Skip to main content

நகுலனின் 'அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' : தோற்றம் மறைவு என்னும் விவகாரங்கள்

ஓவியம் : சுந்தரன். என்

நகுலனின் முதல் படைப்பு என்று சொல்லப்படக்கூடிய 'அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யை ஒரு குட்டி நாவல் என்றும் குறுங்காவியம் என்றும் நம்மால் சொல்லமுடியும்.  கடைசியில் பிரசுரமானது. 

நகுலனின் ஒட்டுமொத்த உலகமென்று நாம் உருவகிக்கும் பண்புகள், தன்மைகள், வஸ்துகளை  பூரணமான சிற்றண்டங்களாக மிகச் சிறிய படைப்புகளிலும் விட்டுச் சென்றவர் அவர். ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யிலும் நகுலன் தன்மை முழுமையாகவும் தீவிரமாகவும் பரவியுள்ளது. 

வாழ்வின் அந்தத்தில் தான் கழித்த நாட்களை அசைபோடுவதில் ஆரம்பிக்கிறது இந்தக் குறும்படைப்பு. தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மை இல்லாத அசைபோடுதல்; ஆனால், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும், ஒலியும் அமைதியும் சேர்ந்து சன்னதம் புரியும் வாக்கியங்களோடு நம்மை ஈர்க்கின்றன. பேசுவது போல எழுதிய தன்மைகளோடு கூடிய உரையாடலை தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மையின்றி அர்த்தம் நடுநடுவே விடுபட்டுப் போனாலும், இசைமை இருப்பதால் போதையுடன் தொடர்கிறோம்.

மனமும், அதன் நினைவுகளும், எண்ண ஓட்டமும் தொடர்ச்சியானதோ நேர்கோட்டுத் தன்மை கொண்டதோ அல்ல. அவன் இயங்கும் காலங்களும் கூட. அவன் மனம் குறுக்கும், நெடுக்குமான நினைவுப்பாதைகளிலும், எண்ணிலடங்கா பிரபஞ்சங்களிலும் சஞ்சரிப்பது. பிரத்யட்ச நிலைக்கும் அரூப நிலைக்கும் நகுலனின் பூனை உருப்போல பயணித்துக்கொண்டே இருப்பது. அவனது நினைவுகள் தெறிக்கும் பிரமைகளின் ஊடாட்டத்தில் ஆயிரம் சிறகுகளையுடைய வயோதிகன் தான் மனிதன். அங்கே நடக்கும் இடையறாத பேச்சும் குறிப்பிட்ட மொழி, அர்த்தத் தளத்தைத் தாண்டிய சப்த துணுக்குகளும்தான். நகுலனின் கதைகளில் இந்த அடி உலகத்தில் தான் கதாபாத்திரங்கள் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாய் உள்ளனர். அவற்றை வாசிக்கும் வாசகனின் நினைவொழுங்கையும் கலைக்கும் பொழுது நிகழ்கிறது வாலறுந்த நரிகளாகும் நினைவுகளின் கலகம்.

நினைவுப்பாதை, நாய்கள், சில அத்தியாயங்கள், நவீனன் டைரி, அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, வாக்குமூலம், என எல்லா நாவல்களிலும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை நகுலன் எப்படியோ மொழியின் இசைமைக்குள் உருவாக்கி விடுகிறார். சூசிப் பெண்ணே ரோசாப்பூவே (நினைவுப் பாதை) என்னும் வாக்கியத்தில் துக்கத்தை எப்படி அமரவைக்கிறார். புழங்கு மொழி, பேச்சுக்கூறு, இலக்கிய மரபின் பின்னணியில் வழக்கத்தில் இல்லாத, நேர்கோட்டுத் தன்மையற்ற பொது தர்க்கத்துக்கு முரணாகத் பேச்சை, கட்டவிழ்ந்த வார்த்தைக் கூட்டங்களை நகுலன் போன்ற ஒரு எழுத்தாளர் உருவாக்குகிறார். அதை வாங்கிக்கொள்ளும் அதே மொழி மற்றும் கலாசாரத்திற்குப் பரிச்சயமான வாசக மனம் தன் பின்னணியில் அதைத் தன்னளவில் வாசித்து, ஒழுங்குபடுத்தி, தொடர்பு கொண்டு களிப்பை அடைகிறது. எழுத்தில் உருவாக்கப்படும் தொடர்பற்ற, வெட்டி வெட்டித் துண்டுதுண்டாக ஆக்கப்படும் அனுபவத்தை எடுத்துக்கொள்வதற்கு வாசகனிடமும் ஒரு அபத்த அமைப்பு இருக்கக்கூடும். நினைவு, கலாச்சாரம் என்ற பொதுத் தளத்தில் குறைந்தபட்ச பகிர்தலாவது இப்படியாகச் சாத்தியப்படுவது மொழியின் வினோதச் செயல்பாடுகளில் ஒன்றே.

