கவிதைக்கும் உண்மைக்குமான தொடர்பில் பேசும்போது, கூடுமானவரை எதிர்நிலையில் ‘பொய்’ என்ற சொல்லைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். உண்மை, உண்மை அல்லாதது என்ற அளவிலேயே பேசுவதற்கு முயற்சி செய்கிறேன்.
உண்மை, மெய்ப்பொருள் என்று பேசும்போதெல்லாம் அகிரா குரசோவாவின் ரஷோமான் படைப்பு ஞாபகத்துக்கு வராமல் போகாது. ஒரு கொலை நிகழ்ச்சி வேறு வேறு நபர்களின் பார்வையில் வேறு வேறு கதைகளாக மாறுகிறது ரஷோமானில். உண்மை என்ற ஒன்று சாத்தியமே இல்லை; அவரவர் அனுபவம், தன்னிலை, சார்பு, தன் அனுகூலத்தால் உண்மை மூடப்பட்டுள்ளது என்று நம்மைக் கைவிட்டுவிடும் நிலைக்கு அகிரா குரசோவா செல்கிறார். இறுதியில் கிட்டத்தட்ட உண்மைக்குப் பக்கத்தில் நெருங்கும் விறகுவெட்டி கதாபாத்திரம் தான், அநாதையாக விடப்பட்ட குழந்தையை எடுத்துச் செல்கிறான். அவரவர் சுயநலங்களால் மட்டுமே நிகழும் உலகில், அவரவர் சுயநலங்களால் பங்கப்பட்டு நிற்கிறது உண்மையும். இந்த அவநம்பிக்கை வாய்ந்த சூழலில்தான், உண்மை அல்லாததை உண்மையென்று உரைத்துக் கொண்டிருந்த அந்தக் கதாபாத்திரங்கள் மழைக்கு ஒதுங்கியிருந்த பாழ் மண்டபத்தில் தான், அநாதையாக விடப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. விறகுவெட்டி, தன் வீட்டுக்கு வளர்க்க எடுத்துச் செல்லும் குழந்தையைப் போலத்தான் உண்மை இந்த உலகில் புதுப்பிக்கப்படுகிறது. அந்தக் குழந்தைதான் உண்மை.
உண்மையல்லாததால் நிறைந்த நாம், உண்மை என்ற குழந்தையை ஜனிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். உண்மையல்லாத ஒன்றிலிருந்து உண்மையைப் பார்க்கும் அந்தக் குழந்தையை நெருங்கிப் பார்க்கும் அதிகபட்ச சாத்தியமுள்ள கலைகளில் ஒன்று கவிதை.
அழகுக்குப் பக்கத்தில், இன்பத்துக்குப் பக்கத்தில், நிலையாமைக்குப் பக்கத்தில், துக்கத்துக்குப் பக்கத்தில், உண்மைக்குப் பக்கத்தில் அதனால் புத்தனுக்குப் பக்கத்தில் எப்போதும் கலையும் கவிதையும் இருக்கிறது.
நிலக்கரி சுரங்கங்களும், அதன் ஆழ இருட்டில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் மனிதர்களும் நூற்றாண்டுகளாக இருக்கின்றனர். அவர்களது துயரம், அவர்களது பசி, அடிப்படை வசதிகளோ அவை தரும் நம்பிக்கையின் வெளிச்சமோ இல்லாத அவர்கள் இருப்பிடங்களின் சாம்பல் தன்மையைத் தாண்டி அவர்கள் முகத்தில் பெருகும் சீவத்துவத்தின் உண்மையை கருப்பு அடர்ந்த கோடுகளில் நெருங்கியவன் வான்கோ ஒருவன்தான். உருளைக்கிழங்கு உண்பவர்கள் ஓவியத்தைப் பார்க்கும்போது வான்கோவிடம் மண்ணோடு உழலும் மனிதர்களின் எளிமையுடன் அவர்களின் துயரத்துடன் அடையாளம் காணும் கிறிஸ்துவைக் காண்கிறோம்.
