1.
மினாரெட்
புதைக்கப்பட்ட
ஒரு நாட்டுக்கு நான் திரும்பியிருக்கிறேன்
களிமண் விளக்குகளின் திரிகளை கடுகெண்ணெய் கொண்டு நனைத்து
கோள்களில் கீறப்பட்டுள்ள செய்திகளை வாசிக்க
ஒவ்வொரு இரவும் யாரோ ஒருவன் மினாரெட்டின் படிகளில் ஏறிச்செல்கிறான். தொலைந்து போன முகவரிகளைக்
கொண்ட கடிதங்களின் சேகரத்திலிருந்து தபால் வில்லை ஒட்டப்படாத கடிதங்களை
அவனது விரல் ரேகைகள்
ரத்து செய்கின்றன
ஒவ்வொரு வீடும்
புதைக்கப்பட்டு விட்டது
அல்லது காலியாக இருக்கிறது
காலியாக?
ஏனெனில் நிறைய பேர் தப்பினார்கள், ஓடினார்கள்
சமவெளிகளில் அகதிகளானார்கள்
இப்போது அவர்களுக்கு
ஒரு பெரும் பனிப்பொழிவு
மலைகளைக் கண்ணாடியாக மாற்றவேண்டும்
அவர்களுக்கு.
நம்மை அவர்கள் அதனூடாகப் பார்ப்பார்கள்
சுவர் போலச் சூழும் நெருப்பிலிருந்து காக்க
வீடுகளைத் தரையில் புதைப்பதை.
ராணுவ
வீரர்கள் பற்ற வைக்கிறார்கள் தணல்களை ஊதிப் பெருக்குகிறார்கள் எம் உலகத்தை
சட்டென்று பற்றும் காகிதக்கூழ் பொம்மையாக்குகிறார்கள்
தங்கம் பதிக்கப்பட்ட காகிதக்கூழ் பொம்மைகளாக
ஆக்குகிறார்கள்
பின்னர் சாம்பலாக்குகிறார்கள்.
தொழுகைக்கு அழைப்பவர் இறந்தபிறகு
எல்லா அழைப்புகளும் அற்றுபோனது நகரம்.
எரிப்பதற்காகக் கூட்டிய இலைகளைப் போலானது
வீடுகள்
இப்போது ஒவ்வொரு இரவும் எமது வீடுகளை
நாங்கள் புதைக்கிறோம் - அவர்களுடையதையும், காலியாக விட்டுச் செல்லப்பட்டவை அவை.
நாங்கள் இறைவிசுவாசம் கொண்டவர்கள். அவர்களது வீட்டுக்கதவுகளில் நாங்கள் மலர்வளையங்களைத்
தொங்கவிடுகிறோம்.
கூடுதல் விசுவாசத்துடன் நாங்கள் நம்புவது
ஒவ்வொரு இரவும் சுவரெனச் சூழும் நெருப்பையும்
அதன்பின் கவியும் இருளையும்.
2.
நாங்கள்
நெருப்புக்குள் உள்ளோம், இருளை எதிர்நோக்கியபடி,’
தெருவில் கிடக்கும் ஒரு தபால் அட்டை சொல்கிறது.
‘யார் ரத்தத்தை முகந்து ஊற்றுபவனோ அவனாக இருக்க விரும்புகிறேன். உனது கைகளை நனைக்க.
அல்லது
குளிரில்
என்னுடய கைகளை விட்டுவைப்பேன்
மழை, மசியாகவும்
வலியின் நுனியில் இருக்கும் எனது விரல்கள் முத்திரைகளாகவும் மாறி
தபால் வில்லைகளை ரத்து செய்வதற்காக’
பைத்திய
வழிகாட்டியே! தொலைந்தவை இப்படிப் பேசுகின்றன. சாம்பலாகி விட்ட ஒரு நாட்டின் மேல்
கவிகின்றன. மாய இதயமே, அவன் உயிருடன் இருக்கப் பிரார்த்தி. நான் அவனைக் கண்டுபிடிப்பதற்காக,
அவன் எனக்கு எழுதாததற்கான காரணத்தை அறிந்துகொள்ள, இந்த மழையில் திரும்பியிருக்கிறேன்.
நான்
பெருமதியான பணத்துடன் வந்திருக்கிறேன், இப்போதே அரிதாகி விட்ட புதிய தபால் தலைகள்,
தம் மேல் எந்த தேசத்தின் பெயரும் இல்லாத வெறும் தபால் வில்லைகளை வாங்குவதற்காக. விளக்கொன்று
இல்லாமல் நான் அவனை காலியான, புதைக்கப்பட்ட வீடுகளில் தேடுகிறேன் - புகையின் கதவுகளைத்
திறந்தபடி, இருட்டில் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் அவனது சாம்பல்- தடுத்து நிறுத்துகிறது
:
‘எல்லாம்
முடிந்துவிட்டது, எதுவும் மிஞ்சவில்லை.’ அவனைக் கண்டடைய
மௌனத்தை ஆடியாக்கி அவனது குரலைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
நெருப்பு, அலைகளாக ஓடித்திரிகிறது. நான் அந்த நதியைக் கடக்க வேண்டுமா?
ஒவ்வொரு
தபால் நிலையமும் அடைக்கப்பட்டுள்ளது. யார் உயர்தகுதிச் சான்றிதழ்களையும் என்னுடைய செய்திகளையும்
யார் பட்டுவாடா செய்வார் சிறைகளுக்கு?
