வதில்லை? போர் காரணமாக அவர் தொடராமல் விட்ட பாதையை நான் தொடரவேண்டுமென்று விரும்பியிருக்கலாம்.

ஆனால், அப்பாவின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப என்னால் இருக்க முடியவில்லை. நான் என்ன படிக்கவேண்டுமென்று நினைத்தாரோ அதில் நான் ஈடுபடவேயில்லை. பள்ளியில் பெரும்பாலான வகுப்புகள் மனத்தை மரத்துப்போகச் செய்வதாகவும், பள்ளி என்ற அமைப்பே அனைவரையும் அதீதமாகத் தட்டையாக்கி ஒடுக்குவதாகவும் நினைத்தேன். இதனால் என் தந்தை நீடித்த நிராசை உணர்வுக்கு ஆளானார், நான் நீடித்த தொந்தரவுணர்வு கொண்டவனானேன். குருட்டுக் கோபமாகவும் கொந்தளித்தபடி இருந்தது. முப்பது வயதில் ஒரு நாவலாசிரியனாக இலக்கிய உலகில் அறிமுகமானபோது, என் தந்தையார் உண்மையிலேயே மகிழ்ச்சியுற்றார். ஆனால் அதற்குள் எங்கள் உறவு மிகுந்த இடைவெளிக்கும் இறுக்கத்துக்கும் உள்ளாகியிருந்தது.

இப்போதும் என்னுடன் அந்த உணர்வைச் சுமக்கிறேன்- அல்லது ஒருவேளை அந்த உணர்வின் வண்டலாக இருக்கலாம்- என் தந்தையை ஏமாற்றிவிட்ட தவிக்க விட்ட உணர்வு அது. எனது வளரிளம் பருவத்தில், வீட்டை அசௌகரியமாக்கிய விஷயம் அது. எனது தொடர்பிலான குற்றவுணர்வு அடியோட்டமாக இருந்துள்ளது. பள்ளியில் நடக்கும் தேர்வில் ஒரு கேள்விக்குக் கூட விடை தெரியாமல் உட்கார்ந்திருக்கும் துர்கனவுகள் இப்போதும் வருகின்றன. பரிட்சையில் தோல்வியடைவது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துமென்று தெரிந்தும் நான் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருக்க கடிகார முள் கடந்துகொண்டேயிருக்கிறது. அந்தவகையான கனவு வரும்போது, நான் வேர்க்க விறுவிறுக்க எழுந்துகொள்வேன்.

ஆனாலும் எனக்குப் பிடித்த புத்தகங்களை வாசிப்பது, நான் விரும்பிய இசையைக் கேட்பது, நண்பர்களுடன் விளையாடுவது, தோழிகளுடன் டேட்டிங் செல்வது ஆகியவை தான் மேஜையில் அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை வாங்குவதை விடவும் விருப்பமாக இருக்கிறது.

நாம் வாழும் காலத்தின் காற்றைச் சுவாசிப்பது மட்டுமே நம்மால் செய்யமுடிவது, அந்தக் காலகட்டத்தின் பிரத்யேகச் சுமைகளை நம்மோடு சுமந்தபடி, அதன் வரம்புகளோடு தான் வளர்கிறோம். அவை அப்படித்தான்.

எனது தந்தை செய்ஷான் பள்ளியில் தனது படிப்பை இலையுதிர் காலத்தில் 1941-ம் ஆண்டு முடித்தார். செப்டம்பர் மாத இறுதியில் அவருக்கு கட்டாய ராணுவ சேவை அழைப்பு வந்தது. அக்டோபர் மூன்றாம் தேதி, அவர் மீண்டும் ராணுவ வேலைக்குத் திரும்பி முதலில் இருபதாவது தரைப்படைப் பிரிவிலும் பின்னர் 53-வது போக்குவரத்துப் பிரிவிலும் பணியாற்றினார்.

