பெருந்தொற்றைத் தோதாக்கி நமது நவதுவாரங்களையும் திறக்க முடியாத விசித்திர மாஸ்கை மட்டுமே பரிசளித்து விட்டு, சுதந்திரத்தின் வழியாக, ஜனநாயகத்தின் வழியாக, அரசியல் சாசனத்தின் வழியாக, சிறுகச் சிறுகச் சேகரித்த எல்லாவற்றையும் படிப்படியாகப் பறித்துக் கொண்டு வரும் சர்வாதிகாரப் பேயாட்சியை, அது தேசம் முழுவதும் பரப்பி வரும் நஞ்சை கவிஞர் கண்டராதித்தன் கலைத்தன்மையும் அபூர்வ சுரணையும் கூடிய மொழியில் சமீபத்தில் வந்த 'ஓலைச்சுவடி' இணைய இதழில் பதிவு செய்துள்ளார். தேசத்தைக் கிட்டத்தட்ட மயானமாக்கிவிட்டு, அதன் புகைவாசனை அண்ட முடியாத மூடிய மாளிகையில் இருந்துகொண்டு மயில்களைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் இரக்கமற்ற ஒரு ராஜநாகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஓலம் என்று கண்டராதித்தனின் 'உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்' கவிதையைச் சொல்லமுடியும்.
கங்கையில் சடலங்கள் மிதக்கத் தொடங்கியதும், தலைநகர் மயானத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள புரோகிதர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதும் வெறுமனே கோர நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; புராணிகங்களையும் படிமங்களையும் கருவிகளாக்கி ஆட்சிக்கு வந்தவர்களுக்கும், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் காண்பிக்கும் கோர சகுனங்கள் அவை. கண்டராதித்தனும் அவரது வலுவான புராணிகப் புலத்தில் நின்றுகொண்டே மயானத்தை மையப்படிமமாக்கி இந்த நீள்கவிதையை எழுதியுள்ளார்.
நிர்பயா என்ற பெண்ணுக்கு பாலியல் கொடூரம் நடந்து அவர் இறந்தபோது இந்தியா முழுவதும் கிளர்ந்த கண்டனங்களில் சிறிதளவும், தலைநகர் மயானத்தில் தண்ணீர் பிடிக்கச் சென்ற ஒன்பது வயது தலித் சிறுமிக்கு நடந்தபோது எழவேயில்லை. பிரதமரும் தலைநகரை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சரும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஊடகங்களிலும் அந்தச் செய்தி பழங்கதையாக ஆகிப் புதைக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற கொடூரங்களை ஓர்மையுடன் நினைவுபடுத்த வேண்டிய நமது நடுத்தர வர்க்கத்தினரின் தார்மிகம், மரணங்களில் கூட சாதி, வர்க்கச் சார்பிலிருந்து தான் உலுக்கப்படுகிறது. அதனால்தான், புலையப் பிணத்தினை என்னால் எரிக்கமுடியாது என்கிறான் கண்டராதித்தன் கவிதையில் ஹரிச்சந்திரன்.
பெருந்தொற்றின் இரண்டு அலைகளின் போது, ஆட்சியாளர்களால் மக்கள் வெவ்வேறு விதமாக அலைக்கழிக்கப்பட்ட காட்சிகளை இன்னொரு காலத்தில் கொண்டுபோய் கண்டராதித்தன் விமர்சிக்கிறார். இந்தியா முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட வேண்டிய நீள்கவிதை இது. கண்டராதித்தன் கவிதை, இடதுசாரி, முற்போக்குகளின் கண்களில் படுவதற்குள் பல ஆட்சிகளும் துயரங்களும் வந்துவிடும்.
சுரணை கொண்ட படைப்பு ரீதியான எதிர்வினை கண்டராதித்தன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
இப்போது
கங்கையில் மிகுந்த அலங்காரம்
செய்யப்பட்ட பாடைகள் பறக்கின்றன
அந்தப் பாடைகளையும்
அவற்றை அட்டி அணைத்தபடி
போகும் பிணங்களையும்
மறைந்திருந்து காணும் அரசைப்பார்த்து
சன்னக்குரலில்
ச்சீ….என்ன இழிபிறவி இவன்
என்றான் சந்திரமதியின் கணவன்.
ஓலைச்சுவடி இதழில் கண்டராதித்தன் கவிதையைப் படிக்க :
Comments