Skip to main content

போய் இருங்கள் டி. பி. ராஜீவன்


சென்னையில் மழை சில நாட்களுக்குள்ளேயே வீட்டையும் மனத்தையும் ஆக்கிரமித்து இந்த வருடத்து நவம்பர் மாதத்தையும் எனக்கு நரகமாக்கியுள்ள நிலையில், ஜெயமோகனின் இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொண்ட மலையாளக் கவிஞர் டி. பி. ராஜீவனின் மரணச் செய்தி, உள்ளே எங்கோ அறுத்துக் கொண்டே இருக்கிறது.

டி. பி. ராஜீவன் தனது மரணப்படுக்கையில் எழுதிய இறுதிக் கவிதை அவரது ஆழமான நகைப்பைத் தவறவிடவில்லை. விடுதலை, மீட்சி என்று நாம் நம்பிய மார்க்கங்கள் அனைத்தும் என் ஜி ஓ தன்மையாக மாறியிருப்பதுதான் இந்த நூற்றாண்டு நமக்குத் தந்த பரிசு. சென்ற நூற்றாண்டின் விடுதலைக் கருத்தியல், இறக்கும்போது ஈன்றுவிட்டுப் போன சவலைக் குழந்தைதான் இந்த என்ஜிஓ ஆக்கம். புற்றுநோய்க்கு தொடு சிகிச்சை செய்ய அந்த நோயாளியின் கையைக் கேட்கும் அவலம் தான் இந்த என்ஜிஓ ஆக்கம். இடதுசாரி அரசியல் தொடங்கி சினிமா, எழுத்து வரை இந்த என் ஜி ஓ ஆக்கத்தின் ஆக்கிரமிப்பே நம்மை அனுதினமும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆக்கம் கெட்ட குழந்தையை வைத்துக் கொண்டு நம் மேல் இன்று கவிழத்துடிக்கும் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போரிடவே முடியாது. அதைத்தான் ‘தூமோர்ணையாக’ப் பார்த்து மரணத்திலும் சிரித்தபடி எழுதிச் சென்றிருக்கிறார் டி பி ராஜீவன். 


தூமோர்ணை


பொதுமருத்துவமனையின்

தீவிர சிகிச்சைப்பிரிவில்

நேற்று

யமனின் மனைவி

தூமோர்ணையைச் சந்தித்தேன்

நம்பவே முடியவில்லை

கௌரவமான, நற்குடிப்பிறப்புள்ள,

அழகான

ஒரு பெண்மணி!


’சாகவைப்பதன் அறம்’

என்னும் தலைப்பில்

மசாசுசெட்ஸிலோ

ஹார்வார்டிலோ

ஆய்வு செய்யும் காலகட்டத்தில்

அறிமுகமாகி

திருமணம் செய்துகொண்டார்

யமதர்மனை.


இப்போது

தூக்குக் கயிறு கழுத்தில் சுற்றி

துடிப்பவர்களின்

நலனுக்காக

ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார்.

தொண்டைநீர் இறங்காதவர்களுக்காக

ஒன்றோ இரண்டோ துளி குடிநீர்,

மூச்சு கிடைக்காமல் தவிப்பவர்களுக்காக

ஓருசில இழுப்புக்கான ஆக்ஸிஜன்,

அணுக்கமானவர்களை காணத்தவிப்பவர்களுக்கு

குறைந்தபட்சம் அவர்களின் சாயல்,

ஒன்றுமே பேசமுடியாதவர்களுக்காக

அவர்கள் உண்டுபண்ணும் சத்தங்களுக்கு

கேட்பவர்களுக்கு தோன்றும்

அர்த்தம்,

முதலியவை அளிப்பதுதான்

முதன்மையான சேவை.


எல்லா நாடுகளில் இருந்தும்

சேவைப்பணியாளர்களுண்டு.

அன்னிய நிதி தேவைக்கேற்ப

வந்துகொண்டிருக்கிறது.

ஆனாலென்ன,

இரவுணவுக்குப் பின்

தூங்கவேண்டுமென்றால்

அன்றாடம் கேட்டேயாகவேண்டும்

ஓர் எருமைக்கடாவின்

உறுமலை.


ஏற்கெனவே டி. பி. ராஜீவனின் கவிதையான ‘காய்கறிகளில் முயல்’ கவிதையைப் படித்திருக்கிறேன். இன்று டி. பி. ராஜீவனின் அந்தக் கவிதையைத் திரும்பப் படிக்கும்போது அது கூடுதலாக ஒளிர்கிறது. பாப்லோ நெரூதாவும் ‘தக்காளிகளுக்கு ஒரு பாடல்’ என்ற கவிதையை எழுதியிருக்கிறார். கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். திருவிழா துள்ளும் கும்மாள உணர்வை தக்காளிகளின் மேல் ஏற்றி நெரூதாவும் டி. பி. ராஜீவனும் அந்தத் தக்காளி எனும் எளிய, அத்தியாவசிய வஸ்துக்கு ஒரு நிலைபேற்றை வழங்கியிருக்கிறார்கள். 

போய் இருங்கள் டி. பி. ராஜீவன். 

காய்கறிகளில் முயல் தக்காளி என்றால் மொழி வெளிப்பாட்டு வடிவங்களில், கவிதை முயல்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. 

காய்கறிகளில் முயல்


தக்காளி கேட்டது

இன்றைக்கு என்ன குழம்பு?

சாம்பாரா அவியலா ஓலனா?

ஆடு கோழி

அயிலை சாளை

ஆகியவற்றுடன் இணைந்து

நாங்கள் இன்று

நெடுக்காகப் பிளக்கவேண்டுமா

துண்டுதுண்டாகவேண்டுமா

கத்தி

பலகையிடம்

ரகசியப்புன்னகையுடன் பேசுவதை

கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்

மேஜைமேல்

பாத்திரங்கள் அவசரப்படுவதையும்

வாணலியில்

எண்ணை துள்ளிக்குதிப்பதையும்

பார்த்துக்கொண்டிருக்கிறோம்

எங்களுக்குத்தெரியும்

இந்தச் சின்ன வெங்காயத்தை

சமையலறையில்

எவரும் சும்மா வெட்டிக்குவிப்பதில்லை

சிரிக்கும் பற்கள்தான்

கடித்துக் கிழித்து மெல்பவை

கருணைக்கிழங்கு அரிக்கும்

பாகற்காய் கசக்கும்

மிளகாய் எரியும்

பலாவுக்கு முள் உண்டு

வாழைக்காயில் கறை.

நாங்கள்

எப்போதும்

அக்கணம் பிறந்தவர்களைப்போல இருப்போம்

காய்கறிகளில்

முயல்!


Comments