நீதிபதிகள் குடியிருப்பில் தனியே வசிக்கிறார்
மாவட்டச் சார்பு நீதிபதி
வீட்டில்
ஒரு நாற்காலி
ஒரு உணவுத்தட்டு
ஒரே ஒரு கத்தியை
பராமரித்து வருகிறார்.
காலை நடைக்குச் செல்லும்போது
அழைத்துச் செல்லும் வளர்ப்புநாயை
தெருநாய்களுடன் குலவ
நீதிபதி அனுமதிப்பதில்லை
குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட
நார்ச்சத்து உணவையே
கவனமாகத் தேர்ந்தெடுத்து உண்கிறார்
அத்தியாவசியப் பொருட்கள்
காய்கறிகளைச் சிறுவணிகர்களிடமே
வாங்குகிறார்
பாதுகாப்பான பரஸ்பரநிதித் திட்டங்களில் முதலீடுகளைச் செய்பவர்
குழந்தைத் தொழிலாளர் முறை மரணதண்டனைக்கு
எதிரானவர்
இறைச்சி சாப்பிடாதவர் என்றாலும்
நீதிபதியின் வீட்டுக்கத்தி கூர்மையானது
நீதிமன்றத்தின் ஓய்வு அறையில்
மதிய உணவுக்குப் பின் சற்று இளைப்பாறிவிட்டு
அன்றைய வழக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கிறார்
தாமதமாகிவிட்டதை
பணிவுடன் உணர்த்துகிறார் உதவியாளர்
வேகமாகக் கூடத்துக்குள் நுழைகிறார் நீதிபதி.
கசகசக்கும் வெயிலில்
முடிவில்லாமல் மூச்சைப் பெருக்கியபடி
குற்றத்தரப்பும் வழக்காடுபவர்களும்
சாட்சி சொல்ல தாமதமாக வந்த மருத்துவரும்
போலீஸ்காரர்களும்
சேர்ந்து
வளாகத் திண்ணையில் காத்திருக்கிறார்கள்.
உறக்கம் அழுத்த
வழக்கைக் கேட்கத் தொடங்கிவிட்டார் நீதிபதி.
மருத்துவர்
இறந்தவரின் தலையில் காயம்பட்டிருக்கிறது என்கிறார்.
நெற்றியிலா, முன்தலையிலா?
திருப்தியான கேள்வி என்று
தன்னைப் பாராட்டிக்கொண்டார் நீதிபதி
மருத்துவர் குழம்பி மௌனமானார்.
“போலீசும் மருத்துவரும் சேர்ந்து
நீதி அமைப்பையே கேலிக்குள்ளாக்குகிறீர்கள்”
அன்றைய கண்டனத்தை நிறைவாகச் செய்துவிட்டு
வழக்கை மற்றொரு தேதிக்குத் தள்ளி வைக்கிறார் நீதிபதி.
(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் கவிதைத் தொகுப்பிலிருந்து)
Comments