அழகை அழகென்று உணரத்தொடங்கி அதைப் பாராட்டத் தொடங்கும்போது இறங்கத் தொடங்குகிறோம். அந்த முழுமையில் அழகென உணர்ந்ததை, மொழிப்படுத்தும்போது, அது இல்லாமல் போகிறது. இதுவரை அறியப்பட்டதும் இல்லாமல் போகிறது.
அழகைக் காணும்போதெல்லாம் பூரித்து அவளாய் நிற்கும் மலரைக் காணும் கணம்தோறும் பூமி தவிர வேறு கிரகங்களிலிருந்து வந்தது அவளின் கண்களைக் காணும்போதெல்லாம் நான் ஏன் இனிய மரணத்தை அடைகிறேன். பழைய ரயில் தான். பழைய கார் தான். பழைய தென்னைமரம் தான். ஆற்றலைப் பொதிந்து நான் எடுத்து விளையாடுவதற்காகத் தரையில் காத்திருக்கும் கிரிக்கெட் பந்து பழையதுதான். ஆனால், அவை அந்தக் கணத்தில் பழையதும் பழைய அறிவினுடையதும் அல்ல. அவை வெறுமனே வஸ்துக்களும் இல்லை.
அந்த உண்மைக் கணத்திலேயே கவிஞன் பிறக்கிறான். அதுவரை அறியப்பட்டபொருள்களும் அதன் பொருளும் இல்லாமல் போகிறது என்று அதையே உரைக்கிறார், பொருளின் பொருள் கவிதையில் அரங்கநாதன். அதை நான், பொருளின் புதுப்பொருள் கவிதை என்று இன்னமும் அழுத்தி என்னிடம் தக்கவைத்துக் கொள்கிறேன்.
எண்ணங்கள் அற்ற ஒரு தற்காலிக நிலை அது. கவிஞன் அந்த தற்காலிக ஆனந்த நிலையிலிருந்து மீண்டும் எண்ணங்கள் சூழ்ந்த வேதனை நிலைக்கு, எதார்த்தத்துக்கு இறங்குகிறான். எண்ணங்கள் அற்றுப் பறந்த அந்த தற்காலிக நிலைக்கும் வேதனை சூழ்ந்த நிலைக்கும் இடையிலான நிலையைத் தான் அவன் மொழிபெயர்க்கத் தொடங்குகிறான் என்கிறார் மா. அரங்கநாதன். கவிஞனும், அவன் ஒருகணம் தான் வாழ்ந்தாலும் தான் வாழ்ந்த வாழ்க்கை எது என்று நிலவைச் சுட்டுவது போலச் சுட்டிக் காட்டுகிறான். கவிஞன் அழகை, அழகு சார்ந்த அனுபவத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு ஒப்பத்தான் உண்மையை, உண்மை சார்ந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.
மா. அரங்கநாதன் உரைநடையில் சொல்வதன் அனுபவத்தைக் கவிதையில் ஆத்மாநாம் நிகழ்த்தியிருக்கிறார்.
தாள்கள் படபடக்க
எழுத்துக்கள் வார்த்தைகளாகி
வார்த்தைகள் வாக்கியங்களாகி
பொருள் கிடைத்தது
பொருள் கிடைத்தவுடன்
உலகம் நாசமாகி
புதியதாய்த் தெரிந்தது ஒரு உலகம்
பொருள் கிடைத்ததோ ஒருகணம்தான்
அந்தக் கணமும் கைநழுவிப் போகப்
பார்த்த பழைய உலகத்தையே
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
தாள்கள் படபடக்க.
உண்மை புதியது அல்ல. அது ஒரு வனத்துக்குள் நிற்கும் பாறைபோல, ஒரு வீட்டு வாசலில் கிடக்கும் பயன்படுத்தப்படாத உரலைப் போல, பார்க்கப்படாமல் எப்போதைக்குமாக கிடக்கிறது. ஆனால், அந்தக் கல்லைத் துலக்கும் மழை போல உண்மையைக் கவிதை துலக்குகிறது.
