இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே மயில் என்ற படிமம் எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. இந்து, கிறித்துவ சமயத் தொன்மங்களில் மயில் என்னும் படிமம் விழிப்பு, கம்பீரம், புத்துயிர்ப்பின் அடையாளமாகத் திகழ்கிறது. ஆண் மயிலின் தோகையில் உள்ள கண்கள் பால்வெளியில் உள்ள ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் கண்களென்கிறது கிரேக்கப் புராணிகம்.
மயிலின் அகவல்களில் ஆயிரக்கணக்கான மனிதச் சிரிப்புகளின் எதிரொலிகளைக் கேட்கலாம், ஹெர்மன் ஹெஸேயின் சித்தார்த்தன் ஆற்றின் எண்ணற்ற குரல்களை உற்றுக் கேட்டது போலக் கேட்க இயன்றால்.
சென்ற ஞாயிறன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் அவர் வீட்டுக்கு வரும் மயில்களோடு அவர் பழகும் படங்களை வீடியோவாக வெளியிட்டிருந்தார். வீடியோ பின்னணி இசையோடு வெளியிடப்பட்டிருந்தது.
பறவைகள் வந்து கூடு கட்டுவதற்கு ஏற்றவாறு அவரது வீட்டின் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
மயில் தோகையை தோட்டத்தில் விரித்தபடி நிற்க மரத்தின் மறைப்பிலிருந்து தோன்றி பக்கவாட்டில் நடைபயிற்சி செய்ய வரும் பிரதமரையும், வீட்டின் முன்னறைக்குள் சகஜமாக நுழைந்து உலவும் மயிலுக்கு கையில் உள்ள உணவுத்தட்டை பிரதமர் காண்பிப்பதும், மயிலின் முன்பு சோபாவில் அமர்ந்து தனது வேலையில் ஈடுபடுவதுமான படங்கள் அந்த ஞாயிற்றுக்கிழமையன்று வண்ணமயமாக அணிவகுத்தன.
டெலிகிராப் இந்தியா தினசரி, தலைப்புச் செய்தியிலேயே மோடி, மயில்களுடன் இணைந்து எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பெருந்தொற்று காலத்தில், ஒருவர் தன்னைக் கோதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரோ? என்று கேட்டிருந்தது. மயிலாரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்?. மயிலே, பகட்டுக்குப் பிறந்த பறவைதானே.
அதிகம் புழங்கப்படாத வெள்ளைப் பளிங்குத் தரையில் வந்து மயில் நிற்கிறது. மோடி உணவுத் தட்டை முழுமையாக நீட்டாமல், கையை பாதியில் நெஞ்சுக்குள் இழுத்துக்கொண்டு, மயிலின் முகத்தைக் கூர்மையாகப் பார்க்கிறார். மயில், அதிகம் புழங்கப்படாத சுத்தி செய்யப்பட்ட பளிங்குத்தரையில் நடக்கிறது. வெள்ளைப் பளிங்கில் அது கழித்து வைத்துவிட்டால் என்ன ஆகும் என்ற பதற்றம் தெரிகிறது.
காலண்டர் ஓவியங்கள் ஞாபகத்துக்கு வந்தன. பார்சி நாடகங்களில் பின்னணிக் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியக் கித்தான்களின் தாக்கத்திலிருந்துதான், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓவியர் ராஜா ரவிவர்மா, தனது தெய்வ உருவங்களுக்கான பின்னணியை தனது ஓவியங்களுக்குத் தேர்ந்தார். அவர் வரைந்த சரஸ்வதி ஓவியத்தில் மயில் இடம்பெறுகிறது. தமயந்தியின் அன்னத்தோடு கூடவே வந்திருக்கலாம். முருகன் ஓவியத்தில் இயல்பாகவே மயில் இடம்பெறுகிறது.
மயிலுடன் இணையும் போது ஒரு இடமோ, ஒரு மனிதனோ கனவு நிலை அல்லது புராணிக, தெய்வீக வடிவங்களை அடைந்து விடுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை தாமரை என்பது மிக சக்திவாய்ந்த படிமம். அதை, பாரதிய ஜனதாக் கட்சி தனது சின்னமாக்கியது ஒன்றும் தற்செயல் அல்ல. காசியைத் தனது தொகுதியாக்கி, பிரதமர் ஆனவுடன் அங்கே ஆர்த்தி நிகழ்ச்சி நடத்தி, நாடாளுமன்றத்தை ஆலயமாக நினைத்து மண்டியிட்டுக் கும்பிட்டு, அயோத்தியில் ராஜரிஷியாகத் தனது படிமத்தை சமீபத்தில் நகர்த்திய மோடி, மயிலுடன் இணைந்து கொடுத்திருக்கும் சித்திரங்களும் அவர் ஏற்ற விரும்பும் படிமங்களில் ஒன்றுதான். பெருந்தொற்றையொட்டி வளர்க்க ஆரம்பித்த தாடி, கரோனா முகக்கவசத்தின் வடிவத்தைப் பெற்றுள்ளது.
படிமங்கள் உதவிகரமானவைதான். பீலிபெய் சாகாடும் என்று தொடங்கும் மயிலிறகு தொடர்பிலான திருக்குறள் கூடுதல் அர்த்தம் பெறுகிறது.
இந்தப் புகைப்பட வரிசை நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சில சித்திரங்களில் ஒன்றாக மாறுவதற்கான லட்சணத்தைக் கொண்டவை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
மயில்களின் அகவல் எதுவும் அந்த வீடியோவில் கேட்கவில்லை.
Comments