Skip to main content

கவிஞர் நாரணோ ஜெயராமனுக்கு அஞ்சலி

 


வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை தாண்டி நாரணோ ஜெயராமன் குடியிருக்கும் நன்மங்கலத்தில் உள்ள இல்லத்துக்கு எப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கேட்டுச் செல்லும் நான் இன்று கேட்கவில்லை. துக்கம், துல்லியத்தைக் கொடுக்கிறது போல. பல்லாவரம் போகும் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி, நேரே பயணித்து வலதுபக்கம் திரும்பி நீலவர்ணப் பெருமாள் கோயிலைத் தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாரணோ ஜெயராமனின் மகனிடம் ஒருமுறை தொலைபேசியில் கேட்டு உறுதிப்படுத்தி அவர் உடல் இருக்கும் வீட்டை அடைந்தேன்.

குற்றாலம் தர்மராஜன் தான் வேலி மீறிய கிளை தொகுதியை மேற்கு மாம்பலத்தில் உள்ள பழைய புத்தக கடையிலிருந்து 2003-ம் ஆண்டு வாக்கில் வாங்கித்தந்தார் என்று ஞாபகம். சிகப்புத் துணி அட்டையில், மிக எளிமையான சித்திரத்துடன் ஒல்லியாக, மிக மேன்மையும் ஆரோக்கியமும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு அது. கலாப்ரியாவும் நாரணோ ஜெயராமனும் ஒரு காலகட்டத்தின் புதுக்குரல்கள். உரையாடல் மொழியிலிருந்து உயரும் சமத்காரம் அவரது குரல். 

பிரமிளின் முன்னுரை இன்னமும் படிப்பதற்கு தீட்சண்யத்தை இழக்காதது. கசடதபற குழுவினருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். க்ரியா ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன் தொடங்கி எஸ் வைத்தீஸ்வரன் வரை நட்பில் இருந்தவர். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் உரைகளை பிரமிளுடன் இணைந்து தொடர்ந்து கேட்டு தாக்கம் பெற்றவர். சுந்தர ராமசாமி, தனது எழுத்தில் ஒரு புதுப்பிறப்பை எடுத்த பல்லக்குத் தூக்கிகள் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய பெருமையைப் பெற்றவர்.

ஜே. கிருஷ்ணமூர்த்தியை அடையாற்றுப் பறவை என்று கூறி தமிழ் கவிதையில் அவர் முகத்தை உறையச் செய்துள்ளார்.

இங்கே

அலறும் பறவைகள் ஏராளம் – எல்லாம்

கிழட்டுக் குரல்களில்!

தொற்றிக் கொண்ட கிளையை

பற்றிக்கொள்ளும் முனைப்பில்

இவை போடும் கூச்சல்கள் – நீ

சதம் என்று நம்பிவிடாதே – உன்

வாழ்வு நிராசையாகிவிடும் – சற்றே கவனி

ஆண்டுக் கொருமுறை அடையாறில்

                                                 ஒரு பறவை கூவும்

உன்னை அதில் வை

வாழ்வு உன்னில் புதிதாய்ப் பூக்கும்.

 

ஒரு சீரிய கவிதைத் தொகுப்பை எழுதிவிட்டு, சூழலிலிருந்து இவரைப் போன்றவர்கள் எப்படித் தொலைந்து போகிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் உண்டு. தி சோ வேணுகோபாலன் தொடங்கி மலைச்சாமி வரை...அந்த வியப்பு தொடர்கிறது. நாரணோ ஜெயராமனும் இங்கே சென்னையில் எங்கோ இருப்பார் என்று எண்ணியிருக்கிறேன்.

தி இந்து தமிழ் நாளிதழில் பணியில் சேர்ந்து ஓரிரு ஆண்டுகளில் ஒரு மின்னஞ்சல் வழியாக, நாரணோ ஜெயராமனின் வாசகர் கடிதத்தைப் பார்த்து அவரை மிகுந்த அற்புத உணர்ச்சியுடன் தொடர்பு கொண்டேன். விளையனூர் ராமச்சந்திரனையும் அப்படித்தான் ஒரு நாள் சபரிநாதனோடு சந்தித்தேன்.

இப்படித்தான் நாரணோ ஜெயராமன் நண்பரும், தகப்பனைப் போன்ற வாஞ்சையை உடையவரும் ஆனார்.

மிகத் தேசல் என்று சொல்லக்கூடிய ஒல்லி உருவமும் அழுத்தாத பேச்சும் மௌனமும் மேன்மையும் மென்மையும் கொண்டவர். வீட்டில் காஞ்சிப் பெரியவர் புகைப்படம் பெரிதாக இருக்கும். நான் பார்த்தபோது தனது வேதாந்த விசாரங்களைக் கவிதைக் குறிப்புகளாக எழுதி எனக்கு மின்னஞ்சல்களாக அனுப்பிக் கொண்டிருந்தார். சில நல்ல கண்டுபிடிப்புகளும் இருக்கும். அப்போது அவரது அம்மா உயிருடன் இருந்தார்.

ஒரு கலை உருவத்தில் தொடர்ந்து நீடித்து நிலைப்பதற்கு வேறு ஏதோ ஒரு வலு தேவையாக இருக்கிறது போல. நாராணோ ஜெயராமன், தான் தொடங்கிய வலுவில் தொடர்ந்து நிலைகொள்ளவில்லை.

ஜே. கிருஷ்ணமூர்த்தியில் தொடங்கியவர், காஞ்சிப் பெரியவரின் பக்தராக, நான் பார்த்தபோதிருந்த நாரணோ ஜெயராமன் இருந்தார். வித்யுத் என்று ஒரு பதிப்பகம் நடத்தில் அதில் சில பக்தி நூல்களையும் இலக்கிய நூல்களையும் சேர்ந்து வெளியிட்டார். தன் மகன்களின் உதவியுடன் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி வந்தார். எனது பரிந்துரையிலும் சில குழந்தைகளுக்கு அவர் உதவியுள்ளார்.

அவரது மகன்களின் ஆசைப்படி அவரது புதிய கவிதைகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக நூலாக்கம் பெறும்போது நான் அவருக்கு உதவியாக இருந்தேன். நாரணோ ஜெயராமனின் அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரை எழுதவேண்டுமென்று கேட்டார்.

நான் அவரது புதிய கவிதைகள் குறித்து விமர்சனமாக எழுதவேண்டியிருக்கும் என்ற சங்கடத்தில் அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.

இப்போது எழுதுகிறேன். அவரது புகைப்படம் ஒன்றை ஆசையோடு அவரிடம் அறிமுகமாகும்போது எடுத்ததும் கிடைத்தது.

சமீபத்தில் நான் பணியில் சேர்ந்த புதிய தலைமுறை அலுவலகத்தில் உறவினர் பையனைப் பார்ப்பதற்காக வந்து, என்னையும் பார்க்க வேண்டுமென்று சொல்லி கீழேயிருந்து அழைத்தார். அவரும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள்.  அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன்.

இதுமட்டுமே எனக்கு இப்போது நிறைவானதாக இருக்கிறது.

நாரணோ ஜெயராமன் சார்! நீங்கள் மிக மேன்மையானவர், மேன்மையான மனிதர்கள் மிகவும் அருகிவரும் காலத்தில்.  


சுற்றிலும்

இல்லாமை பிரலாபம்

 

ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்

சாக்கடை யோரத்தில்

கந்தலில்

சிசுக்கள் நிலா கண்டு சிரித்து

மல்லாந்து கிடக்கும்


Comments