Skip to main content

நகுலனும் அபியும் சந்திக்கும் 'மறுபுறம்'

பிரமிள், நகுலன், தேவதச்சன், அபி, ஆனந்த் ஐவரும் மனம் என்ற ஒரு பிரதேசம் சார்ந்த வேறு வேறு இயல்புகளின் குன்றுகள். அபி தன் கவிதையில் பரிசீலிக்கும் இன்மையையும் நகுலன் பரிசீலிக்கும் இன்மையையும் ஒத்துப் பார்க்க தற்செயலாக ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. உருத்திரளாமல் ஒன்றுகூடாமல் இருக்கும் 'ஒன்றையும்' அபி தன் வழியில் இந்தக் கவிதையில் பரிசீலிக்கிறார். அபி சொல்லும் மறுபுறத்தின் சமிக்ஞைகள் நமக்குப் புரியத் தொடங்குகிறது.

அபியின் 'யாரென்று என்னவென்று' கவிதையில், கவிதைசொல்லிக்கு எதிராகச் சதி செய்வது, விட்டுப் போன வலிகள் மட்டும் அல்ல; இதங்களும் தானாம்.

யார் என்று என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

இந்தக் கேள்வி பொதுப் பயன்பாட்டில் சுயமும் அகந்தையும் தொனிக்கும் நமக்கு வழக்கமான கேள்வி. இந்தக் கவிதையில் அபி இதற்கு நேர் எதிரான முனையில் நின்று மிகச் சந்தேகோபாஸ்தமாக ஒலிக்கவிடுகிறார் இந்தக் கேள்வியை. 

இந்தக் கவிதையில் ஒரு முன்னிலை வந்து உரைப்பது புகார் போல ஒலிக்கிறது. 

‘நீ ஒன்றுகூட வில்லை

உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம்

கூடாமலும் போகலாம்' என்கிறாய்.

அபியின் உலகம் பற்றி அபி எழுதிய குறிப்பைப் போல உள்ளது இந்தக் குறிப்பு. 'நீ ஒன்றுகூட வில்லை' என்பதை 'நீ ஒன்றுகூட இல்லை' என்று படித்துப் பார்ப்பதற்கான சாத்தியமும் உள்ளது. 

சொல் கூடுவதும் கூடாததும் பேசுவதும் பேசாததும் போலவே ஒன்றாகும் அதிசயமும் அபியின் கவிதையில் மட்டுமே நடப்பது.

யாரென்று என்னவென்று நினைக்கிறீர்கள் எல்லாரும்

யாரென்று என்னவென்று நினைக்கிறீர்கள் எல்லாரும்

யாரென்று என்னவென்று நினைக்கிறீர்கள் எல்லாரும்

யாரென்று என்னவென்று நினைக்கிறீர்கள் எல்லாரும்

யாரென்று என்னவென்று நினைக்கிறீர்கள் எல்லாரும்


யாரென்று என்னவென்று

எனக்கு வந்த

பரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்

வெறும் காலியிடம் விரவிக் கிடந்தது

அனுப்பியவரின் சீட்டுக் குறிப்பு:

‘உனது மறுபுறத்தின் சமிக்ஞைகளை

இத்துடன் அனுப்பியிருக்கிறேன்’


நண்பர்கள் கற்பனை வசப்பட்டவர்கள்

நேற்றுக்கூட இப்படித்தான்

வீட்டுவாசல் வெறிச்சென்றிருந்த

மதிய வேளையில்

வெயிலும் நிழலுமாய்ப்

பேசிக்கொண்டிருந்தேன்

எதிர்பாராது வந்துநின்ற

நண்பன் சொன்னான்:

‘இதோ நீ இருண்டு கொண்டிருக்கிறாய்'


ஏதும் நினைவுகளற்று

நின்று கொண்டிருந்த

ஒரு தனியிடத்திலும்

ஒருவன் தோன்றிக்

குறியின்றிக்

கேள்விகளை வீசுகிறான்


யாரென்று என்னை

நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

யார்யாரும்?


விட்டுப்போன வலிகளும்

இதங்களும்

வேறெங்கோ இருந்துகொண்டு

தந்திரமாக

ஒன்று கூடியிருக்கலாம் என்று

நினைத்துக்கொண்டிருக்கும் போதே

நீ வந்து பேசுகிறாய் :


'நீ ஒன்றுகூட வில்லை

உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம்

கூடாமலும் போகலாம்'

என்கிறாய்.


யாரென்று என்னவென்று

நினைக்கிறீர்கள்

எல்லாரும்.

000

அபி தனக்குள்ளேயே ஒதுங்கிச் சொல்லும் ஒன்றை அறிவிப்பைப் போல நகுலன் போட்டு உடைத்துவிடுகிறார். அபி சொல்லும் மறுபுறத்திலிருந்து வரும் குரல் போல இருக்கிறது அது.       

நான் ஒரு

உடும்பு

ஒரு

கொக்கு

ஒரு

ஒன்றுமே இல்லை

 - நகுலன்

Comments