Skip to main content

குணமோ ரணமோ பிரான்சிஸ்





ஒற்றை இதயத்தின்
வாசனையை நாடாதே
அதன் ஆறுதலில் வாழாதே
அங்கே தனிமை பின்னிய
அச்சம் குடி கொண்டுள்ளது
நான் அழுதேன் ஏனெனில்
நான் கண்டது
ஒற்றை அன்பின் தனிமையை

நிழல்களின் நடிப்பில்
வதங்கிக் கிடந்தது மலர்.

இந்தக் கவிதையை எழுதியவனை முழுமையாகக் கவிஞன் என்று சொல்ல முடியாது. அவனது அடையாளம் நம் காலத்தில் வாழ்ந்த மெய்யியலாளன். அவன் ஜே. கிருஷ்ணமூர்த்தி. உலகத்தின் அத்தனை மருத்துவ வசதிகளையும் பெறும் நிலையிலிருந்தும் தன் சகோதரனைத் தவறவிட்ட தன் அனுபவத்திலிருந்து இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

பிரான்சிஸ் கிருபாவோ மெய்யியலாளன் அல்ல. தொலைத்தவளிடமே தொலைக்கப்பட்டவனாக மண்டியிட்டு மன்றாடுபவன். உன்னை உன்னிடம் கேட்பேன் ஏழு முறையல்ல எழுபது முறையல்ல எல்லா முறையிலும் உன்னை உன்னிடம் கேட்டு மன்றாடுவேன் என்பது தான் அவனது எல்லாக் கவிதைகளிலும் வைக்கும் பொதுவான முறையீடு. அது பைத்தியமாக துயரமாக நோய்மையாகத் தெரிகிறது. அறிந்ததின் நிலையத்தில் நின்று சொல்லும் உண்மையாக கிருஷ்ணமூர்த்தியுடையது அமர்ந்திருக்கிறது. பிரான்சிஸ் கிருபாவின் கவிதை நிற்கும் நிலையமும் இன்னொரு உண்மைதான். அது சிறிய ரயில் நிலையமாக இருக்கலாம்.

ஜே. கிருஷ்ணமூர்த்தியிடம் குணப்பட்டதின் தெளிவு தெரிகிறது. பிரான்சிஸ் கிருபாவின் கவிதையில் வெளிப்படுவது ஆறாத ரணமாக எரிந்து கொண்டுள்ளது.

மெய்யியலாளனும் கவிஞனும் சேர்ந்த ஒருவன் சொல்வதை இப்போது பார்ப்போம்.

ரணம் எங்கிருக்கிறதோ
அதுவே ஒளி நுழையும் இடம்

இவன் ஜலாலுதீன் ரூமி.    

000

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுதியை ஒருமுறை படித்துமுடித்து வைத்த இரவில் நோய்மைகளையும் சிதைவுகளையும் வரலாற்று இடிபாடுகளையும் ஒரு உடலில் அடையாளம் கண்ட மருத்துவனின் தொலைவிலிருந்து சங்கடத்துடன் அதிருப்தியுடன் தான் நான் உறங்கப் போனேன்.  நள்ளிரவில் நான் பழங்குப்பையென்று வாழ்வுக்கு எதிரானதென்றும் இருளென்றும் உணர்ந்து ஒதுக்கியதெல்லாமே ஜீவனுள்ள உயிரினங்களாக மின்னத் தொடங்கின. அந்த ஜீவன் தான் பிரான்சிஸின் துயரம் போலத் தொனிக்கும் கவிதைப் பிரபஞ்சத்திலிருந்து வாசகர்களுக்குக் கிடைக்கும் ஒளி அல்லது ஆற்றல்.

தொலைந்த காதல், உறவுக்கான விழைவு, அது தொடர்பான நினைவுகளைப் பேசும் கவிதைகள் பாடல் தன்மை கொண்டு ஒரு ஈரநிலத்தில் நிகழ்கின்றன.

இன்னொரு உலகமோ பகல், யதார்த்தம், அறிவு அனைத்தையும் கைவிட்ட, அனைத்தாலும் கைவிடப்பட்ட இடமாக உள்ளது.  அவனது பிரபஞ்சத்தில் பல்லிகள் பள்ளிக்குச் செல்லும் வேறு எதார்த்தம் உருக்கொள்கிறது. வடபழனி சிக்னலாக இருக்கலாம்; அமரர் ஊர்தியில் மயானத்துக்குப் போகும் ஒருவர் எழுந்து அமர்ந்து கவிஞனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். அமங்கலம், பின்னம், கோரம், நோய்மை, மரணம், துயரம், வன்முறை ஆகியவை சுவற்றிலும் தரையிலும் ஊர்ந்து படரும் விடியாத இரவுகளில் கவிஞன் விழித்தபடியே காணும் தீங்கனவுகளாக இன்னொருவகைக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவை இசைமையும் ஓசையும் சம்பிரதாய நேர்த்தியும் துறந்தவை. இங்கேதான் பிரான்சிஸ் புதிய உலகமொன்றைக் கிழித்துத் திறந்திருக்கிறார்.

