Skip to main content

சுரேஷ்குமார இந்திரஜித்தின் விரித்த கூந்தல்இருப்பின் ரீங்காரத்தை கவிதை ஒருவகையாகப் பிடிக்கிறது. சிறுகதையில் அந்த ரீங்காரம் இன்னொரு வடிவத்தில் கேட்கிறது. நாவலில் அந்த ரீங்காரம், ஒரு சிம்பொனி ஆக மாறுகிறது என்று தோன்றுகிறது. இந்த மூன்றிலும் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால், இலக்கியம் தொடர்பிலான தற்போதைய தொழில் சார் பார்வை உயர்வு, தாழ்வைக் கற்பித்து விட்டது. அந்தப் பார்வை அருமையான கலைஞர்களையும் சேதாரப்படுத்திவிடுகிறது.

நேற்று சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் நூல் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அழிசி வெளியீடாக வந்திருக்கிறது. புத்தகத்தைச் சும்மா புரட்டிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் கடைசியாக சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய இரண்டு கவிதைகளைப் பார்த்தது மிகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தது. ஒரு கவிதையை சந்திரகுப்தன் என்ற பெயரில் காலச்சுவடு சிறப்பு மலரில் எழுதியிருந்திருக்கிறார். 

1991-ல் வெளியிடப்பட்ட காலச்சுவடு ஆண்டு மலர் எனது மாணவ நாட்களில் திரும்பத் திரும்ப படித்தது. ஆனாலும் சந்திர குப்தன் என்ற பெயர் அப்போது ஏற்படுத்திய வியப்பு தான் ஞாபகத்தில் இருக்கிறது. கவிதையை நான் படித்தோ படிக்காமலோ கடந்திருக்கிறேன். சுரேஷ் தான் சந்திர குப்தன் என்று தெரிந்தபோது, அவர் தனது கதாபாத்திரங்களுக்கு வைக்கும் மர்மமான பெயர்களைத் தொடர்ந்து கவனித்துவருவதால் கூடுதல் சுவாரசியத்தைத் தந்தது. 1980-ல் கொல்லிப்பாவையிலும் பதினோறு வருடங்கள் கழித்து காலச்சுவடு சிறப்பு மலரிலும் என இரண்டே கவிதைகளை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதியுள்ளார்.

காலச்சுவடு ஆண்டு மலரில் ‘இரவில் கண்ட குடும்பம்’ என்ற கவிதையைப் படித்தபோது எழுதப்பட்டு முப்பது ஆண்டுகளாகியும் அவர் கதைகள் கொடுக்கும் அபூர்வமும் மர்மமும் கொடுக்கும் காட்சி அனுபவத்தைக் கொடுத்தது. ஒரு மாயக்காட்சியின் மேல் தான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகள் தனது ரகசியம் முழுமையையும் வைத்திருக்கும். இந்தக் கவிதையிலும் விரித்த கூந்தல் என்ற காட்சி, படித்தவர்கள் யாரையும் துரத்தக்கூடியது. விரித்த கூந்தல் என்ற பெயரில் அவர் ஒரு சிறுகதையை எழுதியிருப்பதாகவும் ஞாபகம். அந்த ஞாபகத்தை அப்படியே யாரிடமும் உறுதிசெய்ய வேண்டாமல் வைத்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையின் மன – நில களமான மதுரைக்கும் விரிந்த கூந்தலுக்கும்தான் எவ்வளவு நீளமான வரலாற்றுத் தொடர்பு?

சாராய உளறலுடன்

ஒரு ஜோடிக்கரங்கள்

அடிக்க

துரத்திக்கொண்டிருக்க

நிலவொளியில்

ஓடுகிறது

ஒரு விரித்த கூந்தல்

கூந்தலில் ஜனித்த

உயிரிலிருந்து

கிளம்பிய ஓலங்கள்

ஒருபுறம் காற்றில்

மேலும் மேலும்

கரைய கரைய

அக்கூந்தலின்

கறுத்த முகத்தில்

கலங்கியிருந்த

குங்குமம்

போ  போ என

ஓலமிட

குங்கும உரிமையில்

துரத்திக் கொண்டிருந்தன

ஒரு ஜோடிக்கரங்கள்.

 

சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு ஜோடிக்கரங்கள் அவளைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. கூந்தலில் ஜனித்த உயிர் என்று எழுதுகிறார் சுரேஷ் குமார இந்திரஜித்.

பெண்ணின் துயரமும் வசீகரமும் அவள் ஆகிருதியும் கூந்தல் தான் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. கூந்தலிலிருந்து தான் உயிர்கள் பிறக்கின்றன என்கிறான் கவிஞன்.

இந்தக் கவிதை வந்த ஆண்டு 1991. கலாப்ரியாவின் சசி கவிதைகளில் உள்ள வேகமும் காட்சியின் உக்கிரமும் உறைந்திருக்கும் கவிதை இது. சமூக வரலாற்றுப் பின்னணியிலிருந்து பார்த்தால், இந்தக் கவிதை ஒரு தெற்காசியச் சித்திரத்தை வரைந்திருக்கிறது என்று சொல்லலாம். இன்னமும் விரித்த கூந்தல் கலங்கிய குங்குமத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது, நீளமாக குடிசைப்பகுதிகளில்.

ஆனால் இந்தக் கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தில் தத்துவமும் விசாரமும் தனது இறுதிப்பாடலை எழுதிக்கொண்டிருந்தது கவிதையில். அதனால் இந்தக் கவிதை யாருக்கும் எடுபட்டிருக்க வாய்ப்பில்லை.

