நான் எப்படி பித்து கொண்டவனாக ஆனேன் என்று கேட்கிறாய். இப்படித்தான் அது நடந்தது. ஒரு நாள், கடவுள்களில் நிறைய பேர் பிறப்பதற்கு முன்னால், நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தேன். எனது எல்லா முகமூடிகளும் திருடப்பட்டதைக் கண்டுகொண்டேன். நானே செய்த ஏழு முகமூடிகள் அவை; அந்த ஏழு முகமூடிகளை அணிந்துதான் ஏழு வாழ்க்கைகளை வாழ்ந்தேன். முகமூடிகள் திருடுபோனதால் முகமூடி அணியாமல் கூட்டமான தெருக்களில் அலைந்து தேடினேன். திருடர்கள், திருடர்கள், சாபம் பிடித்த திருடர்கள் என்று கத்தித் திரிந்தேன். ஆண்களும் பெண்களும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் என்னைப் பார்த்துப் பயந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர்.
நான் சந்தைப் பகுதியை எட்டியபோது, ஒரு இளைஞன் ஒரு வீட்டின் மீது ஏறி நின்று, இவன் பைத்தியக்காரன் என்று கத்தினான். அவன் முகத்தைப் பார்ப்பதற்காக நான் முகத்தை உயர்த்தினேன். முதல் முறையாக சூரியன் எனது வெறும் முகத்தின் மீது முத்தமிட்டது. சூரியன் மேல் கொண்ட அன்பினால் எனது ஆத்மா பற்றி எரிந்தது. எனக்கு இனி முகமூடிகள் தேவையில்லை. நான் அருள்வாக்கு கிடைத்ததுபோல உரத்துக் கூவினேன். எனது முகமூடிகளைத் திருடிய அந்தத் திருடர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
இப்படித்தான் நான் பித்தன் ஆனேன்.
எனது பித்தில் நான் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தேன். அது தனிமையின் விடுதலை மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதிலிருந்து கிடைத்த விடுதலை. நம்மைப் புரிந்துகொள்பவர்கள் நம்மில் ஏதோ ஒன்றை அடிமைப்படுத்துகிறார்கள். ஆனால், எனது பாதுகாப்பு குறித்து நான் பெருமிதமெல்லாம் கொள்ளக்கூடாது. சிறையில் இருக்கும் ஒரு திருடன்கூட மற்ற திருடனைவிட பாதுகாப்பாக இருக்கிறான்.
Comments