1940-ல் மஞ்சூரியாவில் நிரந்தரமாக பதினாறாவது டிவிஷன் ராணுவம் தங்கவைக்கப்பட்டிருந்தது. அது அங்கே இருந்தபோதுதான் கியோடாவில் 53-வது டிவிஷன் பிரிவு ஒருங்கிணைக்கப்பட்டது. புகுஷியாமா ரெஜிமெண்டில் துவகத்தில் என் அப்பா அமர்த்தப்பட்டதற்கு இந்தத் திடீர் ஒருங்கிணைபினால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருந்திருக்கலாம். (அவர் கட்டாய ராணுவ சேவைக்கு முதல்முறை சென்றதிலிருந்தே புகுஷியாமாவில் தான் அமர்த்தப்பட்டிருந்தார் என்று நான் ஏற்கெனவே சொன்னதுபோல் தவறாக நினைத்திருந்தேன்.) 53-வது பிரிவினர் 1944-ம் ஆண்டு பர்மாவுக்கு அனுப்பப்பட்டு இம்பால் போரில் பங்கேற்றதோடு டிசம்பர் தொடங்கி 1945-ம் ஆண்டு மார்ச் வரை ஐராவதி நதிப் போரில் பிரிட்டிஷ் படையால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது.

ஆனால், 1941-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, எதிர்பாராத விதமாக எனது தந்தை ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு எட்டு நாட்கள் இருந்தன. அந்தத் தாக்குதல் நடந்த பிறகு ராணுவம் என் அப்பாவிடம் இத்தனை பெருந்தன்மையுடன் இருந்திருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

என் அப்பா சொன்னது போல, அவரது வாழ்க்கை ஒரு அதிகாரியால் காப்பாற்றப்பட்டது. “நீ கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாய். ஒரு ராணுவ வீரனாக இருப்பதை விட, உனது கல்வியைத் தொடர்வதன் மூலம் நாட்டுக்கு மேலான சேவையைச் செய்யமுடியும்.” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். ஒரு அதிகாரிக்கு அப்படிப்பட்ட முடிவையெடுக்கும் அதிகாரம் இருந்திருக்குமா? எனக்குத் தெரியவில்லை. மனிதவியல் படிப்பு படிக்கும்  என் அப்பாவைப் போன்ற ஒரு மாணவர் நாட்டுக்குச் சேவை செய்துவிட்டு கல்லூரிக்குத் திரும்புவதும் ஹைகூவைத் தொடர்வதையும் ஏற்றுக்கொள்வது கடினம்தான். வேறு காரணிகளும் இதில் செயல்பட்டிருக்கலாம். ஆனால் அவர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் சுதந்திர மனிதர் ஆனது உண்மை.

நான் கேட்ட கதை இதுதான். அல்லது அப்படி குழந்தையாக இருந்தபோது கேட்ட நினைவு இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக உண்மை விவரங்களுடன் அது பொருந்திப் போகவில்லை. கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழக ஆவணங்களின்படி 1944-ம் ஆண்டு அக்டோபரில் இலக்கியத் துறையில் என் அப்பா சேர்ந்திருக்கிறார். ஒருவேளை என்னுடைய நினைவு மூட்டமாக இருக்கலாம். அல்லது என் அம்மா இந்தக் கதையை தவறிய நினைவிலிருந்து சொல்லியிருக்கலாம். அத்துடன் தற்போது அது சரியா இல்லையா என்பதைச் சரிபார்ப்பதற்கு ஒருவழியும் இல்லை.

ஆவணங்களின்படி என் அப்பா கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலக்கியத் துறையில் சேர்ந்து 1947-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டம் பெற்றிருக்கிறார். ஆனால், ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் வரை, 23 வயது முதல் 26 வயது வரை எங்கே இருந்தார் என்ன செய்தார் என்றோ எனக்குத் தெரியவேயில்லை.

