ஹாருகி முராகமி கதைகள் தமிழ் மொழிபெயர்ப்பின் வழியாக ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது. அப்போது, நான் இருந்த மனநிலையில் முராகமி என்னைக் கவரவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நண்பர் முராகமியின் Honey Pie கதையைப் படிக்கச் சொல்லி நியுயார்க்கர் இணைப்பை அனுப்பிய போது ஹாருகி முராகமி எனக்கு அந்தரங்கமானார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் படிக்கும் வாசகன் இனம்காணும் நவீன வாழ்க்கை சார்ந்த, ஆண் - பெண் உறவு விசித்திரங்கள், அல்லல்களினூடாக ஒரு முடிவையும் ஒரு அமைதியையும் வாசகனுக்கும் உருவாக்கும் கதை அது. இரண்டு கரடிகள் இயல்பான கதாபாத்திரங்களாக இடம்பெற்று ஒரு உருவகக் கதையாக ஆகியிருந்தது. அதன்வழியாக ஒரு நீதியும் சொல்லப்பட்டிருக்கும்.
அதிலிருந்து நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்த ஹாருகி முராகமியின் எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவரோடு மேலும் இணக்கம் கொள்வதற்கு அவரது தந்தை பற்றிய நீண்ட, அவரது அனைத்துப் புனைவு அம்சங்களும் தெரியும் ஒரு நினைவுக் கட்டுரையையும் மொழிபெயர்த்தேன்.
(படிக்க ; என் தந்தையின் நினைவுகள்)
சமயம், சமூக நெறிகள் சார்ந்த வாழ்க்கை ஒழுங்கும் அதுசார்ந்த கட்டுப்பாடுகளும் கேள்விக்குள்ளாப்பட்ட, தனிமனிதனின் தேர்வுக்கும் சுதந்திரத்துக்கும் அதிகபட்சம் அனுமதி வழங்கப்பட்ட நூற்றாண்டு இது. முடிவேயில்லாத உணவுவகைப் பட்டியல் அட்டை போல வாழ்வதற்கான தேர்வுகள் அவன் முன் நீண்டுள்ளன. அப்படியான சுதந்திரத் தேர்வும் அது கிடைப்பதற்குரிய வாய்ப்புமே அவனுக்கு ஒரு புதுவிதமான தனிமையையும் ஒரு புதுவிதமான துக்கத்தையும் பரிசளித்திருக்கிறது. அங்கே வாழ்க்கை, நட்பு, நுகர்வு, பாலுறவு என அனைத்தும் புதிய நியதிகளில் நிகழத் தொடங்கியுள்ளன. இணையவெளி போல எண்ணற்ற மனங்கள், கலாசாரங்கள், பழக்கங்கள் ஊடுபாவாகத் திகழும் மூளையுடன் உறங்குவதற்கு முயலும், உறக்கம் வராமல் துயரப்படும் உலக மனிதனுக்கு இந்தப் புதிய உலகத்தின் அமைதி, சமாதானத்தின் ருசியைத் தனது கதைகளில் காட்டுபவராக இருக்கிறார் முராகமி.
பழைய உலகங்களில், பழைய கருத்துகளில், பழைய நியதிகளில் பதிலோ தீர்வோ இல்லாமல் என் துயரம் என்னை இருட்டில் தள்ளி, விபரீதக் காட்சிகளைக் காண்பித்த சில இரவுகளில், நியூயார்க்கர் இணையப் பத்திரிகையில் ஹாருகி முராகமி கதை ஏற்றப்படும் போது, முதல் ஆட்களில் ஒருவனாகப் படித்து அமைதியை அடைந்திருக்கிறேன். இந்த உலகைப் புரிந்துகொள்வதல்ல, இங்குள்ள தத்தளிப்புடனேயே தரிப்பதற்கான அமைதியை முராகமி கதைகள் வழங்குகின்றன.
