Skip to main content

முகமது இப்ராகிம் - நகுலன்                       

தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்


(தமிழ் நவீன இலக்கியப்பரப்பில், சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராக அறிமுகமாகியவர் நகுலன். அவரது காலத்தில் இயங்கிய, அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கூட, வாசக நினைவிலிருந்து வேகமாக விடைபெற்றுச் செல்லும் நிலையில், நகுலனின் எழுத்துக்கள் நவீனத்துவ காலகட்டத்தையும் தாண்டிய பொருளாம்சம் மற்றும் கலையம்சத்துடன், அபூர்வமான ரகசியத் தன்மையை தக்கவைத்தபடி புதிதாக வரும்  வாசகனையும் ஈர்க்கின்றன. நகுலன் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை முறையானபடி தொகுக்கப்பட்டால் நகுலனின் ஆளுமை மேலும் துலங்கும் என்பதற்கு இக்கதை ஒரு சாட்சியாக இருக்கிறது. நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் அப்போதைய இந்திய ஆங்கில இலக்கிய எழுத்து வட்டத்தில் சரியானபடி கவனிக்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர் அய்யப்ப் பணிக்கர் . இச்சிறுகதை 1979 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் வெளியிட்ட யூத் டைம்ஸ் மாதமிரு முறை இதழில் (நவம்பர் 16-30) வெளிவந்துள்ளது. யூத் டைம்ஸில் சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் ஆசிரியராக க.நா.சு பணியாற்றியுள்ளார். கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் சேகரிப்பிலிருந்தது, தற்செயலாக கிடைத்தது முகம்மது இப்ராகிம்)     

ரகு தன் வீட்டின் வராந்தாவில் உள்ள கூடை நாற்காலியில் அடைக்கலமாயிருந்தான். 50 வயதிலும் அவன் அழகனாகவே இருந்தான். சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பின் ஒருவராக பெற்றோர்களைப் பறிகொடுத்ததை மனதில் அசைபோட்டான். அவர்களது ஒரே மகன் அவன். நெருக்கமான உறவுகளும் யாரும் இல்லை. அவனது பெற்றோரின் மரணத்துக்குப் பிறகு, அதுவும் நடந்துவிட்டது. அதை நினைத்துப் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை. அவன் தன் மனைவி சுசீலாவை இழந்து, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சுசீலா. அது அவள் பெயரா? அல்லது அவன் கற்பனையா? அவள் அற்புதமான ஒரு பெண், மிகுந்த புரிதல் உள்ள மனைவி என்பதையெல்லாம் புறந்தள்ளிவிட்டது அவளது இழிவான மரணம். ஆம் அதைக் குறிப்பிடும்போது இழிவானது என்ற வார்த்தையைத் தான் அவன் பயன்படுத்த வேண்டும்.

அவளது மரணம் இயற்கையாக நடந்ததே. வேலூருக்குப் பயணம் போனது, அங்கே மருத்துவர் சொன்ன பீதியூட்டும் செய்தி, அந்த ரகசியத்தை அவளிடம் இருந்து மறைத்தது, ஆனாலும் அவளாகவே புரிந்துகொண்டது என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தான். அவள் தனது துன்பத்தை தைரியமாகவே தாங்கினாள். உயிரைப் பற்றிப் பிடிக்கும் போராட்டத்திலும், நம்பிக்கைக்கான சிறிய அறிகுறியை அவள் விடாமல் வைத்திருந்த வேளைகளிலும், அகால இரவுகளில் அவன் மருத்துவரிடம் ஓடும்போதும், கடைசியாக பயங்கரமான மரணம் வந்து இரைச்சலிட்ட போதும், அவளது இறுதி நாட்களில் அவன்மீது ஒரு விதமான பழிக்கும் பார்வையைக் காட்டாமல் இருப்பதற்கு அவள் கடுமையாக முயற்சி செய்ததை அவனால் உணர முடிந்தது. அதெல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் சுசீலாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எவ்வளவு முயன்றாலும் புற்றுநோயைப் பற்றி நினைக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