எனது தந்தையார் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடங்விட்டது. அதன்போக்கில், 16-வது பிரிவும் 53-வது பிரிவும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டது. என் தந்தை விடுவிக்கப்படாமல் இருந்திருப்பின், அவர் அழைத்துச் செல்லப்பட்டு அவர் வேலைபார்த்த யூனிட்களில் சேர்க்கப்பட்டு போர்க்களத்தில் இறந்துபோயிருப்பார்; நான் இருந்திருக்கவே முடியாது. அதை அதிர்ஷ்டமென்றும் சொல்லலாம். ஆனால் தனது உயிர் காப்பாற்றப்பட்டு அவரது முன்னாள் சகாக்கள் தங்கள் உயிரை இழந்தது பெரிய வலியையும் துயரையும் கொடுப்பது. தனது வாழ்க்கை முழுவதும் அன்றாடம் காலையில் அத்தனை பக்தியுடன் சூத்திரங்களை உச்சரித்தபடி கண்களை மூடிப் பிரார்த்தித்ததை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபிறகு எனது தந்தை மூன்றாவது முறையாக கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார். சுபு 143 கார்ப்ஸ்-ல் பணியமர்த்தப்பட்டார். இந்தப் பிரிவு எங்கே நிலைகொண்டிருந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஜப்பானுக்குள் தான் இருந்தது. இரண்டு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 15-ம் நாள் போர் முடிந்தபிறகு, அக்டோபர் 28-ல் எனது தந்தை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழகம் திரும்பினார். அவருக்கு அப்போது 27 வயது.

1947-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனது அப்பா தேர்வுகளில் வெற்றி பெற்று தனது பி. ஏ. பட்டத்தைப் பெற்றார். கியோடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் கிராஜூவேட் ப்ரோக்ராமில் சேர்ந்து இலக்கியப் படிப்பைத் தொறர்ந்தார். நான் 1949-ம் ஆண்டு ஜனவரியில் பிறந்தேன். அவரது வயது காரணமாகவும் திருமணமாகி குழந்தையும் இருந்ததால் தன் படிப்பை முடிக்காமல் நிறுத்தவேண்டியதாகிவிட்டது. வாழ்வாதாரத்துக்காக நிஷிநோமியாவில் உள்ள கோயோ ககுயினில் ஜப்பானிய ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். என் அப்பாவும் அம்மாவும் திருமணம் செய்தது தொடர்பான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஒருவர் கியோடோவிலும் இன்னொருவர் ஒசாகாவிலும் தூரமாக வாழ்ந்த நிலையில் பரஸ்பரம் தெரிந்தவர்கள் வழியாகவே அறிமுகமாகியிருக்க வேண்டும். என் தாய் இசை ஆசிரியராக இருந்த இன்னொருவரை மணப்பதற்கு இருந்தவர். ஆனால் அவர் போரில் இறந்துவிட்டார். ஒசாகாவில் உள்ள சென்பாவில் என் அம்மாவின் தந்தை வைத்திருந்த கடை, அமெரிக்க குண்டுவெடிப்பில் எரிந்து சாம்பலானது. சண்டை விமானங்கள் நகரத்தையே தாக்கி நிர்மூலமாக்கியதையும் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒசாகாவின் தெருக்களில் ஓடியதையும் அவர் நினைவில் வைத்திருந்தார். போர் என் அம்மாவின் வாழ்கையிலும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது 96 வயதாகும் எனது அம்மாவும் ஜப்பானிய ஆசிரியராக இருந்தார். ஒசாகாவில் உள்ள ஷியோன் பெண்கள் பள்ளியில் இலக்கியத் துறையில் பட்டப்படிப்பு முடித்தபிறகு, தான் படித்த இடத்திலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தாள். ஆனால் திருமணத்துக்காக அவர் தனது வேலையை விடவேண்டி வந்தது.

