Skip to main content

வர்கீஸின் கண்கள்


கார்த்திகை மாத தீபங்கள் ஏற்றப்பட்ட கமுகம்சேரியின் பகவதி அம்மன் கோயில் அது. அந்தி மறையும் இருட்டினூடாக, அந்த பகவதி அம்மன் கோயிலில் அமர்ந்திருக்கிறோம். பகவதி அம்மன் கோயிலுக்கு சற்று மேல் பக்கவாட்டில் அமைந்துள்ள மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் வர்கீஸை மேலதிகாரிகளின் உத்தரவுக்கும், மிரட்டலுக்கும் பணிந்து கொன்றது, நான் தான் என்று, ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளான ராமச்சந்திரன் நாயர் பல வருடங்களுக்குப் பிறகு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த இடம் இந்தக் கோயில்தான்.

குளச்சல் மு.யூசுப்பிடம் நான் தான் சொன்னேன். அந்த பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டுத்தான் போக வேண்டும் என்று. தம் வாழ்நாள் முழுவதும், தம்மை உறுத்திய உண்மையை வெளிப்படையாய் சொன்ன ஸ்தலத்தில் ஆவி வடிவிலாவது ராமச்சந்திரன் நாயர் இருப்பார் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். ஒருவரைத் தேடி வந்து, அவர் இந்த உலகத்திலேயே இல்லையென ஆகும் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத தத்தளிப்பாக இருக்கலாம்.

வயநாடு பகுதி வனப்பகுதியில் நிலஉடைமையாளர்களின் சுரண்டலுக்கு உட்பட்டு, அடிமைகளாய் ஒடுக்கப்பட்ட மலைவாழ்மக்களின் நலன்களுக்காகப் போராடியவர் வர்கீஸ். கேரள நக்சல்பாரி இயக்கத்துக்குத் தலைமை ஏற்று காவல் நிலையங்களை எரித்த, நில உடைமையாளர்களைக் கொலை செய்த வழக்குகள் அவர் மீது உண்டு. மறைந்து முப்பது வருடங்களுக்குப் பிறகும், அப்பகுதியில் ஒரு நாட்டார் கதை நாயகனாகவே மாறி ஆதிவாசிகளால் வர்கீஸ் இன்றும் நினைவுகூறப்படுகிறார்.
போலீசாருடன் நடந்த மோதல் சாவில் கொல்லப்பட்ட வர்கீஸின் உடலிலிருந்து பிடுங்கப்பட்ட கண்கள், திருநெல்லி காடுகளின் மீது இரண்டு நட்சத்திரங்களாக ஒரு நாள் முளைக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

செய்தித்தாள்களிலிருந்து வெட்டப்பட்ட வர்கீஸின் கருப்பு - வெள்ளைப் புகைப்படம், சிறுதெய்வத்தின் மதிப்புடன் அங்குள்ள குடிசைகளில் உள்ளது. அவரைப் பற்றிய செய்திகள் கேரளத்தில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, (வர்கீஸ் மோதல் சாவில் கொல்லப்பட்ட சம்பவம் சமீபத்தில் திரைப்படமாகவும் அங்கு வந்துள்ளது.)

நிரபராதியாக பிடிபட்ட வர்கீஸை, மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர், என்கௌண்டரில் கொல்ல நேர்ந்த பின்னணியையும், ஒரு கான்ஸ்டபிளாக தாம் எதிர்கொண்ட அனுபவங்களையும் தமது கீழ்மைகள் உட்பட வெளிப்படையாக எழுதிய புத்தகம் தான் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி.'

மலையாளத்தில் வெளியாகி பரபரப்புடன் பேசப்பட்ட ராமச்சந்திரன் நாயரின் நூல் குறித்த செய்தியை எனக்குச் சொன்னவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். மதுரையில் இருக்கும் மக்கள் கண்காணிப்பகம் என்னும் மனித உரிமை அமைப்பின் பதிப்பகத் துறையில் நான் வேலை பார்த்ததால், இப்புத்தகத்தைத் தமிழில் வெளியிடுவதற்கு மணிவண்ணன் தெரிவித்த யோசனை சாத்தியமானது.