அவன் ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தான். அதில் ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்டன. கல்லூரியில் எல்லாரும் அவன் மீது அனுதாபம் கொள்வார்கள் என்று அவனுக்குத் தெரியும். இந்த அனுதாபத்தை அவனால் தாங்க முடியாது. காதலித்தவரோடு வாழ்வது என்றால் என்ன என்பதை அவர்களால் உணர முடிந்ததென்றால், காதலித்தவர் தம் கண் முன்னேயே அணுஅணுவாகச் சாவதை அவர்களால் உணர முடிந்தால்... அவர்களுக்குக் குழந்தைகள் இல்லாமல் போனது நல்லதற்கே. சுசீலா குழந்தை பெறுவதற்கு ஆசைப்படாதவள் அல்ல. அவள் விரும்பினாள். ஆனால் ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லை. அவள் கர்ப்பம் தரிக்கக்கூட இல்லை. அப்புறம் அவள் கக்கிய ரத்தம்; நோயின் அறிகுறிகள்; வேலூருக்குப் பயணம் போனது; மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் நேரங்களில் தொற்றிக்கொள்ளும் திடீர் கவலை... இப்போது புற்றுநோயின் ஞாபகம்தான், சுசீலாவினுடையதல்ல. அவனுடன் ஒரு வேலைக்காரப் பையனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனைக் காய்கறிகள் வாங்க அனுப்பியிருந்தான். அந்தப் பையனின் சமையலைத்தான் இவன் சாப்பிட்டு வந்தான். அப்போது நேரம் பகல் 11.30. சூரியன் காய்ந்துகொண்டிருந்தது.      

தெருவில் அவன் வீடுதான் கடைசி. அந்த இடமே பிரதான சாலையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. திறந்திருந்த வாயிற்கதவு வழியாக ஒருவன் வீட்டுக்குள் நுழைகிறான். இவன் வேலைக்காரப் பையனை சபித்தான்.

நுழைந்த ஆளை அவன் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

நெடிதான, நிமிர்ந்து நடைபோட்டு வந்த அந்த மனிதனின் வேஷ்டிக்கட்டு அவன்  தெற்கத்திக்காரன் இல்லை என்று சொல்லியது. இடமிருந்து வலமாக அவன் வேட்டியை முடிந்திருக்கிறானோ? அந்த மனிதனைப் பற்றிய எல்லாமும் ரகசியமாகவும் அதே வேளையில் அறிமுகமான தொனியிலும் இருந்தது. அவன் பஞ்சாபியா? முஸ்லிமா? வடக்கிலிருந்து வந்தவனா? இந்த நாட்டில் திரியும் எண்ணற்ற யாசகர்களில் ஒருவனா? ரகு தனது சிந்தனைகளை விரிந்து பரவவிடும் முன்பே அந்த மனிதன் அவனுக்கு முன்வந்து நின்றான். உடலைத் தாழப் பணிந்து, கைகளைக் கட்டி வணங்கினான். இந்த வடிவிலான வணக்கத்தை ரகு எதிர்பார்க்கவேயில்லை. அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான்?

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

அவன் பிச்சைக்காரனா? அவனது வேஷ்டியின் மேல் ஒரு முழுக்கைச் சட்டை அணிந்திருந்தான். அதில் சிறு துளி அழுக்கைக்கூடக் காண முடியவில்லை. எல்லாமே வினோதமாகத் தெரிந்தது. அவன் பிச்சைக்காரன் இல்லையெனில் யார் அவன்? அவன் பேசினான்.

“ஐயா,நான் யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள், இல்லையா?

ரகு பேசவில்லை. அந்த மனிதனுக்கு என்ன வேண்டும்? அவன் அருமையாகத் தமிழ் பேசுகிறான். ஆனாலும் அவனது தாய்மொழி தமிழ் அல்ல என்பதில் இவனுக்கு ஒரு நிச்சயம். இவனது மனதைப் படித்ததுபோல அவன் பேசினான். “எனது தமிழைப் பார்த்து நீங்கள் வியக்கிறீர்கள் இல்லையா? எனது தாய்மொழி தமிழ் அல்ல. உருது.”

ரகுவுக்கு அவனிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. “நீங்கள் முஸ்லிமா?

