Skip to main content

பனிமனிதர்கள் - ஆஹா சாகித் அலி




எனது மூதாதை, இமாலயப் பனியின் மனிதன்
திமிங்கில எலும்புகள் உள்ள பையைச் சுமந்தபடி
சாமர்கண்டிலிருந்து காஷ்மீருக்கு வந்தவன் :
கடலில் நடந்த ஈமச்சடங்குகளிலிருந்து பெற்ற குலசம்பத்துகள்.
பனிப்பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது அவனது எலும்புக்கூடு
அவனது சுவாசமோ ஆர்க்டிக்
தனது அணைப்பில் பெண்களை உறையவைத்தான்,
அவனது மனைவி தண்ணீராக உருகினாள்,
அவளது முதுமை
துல்லியமான ஆவியாதல்.

அவனது எலும்புகூடு
அவன் மகனிடமிருந்து பேரனுக்குத் தரப்பட்டது
இந்தக் குலசம்பத்து
எனது சருமத்துக்கு அடியில்.
தலைமுறை தலைமுறையாக வரும் பனிமனிதர்கள்
எனது தண்டுவடத்தில்
எனது சாளரத்தை ஒவ்வோர் ஆண்டும் தட்டுகின்றனர்,
அவர்களது குரல்கள் பனிக்குள் கிசுகிசுக்கின்றன.
 

அவர்கள் குளிருக்கு வெளியே என்னை அனுமதிக்கவே மாட்டார்கள்
அத்துடன் எனக்கு நானே உத்தரவாதம் அளித்துக்கொள்கிறேன்
கடைசிப் பனிமனிதனாகக் கூட நான் இருக்கலாம்
 அவர்களது உருகும் தோள்களில் அமர்ந்து
வசந்தத்துக்குள் சவாரி செய்வேன்.

Comments