நகுலனின் முதல் படைப்பு என்று சொல்லப்படுவதும் அவரது வாழ்க்கையின் கடைசியில் பிரசுரமானதுமான ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' இப்படித் தொடங்குகிறது. 

சென்ற நாட்கள் திரும்பி வருகின்றன....வேறுவிதமாக.

இல்லையென்று சொல்லி, உண்டென்று பேசி, உருண்டு செல்லும் காலம். 

கண்கள் முகத்தில்....இல்லை, மண்டையின் பின்தான் இருக்கின்றன – இருந்திருக்கின்றன. 

இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது அசோகமித்திரனின் 'காலமும் ஐந்து குழந்தைகளும்' சிறுகதையில், முதுகிலும் திறந்து வெறிக்கும் கண்களை மூடமுடியாமல் அது உருவாக்கும் பைத்தியத்தைத் தவிர்த்தபடியே வேலைக்கான நேர்காணலுக்காக திடீர் பயணத்துக்குத் தயாராகி, ஓடத் தொடங்கிய ரயிலை ரயிலைத் துரத்தும் நாயகன் ஞாபகத்துக்கு வருகிறான். 

மரணத்தின் வாயிலில் நிற்பதுபோலப் பேசுபவன், கர்ப்பத்தின் இருள் அவனை மூடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறான். ஆமாம், பிறப்பு என்பதும் மரணம் என்பதும் இருட்டுக்குப் பின்னரும் இருட்டுக்கு முன்னரும் நிகழ்வதுதானே. எதையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யில் எழுத்தாளனும் ஓவியனுமாக சொல்லி இருக்கிறான். யாரும் வாங்க விரும்பாமல் அவனே பதிப்பித்து விற்காமல் போன புத்தகங்கள், காலியான பிராந்திக் குப்பிகளோடு கிடக்கின்றன. நகுலனின் உலகத்தில் மொழி, பேச்சு, எழுத்து ஆகியவை வெளிப்படுவதில் கொள்ளும் தோல்வியை உரைப்பதாக இந்த வாங்கப்படாத புத்தகங்கள் இருக்கின்றன. மொழி இந்த உலகத்தை, தொடர்ந்து விளக்க முயலும் அதேவேளையில் விளக்கமுடியாத தோல்வியில் இருந்துகொண்டிருக்கிறது. விளக்கமுடியாதது எது?

ஒன்றுமில்லை என்பதில் ஏதோ ஒன்று இருக்கிறது.

இந்த ஏதோ ஒன்றைச் சொல்லவும் எழுதவும்தான் சுட்டிக்காட்டவும் நகுலன் முயன்றுகொண்டேயிருந்திருக்கிறார், ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' வரை. வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை குறிக்கும் பொருள் மட்டும் அல்ல. வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாகக் கணிப்பவர்களில் ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யில் வரும் அவள் ஒருத்தி மட்டுமல்ல.

மனம் பரபரவென்று ஊர்ந்து செல்லும் அனுபவத்தை ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யிலும் பார்க்கிறோம். 

‘உடல் மாத்திரமில்லை மனமும் இயந்திர ரீதியாகத்தான் இயங்குகிறது'.

எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்

ப்ளேட்டோ சொன்னதுதான் சரி

நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில்

எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை.

என்னில் இல்லாத எதையும் வெளியிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடியாதா? அப்படியென்றால் இந்தப் புத்தகம், அறிவு என்பதற்குச் சொல்லப்படும் முக்கியத்துவம் என்ன? 