“ஆமாம், அல்லாவின் கருணையால். அவர்கள் என்னை முகம்மது இப்ராகிம் என்று அழைக்கிறார்கள்”

தான் விரும்புவதைக் கேட்பதைப் பற்றி அந்த மனிதன் கவலைப்படவில்லை.

“ஐயா, நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள். அது பயங்கரமானது. இந்த ‘தனிமை’…”

ரகுவுக்கு ஆச்சரியம். அந்த மனிதன் தொடர்ந்தான். “ஐயா,இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இங்கே யாரும் இல்லை என்பதைத் திறந்த கதவின் வழியாகப் பார்க்க முடிகிறது.”

அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க மறுபடியும் தோன்றியது ரகுவுக்கு. திரும்பவும் அவன் பேச ஆரம்பித்தான். “ஐயா, நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. நான் வடக்கிலிருந்து வந்தேன். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அதில் நான் என் பீவியை இழந்தேன்.”

ரகு குழப்பத்துடன் வெறித்தான்.

“இந்த பூமியிலேயே அழகிய ஆன்மாவாக நடமாடியவள் அவள் ஐயா. தவிட்டுப் புறாக்களைப் போல ஜோடியாக நாங்கள் அனுபவித்த ஆனந்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஆனால் நான் அவளை இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் பறிகொடுத்தேன்.”

ரகுவால் அந்த மனிதனை வினோதம் தொனிக்கப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு அன்னியர் இன்னொருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அந்த மனிதன் பேசுவதை நிறுத்தவில்லை.

“அங்கே நான் ஒரு பணக்கார வியாபாரியாக இருந்தேன். அதனால் என்ன பிரயோஜனம்? பரஸ்பர சந்தோஷத்தை முன்னிட்டே நாங்கள் வாழ்ந்தோம். அவ்வளவு நிறைவு. அப்போதுதான் இந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை. நான் விரட்டப்பட்டேன். எனது பெரிய கடை தீக்கிரையானது. அவர்கள் என்னை விரட்டினார்கள். கொடூரமானவர்கள்”

ஒரு கட்டத்தில் அந்த மனிதருக்கு இருக்கை ஒன்றை அளிக்கலாம் என்று ரகுவுக்குத் தோன்றிவிட்டது. “இந்த நாற்காலியில் உட்காருங்கள்” என்றான்.

“நான் வியாபாரி என்று எனது பூர்வ கதையைப் பற்றி சொன்னதெல்லாம் இறந்த காலம். எனக்கு என் இடம் தெரியும். இங்கேயே நிற்கிறேன். உங்களது வேலை என்னவென்று கேட்கலாமா?

“நான் விரிவுரையாளராக இருக்கிறேன். நான் ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கிறேன். அத்துடன் அமெரிக்கக் கவிதையும்.”

“அப்படியெனில் நீங்கள் எமிலி டிக்கன்சனை நிச்சயமாக படித்திருப்பீர்கள், இல்லையா”

ரகுவுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அந்த மனிதரின் ஆங்கிலமும் சிறப்பாக இருந்தது.

“ஏன் கேட்கிறீர்கள்?

“ஆன்மா தேர்ந்தெடுக்கிறது (த சோல் செலக்ட்ஸ்) என்று தொடங்கும் கவிதையை உங்களால் நினைவில் கொள்ள முடிகிறதா?

ரகு மர்மமாக அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மனிதர், இப்ராகிம், அக்கவிதையின் முதல்பகுதியை முழுமையாகப் பாடினார்.

ஆன்மா தனது சொந்த சமூகத்தைத் தேர்ந்தெடுக்கிறது
பின்னர் கதவை மூடிவிடுகிறது:
அவளின் புனிதப் பெரும்பான்மையில்
வேறொருவருக்கு இடமில்லை.

“அந்தப் புனிதப் பெரும்பான்மை நானும் எனது பீவியும்தான்.”

அவர் குரலை உயர்த்தினார். “ ஐயா, எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். அவளுக்குக் குழந்தைமீது விருப்பம் இல்லை என்று சொல்ல முடியாது. இருந்தது. ஆனால் அவள் கர்ப்பம் தரிக்கக்கூட இல்லை. நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் காலிகள் அவளை இழுத்துச் சென்றார்கள்.”