வர்கீஸைக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததன் பின்னணியில் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்த வழக்குச் செலவுகளுக்காக நூலுக்கான ராயல்டி பணத்தை முன்பணமாகத் தரவேண்டும் என்று கேட்டு ராமச்சந்திரன் நாயர் தபால் எழுதியிருந்தார். அந்தத் தொகை ஏற்பாடு செய்யப்பட்டவுடன் மொழிபெயர்க்கும் அனுமதியை வழங்கினார்.
குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்த்ததை முழுவதும் படித்த பின்னர், ராமச்சந்திரன் நாயரை நேர்காணல் செய்து, தமிழ் புத்தகத்திற்காக சேர்க்க வேண்டும் என்று அலுவலகத்தில் அனுமதி கேட்டேன். நிறைவேறியது.
ராமச்சந்திரன் நாயரிடம் எங்களது வருகையைத் தெரிவித்து விட்டதாக குளச்சல் மு.யூசுப் உறுதி சொன்னார். எங்கள் பயணமும் நாகர்கோயிலில் இருந்து அதிகாலையில் துவங்கியது.

ராமச்சந்திரன் நாயரைப் பார்க்கும் முகமாக புனலூரில் இறங்கி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பலகாரக் கடையில் மிக்சர் வாங்கிக் கொண்டோம். மிக்சர் கடைக்கு அருகில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்த போது, குளச்சல் மு.யூசுப் காலடியில் ஒரு நாலணா காசைக் கண்டெடுத்தார். அவர் முகம் சுருங்கியது.

இது போன்ற சல்லிக்காசு தென்பட்டால் அது நல்ல சகுனமில்லை என்று சொன்னார்.

அவரது சகுனம் என் தலையில் ஏறவில்லை . மலைப்பாங்கான ஏற்ற இறக்கங்கள், பாதையைச் சுற்றிலும் தழுவியிருக்கும் தோட்டங்களின் பசுமையைச் சுகித்தபடி கமுகம்சேரி நிறுத்தத்தில் இறங்கினோம்.

ஒரு பெட்டிக்கடையில் ராமச்சந்திரன் நாயர் வீடு எங்கே என்று யூசுப் விசாரித்தார். கடைக்காரர் எங்களை ஒருவிதமாகப் பார்த்து வீட்டுக்கான வழியைக் காட்டினார்.

யூசுப் இதற்கு முன்பு மூன்று முறை வந்துள்ளார். அப்படியும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் வழிகேட்க வேண்டியுள்ளது என்று சொன்னார்.
ராமச்சந்திரன் நாயருக்கு காசநோயின் காரணமாக மூச்சிரைப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதிகம் கேள்விகள் கேட்டு அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி யூசுப் என்னை முன்பே ஆற்றுப்படுத்தினார்.
ரப்பர் மரங்கள் அடர்ந்த அடுக்கடுக்கான பாதைகள் வழியாய் கீழிறங்கி, அவர் வீட்டுக்குச் சென்றோம். தனி வீடாக ஒரு பள்ளத்தில் அவர் வீடு இருந்தது. வீட்டுக்கு வெளியே இரண்டு வயர் கிழிந்த சேர்கள் போடப்பட்டு இருந்தன. அக்கம் பக்கத்தில் மரங்களுக்கு ஊடாக மறைந்திருக்கும் வீடுகளிலிருந்து கோழிகளின் சத்தமும், பெண்கள், குழந்தைகளின் சந்தடியும் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வெளிப்புற நடையில் ஒரு தீபவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. சாயங்கால ஒளி இன்னும் மரங்களின் இடைவெளிகளுடாக வழிந்து கொண்டிருந்தது.

மண் வாசனை வீசும் அந்தப் பழைய வீட்டின் வாசலில் நின்று ராமச்சந்திரன் நாயரை அழைத்தோம். அவர் மனைவி சாந்தம்மா வந்தார். அழகிய முகம்.
யூசுப் சாந்தம்மாவிடம், “சாரில்லையா?” என்று கேட்டார். அழுகையும் வார்த்தைகளும் ஒன்று சேர, "சார் மரிச்சு போயல்லோ , நிங்கள் அறிஞ்னூடே?” என்றார்.

குளச்சல் மு.யூசுப்பும் அழத்தொடங்கி விட்டார். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவரது புத்தகத்தை படித்திருந்தேன். அவரை இதுவரை பார்த்ததில்லை. யூசுப்புக்கு புத்தகத்தை மொழிபெயர்க்கும் தொடர்பில் அவருக்குப் பழக்கம் இருந்தது. நான் நிலைகொள்ளாமல் நின்றேன்.