அவனுக்கான
எனது கடிதங்களை மௌனம் மட்டுமே தற்போது கண்டுபிடிக்க
முடியும். அல்லது பாழ்பட்ட ஒரு அலுவலகத்தின் இருண்ட ஜன்னல் கண்ணாடிகள்.
3.
"தொலைந்தவற்றின்
முழுமையான வரைபடமும் விளக்கொளியில் பரிசோதிக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்து
போனதிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலனாய் இருக்கிறேன். நான் உயிருடன் இருக்கிறேன்,
சீக்கிரம் வா. வெளிச்சத்தில், சில சமயங்களில் வெண்மையாகவும், இருண்மையாகவும், கிட்டத்தட்ட
ஒரு பைஸ்லி வடிவமாகவே தெரிய வேண்டும். அதன் பசைகொண்ட பின்புறத்தில் ஈரம் உள்ளது.
அது இலையுதிர் காலத்தின் இறுதி தேசத்தில் துளிர்க்கிறது - அதை வாங்கிவிடு, நான்
ஒரேயொரு முறை தான் வெளியிடுவேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் அற்றுப்
போவதற்குள் வா.”
இந்த
இருளடர்ந்த மழையில், நம்பிக்கையோடு இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை
நீ உணரவே வேண்டும்.
“எதுவும்
மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,”
அவனது
குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை
நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த
மாயமான கடித உறைகளைத் திற.” நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள்
இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன்.
இது
உன்னுடைய வலி. அதை நீ உணரவே வேண்டும். உணர், இதயமே, அவனது பைத்தியக்கார மறுப்புக்கு
விசுவாசமாக இரு - களிமண் விளக்குகளின் திரிகளை அவன் நனைப்பதற்காகவும், ஒவ்வொரு இரவும்
அவற்றை ஏற்றி, கோள்களில் கீறப்பட்டுள்ள செய்திகளை வாசிப்பதற்காக இந்தப் படிகளில் ஏறவும்.
அஞ்சல் தலைகளை ரத்து செய்வதற்கான முத்திரைகள் அவனது கைகள். இது ஒரு காப்பகம். நான்
அவனது குரலின் மிச்சங்களைக் கண்டுபிடித்துவிட்டேன், அந்த எல்லைகளற்ற ஏக்கங்களின் வரைபடத்தை.
4.
நான்
அந்தக் கடிதங்களை வாசிக்கிறேன், காதலர்களின், பைத்தியங்களின், அவனுக்கு நான் எழுதிய
பதில்களே வராத கடிதங்களையும்.
நான்
தீபங்களை ஏற்றி, எனது பதில்களை அனுப்புகிறேன். கண்டங்களுக்கு அப்பால் செவிட்டு உலகங்களுக்கு
தொழுகை அழைப்பு விடுக்கிறேன்.
எனது
புலம்பலோ எண்ணற்ற அரற்றல்கள், முடிவு மிக அருகில், எப்போதும் முடிவு நெருக்கத்தில்
இருக்கும் இந்த
உலகத்துக்கு சென்று சேராத கடிதங்களைப் போன்ற அரற்றல்கள்
எனது
வார்த்தைகள் அடர்ந்து பெய்யும் மழைப் பொதிகளாக, சமுத்திரங்களைத் தாண்டி, அவற்றின் முகவரிகளுக்குப்
பயணிக்கின்றன.
இதை
எழுதும்போது மழை பெய்கிறது. எனக்குப் பிரார்த்தனைகள் இல்லை, அது உள்ளே அடைபட்டிருக்கும்,
அது நாங்கள்! அது நாங்கள் என்ற கூக்குரல் மட்டுமே!
சிறைகளில்
நொறுங்கும் உடல்களைப் போன்றெழும் கதறல்கள் தான் அவர்களின் கடிதங்கள். தற்போது ஒவ்வொரு
இரவும் மினாரெட்டின் படிகளில் என்னை வழிநடத்திச் செல்கிறேன். பித்தேறிய திண்ணிழலுருவம்
அங்கே, பைஸ்லேக்களை மேகங்களுக்கு எறிகிறேன். தொலைந்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்
: அவர்கள் புலரிக்காக, இந்த அவர்களது இருண்ட தேவைக்காக, காற்றுக்கு லஞ்சமளிக்கின்றனர்.
ஆனால் சூரியன் இல்லை. இங்கே சூரியன் இல்லை.
அப்படியெனில்
நான் காப்பாற்ற முடியாத நீ இரக்கமற்றவனாகவே இரக்கமற்றவனாகவே இரு- உனது கூப்பாடுகளை
எனக்கு அனுப்பு, இதுதான் வழியென்றால்:
ஒரு
காதலிக்கு அனுப்பப்பட்ட சிறைவாசியின் கடிதத்தைப் பார்த்தேன் -
ஒன்று இப்படித் தொடங்குகிறது : ’இந்த வார்த்தைகள் உன்னை அடையாமலேயே போகலாம்’.
இன்னொன்று
இப்படி முடிகிறது : ’சருமம் உனது ஸ்பரிசம் இல்லாமல் பனியில் கரைகிறது.’ அத்துடன் நான்
பதில்போட விரும்புகிறேன் : நான் என்றென்றைக்குமாக சீவித்திருக்க விரும்புகிறேன். வேறு
என்ன என்னால் சொல்ல முடியும்?
இதை
எழுதும்போது மழை பெய்கிறது. பைத்திய இதயமே, தைரியமாய் இரு.
Comments