அசோகமித்திரன் வசித்த மாடி வீட்டின்
பால்கனிக் கொடிக்கயிற்றில்
அவரது உடுப்புகள் இப்போது தொங்குவதில்லை
அவரைப் பார்க்காவிட்டாலும் அவரது மெலிந்த பனியனைப் பார்ப்பது
சில நேரங்களில் நம்பிக்கையையும் ஆசிர்வாதத்தையும் தந்திருக்கிறது
பெருமிதத்துடன் நண்பர்களுக்கு அவர் வீட்டைக் காட்டியுமிருக்கிறேன்.
'அழிவற்றது' கதையை எழுதியவர்
ஆன்மா அழிவற்றது என்று அவர் நம்பியிருக்க வேண்டும்
அவருக்கு கவிஞர்கள் கவிதைகள் மேல் ஈடுபாடு கிடையாது
என்னைப் பார்க்கும் போது அந்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்
சோம்பேறிகளின் வடிவம் என்று
பெரும்பாலான உரைநடைக்காரர்களைப் போலவே
அவருக்கும் கவிதை பற்றி அபிப்ராயம் இருந்தது.
கவிதை என்று உலகம் முழுவதும் எழுதுகிறார்கள்தான்
ஆனால் எனக்கு என்னவோ என்று தன் பாணியில்
ஒரு அவநம்பிக்கையை முகத்தில் வெளிப்படுத்துவார்.
ஆத்மாநாமின் ‘தரிசனம்’ கவிதையை
இருநூறு வார்த்தை கட்டுரையில் திறக்கத் தெரிந்தவர் அவர்
ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்'-ஐ ரசிப்பவர்.
நான் அவர் தெருவுக்கு அடுத்த தெருவில் வசித்தேன்
என்னை என் மனைவியுடன் பார்க்கும்போது
எப்படி இவருடன் என்று கேட்டு சூல் கொட்டுவார்
இப்போதும் அந்தப் பக்கத்து தெருவில் தான் வசிக்கிறேன்
ஆனால் அந்தத் தொடர்பு இறந்த ஒரு காலத்தில் சேர்ந்து விட்டது.
தபால் வேலைகளுக்காகவும்
வங்கிக்குச் செல்லவும்
காபி பொடி வாங்கவும்
அபூர்வமாக வெளியே வருவார்
இருநூறு அடி அவருடன் நடக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும்
அது ஒரு சிறுகதையின் துவக்கம் மற்றும் முடிவைக் கொண்டதாக
இருக்கும்
வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் சுற்றும் தெருநாய்கள்
பற்றி ஒருமுறை பேசிக்கொண்டே வந்தார்
அவை அத்தனை பிரியத்தைக் காட்டுபவை
வாலை வாலைக் குழைத்து ஆட்டும்
வீடு வரை நம்மைக் கொண்டுவிடும்
ஆனால் பாருங்கள்
ஒரு நாள் லபக்கென்று கடிச்சு வெச்சுடுச்சு
என்றார்
இளக்கி வாழைப்பழம் நீரிழிவுக்காரர்களுக்கு நல்லது
என்று அவர்தான் சொன்னார்.
ஒரு சமயம் உடல்நலமில்லாத போது
மும்பை பத்திரிகை ஒன்றுக்கு கடிதம் ஒன்றை
தபால் பெட்டியில் சேர்ப்பதற்காக என்னை
தொலைபேசியில் அழைத்தார்
தபாலைக் கொடுக்கும்போது
எப்படிப் போடவேண்டும் என்று வழிகாட்டினார்
கடிதம் போய்ச்சேரும்
என்ற நம்பிக்கையே அவருக்கு இல்லை
அடுத்த நாள் தொலைபேசி
சேர்த்துவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்தினார்
சந்தேகம் எனக்கே தொடங்கியது
ஆனால் அவருக்குப் பதில் வந்துவிட்டது
அதைக் கேட்டபிறகு தான்
நானும் நிம்மதியானேன்.