எனது அம்மாவின் பார்வையில் என் அப்பா தனது வாலிப நாட்களைத் தாறுமாறாகவே வாழ்ந்துள்ளார். அவரது போர்க்கால அனுபவங்கள் துள்ளத்துடிக்க அவரைத் துரத்தியிருக்கின்றன. அத்துடன் அவர் விரும்பியது போல வாழ்க்கை அமையாமல் கடினமானது குறித்த விரக்தியும் இருந்துள்ளது. நிறைய குடித்ததோடு அவ்வப்போது மாணவர்களைத் தாக்கிவிடுவதுமுண்டாம். ஆனால் சிறிது காலத்திலேயே நான் வளரும் நிலையில் குறிப்பிடத்தகுந்த அளவு மிருதுவாகி விட்டார். அவர் மன அழுத்தமாகி சில சமயங்களில் அதிகம் குடிப்படும் உண்டு. ஆனால் எங்கள் வீட்டில் மோசமான சம்பவங்கள் எதையும் அனுபவித்தாக நினைவுகூர என்னால் முடியவில்லை.

பாரபட்சமின்றி பேசினால், என் தந்தை ஒரு சிறந்த ஆசிரியரென்றே நினைக்கிறேன். அவர் இறந்தபோது, அவரது முன்னாள் மாணவர்கள் அத்தனை பேர் இறுதிமரியாதை செலுத்த வந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் மீது அவர்களுக்கு அந்தளவு பிரியம் இருந்தது. அவர்களில் நிறைய பேர் மருத்துவர்களாக ஆனார்கள். அத்துடன் என் அப்பா புற்றுநோய் மற்றும் நீரிழிவுடன் போராடிய போது அவரை நன்கு கவனித்தும் கொண்டனர்.

என் அம்மாவும் அவரது அளவில் மிகச் சிறந்த ஆசிரியர்தான். என்னைப் பெற்று முழுநேரமாக இல்லத்தரசியான பின்னரும் கூட அவரது முன்னாள் மாணவர்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். ஏதோவொரு காரணத்தால் நான் ஆசிரியராக ஆகவேண்டுமென்று உணர்ந்ததேயில்லை.

நான் வளர்ந்து என்னுடைய ஆளுமையை உருவாக்கிய பின்னர், எனக்கும் என் தந்தைக்குமிடையிலான உளவியல் பிரச்சினை மேலும் வெளிப்படையானது. நாங்கள் இருவருமே வளைந்துகொடுக்கவில்லை. அத்துடன் எங்கள் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்லாத வகையில் நாங்கள் ஒரேமாதிரி.

எனக்குத் திருமணமான பிறகு நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். எனது தந்தையும் நானும் மேலும் தனிமைப்பட்டுப் போனோம். அத்துடன் முழுநேர எழுத்தாளனாக நான் ஆனபோது எங்கள் உறவு மேலும் திருகி முடிவில் எல்லா தொடர்புகளையும் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. நாங்கள் ஒருவரையொருவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பார்க்காததோடு பரிபூரணத் தேவை இருந்தாலொழிய பேசுவதேயில்லை என்ற நிலை ஏற்பட்டது.

நானும் எனது தந்தையும் வேறு வேறு காலங்களில் சூழ்நிலைகளில் பிறந்தவர்கள். அத்துடன் நாங்கள் சிந்திக்கும் உலகைப் பார்க்கும் வழிகளும் பரஸ்பரம் தொடர்பே இல்லாதது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எங்கள் உறவை நான் மறுகட்டுமானம் செய்ய முயற்சிக்கும்போது அது எதிர்பாராத திசைக்குப் போய்விடும். ஆனால் நான் என்ன செய்வதற்கு விரும்பினேனோ அதில் மிகுந்த கவனத்துடன் இருந்ததால் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவில்லை.

எனது அப்பாவும் நானும் அவர் இறந்துபோவதற்கு சற்றுமுன்னர் தான் நேருக்கு நேராகக் கடைசியாகப் பேசினோம். கியோடோவில் நிஷ்ஜினில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிரமான நீரிழிவும் புற்றுநோயும் கண்டு அவரது உடலைப் பெருமளவு சேதப்படுத்தியிருந்தது. குண்டாகவே நான் பார்த்த அவர் வாடி மெலிந்து போயிருந்தார். என்னால் அவரை அடையாளம் காணக்கூட முடியவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி சில நாட்களில் ஒரு அசந்தர்ப்பமான உரையாடலை நடத்தி ஒருவகையாகச் சமாதானத்துக்கும் வந்தோம். எங்களது வித்தியாசங்களுக்கு அப்பால், எங்களைப் பிணைக்கும் சரடை நலிவடைந்த எனது தந்தையில் உணர்ந்தேன்.

