Skip to main content

அமேசான் கிண்டிலில் ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’


அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் கிண்டிலில் வாங்க


‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ என்ற தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான, தொடர்புடையதுமான அனுபவங்களால் கறுத்து, கனத்த கவிதைகள் இவை. நானும் என்னைச் சுற்றிக் கட்டப்பட்ட அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்ட போது கண்ட கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் மாறான வழியில் சிதைந்து, வெறுப்பு, அச்சம், அதிகாரத்துவம் என்ற போலிக் கூரைகளால்  தாக்குப்பிடித்து, பின்னர் தன்னுடைய இடிபாடுகளை ரகசிய வழிகளோடு  காண்பித்துக் கொண்ட காட்சிகள் சில கவிதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.

காஃப்காவின் கண்கள் என்னிடம் வலுவாகப் பதியம் செய்யப்பட்டிருந்ததற்கான தடையங்கள் இந்தத் தொகுப்பைப் போல வேறு எந்தத் தொகுப்பிலும் இல்லை. ஒரு கூட்டுக்கவிதைக்காக, இளங்காலையில் என் வீட்டின் படுக்கையறைக்குள் மக்கள் கலை இலக்கியக் குழுவினர் அத்துமீறி நுழைந்து, என்னைக் கைது செய்தது போல தெருவில் இழுத்துச் சென்ற வன்முறை நிகழ்ச்சி, குற்றம் என்னவென்று அறியாமலேயே அமைப்பால் அரூபமாகக் கைது செய்யப்படும் விசாரணை நாவலின் நாயகன்  யோசப் கே.வுக்கு நடக்கும் ஒடுக்குமுறை, வெளியேயும் யாருக்கும் எதுவும் அரூபக் கரங்கள் வழியாக நடக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தின.

அரசு போன்ற பெரிய உள்கட்டமைப்புகளையும் ஆள்பலத்தையும் கொண்ட பெரிய அமைப்புகள் செலுத்தும் வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் சற்றும் குறைந்ததல்ல, அதற்கு எதிரான விழுமியங்களுக்காக இயங்குவதாகச் சொல்லும் அமைப்புகளின் வன்முறையும் அதிகாரமும் என்று புரிந்தது.

தெற்காசியப் பிராந்தியத்தைப் பொருத்தவரை கருத்தியல் என்பது வெறுப்பை போர்த்தி பயில்வதற்கான முகமூடிகள் தான் என்று அசீஸ் நந்தி சொல்வது உறுதியாகும் காலத்தில் வாழ்கிறோம். வெறுப்பு, அவதூறு, மாற்றுத் தரப்புகளை அழித்தொழிக்கும் முனைப்பை இன்று தேசபக்தி, மதவாதத்தால் தோய்ந்த புதிய கதையாடலின் வழியாக, ஆளும் வலதுசாரிகள் இன்று இங்கே பெரும்போக்காகக் கையில் எடுத்துள்ளனர்.

‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ தொகுப்பில் நண்பர்களால் மட்டுமே கவனிக்கப்பட்டு, பொது வாசகர்களிடம் கவனத்தைப் பெறாதது ‘ரிசர்வ் லைன்’.

நான் அப்போது மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் மனித உரிமை அமைப்பில் பணியாற்றி வந்தேன். ஆனால், தினசரி நான் பயணிக்கும் வழி, போலீஸ் குடியிருப்பு வழியாக. இரண்டு அமைப்புகளின் இடைவெளிகள், இரண்டு அமைப்புகளுமே கண்காணிக்க இயலாத ரகசிய இளைப்பாறல் பாதைகள், அதிகாரத்துவம் கொலுவிருக்கும் மையங்கள், ஆளுவோர் - ஆளப்படுவோர், இருவரும் உராயாமல் இருக்க, தொடர்ந்து இருக்க ஊட்டப்படும் அதிகாரத்தின், அபிலாஷைகளின் மசகு எண்ணெய் எல்லாம் சேர்ந்து இயங்கும் எந்திரத்தைப் பார்க்கும் கண்கள்  அந்தக் ரிசர்வ் லைன் கவிதையிலும் நீதிபதியின் ஒரு நாள் கவிதையிலும் துலக்கமாகத் தெரிகிறது.

மனத்தில் நாம் வைத்திருக்கும் பாகுபாடும், அனுஷ்டானங்களும், தனிப்பட்ட வெறுப்புகளும் தான் வெளியே தீண்டாமையாக, அதிகாரத்துவமாக, பார்ப்பனியமாக, ஸ்டாலினியமாக பெரும் அமைப்பாகத் திரண்டுள்ளது.

ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு ஒரு குடிமகனின் கோப்பைச் சரிபார்த்து அனுப்ப ஒரு குமாஸ்தா செய்யும் தாமதத்திலிருந்து, அசிரத்தையிலிருந்து அலட்சியத்திலிருந்து அதிகாரம் உபரியாகச் சேகரமாகத் தொடங்கித் தடிக்கின்றது. அந்தக் குமாஸ்தா சாயங்காலம் வீட்டுக்கு வந்து சாத்தான்குளம் காவல்நிலையச் சித்திரவதையால் நடந்த தந்தை, மகனின் மரணங்களுக்கு, முகநூலில் நிலைத்தகவல் இட்டுவிட்டு நிம்மதியாக உறங்கப் போகலாம்; தனது வரம்புக்குட்பட்ட இடத்தில் தான் பரிபாலனம் செய்யும் அதிகாரத்துவத்தை, அலட்சியத்தைப் பரிசீலனை செய்துபார்த்தால் மட்டுமே சாத்தான்குளம் காவல் நிலையமும் தனது மேஜையும் வேறு வேறு அல்ல என்பது அந்தக் குமாஸ்தாவுக்குத் தெரியும்.

அங்கீகரிக்கப்பட்ட குற்றம், அங்கீகரிக்கப்படாத குற்றம் என்ற இரண்டு மட்டுமே இங்கே நிலவுகிறது. அங்கீகரிக்கப்பட்ட குற்றத்தின் தரப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்கு அவசியம் இல்லை.

ரிசர்வ் லைனில் உள்ள மழைக்குட்டையில் குளித்துவிட்டு வெளியேறும் ஆடு போல, அங்கீகரிக்கப்படாத குற்றத்தின் தரப்பாக நான், இடித்து உருவாக்கப்பட்ட விரிசலின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறேன். அந்தத் தரப்பு பிரக்ஞைபூர்வமாக எழுதிய கவிதைகள் இவை.
சுந்தர ராமசாமியின் நினைவுகளுக்கும் நகுலனின் நினைவுகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இருவரும் என் மீது தாக்கம் செலுத்திய ஆசிரியர்கள், ஆளுமைகள்.

‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ தொகுப்பின் தலைப்பின் இருட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவிழ்ந்திருந்த நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. எனது ஒன்றுவிட்ட அக்காள் கணவரும் சென்னையில் ஆதரவாக இருந்தவருமான நெல்லையப்பன் அத்தானின் அகால மரணம், நேரடியாக என்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். அவரை அடையாளம் காணுதல் தொடங்கி காவல் நிலையம், மருத்துவமனை, பிணவறை, காப்பீடு பெறுவதற்கான அலைச்சல், ஆவணங்கள், நடைமுறைகளுக்காக அவரது மரணத்துடனேயே அலைந்த நாட்கள் அவை.

இந்தத் தொகுதி வெளிவந்த காலத்தில் தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது.

இந்த முன்னுரையை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் போது, எனது மனைவியின் தாயாரும் எங்களுடனேயே வசித்து வந்த எனது அத்தையும் ஒருவாரத்துக்கு முன்னர், எங்கள் வீட்டில் விட்டுப்போன காலியிடத்தைப் பார்த்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியேறத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் தான் இந்தச் சம்பவங்களையெல்லாம் மனம் சேர்த்துப் பார்க்கிறது.

'அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்' தொகுதியை வெளியிட்டவன் எனது நண்பன் சண்முக சுந்தரம். அதற்கான அட்டைப்பட ஓவியத்தைத் தந்தவர் ஓவியர் அபராஜிதன். அபராஜிதன் அறிமுகப்படுத்திய, அவருடன் அடிக்கடி கீழ்நெம்மேலி தர்ஹாவுக்குச் சென்ற நாட்களை இந்த ஊரடங்கு நாட்கள் ஏக்கமாக மாற்றுகிறது.

அமேசான் கிண்டில் வெளியீடாக வரும்  ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ தொகுதிக்குப் புதிய ஓவியத்தை அட்டையாக வடிவமைத்திருப்பவர் சண்முகம். அவரிடம் இரண்டு நாய்க்குட்டிகளை ஓவியத்தில் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் நாயின் நிழலும் நாய்தான் என்று ஊகித்திருக்கிறார். ஆமாம், நிழலும் நம்மை அச்சமூட்டும் மரணத்துக்குத் தள்ளும் ஆற்றலுள்ள உயிர்கள் தான். ஆனால், நான் இல்லாவிட்டால் நிழல்கள் பிறப்பதோ உயிர்ப்பதோ சாத்தியம் அல்ல. நான் தான் நிழல்களின் தாயகம். நான் தான் நிழல்களின் கருப்பை. அதனால் நிழல்கள் எல்லாம் என்னுடைய குழந்தைகளே.

அந்த வகையில் நான் இத்தொகுதியிலிருந்து வந்திருக்கும் தூரம் இது.
கவிஞர் இசையால் அறிமுகப்பட்டு, எனது நூல்கள் அமேசானில் வெளிவரப் பேருதவி செய்து வரும் செந்தில் குமாரை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக