Skip to main content

மனதின் பைத்திய நிழல் சுசீலா

நகுலனின் முதல் நாவலாக பிரசுரமான 'நிழல்கள்'-ல் நவீனனுக்கு, வாழ்க்கையைப் போதித்துவிட்டுச் செல்லும் சாரதி, கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானிடம்' நாவலில் வரும் கிட்டாவைச் சற்றே ஞாபகப்படுத்தினாலும் அத்தனை வல்லவன் அல்ல; அதேவேளையில் காசியபனின் கணேசனைப் போல 'அசடு'ம் அல்ல. இந்திய அளவிலும் தமிழிலிலும் நவீன இலக்கியத்தை, தங்களது பிரதான அடையாளமாகத் தெரிந்தெடுத்த பெரும்பாலான பிராமண எழுத்தாளர்கள் எப்படி தங்கள் மரபை உள்ளடக்கமாக, குடும்பத்தைக் கதைப்பொருளாகக் கொண்டு எழுதினார்களோ  அந்த இடத்திலிருந்துதான் நகுலனும் 'நிழல்கள்' என்னும் முதல் படைப்பைத் தொடங்குகிறார். ஆனால், அவர் கடைசியில் வந்து நின்ற இடம் தொடங்கியதிலிருந்து ரொம்பத் தூரம் என்பதுதான் நகுலனின் தனித்துவம்.    

பிராமண லட்சணம் சிறிதுமின்றி இருக்கும் தறுதலை குடிகாரத் தந்தை, அவரிடம் ஆட்பட்டுக் கிடக்கும் அம்மாஞ்சி அம்மா, தூரத்துக்குத் தொலைந்துபோய்விட்ட சகோதரர்கள், விதவைகளாகி வீடு திரும்பிவிட்ட சகோதரிகளின் பின்னணியில் தனக்கென்று அடையாளத்தை உருவாக்க, ஏற்கெனவே உள்ள அடையாளத்தை அழிக்க திருடி, பட்டிணம் போய், தலைமறைவாக கோயில்பட்டியில் வாழ்ந்து, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஆபிசில் வேலைபார்த்து, மறுபடியும் ஊர்திரும்புகிறான். ஒருநாள் நண்பன் கேசவ மாதவன் கடையில் இருக்கும்போது, அவனுடைய தந்தை வந்து அவனை வீட்டுக்குக் கூட்டிச்சென்று, அவன் நாடகம் என்று நினைக்கும்படி, அவனுக்கு தாம்பத்தியத்தின் தேவையைச் சொல்லி, ஒரு வைதீக பிராமணரின் அழகிய மகளான வேதவல்லியைத் திருமணம் செய்வதற்கு வலியுறுத்துகிறார். தனது தந்தையா, தனது அம்மாவா என்று நினைக்கும்படி இருவரும் அவனிடம் அக்கறையுடன் அன்று நடந்துகொள்கிறார்கள். 

வேதவல்லியைத் திருமணம் செய்த பிறகு, அவனுக்கு தனது அப்பா முகத்துடன் சேர்ந்து ஞாபகம் வரும் அனுமன் முகம் மெதுவாக உதிரத்தொடங்குகிறது. வேதவல்லியிடம் ஒருநாள் தனது வேலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவள் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஸ்வஸ்ரூபம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஜீவனும் தனது காரியத்தை வகுத்துக்கொள்ளும் என்கிறாள். இப்படியாக சாரதிக்கு தனது தந்தை சாமி ஐயங்கார், கோயில்பட்டி ஆசிரமத்தில் அவனை உறவுக்கு அழைத்த சகோதரி சாரதா, ஸ்டாலின் பக்தர் பராங்குச நாயுடு, நண்பன் கேசவ மாதவன் உட்பட எல்லாரும் வெறும் நிழல்களாகத் தெரியத் தொடங்குகின்றனர்.

பெரிய குரங்கு என்றே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தந்தை, அவரது மரணத்துக்குப் பிறகு சாமி ஐயங்காராக நமக்கு, தனது சுயரூபத்தை மறந்து கர்ம பந்தத்தில் சிக்கிய பரிதாபத்துக்குரிய, இருபதாம் நூற்றாண்டில் தங்கள் சுதர்மத்தில் நிற்கமுடியாமல் தோற்று நின்ற பிராமணர்களின் பிரதிநிதியாக சாரதியால் நினைவுகூரப்படுகிறார்.

‘நிழல்கள்' என்ற முதல் நாவலிலேயே சாமி ஐயங்காரின் 'மரணம்' அதுவரை அவனுக்குத் தெரிவிக்காத ஒன்றைச் சொல்லிவிடுகிறது. 

திருமண வயதிலிருக்கும் பார்த்தசாரதியை திடீரென்று ஒரு நாள் பட்டப்பகல் வெயிலில் கேசவமாதவனின் கடையிலிருந்து அழைத்துவந்து, அவன் மனத்துக்குள் நிழல் போல நெளியும் ஒன்றை அவன் தந்தை அம்பலப்படுத்தியதை அவன் நினைவுகூர்கிறான். “பார்த்தா! உள்ளே நுழைந்ததுண்டா?” என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார். பார்த்தசாரதிக்கு, தன்னிடம் தந்தை இப்படி அப்பட்டமாகக் கேட்டது பிடிக்கவில்லை. அத்துடன் மேலும் சொல்கிறார். “பெருமாள் கோவில் அர்ச்சகரின் ஏகபுதல்வி. சூடிக்கொடுத்த நாச்சியாரின் திவ்யவடிவம்.”

சாரதியின் தந்தையின் மூலம்தான் நவீனனுக்கு 'உட்சென்று வெளியில் உலவும் வித்தையாக' 'லிங்கப் பிரதிஷ்டையும் குகைஞானமும்' சித்தித்திருக்கும் போலும். 

இப்படி திருமணத்துக்குச் சம்மதித்து வாழவந்த வேதவல்லியோ, ஒவ்வொரு ஜீவனுக்கும் அதற்குரிய சுயரூபம் இருக்கிறது என்பதைச் சொல்லி சைதன்யத்தைக் காண்பிக்கும் குருவாக ஆகிறாள். 

‘நிழல்கள்' நாவலின் துவக்கத்தில் சுசீலா மைசூர் போய்விட்டதாக எஸ். நாயர் சொல்கிறான். வருவதற்கு இரண்டு வாரமாகும் என்ற தகவலோடு அவள் நாவலிலிருந்து விடைபெற்றுவிடுகிறாள்.

அவள் போனபின்னர்தான் சாரதி, தனது கதையுடன் வருகிறான். சாரதி, கேசவ மாதவன் என நகுலன் நாவலின் கதாபாத்திரங்கள் எல்லாருக்கும் நகுலனுக்கு நெருக்கமாக அவரது வாழ்க்கையில் இருந்த எழுத்தாளர்களின் சாயல் இருந்தாலும், அந்தச் சாயலை விட்டுவிட்டு நகுலனின் கதைகளைப் படிப்பதுதான் சரியான முறைப்பாடென்று கருதுகிறேன்.

நிழல்கள் நாவல் இப்படித்தான் தொடங்குகிறது. 

சாரதி சொன்னது : நான் அனுபவத்தைக் கண்டு அதனுள் நுழையும்பொழுது, நான் ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு என்பதை உணர்கின்றேன். ஆனால் எனக்கு ஒரு ஸ்வஸ்ரூபம் இருப்பதாகவும் உள்ள ஒரு பிரக்ஞை என்னிடமிருந்து எப்பொழுதும் விலகுவதில்லை.

நவீனன் அடிக்கடி எழுதும் சுசீலா பற்றி, அது யார் என்று கேட்கிறான் சாரதி.

நவீனன், “என் மனதின் பைத்திய நிழல்" என்கிறான் நவீனன்.


Comments