Skip to main content

பேசத்தான் வேண்டும்இன்று மாலை இருளும் வேளை, கட்டிடத்தின் மேல், சதுரவிளம்பில் அமர்ந்திருக்கும் காகங்களைக் கழிப்பறை ஜன்னலிலிருந்து பார்க்கிறேன். காகங்கள் கருநிழற்படங்களாக இருளில் சீக்கிரம் மறையப்போகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் மறையப்போகும் காகத்தின் சாராம்சம் என்ன?

எனது அன்றாட ரயில்பயணங்களின்போது, என்னோடு பயணிக்கும் யுவதிகள், நடுஇரவிலும் பேருந்துகளில் நம்பிக்கையை நோக்கிப் புன்னகைக்கும் குழந்தைகள், அனுபவச்சுருக்கங்கள் உலர்ந்திருக்கும் முதியவர்கள்... என்று என்னைச் சுற்றி உயிர் துடிகொள்கிறது. என் ஆசைகள், வாதைகள் மற்றும் களைப்பு மிகுந்த எனது காமம், நான் மேற்சொன்ன எதிலுமே எனக்குப் பங்கு இல்லை. நான் சில உணர்வுகளை வார்த்தைகளாகச் சுமக்க முயற்சிக்கிறேன். தவிர வார்த்தைகளோடும் எனக்கு உண்மையில் தொடர்பில்லை.

நான் சலித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவும் உணரவும் நேர்ந்த மௌனத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. எனது முந்தைய கவிதைகளில் உள்ள புதிய ஒளித்தன்மையை இக்கவிதைகளில் வாசகன் காணமுடியாது. 

அகாலத்தில் மரணமுற்ற காதலியின் சடலத்தைக் காணும் காதலனுக்கு அவள் சடலத்தில் மிஞ்சியிருக்கும் அவனிட்ட முத்தத்தின் அழகும் காதலும், அவள் உயிர்க்கோலத்தின் ஒருகணத் தோற்றம் உறைந்திருப்பதைப் போன்ற உணர்நிலையில், நான் இக்கவிதைகளைக் கடந்தேன்.

எனது நிலவெளிகளும் என்னோடு இறந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். எனது நிலப்பகுதிகள் நான் தொடர்புகொண்டிருக்கும் மனிதர்களோடு தொடர்புடையது. அவர்கள் இறந்தவுடன் அந்த நிலங்களும் மரித்துப்போய்விட்டன. சுந்தர ராமசாமி இறந்தவுடன் நாகர்கோவில் நிலப்பகுதிகள் வெறும் ஞாபகங்களாக இறந்துவிட்டன. அவரைச் சந்தித்த பொழுதுகளில், அவர் வீட்டின் முன்முற்றத்தில் மழைப்பருவத்தில் ஒளிர்ந்திருக்கும் வாழைக்கன்றைப் போல நான் இருந்தேன். 

இப்போதும் நெரிசலான தியாகராய நகர் பகுதி நடுவில் இருக்கும் மைதானத்தைப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியுடன் எஸ்.எல்.பி. மைதானத்தில் உடன் இருக்கும் ஞாபகம்தான் எனக்கு மீந்திருக்கிறது.

சாயங்காலத்தின் ஒளிவேறுபாடுகளுடன், இருட்டுக்குள் நுழையும் செம்மண் மைதானம் கொள்ளும் கோலங்களை அவரின் கண் வழியாகவே பார்க்கிறேன். விளையாடப்படாத வெற்று மைதானத்தையும், கூட்டுணர்வில் உயிர்கொள்ளும் ஒருமையில் விளையாடப்படும் மைதானத்தையும் சுந்தர ராமசாமி அலுக்காமல் எழுதியுள்ளார். அவர் நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது தன் மைதானத்தை வெளியே விரித்தார். விளையாடப்படாதபோது மைதானம் கொள்ளும் தனிமையை அவர் நெஞ்சுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வாழ்வதற்கான நம்பிக்கை மிகுந்த நிலமாய், சுந்தர ராமசாமி என்னை ஆகர்ஷித்திருந்தார் எனச் சொல்லும்போது, குற்றமும் மரணமும் புறக்கணிப்பும் சூழ்ந்த இரவுகளின் பல்வேறு ரூபங்களை லக்ஷ்மி மணிவண்ணன்தான் எனக்குக் காட்டினார் என்பதையும் நான் பேச வேண்டும்.