விரித்த கூந்தலும் குங்குமமும் குங்குமம் இட்டதால் உருவகிக்கப்படும் பந்தமும் என பிரத்யேக் கலாசாரத் தன்மையை வைத்திருக்கும் கவிதை இது.

நிலவொளியில் ஓடுகிறது விரித்த கூந்தல் என்னும் மாய ஓவியத்தின் மேல் ஒரு கலங்கலான அழியாத ஓவியத்தை எழுதியிருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.

சுரேஷ்குமார இந்திரஜித் ஏன் நாவல் எழுதப்போனார்?

 தனது வாழ்வின் அழகிய பொன்மாலையில், நடைப்பயிற்சிக்குப் போய்க் கொண்டு நிம்மதியாக தன் இயல்பில் அபூர்வமாக சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்திருக்க வேண்டிய ஒரு கலைஞரை, கடந்த இருபது ஆண்டுகளில் உருவான எழுத்து சார் தொழில்முனைவு கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது. 

நேற்று தொலைபேசியில் பேசும்போது வரலாறு, ஆவணம் என்று அடுத்த நாவல் சார்ந்து தனது உத்தேசங்களைப் பகிர்ந்தார்.

வரலாறு, ஆவணம் என எந்தச் சுவரில் சாய்ந்தாலும் நாவலின் முணுமுணுப்பும், ரீங்காரமும், எடுக்க வேண்டிய சுதந்திரமும் வேறு.

கவிஞர் சுகுமாரனின் பெருவலி , முகலாய சரித்திரத்தின் அதிகம் தெரியவராத, அசாதாராணமான ஆளுமையான ஜெஹன்னாராவின் நாட்குறிப்பை நாவலாக ஆக்கப்பட்டபோது அடைந்த தோல்வி அதுதான்.

ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட அவர் அண்ணனும்  சூபி மெய்ஞானத்திலும், வேதாந்தத்திலும் ஈடுபாடும் புலமையும் கொண்டவருமான தாரா ஷுகோவை விட, அவர்களது அக்காவான ஜெஹன்னாரா முகலாய சரித்திரத்தில் பேசப்படவேண்டிய புதிர் ஆளுமை. பாபரிலிருந்து தொடங்கிய ஞானம் தேடும் பயணத்தில் பரிபூரணத்தை அடைந்தவள் என்று கருதப்படுபவள் ஜெஹன்னாரா. ஜெஹன்னாராவின் வாழ்க்கை டெல்லியில் உள்ள அவளது சமாதியைப் போலவே புனைவாசிரியர்களுக்கு பெரும் சாத்தியங்களுக்காகத் திறந்திருக்கிறது. (தாரா ஷுகோ குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு சமீபத்தில் அவிக் சந்தா எழுதிய வரலாற்றைப் படித்தபோது, ஔரங்கசீப்பால் கொல்லப்படாமல் தனது தந்தையின் ஆசைப்படி அவர் மன்னராக ஆகியிருந்தால் பெரும் குழப்படியில் முகலாய பரம்பரை அகாலத்தில் முடிந்திருக்கும் என்றே தோன்றியது. ஔரங்கசீப் மீதும், ஜெஹன்னாரா குறித்தும் அப்போதுதான் கூடுதல் மரியாதை ஏற்பட்டது.) அவளது நாட்குறிப்பை பெருவலியாக நாவல் ஆக்கிய போது, எடுக்க வேண்டிய சுதந்திரத்தை சுகுமாரன் எடுத்துக்கொள்ளவேயில்லை. நாவல் என்னும் சிவதனுஷை எடுக்க வலு தேவையில்லை. சுதந்திரமும் மன ஒடுக்கமின்மையும் மனத்தடையின்மையும் தான் தேவை. சுகுமாரனின் மன ஒடுக்கம்தான் வெல்லிங்டன்-ஐயும் பழைய வண்ணநிலவன் கதையாக உணரச்செய்தது.கல்பற்றா நாராயணனின் 'சுமித்ரா' என்ற சிறிய  நாவலில், எம் டி வாசுதவேன் நாயரின் மஞ்சு, இரண்டாம் இடத்தில் சாத்தியமானது சுகுமாரனுக்கு ஏன் சாத்தியமாகவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் அப்படிக் கருதப்படுகிறது. என்னால் இன்னமும் அதற்குள் செல்லமுடியவில்லை என்பதையும் இங்கே கூறவேண்டும். அதனால் அந்த நாவலைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்.

நாவல் கேட்கும் ரீங்காரம், நாவல் கேட்கும் முணுமுணுப்பை நாவலாசிரியன் கேட்காத நிலையில் வரலாறு, ஆவணம் என்ற சார்புகள் எல்லாம் குட்டிச்சுவர்களாகிவிடுகின்றன.

நாவல் ஒரு சிம்பொனி என்று சொல்லும்போது உதாரணமாக மார்க்வெசின் நாவலான லவ் இன் தி டைம் ஆப் காலரா நாவல் ஞாபகத்துக்கு வந்துபோகிறது. கதையாகச் சொன்னால் இரண்டுவரியில் சொல்லக்கூடிய காதல் கதை. ஆனால் அது ஆட்படுத்தி வைத்திருக்கும் பார்வைகளும் நுட்பங்களும் தான் பிரமாண்டமானது. இருப்பின் மாபெரும் நடனங்களை, கோலங்களை கூச்சநாச்சமில்லாமல் பார்த்து அணுகிய மொழியின் இசை; மொழியின் மழை அந்த நாவல்.   

Comments