Skip to main content

இறால்களுக்கு ஒரு பாடல்


தரையில் குப்பை போலக் குவிந்திருக்கும் இறால் கூடுகளை ஒருநாள் பார்த்து பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன்கள் வாங்கப் போன நண்பரிடம் இவையும் இறால்கள்தானே என்றேன். அருகில் அழைத்துப் போய் இறாலின் உள்ளடக்கம் என்று ஒரு புழு உடலத்தை எடுத்துக் காண்பித்தார். நாம் சாப்பிடும் உணவு இதுதான் என்றார்.

இறாலுக்குக் கடுகளவு இரண்டு கண்கள்; கடலிலிருந்து வலைக்கும் கரைக்கும் வந்தபிறகும் நமது உணவுக்குத் தன் உள்ளடக்கத்தைத் தந்தபிறகும் என்னை அவை உற்றுப்பார்க்கும் கூர்மை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் பிரதிபலிக்கும் இந்த அவதாரத்துக்கோ கம்பீர மீசைகள் உடலெங்கும்; முக்கோணக் கூர்முகமும்.
கடலில் சிங்கங்கள் புலிகளாக அவை ஆர்ப்பரித்திருக்கும்.

ஸ்டீவ் ஜாப்ஸின் கைநேர்த்தியொத்த ரயில் பெட்டிகளாக அடுக்கடுக்காக மடங்கும் கண்ணாடிப் பேழை, கோது என்று அழைக்கப்படும் அதன் கூடு.

உள்ளடக்கம் என்று சொல்லப்படும் உள்ளேயுள்ள புழு உடல் எளிதாய் கழன்ற பிறகும் இறால், இறாலைப் போலவே காட்சி தருகிறது செக்கச் சிவப்பாய்.

தனது உள்ளடக்கத்தை அத்தனை இலகுவாக மேல்கோட்டைக் கழற்றுவது போல் விட்டுக்கொடுத்தும் விடுகிறது. அதன் உடம்பு எங்கே முடிகிறது,
அதன் உயிர் எங்கே தொடங்குகிறது, மீசைகள் கொடுக்குகள் கண்கள்
நடுவில் எங்கே அசைந்து கொண்டிருக்கின்றன?

இயற்கையோ கடவுளோ இறாலுக்குச் செய்த ஆர்ப்பாட்ட அலங்காரம் ஏன் உயிரற்று பொருளற்று மதிப்பற்றுக் கிடக்கிறது கூடுகளின் குவியலாக; ஒரு வார்த்தைக் கூட்டமாக பூனைகளுக்கும் காகங்களுக்கும் மத்தியில்
ஏன் அவை சிதறிக் கிடக்கின்றன?

Comments