கொலை வன்மமும், துடிக்கும் காதலும் வெறுமை நிலையும் ஒருங்கே கொண்ட அவர் அறிமுகப்படுத்திய, அதீத இயல்பின் இரவுப்பேய்கள் எனது முதிரா மனஇயல்பிலேயே பெரும் அலைக்கழிப்பையும் விநோத நிலைகளையும் எனக்குத் தந்தவை. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் இரவில் மதுரையிலிருந்து கிளம்பி நாகர்கோயில் வந்து இறங்கினேன். லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டிற்குப் போனவுடன் நான் வந்த உற்சாகத்தில் உடனே தூக்கம் விழித்தார். கோழிகள் வீட்டுத்தோட்டத்தில் மேயத்தொடங்கும் சலசலப்பைக் கேட்டபடியே அவர் வீட்டை அப்போது நான் கவனிக்கிறேன். அவர் வீடும் அவரும் சேர்ந்து தொடர்ந்து புராதனம் அடையும் தோற்றம். வீடு என்று சொல்வது கூட ஒரு சம்பிரதாயம்தான். அவர் ஆளுமையோடு சேர்ந்து அதன் இடிபாடுகளுடனும் சேர்ந்து இரவில் கிளைக்கும் வழிகள் கொண்டதாய் அவர் அந்த இடத்தை மாற்றி வருகிறார்.

நான் அவரைச் சங்குத்துறை கடற்கரைக்குப் போகலாம் என்று அழைத்தேன். அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டார். அவருக்குக் குடை போன்ற துணை எப்போதும் தேவை. ஆனால் அவர் குடையைப் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. இருள் முழுமையாகப் பிரிவதற்குள்ளாகவே கடலுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது எனது பதற்றமாய் இருந்தது.

நாங்கள் கடந்த தென்னை விளைகளை மெதுவாகப் புலர வைத்தபடி எங்களுக்கிடையே பகைமையின் மூட்டங்களை இயல்பாகத் தகர்த்தபடியேபேசிக்கொண்டு சங்குத்துறை கடற்கரையை அடைந்தோம்.

லக்ஷ்மி மணிவண்ணன் தன் பெண் நண்பருக்காக ஒரு வாளைப் பரிசளிக்க விரும்பி ஒரு விழாவை ஒருங்கிணைத்திருந்தார். அந்த விழாவுக்குச் செல்வதை நான் தவிர்த்திருந்தேன். அந்த விழாவுக்கு அவர் வரவில்லை. மணிவண்ணன் வீட்டிலிருந்து அந்த வாள் ஓர் இரவில் காணாமல் போனது. அந்த வாள் காணாமல் போன அன்றைக்கு மறுநாள், நான் மணிவண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்.

ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் அந்த வாளின் உடைந்த வடிவங்களைக் கண்டெடுத்தோம். மணிவண்ணனும் நானும் அந்த உடைந்த வடிவங்களைப் பழைய உலோகக் கடையில் போட்டு 'ரம்' வாங்கி அருந்தினோம். மணிவண்ணன் வாளோடு இருக்கும் தருணங்களில் நான் பதுங்கி இருக்கிறேன். வாள் மறைந்த தருணங்களில் பரிசுத்தமான விருப்பத்துடன் கடலின் பின்னணியில் உள்ள அவர் வீடு அடைகிறேன்.

***
அந்தரத்தில் பறந்ததொரு
பறவை
ஒரு முறை பார்த்த பின்னர்
இருமுறை கண்டேன்
என்று சொல்வதுண்டா?
                     - நகுலன்


நகுலனை இருமுறைதான் நான் பார்த்திருக்கிறேன். மூன்று முறை பார்த்ததாக மனம் சொல்லச் சொல்கிறது. நகுலனின் விஷயத்தில் அந்தப் பிறழ்ச்சி அழகானதும்கூட. 

