Skip to main content

அன்னை என்னும் நெடுந்தனிமை


சமீபத்தில் அகச்சேரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அந்த விளக்கின் ஒளி’யில் ‘அம்மா விழுந்தாள்’ கவிதை, என்னை யோசிக்க வைத்தது. அம்மா ஒரு கருத்துருவமாக, படிமமாக மட்டும் இல்லாமல் தனி அம்சம் கொண்டவளாக, பொது அன்னையிலிருந்து வேறுபட்ட அன்னைகளின் சித்திரங்கள் தமிழ் புதுக்கவிதையிலும் நவீன கவிதையிலும் குறைவுதான் என்று தோன்றியது. அகச்சேரனின் ‘அம்மா விழுந்தாள்’ கவிதையில் அம்மா என்பவள் தொல்படிவத்தன்மையின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில் தனி அன்னையின் சாயல்களுடனும் தென்படுகிறாள்.

அம்மா விழுந்தாள்

அம்மா விழுந்தாள்
நன்றாகவே பின்கட்டிலிருந்து
தேநீர்த் தட்டோடு நடந்து வந்தவள்
வீட்டின் சகல
ஜடங்களும் உயிர்களும் பார்க்க
இடறி

தூக்க எத்தனிக்காத
என் கற்கைகளை நண்பனிடம்
குறைபட்டேன்

வீட்டில் மறைந்திருந்த
பாழுங் கிணற்றை அறிந்த பீதியில்
இன்றைய தேநீரோடு

அம்மா நடந்து வருகிறாள்
நான் என் கைகளை கைகளை...
000


 வீட்டின் நடுவே ஜடங்களும் உயிர்களும் பார்க்க, உயிர்களும் ஜடங்களாய் பார்க்க எல்லார் கண்முன்னரும் விழுந்த அம்மாவை ஏன் மகனால் தூக்க எத்தனிக்க முடிவதில்லை? அவனது கைகள் கல்லாலான கைகளாக ஆனது ஏன்? அகச்சேரனின் கவிதையில் வரும் அம்மாவிடம் ஒரு தனிப்பின்னணி தென்பட்டாலும், மகனால் ஏந்தித் தூக்க முடியாத கைகளைப் பெற்ற அம்மாக்கள் அநாதியிலிருந்து தொடர்பவர்கள் தானே?

எத்தனை மகன்களால் தாம் விரும்பிய அளவுக்கு அன்னையை நெருங்கித் தொட முடிந்திருக்கிறது? தழுவ முடிந்திருக்கிறது? முத்தம் கொடுக்க முடிந்திருக்கிறது? அம்மாவுக்கு அருகில் போக முடிந்திருக்கிறது?

மகன் மட்டுமா அந்த இடைவெளியை உருவாக்கியவன்? மகனுக்கு மட்டுமா அந்தக் கல்லாலான கைகள்?

அம்மா எல்லாரிடமிருந்தும், குறிப்பாக பிள்ளைகளிடமிருந்து ஒரு கண்ணியமான தனிமையை, இடைவெளியை, ஒரு தாண்ட முடியாத பாதாளத்தை வரலாறளவு அடைகாக்கிறாள். மௌனம், அமைதி, தனித்த  ஏழ்மை, ஊடுருவ முடியாத எளிமையின் திரை என்று விவரிக்கலாம். ஒரு சாதாரண உயிர் தன்மேல் 'அன்னை'யை அணிந்துகொள்ளும் போது உருவான சிறைதான் அவளை அப்படி ஆக்குகிறதா?
 
ஆல்பெர் காம்யூவின் முடிக்கப்படாத நாவலான 'முதல் மனிதன்' நாவலில், நாயகன் ழாக் கோர்மெரி, பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க வரும் போது, அன்னையின் குரல்வளைக்குக் கீழே உள்ள குழிவில் அவன் சிறுவனாக இருந்தபோது முத்தமிட்ட மாதிரியே முத்தமிட ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்குத் துணிவு வரவில்லை. அம்மா ஏற்படுத்திக் கொண்ட வரம்பை அவனால் மீறமுடியாமல் உள்ளது. உலகின் இன்னொரு முனையிலும் நமக்குத் தெரிந்த அம்மா தான் அவள்.

அல்ஜீரியாவில் வசிக்கும் அந்தத் தாய், தான் விழுவதற்கான பாழுங்கிணறை வீட்டுக்குள் உருவாக்கியிருக்கிறாள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

உயிர் கொடுத்து நம்மை உருவாக்கி உடல் வளர்த்து தன்னையே உணவாக அளித்து நமக்கு நெருக்கமாக உடனிருக்கும் பிரகிருதி எப்போது நம்மிடமிருந்து தொலைவாகப் போகிறாள்.