நகுலனின் படைப்புகள்,  அத்வைத விசாரமோ என்ற மயக்கத்தையும் தருவது. அப்படி நம்பி நேரடியாக யவனிகா ஸ்ரீராம் போன்ற கவிஞர்களே இன்னும் அவரை விமர்சனம் என்ற பெயரில் வதைத்துக் கொண்டுள்ளனர். அவர் உபநிடதங்களை எடுத்தாண்டுள்ளார்.(மழை மரம் காற்றில் ஆ, ஆசையே நீ ஒரு புராதன விருட்சம்). அதேவகையில் காப்கா, ஜாய்ஸிலிருந்து திருக்குறள், மஸ்தான் சாய்பு, திருமந்திரம், சித்தர் பாடல்களின் பிரதிபலிப்புகள். எடுத்தாள்தல்களும் உண்டு. ஒரு சடங்கின், பழைய நிகழ்த்துகலை வடிவங்களின் சட்டகத்தை, ஒரு நாடகத்தில் கையாள்வது போல, பழம்பிரதிகளிலுள்ள வாக்கியங்களை, ஒலி அமைப்பை அவர் தன் படைப்புகளில் தாராளமாகவே பயன்படுத்தியிருக்கிறார். நம்மீது படிந்திருக்கும் இத்தனை நினைவுகள், கருத்துகள், சிந்தனைகள், அவற்றின் ஒலி, வண்ண ரூபங்களோடு அவர் 20-ம் நூற்றாண்டில் நின்றுகொண்டு தவிர்க்க இயலாத ஒரு மோதலையே நிகழ்த்துகிறார். பழம்பிரதிகளை எடுத்தாள்வதன் ஊடாக, ஒரு மரபின் அழுத்தம் தன் மீது இருப்பதை உணர்ந்திருந்த அவர், அதன்மீது முழுமையாகச் சாயவும் சார்ந்திருக்கவும் முயலாமல் தான் வாழ்ந்த காலத்தை, மாறிய உலகத்தை, அதன் ஒரு விளிம்பில் நின்று தான் அனுபவம் கொண்ட வாழ்க்கையை விசாரித்து கவித்துவ சகுனங்களைப் போல உரைத்தவர் அவர். இதன்மூலம், தான் இயங்கிய நவீனத்துவ காலத்துக்குப் பின்னும் பொருளுடைய அறிதல்களை நிகழ்த்தியவர் ஆகிறார். பழம்பிரதிகள் ஊடாக உலவும் நகுலன் அவற்றை தனது புது ஒழுங்கிற்குள் வைத்துக் காண்பிக்கிறார். தேய்ந்த படிமங்கள், வழக்குகள், ஓசை, இசைமையை மீட்டுருவாக்குவதையும் போதத்துடனேயே செய்துள்ளார். அதைப் புரிந்துகொள்ள முடியாமல்தான், 'நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று வரும் நகுலன் கவிதையில் அவரே அதைக் கேட்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

'மறுபடியும் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது’. எப்போதும் இப்படி அபத்தமாக பழைய குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் புதியதைப் போல.  

எதைச் சொல்லும்போதும் எதை எழுதும்போதும் எது நிகழும்போதும் ஏற்கெனவே சொன்னதின் ஏற்கெனவே எழுதப்பட்டதின் ஏற்கெனவே நிகழ்ந்ததின் எதிரொலிகளையும் நிழல்களையும் பிரதிபலிப்புகளையும் ஏன் கேட்கவும் காணவும் செய்கிறோம். அங்கு ஏற்கெனவே வாழ்ந்ததின் பிரமாண்ட நிழல்கள் ஏன் தோன்றிவிடுகின்றன? 

இந்த ஏற்கெனவேயான உலகத்தை நிர்தாட்சண்யமாகச் சலித்துச் சலித்துத்தான் ஒரு புதிய அர்த்த உலகத்தை, அவர் மொழியில் ஓர் அர்த்த கர்ப்பத்தை, அர்த்தமாக அடர்ந்த ரத்தம் துடிக்கும் படைப்புகளை அவர் உருவாக்கினார். அதனால் தான் சாவின் சமீபத்தில் கூட இவ்வுலகம் எவ்வளவு வசீகரமாக இருக்கிறது என்று சொல்ல முடிகிறது. 

தோன்றுவதெல்லாம் மறைவதை தன் வாழ்நாளெல்லாம் அலுக்காமல் சலிக்காமல், சலிப்பதுபோன்ற பாவனையில் சொல்லிக் கொண்டே இருந்த நகுலன் ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'யிலும் முடிவில் விசாரிக்கிறார்.

குடி, அன்பு, படிப்பு எல்லாமே தோற்றம் - மறைவு என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன என்ற கண்டுபிடிப்பை வைக்கிறார். சாவின் முனையில் ஒரு நிதானத்தையும் தனது கிரியாசக்தி ஒரு தீவிரத்தையும் அடைவதாகச் சொல்கிறான் கதையில் வருபவன். 

