Skip to main content

கஸல் - ஆஹா சாகித் அலி


இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி அரபிதான்
இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறுமொழியில் 
அரபியில் அல்ல.

மூதாதைகளே எனக்காக ஒரு காலி மனையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் 
குடும்பத்து மையவாடியில்
நான் ஏன் உங்கள் கண்களைப் பார்த்து
பிரார்த்தனை செய்யவேண்டும் அரபியில்

மஜ்னு 
கிழிந்துபோன உடைகளுடன் இன்னமும் தேம்புகிறான்
அவனுடைய லைலாவுக்காக
ஐயோ இது பாலையின் பைத்தியம்
கிறுக்கான அவனது அரபியில்

யார் இஸ்மயிலை செவிமடுக்கிறார்கள்?
இப்போதும் அவன் உரத்து வேண்டுகிறான்
ஆபிரகாமே, வாள்களை கீழே எறி
ஒரு துதி படி அரபியில்

நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் முகமது தார்விஷ் உலகத்துக்கு எழுதுகிறார்
நீங்கள் எல்லோரும் நடுவே நழுவிவிடுவீர்கள்
ஓடி மறையும் சொற்கள் கொண்ட அரபியில்

நெருப்பு மனிதர்களும் நெருப்பு கற்களும் தோன்றுமென்று
குரான் தீர்க்கதரிசனம் உரைத்தது.
ஆம் இது இப்போது நடந்துவிட்டது
இதுவும் சொல்லப்பட்டுவிட்டது அரபியில்.

லோர்க்கா இறந்தபோது 
பால்கனிகளை அவர்கள் திறந்தபடி விட்டார்கள்
லோர்க்காவின் கஸீடா பாடல்களை
அடிவானத்தில் முடிச்சுகளாகப் பின்னினர் அரபியில்.

டியிர்யாசினில் இருந்த வீடுகள்
இன்று அடர்ந்த காடுகள்
அந்தக் கிராமம் அழிக்கப்பட்டது
அங்கே சுவடற்றுப் போனது அரபி.

ஆமாம் அமிச்சாய், அழகிய பெண்களின் ஆடைகளை
நானும் பார்த்தேன்
அது மட்டும் அல்ல எல்லாவற்றையும் பார்த்தேன்
நீ பார்த்தது போல்
இறப்பில் எபிரேயத்தில் அரபியிலும்

அவர்கள் என்னைக் கேட்கிறார்கள்:
ஷாகித் என்பதன் அர்த்தம் என்ன?
சொல்கிறேன் கேளுங்கள்:
பாரசீகத்தில் 'நேசத்துக்குரியது'
'சாட்சி' அரபியில். 

Comments