சூரியனை, நிலவை, பருவங்களை எப்படி அவற்றின் அருமை தெரியாமல் நுகர்கிறோமோ அப்படித்தான் தாயையும் அவள் இறக்கும் வரை அருமை அறியாமல் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று போர்ஹெஸ் ஒரு நேர்காணலில் வருத்தம் கொள்கிறார். அம்மாவுக்கு நியாயமாக வழங்கவேண்டிய மகிழ்ச்சியைத் தான் வழங்கவே இல்லை என்று சொல்கிறார். ஒருவேளை, அவளை நான் கூடுதலாகப் புரிந்துகொண்டு அனுசரணையுடன் நடத்தியிருக்கலாம் என்று குற்றவுணர்வு கொள்கிறார். 

என் கவிதைகளில் வரும் அம்மா, என் அம்மா என்ற தனிப்பட்ட தன்மையுடனும் பொது அன்னையின் சாயல்களையும் கொண்டவள். எனது முதல் நல்ல கவிதை என்று நான் கருதும் ‘அம்மா நீங்கிய அறையில்’ கவிதையில் அம்மா இல்லாமலிருக்கும் தருணத்தில் குழந்தைக்கு நிகழும் முதல் கல்விதான் பேசப்படுகிறது. எனது ஒவ்வொரு தொகுதியிலும் அம்மாவின் இருப்பு துலங்கியும் மறைந்தும் இருக்கும் சில கவிதைகளை எழுதியுள்ளேன். அந்தக் கவிதைகளில் அம்மாவின் வரம்பிலிருந்து, அம்மா தனது மகன் என்று தெரிந்து வைத்திருந்த அறிதல் எல்லைகளிலிருந்து ஒரு சிறுவன் புதிய நிலங்களை புதிய அறிதல்களை புதிய உலகங்களை நோக்கி ஓடியபடி இருக்கிறான், அம்மாவைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே. அம்மாவை விட்டுப் பிரியும் துயரும், புதியவற்றை ருசிக்கும் உற்சாகமும் சேர்ந்தே அந்தச் சிறுவனுக்கு இருந்துகொண்டிருக்கிறது.

அம்மா நீங்கிய அறையில்

முதல்முறை குழந்தை
தன்முகம் ஸ்பரிசிக்கிறது
கண்ணாடியில்
மற்றொரு குழந்தையின் முகமென
பாப்பா எனக் குதூகலத்துடன்
முத்தமிடுகிறது
தன் கைவளைகள் ஆடியில் தெரிய
கொலுசுக்கால்களை உயர்த்திப் பிடித்து சந்தோஷிக்கிறது
குழந்தை எச்சில் வழியக் கடவுளைத் தீண்டுகிறது
முதலும் முடிவுமாய்.

(மிதக்கும் இருக்கைகளின் நகரம், 2001)

தமிழ்க் கவிஞர்களில் நகுலன், அம்மாவைப் பற்றி மட்டுமல்ல தந்தை குறித்த தனித்துவமான சித்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதையில் எண்பது வயதாகி விட்ட அம்மாவுக்குக் கண்பார்வை குறைந்துவிட்டது. அவள் மகனை அருகில் உட்காரச் சொல்லி, அவன் முகத்தைக் கையை கழுத்தை தடவித் தடவி அவன் உருக்கண்டு உவகையுறுகிறாள். அவள் தன் சித்திரத்தையோ கணவர் சித்திரத்தையோ கூடத் தேடலாம். வளர்ந்த தன் பிள்ளையில், அவளுடைய குழந்தையின் சித்திரத்தையும் தேடலாமில்லையா?

‘அம்மாவுக்கு’
எண்பது வயதாகி விட்டது.
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
‘நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?’

- நகுலன்

அகச்சேரனின் கவிதையில் தெரியும் அன்னையில் எனது அம்மாவும் தெரிகிறார். எனது கைகளையும் நான் கல்லாலான கைகள் என்று உணர்ந்துகொண்டேதான் இருக்கிறேன். 

Comments

கவிதையின் வழியாக புனிதப்படுத்தப்படாத அம்மாக்களின் இயல்பான வாழ்வில் நமக்கான உணர்வு தளத்தை நினைவுபடுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சி ஷங்கர். வாழ்த்துகள் அகச்சேரன்
shabda said…
நான் எந்தச் சுவற்றில் எந்த சித்திரத்தை தேடுகிறேன்
அருமை. சார். தொகுப்பின் பல கவிதைகள் மனதிற்கு நெருக்கமான தாகவும் பல விழுமியங்களை பற்றி யோசிக்கவும் விவாதிக்க செய்வதாகவும் இருந்தபோதும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த கவிதை எந்தவிதமான சூட்சுமமும் அன்றி எளிதில் அவரவர் இருப்பை அவரது நிலைப்பாட்டை சரிபார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். உங்கள் அற்புதமான அவதானிப்பின் வழியாக பல நேர்த்தியான ஒப்பீடு களுடன் இந்த கவிதையை இன்னும் மனசுக்கு நெருக்கமாக ஆகிவிட்டீர்கள் மிக்க நன்றி கவிஞருக்கும் வாழ்த்துக்கள்