வெனிஸ் நகரத்து வணிகன் படைப்பில் ஷேக்ஸ்பியர் தனது கவிதையால் இப்படித்தான் உண்மையைத் துலக்குகிறார். கடனைச் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போகும் அண்டோனியா பத்திரத்தில் எழுதிக் கொடுத்தபடி அவனது சதையைக் கேட்கிறான் வட்டிக்காரன் ஷைலக். அக்காலத்தில், அது அந்தச் சமூகத்தில் சட்டப்படி நியாயம்தான். ஆனால், அது தர்மமோ நீதியோ அல்ல என்கிறார் ஷேக்ஸ்பியர். தன் கவிதை வாயிலாகத்தான் உண்மையைப் புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் செய்கிறார். அவரது கவிதை அம்சமே ஒரு பழைய உண்மையை இன்றைக்குமான தார்மீக நினைவூட்டலாக மாற்றுகிறது.
யாரும் கருணையைக் காண்பிக்க வேண்டுமென்பதற்காக கருணையைக்காண்பிப்பதில்லை. கருணை தன் இயல்பில் நிகழ்கிறது. மழைத் துளிகள் பூமியில் விழுவது போல. கருணை என்பது இரட்டை ஆசீர்வாதம். அளிப்பவன், பெறுபவன் இரண்டு பேரையும் கருணை ஆசிர்வதிக்கிறது. அது வலுவானவனிடம் இருக்கும் பெருவலிமை.
குலமரபுக் காலகட்டத்திலும் சரி, ஜனநாயகக் காலகட்டத்திலும் சரி நீதிக்கும் கருணைக்குமான வரையறை நித்தியமானதென்றாலும் ஷேக்ஸ்பியர் தனது கவிதை வழியாகவே அந்த உண்மையைப் புதுப்பிக்கிறார்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
உணவுக்காக ஒருவன் பிச்சையெடுக்க வேண்டுமானால் இறைவனாக இருந்தாலும் அலைந்து சிதைந்து அழியட்டும் என்ற திருவள்ளுவரின் குரலும் கவிதை வழியாகவே ஒரு உண்மையைத் தொடுகிறது. இந்தக் குரலின் எதிரொலியைத் தான் பாரதியில் சென்ற நூற்றாண்டில் கேட்கிறோம்.
000
புதுக்கவிதை, வேறு பசி, வேறு பிச்சையைப் பற்றிப் பேசுகிறது. பசியை அந்தக் காலித்தன்மையை, படைப்பூக்கம் மிகுந்த கருப்பையாக தேவதச்சனும் ஆத்மாநாமும் இன்னொரு திசையிலிருந்து பார்க்கிறார்கள். அவை இணையுண்மைகள்.
பிச்சை
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை
எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்
உன் பசிக்கான உணவு
சில அரிசிமணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர
இதனைச் சொல்வது
நான் இல்லை நீதான்
என்கிறார் ஆத்மாநாம்.
000
சோற்றால் பசியை ஜெயிக்கணும்
என்றால்
சோற்றைப் பசியால் ஜெயிக்கணும்தானே
என்று தேவதச்சன் புதுமைப்பித்தனிலிருந்து பெற்ற நக்கலுடன் கேட்கிறார்.
000
உண்மையை நெருங்கும் போதெல்லாம் புத்தரிலிருந்து அம்பேத்கர் வரைகவிதைத்தன்மை கொள்கின்றனர். எதை நெருங்கும்போதும் நாம் நமது சுயத்தைவிட்டுக் கவனிக்கிறோம். சுயத்தை விட்டுக் கேட்கிறோம். சுயத்தை விட்டு மற்றதைப் பாராட்டுகிறோம். பாராட்டத் தொடங்கும்போது சுயத்தை இழந்து அதுவாகிறோம். அப்போது உண்மையும் துலங்கிவிடுகிறது.