காலை பதினோறு மணியளவில்
அவர் பால்கனியில் நுரையீரலை வெயிலுக்குக் காட்டி
நிற்பார்
அந்த சமயம் அங்கே போனால் சாவகாசமாகப் பேசலாம்
தெருவில் நின்றுகொண்டே பதினைந்து நிமிடங்களுக்கு மேல்
பேசியிருக்கிறேன்
ஆசையுடன்
மேலே வரலாமா என்று கேட்பேன்
வேண்டாம் வேண்டாம் என்று கைகளை விரித்து ஆட்டி
நாடகபாணியில்
மறுத்துவிடுவார்
ஒரு நாள் என் திருமணமான தங்கையை
அவரைப் பார்ப்பதற்காக அழைத்துப் போனேன்
அன்றைக்குப் பார்த்த உற்சாக அசோகமித்திரனை
முன்னர் பார்த்ததேயில்லை
அன்று என்னை அவர் பொருட்படுத்தவே இல்லை
ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனை
நான் படித்து முடித்திருந்த தருணம்
கதை இந்தியாவில் நடக்கிறது
அவன் கொடுக்கிற தீர்வு கிறிஸ்தவம் சம்பந்தப்பட்டது
வெஸ்ட்டில் அந்த நாவலுக்கு
அத்தனை ஆதரவு அதனால்தான் என்றார்
தண்ணீர் நாவல் திரைப்படமாகும் செய்தி குறித்துக் கேட்டேன்
நம்பிக்கையோடு சொல்கிறார்கள்
ஆனால் அதை சினிமாவாக்க முடியாது
கதாபாத்திரங்கள் எல்லாம் ஸ்தூலமானதில்லை
புகையாய் போய்விடும்
பரிதாபப்பட்டார் இயக்குநர் மீது.
வேலை இல்லாமல் இருந்த நாளொன்றின் மதியத்தில்
வீட்டுக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்து விட்டு
விடைகொடுத்து கதவைப் பூட்டப்போன போது
சொன்னார்
ஷங்கர், குடும்பம் வெச்சிருக்கீங்க
ரொம்ப கஷ்டம்.
காலமும் ஐந்து குழந்தைகளும் கதையில்
மட்டுமல்ல
அவரது எல்லா படைப்புகளிலும்
கதை சொல்லிக்கு முதுகிலும் கண்கள் உண்டு
அது துயரங்களை அதிமாகப் பார்க்கக் கூடியது
ஒரு போதைத் தருணத்தில் மதிய நேரத்தில்
அவரது ’விழா நாள் மாலைப்பொழுது’
குறுநாவலைப் படித்து முடித்தேன்
கண்ணில் கண்ணீர் பெருகியது
உடனடியாக எழுதியவனைப் பார்க்க வேண்டும்
தெருவில் இறங்கினேன்
நான் அதுவரை பார்த்தேயிராத
சூறாவளி வேளச்சேரியில் அடிக்கத் தொடங்கியது
மணலையும் தூசியையும் நாக்கில் ருசித்தபடி
அவர் வீட்டின் வாசலில் சென்று நின்றேன்
அசோகமித்திரன் தன் வீட்டில்
அப்போதுதான் படர்ந்த இருட்டுக்குள்
காற்றில் அலையும் இலையென
முதுகில் புதிய பூணூலுடன் மிதந்துகொண்டிருந்தார்
அவரது மனைவி இருட்டிலிருந்து வெளிப்பட்டு
இப்போது வேண்டாம் என்று சைகை செய்தார்
தர்ப்பணமோ அமாவாசையாகவோ இருக்க வேண்டும்.
நான் சங்கடத்துடன் காற்றில் மிதந்து
வீடு சேர்ந்தேன்
அவர் இருந்த தெருவுக்கும்
என் தெருவுக்கும் இடையே
சிலர் மட்டுமே புழங்கும் மரங்கள் அடர்ந்த
சிறிய நிழற்சாலை இருக்கிறது
அந்த இடம் ஒரு நேசத்துக்குரிய பெண்ணின் ஆதுரத்தைக் கொண்டது
செகந்திராபாத் லான்சர் பாரக்ஸிலும் இதே போன்ற இடங்கள் இருந்திருக்கும்.
அசோகமித்திரனுக்கு
அந்த இடம் தெரியவே தெரியாது.
Comments