Skip to main content

நீர் உயிரியாக அலையும் எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’

  


 

கவிஞரும், விமர்சகருமான எஸ். சண்முகத்தின் ‘ஈர்ப்பின் பெருமலர்’ கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்தக் கவிதைகளின் சொல்லி, மொழிப் பிரக்ஞையையும் கொண்ட ஒரு கடல்வாழ் நீர் உயிர் அலையும் காட்சியைக் கண்டேன். உடலின் எல்லைகள் மலரிதழ்களைப் போல எல்லையில்லாமல் மடங்கிச் சுருங்கும் செதில்கள், சிறகுகள் கொண்ட நீர் உயிர் அது. பரிணாமம் எடுக்காத கண்களின் வழியாக அதியுணர்ச்சியுடன் அந்த நீர் உயிர் தனது, பிறிது எது என்று பிரிந்தும் பிரியாமலும் ஒரு முன்னிலையுடன் கலந்தும் பிரிந்தும் அது மொழியில் அலைகிற கவிதைகள் இவை.

அந்த நீர் உயிரியிலிருந்து விடுபட்ட குமிழ், அந்த நீர் உயிரியுடையதா? பிரிதா?

எப்போதும் பிரிந்தே மிதந்துகொண்டிருக்கிற நாம் எல்லாரும் இணைவது சண்முகம் சொல்லும் அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் போலும். அந்த ஒற்றைப் பொதுக்கணத்தில் தான் எப்போதும் கோடையில் இருக்கும் கடலில் பலவண்ண சமிக்ஞைகள் உயிர்க்கின்றன.

இந்த உலகத்தில் அந்த ஒற்றைப் பொதுக்கணம்தான் திரும்பத் திரும்பப் பிறந்துகொண்டிருக்கிறது. அங்கேதான் அந்தக் கடல், பல்லுயிர்கள், தாவரங்களின் ஒளிக்கோளத் தீபாவளியைக் கொள்கிறது.

எதிரே முடிவிலா விரிவினில் மந்தகதியினில் சிறிதுசிறிதாய் உருக்கொள்ளும் முகமொன்றின் வடிவினையும் கூம்பும் நேத்திரத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது பொன்னொளிர்வு என்கிறார் சண்முகம்.

உருவைப் பார்த்தவுடன் அடுத்த வேலை நமக்கு என்ன? பெயரிடுவதுதானே? நாம் ஆதியிலிருந்து பெயர் சூட்டிக் கொண்டேதான் இருக்கிறோம். பெயரால் சுட்டுகிறோம். பெயரால் வரையறுக்கிறோம். பெயரிடுதலின் எத்தனிப்பைத் திரும்ப முயக்கம் களவாடுகிறதாம்.

முன்னிலை ஒன்று தோன்றும்போதுதான், எல்லைகள் இல்லாமல் மடிந்து அலைந்தபடி இருக்கும் தன்னிலையின் தோற்றமும் அதன் ஆட்டமும் தெரியத் தொடங்குகிறது.

இணைவு நிகழா புலம்நீங்கி

விடுபடலின் அகாலம் சுமக்கின்றேன்

சிறகுகளின் படபடப்பில்

நினைவுகளை உதிர்க்கின்றேன்

அழியா மறதியின் மீது மிதக்கின்றேன்

ஏதும் தொடரா வெளியொன்று விரிகின்றது

எனது உயிர்ப்பின் கொடி அங்கு படர்கின்றது.

அழியாதது மறதியைத் தவிர வேறேது? அதன் பாதாளத்தில் தொலைந்தவற்றுக்கு உனது, எனது என்ற அடையாளம் உண்டா? எதை மறக்கிறோம்?

நம்மிடம் இருப்பது எது மொழியைத் தவிர? தெரிந்தது எது மொழியைத் தவிர? நமக்கு அதைத் தவிர வேறு என்ன தெரியும்?

மொழி இல்லாத இடத்தில் நீ, நான் என்ற பேதம் உண்டா?

இன்னொருத்தியின், இன்னொருவனின் "பாழ்வெளியில் ஒற்றைத் தானியமாக ஈரம் விழைந்துத் தவிக்கத் துடிக்கும் ஏக்கம்"தான் இந்த இருப்பா? 

Comments