நதி காலம் காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹெர்மன் ஹெசேயின் சித்தார்த்தன் நாவலில் வாசுதேவன், சித்தார்த்தனிடம் ஆற்றின் ஓசையைக் கேட்கச் சொன்னபோது
சித்தார்த்தன் கொஞ்சம் கொஞ்சமாகக் கூர்ந்து கவனத்துடன் கேட்டபோது, ஆறு அவனுக்கு வேறாக ஒலிக்கிறது.
சித்தார்த்தன் கேட்டான், ஊன்றிய சிந்தையுடன் இப்போது அவன் கேட்டான், முற்றும் ஈடுபட்டு, நிதானமாய், ஒவ்வொன்றையும் வாங்கிக் கொண்டு கேட்டான். இப்பொழுது கேட்கும் கலையைத் தான் முற்றும் கற்றுவிட்டதாக உணர்ந்தான். இதையெல்லாம், ஆற்றின் இந்த எண்ணற்ற குரல்களையெல்லாம் முன்பே கேட்டிருந்தான். ஆனால், இன்று அவை வேறாய் ஒலித்தன. இப்பொழுது, ஒப்பாரியிலிருந்து உல்லாசக் குரல், மனிதக் குரலிலிருந்து மதலையின் குரல், இப்படி வேறுபட்ட குரல்களை அவன் பிரித்துணர முடியவில்லை. தவிப்போரின் ஓலம், அறிஞனுடைய நகைப்பு, கோபக்குரல், சாகின்றவனின் புலம்பல் ஒவ்வொன்றும் மற்றொன்றினுடையதாயிருந்தன. அவை யாவும் ஒன்றோடொன்று பின்னியும் பிணைந்தும் கிடந்தன. ஓராயிரம் விதங்களில் ஒன்றுடன் ஒன்று அவை இறுக்கி முடிச்சிடப்பட்டிருந்தன. எல்லாக் குரல்களும் எல்லா லட்சியங்களும் எல்லா தாபங்களும் எல்லா துயரங்களும் எல்லா நன்று தீதுகளும் அனைத்தும் ஒன்று சேர்ந்தே உலகமாக இருந்தது. அவை யாவும் ஒன்று சேர்ந்தே நிகழ்ச்சிப் பெருக்காய் உயிரின் இசையாய் இருந்தது.
இந்தியாவில் உள்ள சாதி அடுக்குநிலை குறித்து எழுதும் தருணத்தில் அதை ஒரு கவித்துவப் படிமமாகச் சொல்லி நிறுத்தும்போது அம்பேத்கர், காலம்காலமாகத் தொடரும் ஒரு ஏற்றத்தாழ்வுப் படிநிலையின் உண்மையை ஒரு சித்திரமாக அளித்துவிடுகிறார்.
இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.
மனிதன் தெய்வீக நிலையை அடைவதற்குச் செய்யும் எத்தனத்தின் உயரிய படிமமான கோயில் கோபுரத்தை, இந்தியாவில் நிலவும் சாதியப்படி நிலையோடு ஒப்பிடும்போது அந்த உருவகம் சிதைந்து விடுகிறது. அந்தக் கோபுரம் படிகளற்றதாக இருப்பதோடு இதயமற்றதாகவும் நோயுற்றுக் காட்சியளிக்கிறது.
000
கவிதை சரியாக வராவிட்டால் அதில் உண்மை எங்கே குறைவுபடுகிறதென்று பார்ப்பதும் ஒரு பயன்மிக்க வழிமுறை. கலையில் உண்மை வேறு, அன்றாட உண்மை வேறு என்பது சரிதான். ஆனால், உண்மைகள் சந்திக்கும் இடங்களும் உண்டு.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரயில் பயணம் தொடங்கியதை பாரதியார் பார்த்துவிட்டார். கெய்ட்டி திரையரங்கைத் தாண்டித்தான் அவர் கடற்கரைக்குப் போயிருப்பார். ஒரு பத்திரிகையாளராக அவரது உரைநடையில் பிரதிபலித்த நவீனம் அவர் கவிதைகளில் பிரயோகமே ஆகவில்லை. அவரது கவிதைகளில் சாதாரணர்களின் உண்மைகளும் சாதாரண உண்மைகளும் பெரிதாக இடம்பெறவில்லை.