ரகு சைக்கிள் மணியோசையைக் கேட்டான். தபால்காரர் வந்தார். ரகுவுக்கு ஒருமுறை இதயம் நின்று துடித்தது. ஒரு வார இதழின் ஆசிரியரிடமிருந்து கடிதம் ஒன்றை அவன் எதிர்பார்த்திருந்தான். வெற்றியா, தோல்வியா? பெரும்பாலும் தோல்வியாகவே இருக்கும். அந்த நீளமான தபால் உறையைத் தபால்காரர் கொடுத்தபோது, அதைத் திறக்க அவன் விரும்பவில்லை. அந்த உறையில் தன் கையெழுத்தில் இருந்த முகவரியைப் பார்க்க முடிந்தது. தன் பெயரைத் தானே தன் கையெழுத்தில்…அவனே அவனை நிராகரித்துக்கொள்வதை... ரகு முகத்தைக் கவிழ்த்துக் கொண்டான்.

இப்ராகிம் கேட்டார். “நீங்கள் எழுத்தாளரா?

“சில சமயங்களில் அப்படி நான் நம்புவதில் …”

“திருப்பி அனுப்பிவிட்டார்களா?

“ஆம்”

“நீங்கள் கதைகள் எழுதுவீர்களா?

“ஆம்”

“எனது பீவியும் எழுதுபவள் தான். அவளுக்கு புத்தகங்கள் என்றால் பெரும் மோகம்”

ஆனால் அவர் அடுத்தாற்போல சொன்னதுதான் ரகுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அவளுக்குப் பிடித்த இந்திய-ஆங்கில நாவல் பர்தா அண்ட் பாலிகமி. அதற்கு முன்னுரை எழுதியது சி.ஆர்.ரெட்டி. உங்களுக்குத் தெரியுமா?

அவனால் தனது காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த நாவலை விரும்பிய, படித்த ஒரே ஆள், தான்தான் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அந்த மனிதரோ மேலும் தொடர்ந்தார். “அவளை அந்த முரடர்கள் தூக்கிக்கொண்டு போகும்போது, அவள் என்னைப் பார்க்கக்கூட இல்லை. காலிகள். அவர்கள் மீது விழுந்து போராடினேன்.

ரகுவுக்குத் தன் காதையே நம்ப முடியவில்லை. அந்த நாவலை விரும்பிய ஒரே ஆள் தான் மட்டுமே என்று அவன் நம்பியிருந்தான். ஆனால் அந்த மனிதரோ பேசிக்கொண்டே போனார்.

“அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போனபோது, அவள் என் முகத்தைப் பார்க்கக்கூட இல்லை. என் பக்கமே திரும்பவில்லை. அவர்கள் எனது கவட்டையில் உதைத்தார்கள். நான் விழுந்தேன். அவர்கள் சென்றார்கள். அதற்குப் பிறகு பயங்கரமான விவரங்கள் என் காதுக்கு வந்தன.”

“பிறகு நான் கல்கத்தாவுக்கு வந்தேன். தெற்குப் பக்கம் பயணம் செய்தேன். ஆனால் அவளை நினைக்கும் போதெல்லாம் நான் வெறுத்தேன். எனது பீவியின் அழகிய முகம் வெறுக்கும்படியாக மாறிவிட்டது. அவள் ஒருமுறைகூட என்னைப் பார்க்கவில்லை. அவர்களுடன் நான் போராடியபோதுகூட அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் எந்த அகதிகள் முகாமுக்கும் போகவில்லை. பிறகு நான் தெற்கே வந்தேன். ஆனால் எனது பீவியின் வெறுப்பான முகம் என்னைத் துரத்தி வருகிறது. நான் அவளை வெறுக்கிறேன் ஐயா...வெறுக்கிறேன்”

ரகுவுக்கு மிகவும் பீதியாக இருந்தது.

