Skip to main content

பிராணிகளின் உயரத்திலிருந்து



பிராணிகளின் உயரத்துக்குத் திரும்பும்
என் சிறுவயதுக் கனவை நான் நெருங்கி விட்டேன்
அந்த நிறைவையும் நிம்மதியையும்
வெகுநாட்களுக்குப் பிறகு இன்று அடைந்தேன்
வீடு திரும்பியதின் கண்களால் உலகத்தைத் தொடுகிறேன்
அதுதான் எனது கனவென்றும் எனக்கு இதுவரை தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை
எனக்கு அதைச் சொல்வதற்குத் தெரிந்துவிட்டது
அதை உங்களுக்கு உடனடியாகச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

எனது பிரவுனியின் குரைப்பில்
கோடி குணவடிவங்களை உணர்ந்தபோது
அதில் ஒன்றுகூட என்னைப் பிரதிபலிக்காத சோகத்தில்
துவங்கியது
அகவல் பிளிறல் கூவல்களின்
பேதக்காட்டுக்குள்
எனது வரவு.

நானும் நீங்களும் அல்லாத உயிர்கள்
நம்மைவிடச்
சற்றே குள்ளமாகவோ
சற்றே உயரமாகவோ
இருக்கின்றனர்
அதனால்
நாம்
முகராததை கேட்காததை காணாததைக்
அவர்கள் கேட்கிறார்கள்
அவர்களும் நேசிக்கிறார்கள்

ஆனால் அவர்கள் கையில் ரோஜாவோ பரிசுகளோ வைர மணி ஆரங்களோ
மினுமினுக்கும் அன்போ நமது மொழியோ இல்லை
மேல்கோட்டுகள்
பட்டுச் சேலைகள்
வடிவமைக்கப்பட்ட முகக்கவசங்களை
தருவித்து அணிவதில்லை
ரத்து செய்யக்கோரி
கூடுதல் பணிசெய்யும் நீதிமன்றங்களிலும்
அவர்கள் குவிவதில்லை

அவர்களும் நேசிக்கிறார்கள்
யுத்தங்களின் போது விளையாட்டையும்
புணர்ச்சியின் போது மரணத்தையும்
சலிக்கும்போது விடுதலையையும்
எமக்கு
ஞாபகப்படுத்தியபடி.

புலரும் காலைகளில் ஆள்நடமாட்டம் தொடங்காத
வீதிகள் வழியாக வானங்களிலிருந்து
அவர்கள்
தங்கள் உயரத்திலிருந்துதான் இறங்குகின்றனர்
எமது வீடுகளை நோக்கி
எம்மை நோக்கி வருகின்றனர்


நாம் பராமரிக்கும் விரிசலுற்ற கோட்டைகளை
பழுதான பூட்டுகளை
நீரற்றுத் தூர்ந்து போன அகழிகளை
இரண்டுக்குக் குறைந்த
இரண்டுக்குச் சற்றே அதிகமான கால்களால்
அவர்கள் முற்றுகையிடுகிறார்கள்
எமது வீடுகளில் வீடு அல்லாத ஒன்றை நோக்கி
எமது மனிதர்களில் மனிதர் அல்லாத ஒன்றைக் கண்டு
எமது அன்பில் அன்பு அல்லாத ஒன்றைக் கருதி
அவர்கள் நெடுங்காலமாக
தமது உயரங்களிலிருந்து
தான்
இறைஞ்சிக் குரைத்துக் குழைகிறார்கள்
நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்த இரண்டு கால்களால்
நமது உயரத்திலிருந்து
மிகத் திட்டமாக
மிகத் தவறாக
அவர்களை நாம் மொழிபெயர்க்கத் தொடங்கினோம்.

(நேசத்துக்குரிய வே. நி. சூர்யாவுக்கு)

Comments

shabda said…
அன்பாக உணர்கிறேன்