மகத்துவத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த கவிதை தனது சட்டையை உரிக்க வேண்டியிருந்தது. அலுவலகம் போகும் சிறுத்த மனிதனின் சித்திரங்கள் ஞானக்கூத்தன் கவிதைகளிலேயே தென்படத் துவங்குகின்றன. ‘பெட்டிக்கடை நாராயணன்’ என்ற ந. பிச்சமூர்த்தியின் கவிதைத் தலைப்பு ஒரு காலகட்டம் உருவெடுத்துவிட்டதின் சித்திரம்.
19-ம் நூற்றாண்டில் பெட்டிக்கடை நாராயணன் என்ற கதாபாத்திரம் பிறக்கவேயில்லை. இருபதாம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாழ்வுக்கு, புதிய பொருட்களுக்கு கவிதை தனது மொத்த உடலையும் தகவமைக்க வேண்டியிருந்தது. அங்கே உணர்வும் பொருளும் வேறு வேறாக இல்லாத வடிவத்தை வெளிப்பாட்டைக் கொடுக்க வேண்டியிருந்தது.
பிரமிள், நகுலன், கலாப்ரியா தொடங்கி லக்ஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், சபரிநாதன் வரை கவிதை உண்மைகளை இப்படித்தான் புதுப்பித்தபடி உள்ளது.
நூற்றாண்டுகளாகப் புனிதப்படுத்தப்பட்டிருந்த தாயின் சித்திரத்தை, ‘அம்மாவின் பொய்கள்’ என்ற உண்மையைச் சொல்லிப் போட்டு உடைக்கிறார் ஞானக்கூத்தன்.
அம்மா பொய் சொன்னாலும் அவளது கருப்பையிலிருந்து ஜனிப்பது உண்மை என்னும் குழந்தைதான். அந்த உண்மை என்னும் குழந்தைதான் ‘அம்மாவின் பொய்கள்’ என்ற அந்தக் கவிதையை எழுதி அம்மாவின் பொய்களோடும் இந்த உலகத்தை அழகாக்குகிறது.
சுந்தர ராமசாமி மூடுபல்லக்கில் இல்லை மங்கை என்று எழுதுகிறார். பல்லக்கில் மனிதர்கள் போன ஒரு காலம் தொலைந்துவிட்டது. ஆனால், பல்லக்குத் தூக்கிகளின் அவலம் தொடர்கிறது. பல்லக்கில் மங்கை இல்லாவிட்டாலும் திரைமூடி இருக்கிறது. பல்லக்குப் பயணமும், பல்லக்கு உருவாக்கிய அடிமை நிலையும் பல்லக்கு மற்றவர்களிடம் உருவாக்கும் ரகசிய மயக்கங்களும் வேறு வடிவங்களில் தொடர்கிறது.
அதைத்தான் மூடு பல்லக்கில் இல்லை மங்கை என்று உச்சாடனக் குரலில் அறிவிக்கிறார் பசுவய்யா.
தாழைக் காட்டோரம்
முயல்கள் பம்மிப் பதுங்க
புற்றுவாய் தோறும்
தென்றல் சுகித்திருக்கும்
மூக்குக் கண்ணாடிகள்
பின்னகர்ந்து உள்மறைய
பதின்மர் மூச்சுத் தெவங்க
ஓடிவரும் துளிகள்
தாடையோரம் முத்துமுத்தாய்க் கூடி
விளைந்து உதிர
ஒற்றைக் குதிரை வீரன்
புறங்கழுத்தில்
அகந்தை வீற்றிருக்க
சொடுக்கும் சவுக்கு
அதிகாரம் கெக்கலிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.