கொரோயினில் உள்ள கடற்கரைக்கு ஒரு வரிப்பூனையைத் தொலைப்பதற்காக அப்பாவின் சைக்கிளில் சேர்ந்து போய் பகிர்ந்துகொண்ட விந்தையான அந்தக் கோடை நாளை மறுபடி வாழ்ந்து பார்க்கிறேன். எங்களின் சிறந்ததை அந்தப் பூனை எடுத்துக்கொண்டு விட்டது. கடல் அலைகளின் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. காற்றின் வாசமும் பைன் மரங்களின் வழியாக அதன் சீழ்க்கையையும் உணரமுடிகிறது. இதுபோன்ற முக்கியத்துவமற்ற விஷயங்களின் சேர்க்கைதான் நானாக இருக்கும் இப்போதைய நபரை உருவாக்கியிருக்கிறது.  

குழந்தைப்பருவத்திலிருந்து பூனையுடன் தொடர்புடைய இன்னொரு நினைவு எனக்கு உள்ளது. எனது நாவல்களில் ஒன்றில் இந்தப் பகுதியை சேர்த்திருக்கிறேன் என்றாலும் அதை எப்படி நடந்ததோ அப்படியே இங்கு மீண்டும் தொடுவதற்கு விரும்புகிறேன்.

எங்களிடம் வெள்ளை நிறத்தில் ஒரு குட்டிப்பூனை இருந்தது. அது எப்படி எங்களிடம் வந்ததென்று நினைவில்லை. அப்போதிருந்து எங்கள் வீட்டுக்குப் பூனைகள் வருவதும் போவதுமாக இருந்துள்ளன. ஆனால் இந்தக் குட்டிப்பூனையின் ரோம மிருதுவும் அழகும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

ஒரு நாள் மாலை, தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த போது, இந்தப் பூனை திடீரென்று, எங்கள் தோட்டத்திலிருந்த உயரமான அழகிய பைன் மரத்தின் மீது வேகமாக ஏறிப்போனது. தனது தைரியத்தையும் உறுதியையும் என்னிடம் காட்டுவதற்காகப் போனது போலும். அது மரத்தின் நடுத்தண்டின் மீது தவழ்ந்தேறி, மேல் கிளைகளில் மறைந்த வேகத்தை என்னால் நம்பவே முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பூனை பரிதாபகரமாக, உதவி கேட்டு இரைஞ்சுவது போல மியாவ் என்று சத்தமிட்டது. அத்தனை உயரத்துக்கு ஏறும்போது அதற்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் திரும்பக் கீழே இறங்கிவருவதற்கு அஞ்சியது போலத் தோன்றியது.

நான் மரத்தின் அடியிலிருந்து மேலே பார்த்தேன். என்னால் பூனையைப் பார்க்கவே முடியவில்லை. அதன் தீனமான அழுகை மட்டும் கேட்கிறது. குட்டிப்பூனையைக் காப்பாற்ற ஏதேனும் வழியை முயலக்கூடுமென்பதால் என் அப்பாவிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எத்தனை பெரிய ஏணியை இட்டாலும் பயனில்லாத உயரம் அது. பூனை உதவி கேட்டு மியாவ் மியாவ் என்று இரைந்துகொண்டே இருந்தது. சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கி இருள் பைன் மரத்தை மூடியது.

அந்தக் குட்டிப்பூனைக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. அடுத்த நாள் காலை நான் எழுந்தபோது பூனையின் கதறலை நான் கேட்கவில்லை. மரத்தின் அடியில் நின்று அந்தப் பூனையின் பெயரைக் கூப்பிட்டும் பதில் வரவேயில்லை. வெறும் அமைதி.

இரவில் ஏதாவது ஒருவேளையில் அந்தப் பூனை இறங்கி எங்கேயாவது போயிருக்கலாம்( ஆனால் எங்கே?). அல்லது, அதனால் இறங்கமுடியாமல், கிளைகளைப் பற்றிப் பிடித்தபடி சோர்ந்து பலவீனமாகிப் போய் இறந்திருக்கலாம். நான் அங்கேயே தாழ்வாரத்தில் அமர்ந்து இந்தக் காட்சிகளை ஓடவிட்டபடியே மரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருமையான உயிரை குட்டிக் கால்நகங்களால் பிடித்தபடி அந்த வெள்ளைக் குட்டிப்பூனை போராடுவதையும் பின்னர் வற்றி உலர்ந்து இறந்துபோவதையும் எண்ணிப் பார்த்தேன்.  

அந்த அனுபவம் தீர்க்கமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: கீழே இறங்குவதென்பது மேலே போவதை விட கடினமானது. இதிலிருந்து பொதுமைப்படுத்தினால், விளைவுகள் காரணங்களை மிஞ்சக்கூடியவை; அத்துடன் மட்டுப்படுத்துவதும் கூட. இந்த முறைப்பாட்டின்படி சில சந்தர்ப்பங்களில் ஒரு பூனை கொல்லப்படுகிறது; பிற சந்தர்ப்பங்களில் ஒரு மனித உயிர்.

எப்படியாயினும், நான் ஒன்றேயொன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரேயொரு வெளிப்படையான உண்மை அது:

நான் ஒரு சாதாரண மனிதனின் சாதாரண மகன். அது தெள்ளத் தெளிவான உண்மை என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் அந்த உண்மையைத் தோண்டத் தொடங்கும்போது எனது தந்தையுடையதும் எனதுமான வாழ்க்கையில் நடந்த எல்லாமும் விபத்தென்று தெளிவாகிறது. நாம் நமது வாழ்க்கைகளை இப்படித்தான் வாழ்கிறோம்: விபத்தின் வழியாகவும் தற்செயலாகவும் விஷயங்களை நோக்குவது தான் ஒரே சாத்தியமான எதார்த்தமாக இருக்கமுடியும்.

பரந்துபட்ட நிலத்தில் மழைத்துளிகள் விழுவதைக் கற்பனை செய்துபார்ப்போம். நம்மில் ஒவ்வொருவரும் எண்ணற்ற மழைத்துளிகளில் ஒரு பெயரற்ற மழைத்துளி. தனித்துவமான, தனித்த துளியென்றாலும் அது முழுமையாக இடம்பெயர்க்க முடியக்கூடியது. இருப்பினும் அந்தத் தனித்துளிக்கென்று உணர்ச்சிகள், அதன் வரலாறு, அந்த வரலாறைச் சுமந்து கடப்பற்கான பிரத்யேகக் கடமை எல்லாம் உண்டு. அத்துளி தனது தனித்த ஒருமையை இழந்து கூட்டான வேறொன்றால் உட்கொள்ளப்படலாம். அல்லது தன்னை விடப் பெரிதான கூட்டு இருப்புக்குள் துல்லியமாக சங்கமமாகிவிடவும் செய்யலாம்.

அவ்வப்போது, சுகுகவாவில் உள்ள எங்கள் வீட்டுத் தோட்டத்தில் அந்தத் துயரத்துக்குரிய பைன் மரத்துக்கு மனம்

என்னை அழைத்துச் செல்கிறது. கிளையை இன்னும் பற்றியிருக்கும் அந்தக் குட்டிப் பூனை, வெளிறிய எலும்புகளாக மாறிப்போன அதன் உடல் பற்றிய யோசனைகளை நோக்கிப் போகிறேன். அத்துடன் நான் மரணம் பற்றி எண்ணிப் பார்க்கிறேன், அத்துடன் பூமியை நோக்கி கீழே இறங்குவதன் சிரமத்தையும் வெகு தூரத்தில் தெரியும் தரை தலையைச் சுற்றச் செய்வதையும்.

( நன்றி : தி நியூயார்க்கர்)



Comments