தாய், தந்தை, காதலி, நண்பன் என எல்லாரும் நமக்கு நெருக்கமாக இருந்தபோதும் நாம் அவர்களை அறிவதில்லை. உடன் இருப்பதை விட, அவர்கள் பிரிந்தபிறகுதான் அவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதும் நடக்கவே செய்கிறது. அப்படியென்றால் உறவு, பிரிவு, பரிச்சயம், பரிச்சயமில்லாதது என்பவற்றுக்குச் சொல்லப்படும் எல்லைகளை அசைத்துக் கழற்றிவிடுகிறார் நகுலன். ஊருக்குப் பேர் உள்ளது போல, எல்லாமே ஒருவகை அடையாளமாகப் போகும் நிலையைக் காண்பிக்கிறார்.      

'எல்லாமே கனவாக, எல்லாமே அர்த்தமாக, எல்லாமே அர்த்த சூன்யமாக ஆகும்' போதை நிலையை ஒரு தற்காலிக அனுபவமாக நகுலன் மொழியில் நிகழ்த்துகிறார். அந்த நிலைதான் மரணத்துக்கு அருகில் உள்ள அவர் உருவகிக்கும் விடுபட்ட நிலைபோலும். 

ஏற்கெனவேயான அனுபவ உலகின், உறவு உலகங்களின் நிழல்களை, எதிரொலிகளைக் கொண்ட இடத்திலிருந்து தப்பித்த உயிராக ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யை நகுலன் படைத்திருக்கிறார். அந்த மஞ்சள் நிறப்பூனையை, பூனைக்குட்டியாக்குபவர் மா. அரங்கநாதன் என்ற குறிப்பு இந்தப் படைப்பிலேயே இறுதியில் உள்ளது. 

அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி, கதையைக் கூறுபவனோடு பழகினாலும் அதற்கு ஆசையோ அன்போ மரியாதையோ அவனிடம் இல்லை. ஆனாலும் அதன் உருவ அழகில் அவன் மயக்கமும் அதனால் கொஞ்சம் சார்பும் கொள்கிறான். ஆனால், அவனது அதிகாரம், எதையும் அதனில் அவனால் செலுத்த முடியாது. அவனது கண்ணுக்கு எதிரேயும் அவனது கண்மறைவிலும் அதற்கு வாழ்க்கைகள் உள்ளன.

‘இதுபோல மனிதர்களிடம் இருக்கமுடியுமென்றால்?’ என்று கேட்கிறான் கதைசொல்லி.

பூனை இருக்கிறது. அது அவனது கண்பார்வையில் இல்லாதபோதும் எங்கேயோ இருக்கவே செய்கிறது. 

இந்த நிச்சயம் போதும் இருப்புடனும் இன்மையுடனும் நாம் பழகுவதற்கு என்று சொல்லிப் போகிறாரோ சச்சிதானந்தம் பிள்ளை.

ஒன்று கண்ணில் தோன்றும்போது மனம் களிக்கவோ பதைக்கவோ செய்கிறது. அது கண்ணிலிருந்து அகன்றவுடன் மனம் தரையில் முன்கால்களைப் பதித்து தன் இயல்பில் நடைபோடத் தொடங்கிவிடுகிறது. களிக்கவும் பதைக்கவும் செய்த உருவம், எங்கேயோ இப்போதும் இருந்துகொண்டிருக்கிற போதும், இந்தத் தோற்றம் - மறைவு விவகாரம் நம்மை இன்னமும் தொடர்ந்து படுத்திக் கொண்டிருக்கிறதுதானே. 

நகுலனின் உலகில் பெற்றோர், காதலி, நண்பர்கள், கடைசியில் பூனை எல்லாம் தோன்றி மறைந்துகொண்டிருக்கிறார்கள்; வேறெங்கோ இருக்கவும் செய்கிறார்கள். 

'புலவியின் சாதுரியமாக, கலவியின் குதூகலமாக' அவருக்கு முன்னர் இந்த உலகம் ‘நிஜமாக’, உயிர்த்தன்மையோடு இருக்கிறது.

மா. அரங்கநாதன் : அந்த மஞ்சள் நிறப்பூனை என்பதை விட அந்த மஞ்சள் நிறப்பூனைக் குட்டி என்றால் இன்னும் நல்லா இருக்கும்.

நகுலன் : ஓம் (ஆம்) அது ' அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டிதான்'.

Comments