மூடுபல்லக்கின் உள்ளே இல்லை மங்கை என்று தெரிந்தாலும் பாரதியால்
வெளிப்படுத்தியிருக்க முடியுமா?
பாப்லோ நெரூதா, தான் பிரிந்து தப்பித்துவந்த தனது காதலி குறித்த கவிதையை தீயவளே என்றுதான் தொடங்குகிறார். அதற்கு முந்தைய நூற்றாண்டு வரை காதலியை தீயவளே என்று சொல்ல முடியுமா. அவள் தீயவள். ஆனால், அவளது நினைவு செய்யும் சித்திரவதையை அவளின் இன்மையோடு சேர்த்துத்தான் தீயவளே என்று அழைத்து அழைத்து பாடுகிறான் கவிஞன்.
உன் கரகரப்பான மூச்சின் பொருட்டு இந்த அசுர
சமுத்திரத்தையே நான் தருவேன்
அது ஆழ்மறதியின் எந்தக் கலப்புமற்று இந்த நீள் இரவுகளில்
எனக்குக் கேட்கிறது.
அது வளிமண்டலத்துடன் பிணைந்துவிடுகிறது
குதிரையின் தோலுடன் பிணைந்துவிட்ட சாட்டையைப் போல.
இருளில் வீட்டின் பின்கட்டில் இருளில்
நீ சிறுநீர் கழிப்பதைக் கேட்கிறேன்
அது ஏதோ மெல்லிய, நடுங்கும், வெள்ளிமயமான
விடாப்படியான தேனை
விடாப்பிடியான தேனை
சிந்துவதைப் போன்றதாகிறது.
தீயவளே என்று விளிக்கும் கவிஞன், பேசாததை எல்லாம் விலக்கி வைத்ததையெல்லாம் பேசத் துணிகிறான்.
000
ஒரு தனிமனிதன் தனக்கேயுரிய துயர சந்தோஷங்களுடன் தோன்றிவிட்ட உண்மையைத் தான் தமிழ் புதுக்கவிதை பிரகடனம் செய்தது. கவிதை வாசிப்பு, கவிதை அனுபவம் என்பது சிறிதுமில்லாத தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த ஒருவரிடம் ஆத்மாநாமின் இந்தக் கவிதையைக் கொடுத்து வாசித்துப் பார்க்கச் சொல்லலாம்.
நம்மில் ஒவ்வொருவரும் மிக மோசமாகத் துயருற்று எழுந்து நிற்கும்போதோ, பெரும் இக்கட்டிலிருந்து தப்பித்து வரும்போதோ இத்துடனாவது விட்டதற்கு உங்களுக்கு நன்றி என்று தோன்றக்கூடிய ஒரு ஆசுவாச உணர்வை அடைந்திருப்போம் . குடும்பம், சமூகம், மதம், அரசு, நிறுவனம் என்று மனிதனை ஒடுக்கும் எல்லா அமைப்புகளிலிருந்தும் இப்படித்தானே நாம் விடுதலை பெற நினைக்கிறோம் . அந்தப் பொதுவான பெருமூச்சுணர்வை ஏற்ற மானுடப் பொதுக்குரலாக இக்கவிதை மாற்றப்படுகிறது.
இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு.
இது ஒரு பொது அனுபவத்தையும் ஒரு பொது உண்மை ஒன்றையும் சொல்கிறது. இதில் எல்லா ஒருவன்களும் எல்லா ஒருத்திகளும் பிரதிபலிக்கப்படுகிறார்கள். இந்த அனுபவத்தை அடையாதவர் யாராவது உண்டா. இந்தக் கவிதைக்கு வர்க்க பேதம், மத, சாதிபேதம் உண்டா. இதற்கு காலம் உண்டு. தற்காலம் மட்டும்.
Comments