ஹாருகி முராகமி கிட்டத்தட்ட உலகளவில் அத்தனைபேரால் படிக்கப்படுபவராக இருக்கிறார்? அவர் தீவிரமான இலக்கிய ஆசிரியரா? அவர் வெகுஜன எழுத்தாளரா? இப்படியாகப் பல கேள்விகள் உள்ளன. நகர்ப்புற நவீன ஜப்பான் தான் முராகமி கையாளும் உள்ளடக்கம் என்றாலும் சென்னை, மும்பை, லண்டன், ஆம்ஸ்டர்டாம், நியூயார்க், நியூஜெர்சி வரை எங்கு வாழும் ஒரு வாசகனும் அவரது கதைகளின் அடிப்படை அம்சங்களுடன் இனம் காணமுடியும். மேற்கத்திய பாப் இசை சார்ந்த பதிவுகள், நினைவுகள் அவர் கதைகளில் இடம்பெறுகின்றன.
ஆனால், ஹாருகி முராகமி இன்று உலகு அடைந்திருக்கும் உள்ளடக்கத்தை, அதன் பொருண்மையை நேரடியாக எதிர்கொள்பவராக இருக்கிறார். இன்று இங்கே உருவாகியிருக்கும் பிரச்சினையை இங்கிருந்தும் இந்தத் தருணத்திலிருந்துமே எதிர்கொள்வதற்கான முகாந்திரங்களைத் தேடுகிறார். வரலாறு, சமயம், மரபு, தத்துவம், இதுவரையில் திரட்டப்பட்டிருக்கும் எங்கேயிருந்தும் அவரின் விடைகள் இல்லை.
முராகமியின் கதைகளில் துருத்தலே இல்லாமல் பூனை, கரடி, குரங்கு எல்லாம் வருகின்றன. நாம் மனிதனாக வெகுதூரத்துக்கு வந்தபிறகும் நம் உடலில் இருக்கும் அந்த உயிர்களை, அவற்றின் ஏக்க, தாப, துயரங்களை முராகமி ஞாபகப்படுத்துகிறார். மனிதர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட அவனால் நிர்ணயிக்க முடியாத அ-மானுட முனைகள், தருணங்கள், விடுபடுதல்கள், குழப்படிகளை ஹாருகி முராகமி, தன் கதைகளில் துல்லியமாக அவதானிக்கிறார். மனித நிர்ணயத்துக்குட்படாத வெளிகள், சந்துகளில் தான் முராகமியின் விலங்குகள் முளைக்கின்றன என்று தோன்றுகிறது. அத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கதையும் கலையும் இன்னும் விந்தையாக இருப்பதும் இன்னமும் அவசியமாக இருப்பதும் இதனால்தான்.
ஹாருகி முராகமி எழுதி, கடந்த ஒன்றாம் தேதி நியூயார்க்கர் இதழில் ஏற்றப்பட்டிருக்கும் ‘Confessions of a Shinagawa Monkey’ சிறுகதையில்,நகரில் உள்ள ஒரு பழைய விடுதியில் பணியாற்றும் குரங்கொன்று வருகிறது.
அந்தக் குரங்கு, ஒரு பேராசிரியரின் வீட்டில் தன் இளம் பருவத்தைக் கழித்து அவருக்கும் அவரது மனைவிக்கும் மிகவும் பிரியமாக இருந்ததால் குரங்குப் பண்புகள் குறைந்து மனிதப்பண்புகளையும் பேச்சுத் திறனையும் பெற்றுவிடுகிறது. ஒருகட்டத்தில் குரங்குகளோடு சேரமுடியாமல் போய், சினாகவா நகரில் உள்ள விடுதியில் சேவைப் பணியில் சேர்ந்துவிடுகிறது.
அந்த நகரத்துக்கு வரும் கதைசொல்லிக்கு, இரவில் வேறு விடுதி கிடைக்காமல் இங்கே வந்து தங்கும் போது, அந்தக் குரங்கு, வெந்நீர் குளியலறையில் அறிமுகமாகிறது. ஒரு முழு பாட்டில் பீரைக் காலி செய்து தனது பிரத்யேகக் கதையைத் துக்கத்துடன் சொல்கிறது.
அது ஒரு காதல் கதை. மனிதர்களுடன் பழக்கம் ஏற்பட்டதால், பெண் குரங்குகளுடன் அதற்கு ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதையும் மனுஷப் பெண்கள் மீதான காதலையும் சொல்கிறது. தனக்குப் பிடித்த பெண்களின் பெயர்களைத் திருடுவதுதான் அதற்கு வாடிக்கை.