மனிதன் ஒரு சாராம்சம், அவனது அத்தனை செயல்களுக்கும் அவனே பொறுப்பு என்ற நவீனத்துவ நம்பிக்கைகளைக் குலைத்துப்போட்டவர் அவர். மனிதனை ஒரு வகையில் இயற்கையின் மங்கிய சாயலாக, சலித்து உதிர்ந்து விரையும் பிராணிகள், பறவைகளாக அதன் வழியே நிழல்கள் பிரதிபலித்துச் செல்லும் நகல்களின் நினைவு ஆறாகப் புத்தகங்களையும் எழுத்துப்பிரதிகளையும் கூடக் கலைத்துப் போட்டு விடுவித்தவர் அவர்தான்.
வெளியில் உள்ள பொதுவாழ்வு கோரும் செயலுக்கு எதிராக 9 இயங்கும் மனம், செயல் அற்ற பாவத்தில் நகுலனின் படைப்பில் தோற்றம் அளிக்கிறது. சுரீரெனும் விபரீத அழகுடன், காமத்தின் உயிர்த்தன்மை பரபரக்க இந்த உலகம் ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிவிக்கும் படைப்புகள் அவை. இந்தக் கோணத்திலிருந்துதான் செயல் என்பதன் மீதும் வெற்றி என்பதன் மீதும் அவை தம் பெரும் கண்டனத்தை எழுதிச்சென்றுள்ளன.

வாழ்வு என்ற செயல்ரூபத்தை அவர் முழுமையாக குருக்ஷேத்திரமாகவே கண்டு அச்சப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் குருக்ஷேத்திர யுத்தம் தொடங்குவதற்கு முன்பே அதன் எல்லையில் முதலில் தயார் ஆவது மயானங்கள் தான்.

நகுலனைப் போதத்துடன் படிக்கத் தொடங்கியது 'நினைவுப்பாதை' மூலம்தான். அந்த அனுபவத்தை நான் இப்போது உருப்பெடுத்த முயல்கிறேன். கோயம்புத்தூரில் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது அதன் கடைசிப் பக்கங்களைப் படித்து முடித்தேன். நவீனன் மனநோய் விடுதியில் இருக்கும்போது நடக்கும் மனப்பித்தின் உக்கிரமான பேச்சுகளால் ஆன பகுதி அது.

எப்போதும் பதற்றத்துக்குக் கொந்தளித்த நிலையில் இருக்கும் என் மனம் ஓர் அனாதை நிலையை உணர்ந்த தருணம் அது. இதேபோன்ற அநாதை நிலைகள், ஏற்கெனவே பலமுறை நான் உணர்ந்தவைதான். ஆனால் மனம் என்ற ஒன்று உள்ள அனைவரின் நிலையும் இதுதான் என்று 'நினைவுப்பாதை' நாவல்தான் எனக்கு முதலில் புலப்படுத்தியது. நான் அழவில்லை. ஆனால் நான் கனத்துப்போய் உணர்ந்தேன். அப்போது இருபக்கமும் பெருமரங்களின் நிழலில் பேருந்து நண்பகலில் சென்று கொண்டிருக்கும் காட்சியும் சாலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த வெயில் காட்சியும் இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது.

அதற்குப் பின்பான ஒரு தருணத்தில் சுந்தர ராமசாமியைச் சென்னையில் உள்ள ஓட்டல் பாம்குரோவின் அறையில் தளவாயுடன் சந்தித்தபோது 'நினைவுப்பாதை' குறித்து உவகையுடன் தர்க்க ஒழுங்கின்றி, எனது கண்டுபிடிப்பு என்பதுபோல் படபடவென்று பேசினேன். அவர் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

'இப்படி அவரைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறீர்கள். ஆனால் அவர் பற்றிப் பொருட்படுத்தும்படியாக மலையாளத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு கட்டுரை கூடத் தமிழில் இல்லை' என்று கோபமாகக் குறிப்பிட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் என்ன உணர்த்த வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

