அவள் யார்?
இந்த ஊருக்கு
இந்த நகரத்துக்கு
அல்ல
பூமிக்குப் புதியவள்
போல்
அவள் தோன்றுகிறாள்
தினசரி காலை நடையில்
தன் வளர்ப்பு நாயை
கழுத்துப்பட்டி
இல்லாமல்
சங்கிலி இல்லாமல்
தெருவில் அழைத்து
வருகிறாள்
அவளைச் சுற்றி
அவளுக்குப் பின்னாலும்
முன்னாலும் விளையாடியபடி
அது நடந்து போகும்.
தளர்வான மேல்சட்டை
அல்லது பனியன்
அரைக்கால் சட்டையுடன்
மரங்கள் அவளுக்கு
உவந்தளித்த பரிசு
நிழல் தெரு என்னும்
போதத்தில்
நிதானமாய்
நெஞ்சை விரித்துப் போகும்
அவள்
மேல் பழகியது போல
தெரு நாய்கள்
பாய்ந்தேறுகின்றன
கனிவுடன்
தழுவி
அவர்களுடன் குழவிமொழி பேசுகிறாள்
தனது வளர்ப்பையும்
பதற்றமேதுமின்றி
மட்டிறுத்தி
என்னைக் கடக்கிறாள்
அவளைப் பார்த்தபிறகு
ப்ரவுனியை
பிணைத்து அழைத்துச்
செல்லும்
சங்கிலி
எனக்கு
கனக்கத் தொடங்கிவிட்டது
ஒரு நாள்
அவளுடைய பிராணியும்
என் ப்ரவுனியும்
சந்திக்க நேர்ந்தது
அவள் வளர்ப்பை
அச்சமேயின்றி அவள்
தெருவில் அழைத்துச்
செல்லும்
உத்தியைக் கேட்டேன்
நாம் இழுத்துச்
செல்ல வேண்டியதில்லை
அவர்களுக்குத்
தங்கள் வீடு தெரியும்
திரும்ப வந்துவிடும்
என்றாள்
உங்கள் பெயர் என்னவென்று
கேட்டேன்
கல் மூக்குத்தியுடன்
சேர்ந்து
முகம் விரியச்
சிரித்துவிட்டு
சொல்லாமல் போனாள்.
Comments