பெயர்களைத் திருடுவது என்றால் எப்படி? அந்தக் குரங்கு விரும்பும் பெண்ணின் அடையாள அட்டை ஒன்றைத் திருடும் குரங்கு, அடுத்து அந்தப் பெண்ணின் வாழ்நாளில் அடிக்கடி அவளது பெயர் மறந்துபோகுமாறு செய்துவிடும். இதைத் தவிர வேறு விஷமம் எதிலும் அந்தக் குரங்கு ஈடுபட்டதில்லை. அதுவும் அந்தக் கதைசொல்லியைச் சந்திக்கும் வரை ஏழு பெண்களின் பெயரை மட்டுமே திருடியதாகச் சொல்கிறது அந்தக் குரங்கு. அந்தப் பெயர்களைத் திருடுவது, தனது காதலின் ஒரு அம்சம் என்பதை உணர்த்தி விட்டு, கதைசொல்லி கொடுக்கும் தாராளமான டிப்ஸ் பணத்தை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு அவனிடம் நள்ளிரவில் விடைபெற்றுச் செல்கிறது.
தன் இயல்பிலிருந்து மனிதனின் பழக்கத்தால் திரிந்த அந்தக் குரங்குக்குத் தனது தனிமை வாழ்க்கையின் ஒரே ஆறுதலாக, ஒரே உயிர் தன்மை கொண்ட அம்சமாக தன் காதலும் காதலிகளின் பெயர்களுமே இருக்கின்றன. அந்தக் குரங்கு கதைசொல்லியிடம் இப்படிச் சொல்கிறது.
“வாழ்க்கையைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கு நேசம் என்பது தவிர்க்கவே முடியாத எரிபொருள் என்று நம்புகிறேன். ஒருநாள் அந்த நேசம் தீர்ந்துவிடலாம். அல்லது, அதனால் ஒன்றுமே அடையமுடியாமலும் போகலாம். ஆனால், நேசம் என்பது வெளிறிப் போகும் நிலையிலும் கூட, நிறைவேறாமல் போகும் நிலையிலும் கூட, யாரையாவது காதலித்த நினைவில், யாருடனாவது காதலில் விழுவதில் நம்மைத் தக்க வைத்திருக்க முடியும். அத்துடன் அது இதத்தின் மதிப்பு மிக்க ஆதாரமும் கூட.”
முராகமியின் கதையில் வரும் குரங்கை உற்றுப்பார்த்தால், அதில் நாம் எல்லாரும் இருப்பதைப் பார்த்துவிட முடியும். அந்தக் குரங்கு, விடுதியிலும் நகரத்திலும் யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்து வருவது. அதன் காதலை அது தன்னைப் போலவே விளிம்பில் வைத்திருக்கிறது.
குரங்கு சொல்லும் அந்த ஏழு காதலிகளையும் கதைசொல்லி பார்த்ததில்லை. குரங்கு மெல்லக் கனவாய் பழங்கதையாக அவனுக்கு ஆனபின்னர், குரங்கின் எட்டாவது காதலியை அல்லது எண்ணிக்கை சொல்ல முடியாத காதலியை கதைசொல்லி சந்திக்கிறார்.
தனது காதல் மூலம் பெயர் மறதியை தனது காதலிகளுக்கு ஏற்படுத்தும் அந்தக் குரங்கு உலகத்துக்கு என்ன சொல்கிறது. காதல், மறதியில் தான் நிலைகொள்கிறது என்கிறதா.
மனிதனை விடத் தீர்க்கமாகப் பேசும் விலங்குகளை முராகமி ஏன் உருவாக்கியபடி இருக்கிறார். பிற குரங்குகளுடனும் வாழமுடியாமல் மனிதர்களுடனும் இணையுறவு கொள்ள முடியாத அந்தக் குரங்கை இருட்டில் விளிம்புகளில் குற்றத்தன்மையுடன் அலையவிட்டது யார்?
நம்மைவிடத் தொன்மையான ஒன்றின் கதையைப் பகிர்வதற்குத்தான், அந்தக் குரங்கைக் கொண்டு நம்மைக் குணமூட்டுவதற்குத்தான் ஹாருகி முராகமி கதை சொல்கிறாரா?
சிறுகதையைப் படிக்க
(https://www.newyorker.com/magazine/2020/06/08/confessions-of-a-shinagawa-monkey)
Comments