இப்போது புரிகிறது. நான் இப்போது மானசீகமாக சுந்தர ராமசாமியிடம் சொல்லிக்கொள்ள முடியும். நகுலனைப் பற்றிப் பொருட்படுத்தத்தக்க இரண்டு கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன். ஒரு பயணத்துக்கு ஊக்கமாக வழிச் சீட்டுகளைச் சந்தர்ப்பங்களாகத் தந்தவர்கள் என்பதால் தளவாய் சுந்தரத்துக்கும், மனுஷ்ய புத்திரனுக்கும் எனது நன்றி.
கடந்த மூன்று வருடங்களில் நகுலனின் படைப்புகளைச் சாட்சிபூர்வமாகத் தொடரும் எனது கவிதைகளின் மீது அவர் நிழல் படர்ந்துள்ளது. அவர் இறந்துபோன செய்தி வந்து பத்து நாட்கள் இருக்கலாம். மதுரையில் என் அலுவலக விடுதி அறையில் ஒரு காலி நோட்டுக்கு முன் ஒரு சாயங்காலம் செயலற்று அமர்ந்திருந்தேன். நகுலன் என்னுள் ஊடுருவிய உணர்வு ஏற்பட்டது. அவரது மொழியில் இருந்து, அவர் சாயலில் என்னால் ஒரு கவிதை எழுதப்பட்டது. அந்தக் கவிதைதான் 'சொற்புணர்ச்சி'. இந்தக் கவிதையை எழுதும்போது என் உடல் ஒரு பஞ்சு நிலையை எட்டியிருந்தது. என் எளிய எழுத்துச் செயலில் மிகவும் நினைவுகூரத்தக்க மாயமான நிகழ்வு என்று அதை எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் சில இடங்களில், அவர் எழுத்தின் சப்த ஞாபகங்கள் பிரக்ஞையுடன் இடம்பெற்றுள்ளன. 

நகுலனை இரண்டாம் தடவை பார்க்கும்போது அவரது முழுமையான படைப்புகளையும் நான் வாசித்திருந்தேன். அவர் படைப்புகளின் வினோத ஒளித்தன்மையுள்ள நடுச்சாமப் பொழுதில் நானும் கவிஞர் விக்கிரமாதித்யனும் கடும் மழையை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர் வீட்டில் வந்து இறங்கினோம். கதவைத் தட்டினோம். அந்த இரவிலும் ஜன்னல் வழியாக விக்கிரமாதித்யனைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கதவைத் திறந்தார். இது இயல்புதான் என்பது போல் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. அவரது அறையில் உள்ள பல்புஒளி வீட்டைச் சுற்றி நனைந்து கொண்டிருக்கும் வாழைமர இலைகளின் மேல் எண்ணெய் போல் வழிந்தோட, இலைகள் தடதடவென்று துடிக்கும் சப்தத்தில், நகுலன் கிளாஸ்களை எடுத்து வந்தார். நாங்கள் மிச்சமிருக்கும் ரம்மை அவருடன் பகிர்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கினோம். அந்த இரவு ஈரத்தால் ஆனது.

நீக்கமற விரிந்திருக்கும் மரண போதத்தின் நிச்சயப் பின்னணியில் இலையின் பச்சையும் கிளியின் பச்சையும் கன்னிமையின் ஒளிப்பச்சையும் உயிர்த்துடிப்புடன் நகுலன் வழியாகச் சொல்ல முயற்சிப்பதை நாம் கேட்கவேண்டும்.

***
மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் எனக்குத் தோதாக வேலை எதுவும் அமையாமல் ஆறு மாதங்கள் வெறுமனே கழிந்தன. நண்பர் கார்மல் உதவியால் மதுரையில் உள்ள 'மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமைகள் தொண்டு நிறுவன அமைப்பின் பதிப்பக வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறந்து ஏழு மாதங்கள் மட்டுமே பூர்த்தியடைந்திருந்த மகள் வினோதாவின் பூ உடல் மென்மையின் ஞாபகம் என் உடலில் எப்போதும் மீந்திருக்க பிரிவின் துயருடனும் உடல் நழுவும் பிரக்ஞையுடனும் நான் சென்னைக்கும் மதுரைக்கும் வந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவள் அணிவது போன்ற உடைகளைப் பார்க்கும்போது அவளாகத் தெரிந்தாள். அவள் செருப்புகளைப் போன்ற சின்ன செருப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் அவளாகத் தெரிந்தாள். இப்போது சொல்லத் தோன்றுகிறது. எப்போது தந்தையாகிறோமோ அப்போதிலிருந்து நாம் திருதராஷ்டிரர்கள் ஆகிவிடுகிறோம். அவளுக்கான கவிதைகள் இத்தொகுப்பில் என் வரையில் விசேஷ அர்த்தம் பொருந்தியவை.

