ஒரு நாள் வெயிலில் நின்றுகொண்டிருக்கும் சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து, “யாரும் வராத இந்த இடத்தில் தனியாக நின்றுகொண்டிருப்பது உனக்குச் சிரமமாக இல்லையா" என்றேன். "இன்னொருவரை அச்சுறுத்துவதென்பது ஆழமான மகிழ்ச்சியை அளிப்பது; அது நீடித்திருக்கவும் கூடியது. அதனால் எனக்கு சலிப்பே வரப்போவதில்லை" என்று கூறியது. ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, ஆமாம் உண்மைதான். அந்த மகிழ்ச்சியை நானும் அறிவேன் என்றேன்.
“வைக்கோலால் திணித்த உடலைக்கொண்டவர்களால்தான் அந்த உண்மையான மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்" என்று சோளக்கொல்லை பொம்மை பதில் அளித்தது.
சோளக்கொல்லை பொம்மை இந்தப் பதிலால் என்னைப் பெருமைப்படுத்தியதா, சிறுமைப்படுத்தியதா என்று புரியவில்லை. அதைவிட்டு நீங்கிச் சென்றேன்.
ஒரு ஆண்டு கழிந்தது. சோளக்கொல்லை பொம்மை அதற்குள் தத்துவஞானியாகிவிட்டது. நான் அப்போது அதைக் கடந்து போனபோது சோளக்கொல்லை பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடுகட்டத் தொடங்கியிருந்தன.
Comments