பிரான்சிஸின் கவிதைகளில் வரும் பெண்கள், முத்தம், குழந்தைகள் எல்லோரும் இங்குள்ளவர்கள்போலத் தோன்றுகிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் இல்லை. கவிஞனது ஜீவிதமும் இங்கிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், கவிஞனும் கவிதையும் உருவாக்கும் ஆற்றல் நிச்சயமாக நம்முடையது; நம் மொழியினுடையது. பிரான்சிஸ் அதைத் தனது கற்பனை உச்சம் கொண்ட புனைவால் வெளியீட்டால் சாதித்துள்ளார்.

பிரான்சிஸின் சிறந்த கவிதைகளில் ஒன்றான பேருந்து பூக்காரி கவிதையில் இருளுக்குள் கிட்டத்தட்ட உறக்கத்தில் இறந்தே விட்ட பயணிகளுக்கிடையே பூக்கட்டிக் கொண்டிருக்கும் பெண்ணைப் போலத் தான் கவிஞன், ஒரு சமூகத்துக்கு ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கவிதையில் அவளது பூக்கட்டும் விரல்களில் காட்டுமான்கள் கொம்பைச் சிலும்புகின்றன. இந்த உலகத்தில் அமர்ந்து இங்கு வசிக்கும் பெண்ணின் தலைக்குத்தான் அவள் பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் இந்தப் பூமி இயங்கும் லௌகிகக் கணிதத்துக்குள் இல்லை. அங்கே அளவீடு மாறிவிடுகிறது. அங்கே, காலம்- வெளிக் கணக்குகளையும் மாற்றுகிறார் பிரான்சிஸ். ஒரு முழம் பூவுக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் இந்தப் பேருந்து செல்கிறது என்று பூக்காரியிடம் கேட்கப்படுகிறது.

பூக்காரியின் கைவிரல்களில் பிரசவமாகும் காட்டுமான்களுக்கான வரலாற்றை நான் தேடினேன். கவிஞர் தேவதச்சனின் கவிதையில் வரும் மானின் சாயல் அந்தக் காட்டு மானுக்கு இருக்கிறது. பிரம்மகத்தி தோஷம் பிடித்து அனைத்தையும் துறந்து தனது சிவத்தையும் துறந்து தெருவில் திரிந்த பிட்சாடனரின் கையில் உள்ள அருகம்புல்லைக் கடிக்கத் துள்ளும் மானின் சாயல் அதற்கு இருக்கிறது. பைரவரின் கையிலுள்ள மனிதச் சதைக்காகத் துள்ளி வரும் நாயின் சாயல் அதற்கு உள்ளது.

கவிஞன் இறைவனை முழுமையாகப் பற்ற விரும்பாதவன். அவனுக்கு இறைவன் கையிலிருக்கும் உணவுதான் வேண்டும். அதன் புரதம்  வேண்டும். அந்த அந்தரத்தில் கவிஞன் பிறந்தும் மரித்தும் விடுகிறான். அது பசியிலிருந்து துள்ளலாம். தாபத்திலிருந்து துள்ளலாம். பிரிவிலிருந்து தனிமையிலிருந்து துன்பத்திலிருந்து துள்ளலாம்.

ஆனால் அங்கே கவிதையென்னும் கலையென்னும் உயிர், ஆற்றல் மானுடத்துக்கு விநியோகிக்கப்பட்டு விடுகிறது.

000

குணமோ ரணமோ பிரான்சிஸ். எது துயரம்? எது நிறைவு? எது மகிழ்ச்சி? நம்மை ரணப்படுத்தியதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது அதுவே நம்மை உயிர்பித்தும் வைத்திருந்துள்ளது. துன்பமும் வன்மமும் வலியும் நோய்மையும் கூட உயிர்ப்பைக் கொடுக்கிறதென்றால், சந்தோஷம் என்பதற்கு சமூகமும் ஊடகங்களும் வைத்திருக்கும் பொது வரையறையை நாம் ஏற்கமுடியுமா?.

குணமும் ரணமுமாகப் பிரிந்து மொழிக்கு அப்பாலும், மொழிக்கு முன்னாலும் என்ன இருக்கிறது? அந்த வியர்த்தத்தையும் அதிகம் உணர்பவன் கவிஞன் தானே பிரான்சிஸ்.

ஒற்றை இதயத்தின் வாசனையை நாடிய ரணத்திலிருந்து, பைத்தியத்திலிருந்து, நோய்மையிலிருந்து உனது கவிதைகளை நான் நெருக்கமாக்கிக் கொண்டேன். ரணத்தின் இடத்தில் ஒளிக்காகக் காத்திருக்கும் இடத்தில் இப்போது அமர்ந்திருக்கிறேன். அந்த அனுபவத்திலிருந்தும் அந்த உலகத்திலிருந்தும் உன்னை உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.

உன் பிரபஞ்சத்தில் உனக்கு எது நிறைவைத் தருகிறதோ அதைச் செய்து கொண்டிரு. அங்கே நிகழ்வது வேறு வரலாறு. அது மகிழ்ச்சியென்றோ துயரமென்றோ வெளியிலே மொழிபெயர்க்கப்படலாம்.


Comments