மதுரை என்ற நகரம் எனக்கு எப்போதும் ஒவ்வாமையையும் வெறுமையையும் தெரிவிக்கும் இடமாகவே இன்றுவரை இருக்கிறது. தமிழகத்தின் உள்ள பின்நவீனத்துவ லட்சணங்கள் கொண்ட ஓர் ஊர் அது. பெருமிதத்தின் வேறு காலத்திய மதிப்புகளுடன், தன்மிதப்பின் ஒரு நகலாக 'ஃப்ளக்ஸ்' தட்டிகளாக வெறுமனே இன்றைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஊர் அது. அங்கு நிகழ்காலம் இல்லை. அதனுடன் தொடர்பற்ற ஒரு கனவிலிருந்து இலக்கற்ற காமமும் இலக்கற்ற அதிகாரமும் இறந்த சுவர்களின் மீது சுவரொட்டிகளாக அங்கு ஒட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

காமம் புரோட்டாவாக, அதிகாரம் தொண்டாக, ஜிகர்தண்டா கொலைகளாக மாற்றம் அடையும் ஊர் அது. பின்நவீனத்துவக் கலைக்கு இணக்க வடிவமான அதன் கலாச்சாரமும் மௌனமும் ஆசைகளும் தமிழில் பேசத் தொடங்கியிருப்பது யதேச்சையானது அல்ல.

மதுரையின் மோனத்தினூடாகக் கால்கள் கொண்டு நடந்தும், மூக்கின் வழியாக முகர்ந்தும், வாய் வழியாகச் சுவைத்தும் பார்த்துள்ளேன். சுந்தர ராமசாமி, சி.மோகன் போன்றவர்கள் பேசியதன் வழியாய் அது ஜி. நாகராஜனின் மதுரை. முருகபூபதி சொல்லியதன் வழியாய்ப் பழைய நாடகக்காரர்கள் அலைந்த மதுரை. பழங்கதைகள் உரைத்ததன் வழியாய்ப் பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கசையடி வாங்கிய மதுரை. திருவாதவூர் நரிகளைப் பரிகளாய் மாற்றிப் பிறகு திரும்பவும் நரிகளாக்கி விடைபெற்ற மதுரை, தப்பிப்போன நரிகளின் இன்னமும் ஒலிக்கும் ஊளைதான் அதன் ஊழ் போலும்.

மதுரையின் ரூபங்களை உடலில் கொண்டிருக்கும் கோணங்கியும் முருகபூபதியும் அவ்வப்போது வரும்போது மதுரை என்னிடம் சிறிது உயிர்ப்பு கொண்டுள்ளது. கோணங்கியும் முருகபூபதியும் அங்குதான் எனக்கு 'இவான் ரூல்போ'வை அறிமுகப்படுத்தினார்கள். அவரது எரியும் சமவெளி நிலபரப்பைப் புரிந்துகொள்வதற்கு மதுரையைவிடத் தோதான நில, மனப்பரப்பு ஏதுமில்லை. சலித்த துயரத்துக்கு வெற்று மணலின் நிறைதான் இருக்கும். அங்கே மணிதர்கள் கூட ஆவிகள்தான் என்று உணர்த்தும் 'இவான் ரூல்போ'வின் படைப்புலகை மதுரை வந்திருக்காவிட்டால் இனம் கண்டிருக்கவே முடிந்திருக்காது.