ராமச்சந்திரன் நாயரின் மரணத்திற்கு வந்திருந்தவர் யாரோ, தொலைபேசியில் ஓம் என்று சொன்னதை, நாயர்தான் எங்கள் வருகைக்கு ஒப்புதல் தந்ததாக எடுத்துக் கொண்டு யூசுப் இங்கு என்னை அழைத்து வந்துவிட்டதாய் அப்போது தெரிவித்தார்.

எனது அலுவலகத்துக்கு போன் செய்து ராமச்சந்திரன் நாயர் இறந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னேன்.

சற்று முன்பு எனக்கு அழகாகத் தோன்றிய காட்சிகள் அனைத்தின் மீதும் நிறங்கள் வெளிறிக் கொண்டிருந்தன.

யூசுப்பும், சாந்தம்மாவும் இப்போது இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். முற்றிய இருமலிலும், மூச்சுத் திணறலிலும் ஒரு வாரம் முன்பு நாயர் மரணமடைந்ததாக சாந்தம்மா கூறினார். மலையாள மனோரமா செய்தித்தாளில் ராமச்சந்திரன் நாயரின் மரணத்தை முன்னிட்டு வர்கீஸ் புகைப்படத்துடன் மலையாள மனோரமா அரைப்பக்க கட்டுரைச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை சாந்தம்மா எங்களிடம் காட்டி னார்கள்.
வர்கீஸைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்த ராமச்சந்திரன் நாயரைத் தேடி வேறு வேறு இடங்களில் மூன்று ராமச்சந்திரன் நாயர்களை சந்தித்துக் குழம்பிய ஒரு நிருபரின் அனுபவம் தான் அந்தக் கட்டுரை.

ராமச்சந்திரன் நாயரின் இளவயது கம்பீரத்தை நினைவூட்டும் உருவத்துடன் அவர் மகன் உதயகுமார் வந்தார். அவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பவர். அப்பாவின் மரணத்தை முன்னிட்டு விடுமுறையில் வந்திருப்பதாக எங்களிடம் தெரிவித்தார்.

தன்னை மிலிட்டரிக்காரனாகப் பார்க்க வேண்டும் என்ற அப்பாவின் ஆசை காரணமாக தாம் ராணுவ வேலையில் சேர்ந்ததாய் கூறினார்.

திருமணமானதிலிருந்து தமது தெம்மாடித்தனங்களாலும் முரட்டுத்தனத்தாலும், கஷ்டங்களையே அனுபவித்ததாக ராமச்சந்திரன் நாயர் தமது மனைவி சாந்தம்மா குறித்து தனது நூலின் கடைசி அத்தியாயத்தில் விளக்கமாகச் சொல்கிறார்.

ஆனால் அந்த அழகிய சாந்தம்மாவை, நாயரின் இறப்பு ஏன் இவ்வளவு ஏங்கி அழச்செய்கிறது.

தாம்பத்தியத்தின் சந்தோஷக்கரைகள், அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக்கூடிய புதிர் மடிப்புகளைக் கொண்டிருக்கும் கதையாகத்தான் இருக்க வேண்டும்.

வர்கீஸைத் தன் கையால் கொல்லச் செய்த மேலதிகாரி களின் சீருடையைக் கழற்றி அவர்களுடன் சேர்ந்து தானும், சிறையில் கழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ராமச்சந்திரன் நாயர்.

ஆனால் அவர் சொன்ன உண்மை , அவரைப் பலவகையிலும் அலைக்கழித்தது. ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு எளிதில் கிடைக்கும் செக்யூரிட்டி வேலை கூடக் கிடைக்காமல் அவர் கூறிய உண்மை அவரை வேட்டையாடியது.

ஆயுததாரியாக இல்லாத ஒருவனை என்கௌண்டரில் கொலை செய்த தமது மேலதிகாரிகளுக்கு, சட்ட ரீதியாகத் தண்டனை வாங்கித் தருவது, அவரது வாழ்நாளில் அவரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் இருந்துள்ளது. ஆனால் அந்த ஆசை நிறைவேறவேயில்லை.

(உயிர் எழுத்து)

Comments