அவள் ஏன் போனாள்
எனக்குத் தெரியவில்லை
அன்றிலிருந்து
எனது
டெசர்ட் ரோஸ் செடி
பூக்காத மர்மம்
புரியவில்லை
ஒரு
மரத்தைப் போல அடர்வாக்கி
ஒரு
வனத்தைப் போல நிறையாக்கி
தேன்சிட்டு
ஒன்று
பூக்காத
எனது செடியின் கிளையில் அமர்ந்து
நேற்று
கொத்தி
உலுக்கிக்
கொண்டிருந்தது
பூக்காத
அதன் மேலிருந்த கோபம்
எனக்கு
ஏனோ தணிந்துவிட்டது
என்
கோபத்தைத் தணித்தது தெரியாமல்
அந்தத்
தேன்சிட்டு
செடியிலிருந்து
விருட்டென்று
தவ்வி
குடியிருப்பு
வீடுகளின் மேல் பறந்து
வானமேகி
மேகத்தில்
நீலத்தில்
மறைந்த
காட்சியை
கழுத்தை
உயர்த்தி மடக்கி
பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே
எனக்குத் தெரிகிறது.
Comments