***


நித்தயத்தோடு நிச்சயமற்ற தன் இருப்பை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஆசை படைக்கிறவனுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவன் நித்தியமான படிமங்களோடு தொடர்ந்து உரையாடுபவனாய் இருக்கிறான். அவ்வகையில் கவிதையோடு தொடர்புடைய எப்போதுமான படிமங்கள் இந்தத் தொகுப்பில் வெறும் படங்களாகச் சேராமல் அவற்றின் அர்த்த கர்ப்பத்தோடு வந்து சேர்ந்துள்ளன. அந்த வகையில் எனது நான்காவது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எனக்கு ஒருவகை நிறைவை அளிக்கின்றன. நிலவு, மலர்கள், கடல் போன்ற நித்தியமான படிமங்கள் இயல்பாக இக்கவிதைகளுடன் இருப்பது எனக்குச் சிறிய மனத்திருப்தியை அளிக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நான் தினமும் பயணம் செய்ய நேர்ந்த பறக்கும் ரயில் எனக்கு விநோதமான கிளர்ச்சியைத் தீராமல் ஏற்படுத்தியது. பறக்கும் ரயிலிலிருந்து நகரத்தை ஒரு நூல் பட்டத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதும், பறக்கும் ரயில் நிலையங்களின் அலாதித்தன்மையும் மர்மமும் என்னை வெகுவாக ஈர்த்துவருகின்றன. நடுவில் நான் இதுவரை பார்த்திராத கல்லறைத் தோட்டங்களையும் மரணத்தின் போதமற்று அதில் விளையாடும் சிறுவர்களையும் பறக்கும் ரயில்தான் எனக்கு அறிமுகப்படுத்தியது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பறக்கும் ரயில் நிலையம் இருப்பதால் ரயிலும் ரயில் நிலையமும் விநோதாவுக்கும் எனக்கும் பொதுவான நேசவெளி ஆகிவிட்டது. அவளது பிராயத்தில் அவளுக்கு நான் தந்த முக்கியமான பரிசு இந்த பறக்கும் ரயிலாகத்தான் இருக்கும். 

ஊருக்குள் சென்றாலும் தனியாகவே தெரியும் ரயிலும் பிரிந்து விலகி இணைகோடுகளாய் அடிவானம் வரை செல்லும் ரயில் பாதைகளும் நமக்கு எதை எதையோ உணர்த்தும் வல்லமை கொண்டவை. இன்றைய மனித இருப்பை ஒரு ரயில் நிலையத்தைவிட எதுவும் தெரிவித்துவிட முடியாது என்று நான் நம்புகிறேன்.

இந்தத் தன்னுரையில் மரணப் பிரக்ஞை அதீதமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. ஆமாம், இதன் கவிதைகளூடாகவும்தான் ஆனால் நான் அந்தக் கடலைக் கடைந்துதான் ஒரு குவளை அமிர்தத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.

அந்த போதத்திலிருந்துதான் நித்தியத்துக்குள் தங்களை விட்டுச்சென்றுள்ள எழுத்தாளர்கள் நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

நான் பேச வேண்டும்... பாலைவனப் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது அடித்த மணற்புயலைப் பற்றி... பாலைவனத்தில் அரிதாக அன்று பெய்த மழையைப் பற்றி சாலையின் பக்கவாட்டில் உயரத் தொடங்கும் மணற்குன்றில் குத்துச்செடிகளைப் போல கூட்டம் கூட்டமாக நின்று முதுகின் மேல் மழை பூக்கத் தியானித்திருந்த ஒட்டகங்கள் பற்றி... என் கவிதையில் அவற்றைச் சொல்ல முடியாமல் போனது பற்றி... தேச எல்லைகள் என்றும் தெரியாமல் தேசம் கடந்து அஸ்தமனத்திற்குள் விரையும் கருங்குருவிகள் கூட்டம் பற்றி... நான் பேசவேண்டும்...

(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள், 2009 முன்னுரை)

Comments

Saravana Raja said…
//நான் சில உணர்வுகளை வார்த்தைகளாகச் சுமக்க முயற்சிக்கிறேன். தவிர வார்த்தைகளோடும் எனக்கு உண்மையில் தொடர்பில்லை.//

//நான் சலித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவும் உணரவும் நேர்ந்த மௌனத்திலிருந்து//

பாசாங்கற்ற வெளிப்பாடுகளை காணும் வேளைகளில், பாராட்டுவதா, மௌனமாய் தோள் தட்டி நிற்பதா எனப் புரிவதில்லை.