அந்த மனிதர் கத்தினார். “நீங்கள் நினைப்பது போல் இல்லை ஐயா. சிதம்பரத்தில் உள்ள கோவிலைப் பார்க்கப் போனேன். முகம்மது இப்ராகிம் ஆகிய நான் அங்கே போனேன். அந்தக் கோவிலை நான் மாசுபடுத்தினேனா? ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை மட்டுமே பார்த்தேன். அங்கேயுள்ள யாரும் எனது வேஷ்டியைத் தூக்கிப் பார்த்து உண்மையான முஸ்லிமா என்று பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கோவிலோ, மசூதியோ எனக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. மேய்ச்சல் விலங்கைப் போல பீவியால் நான் விரட்டப்பட்டேன். எதுவும் எனக்கு நிம்மதியைத் தரவில்லை.”

அவர் நிறுத்தினார்.

ரகு அவரிடம் கேட்டான். “நீங்கள் உட்கார மாட்டீர்களா?

“இல்லை ஐயா” என்றபடி அவர் ஒரு சிட்டிகை மூக்குப்பொடியை எடுத்து உறிஞ்சி, தனது உள்ளங்கையை மூடித் தும்மினார். கையில் மூக்குப்பொடியின் துகள்கள் தெறித்தன. தனது பேச்சைத் தொடர்ந்தார். “நான் இங்கே பஜார் வழியாக வரும்போது, ஒரு இளைஞன் என்னைத் துல்லியமான இடைவெளியில் பின்தொடர்ந்தான். ஒருகட்டத்தில் என்பக்கம் நெருங்கிவந்து, “காக்கா, எங்கள் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. நீங்கள் விரும்பினால் கொஞ்ச நேரம் அங்கே வந்து இருக்கலாமா? உங்களுக்குப் பிடிக்கும் வகையில் மாமிச உணவை நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் வந்தால் எனது அக்கா மிகவும் சந்தோஷப்படுவாள்’ என்றான். என்னால் கோபத்தை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. எனது பார்வையைப் பார்த்தே அந்தப் பையன் திடுதிடுவென்று ஓடியே போய்விட்டான். ஒன்று மட்டும் சொல்கிறேன், ஐயா... (அவர் குரல் மேல் ஸ்தாயிக்குச் சென்றுவிட்டது) இதெல்லாம் பீவியின் செய்கைதான். அந்தப் பெட்டை நாய்தான் என்னை இப்படியெல்லாம் சோதிக்கிறது!”

ரகுவுக்கு உண்மையாகவே அச்சமாக இருந்தது. அந்த மனிதர் சத்தமாகச் சொன்னார். “சாகேப், நீங்கள் பயப்பட வேண்டாம். நான் கிளம்புகிறேன்.”

ஒரு கணம் அமைதியாக இருந்த ரகு,”இருங்கள்... நான் ஏதாவது உங்களுக்குத் தர வேண்டும்.”

“ஐயா, நான் இன்னும் முகம்மது இப்ராகிம்தான்” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த மனிதர் போய்விட்டார். ஐந்து நிமிடம் கழித்து, அவர் சென்ற திசையிலிருந்து, தனது வேலைக்காரச் சிறுவன் வருவதை ரகு பார்த்தான். அவனிடம், “ஒரு உயரமான முஸ்லிம் ஆளை தெருவில் பார்த்தாயா” என்று கேட்டார்.

“இல்லை ஐயா” என்றான்.

“யாரையுமே பார்க்கவில்லையா”

“சுவாமி, தெருவே வெறிச்சோடிப் போய் இருக்கிறது”

இரவு தான் சாப்பிடப்போவதில்லை என்று ரகு அவனிடம் சொன்னான். அவனைத் தூங்கப் போகச் சொல்லிவிட்டு, கோத்ரெஜ் பீரோவைத் திறந்தான். அங்கே அவனது மனைவியின் புகைப்படம் இல்லை. அவன் அவளது பெற்றோருக்கு அந்தப் புகைப்படத்தை அனுப்பிவிட்டான். அதிலிருந்து ட்ரை மார்டினியை எடுத்து குப்பியில் இருந்த மிச்சத்தை கிளாசில் ஊற்றிக் குடித்தான்.

அடுத்த நாள் விடுமுறையை ரத்துசெய்துவிட்டு வேலையில் சேர்ந்தான்.

(அம்ருதா,செப்டம்பர் இதழ்)

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக