ஈராக் போர் சார்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் தனியான அனுபவத்தைக் கொடுத்த திரைப்படம் ‘HURT LOCKER’. இஸ்லாமியத் தீவிரவாதம் சார்ந்த அமெரிக்க தரப்பிலிருந்து பேசும் படைப்புகளில் ஒன்றுதான் ஹர்ட் லாக்கர் என்றாலும், போர்க்களத்திலேயே அபாயகரமான பணியான வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் மூன்று வேறுபட்ட ஆளுமையையும் குண இயல்புகளையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைக் களனை நெருங்கிக் காண்பித்த படைப்பு என்பதால் திரைப்பட வரலாற்றில் முத்திரை படைத்த படைப்பு இது. சமீபத்தில் ‘HURT LOCKER’ திரைப்படத்தின் திரைக்கதைப் புத்தகம் எனக்குப் படிக்கக் கிடைத்தபோது, அந்தப் படத்தின் திரைக்கதையை தனது சொந்த கள அனுபவத்திலிருந்து எழுதிய பத்திரிகையாளர் மார்க் போல்-ஐத் தெரிந்துகொண்டேன்.
2004-ம் ஆண்டின்
குளிர்காலத்தில், உலகிலேயே வசிப்பதற்கு அபாயகரமான பிராந்தியங்களில் ஒன்றான பாக்தாத்தில், போர்ச்சூழல் சார்ந்த நேரடி அனுபவங்களைப் பெறுவதற்காக மார்க் போல் தனது பயணத்தை
மேற்கொண்டார். ராணுவத்திலேயே அதிகம் கவனிக்கப்படாத பிரிவான வெடிகுண்டுகளைச் செயலிழக்க
வைக்கும் எக்ஸ்ப்ளோசிவ் ஆர்டினென்ஸ் டிஸ்போசல் டீமின்(EOD) பணிகள் மீது அவருக்கு ஈடுபாடு
ஏற்பட்டது. அப்படியான சூழலில் பணியாற்றுவதற்கு முதலில் அவர் தனது ரத்தப் பிரிவு பற்றிய
விவரங்களையும், இறந்துபோனால் எப்படி ஈமச்சடங்கு செய்யவேண்டும் என்ற விவரங்களையும், அவர்
ராணுவத்துக்கு அளிக்க வேண்டியிருந்ததைச் சொல்கிறார்.
புழுதியும்,
தாங்கமுடியாத வெப்பமும் நிலவும் பாக்தாத்தில் தினசரி அமெரிக்கப் படைகளை எதிர்கொள்வதற்கு
வெடிகுண்டுத் தாக்குதல்கள் தெருக்களில் நடந்த நேரம் அது. அமெரிக்க ராணுவத்தினர் மட்டுமின்றி,
பாக்தாத்தில் வசிக்கும் அப்பாவி மக்களும் இந்த வெடிகுண்டு தாக்குதல்களால் உயிரையும்
உடைமைகளையும் பலிகொடுத்து வந்தபோது, மார்க் போல் தனது களப்பணியை மேற்கொண்டார். தெரியாத
அந்நிய நாட்டில் வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்கும் அபாயம் வாய்ந்த வேலையை அன்றாடம்
செய்பவர், என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார் என்பதைக் காண்பிக்கும் திரைப்படமான
ஹர்ட் லாக்கருக்கான திரைக்கதையை, இந்த அனுபவங்களிலிருந்தே அவர் எழுதியதாக, இயக்குனர்
கேத்ரின் பிகலூ குறிப்பிடுகிறார்.
உலகத்திலேயே
அதிபயங்கரமான பணியைச் செய்யும் மூன்று கதாபாத்திரங்களின் கண்கள் வழியாகவே விரியும்
சினிமா ஹர்ட் லாக்கர்.
பாக்தாத்தில்
தினசரி பத்து முதல் இருபது வெடிகுண்டு வெடிப்புகள் வரை நிகழ்ந்த 2004-2006 காலப்பகுதியில்,
ஹர்ட் லாக்கர் திரைப்படத்தின் முதல் காட்சி துவங்குகிறது. அதற்கு முன்னர் நடந்த எந்தப்
போரிலும் இதுபோல வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படவும்
வேலை செய்யவும் இல்லை என்கிறார் மார்க் போல்.
போர் என்பது
போதை மருந்தைப் போல சக்திவாய்ந்த பீடிப்பை ஏற்படுத்துகிறதென்ற வாக்கியத்துடன்தான் ஹர்ட்
லாக்கர் திரைப்படம் தொடங்குகிறது.
வெடிகுண்டுகளைச்
செயலிழக்கச் செய்வதற்கென்று ஏற்படுத்தப்பட்ட நியமங்களைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக
தன்னிச்சையாகச் செயல்படும் சார்ஜ்ண்ட் ஜேம்ஸ், சக அணியினரிடம் மதிப்பையும் அச்சத்தையும்
ஒரு சேர ஏற்படுத்துபவர். சார்ஜண்ட் சார்போர்ன் ஜேம்ஸ்க்கு நேர் எதிரான இன்னொரு வசீகரமான
கதாபாத்திரம். அந்த அணியில் இளைஞனாக வரும் கதாபாத்திரம் ஓவன் எல்ரிட்ஜ். அவனிடம் மிச்சமிருக்கும்
களங்கமின்மையை போர் படிப்படியாக விழுங்குகிறது. ஜேம்ஸ் போல, சார்போர்னைப் போல அவன்
இன்றி அச்சத்தை வெளிப்படையாக கண்களில் வெளிப்படுத்தும் இளைஞன்.
சார்ஜண்ட் ஜேம்ஸ்,
போர்ச் சூழலில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கும் பணியில் இருக்கும்போது மட்டுமே தன்னை
உயிர்ப்புடன் உணர்கிறான். ஓய்வு வேளைகளில் அணியினருடன் இருக்கும்போது அத்தனை உற்சாகமில்லாமலேயே
கழிக்கிறான். அவனது நாயகத் தன்மை எல்லாரிடமிருந்தும் விடுபட்டு வெடிகுண்டை நோக்கி நெருங்க
நெருங்கவே உருவெடுக்கிறது. அந்தத் தனிமையின் ஊசிமுனையில் மட்டுமே அவன் நாயகன். வெடிகுண்டைச்
சுற்றியிருக்கும் வயர்களை உயிர்பறிபோகும் நொடிகளின் இடைவெளியில் ஒவ்வொன்றாக வெட்டிச்
செயலிழக்கும்போது அவன் உடலுறவின் பறத்தல் அனுபவத்தை அடைகிறான்.
வெடிகுண்டைச்
செயலிழக்க வைக்கச் செல்லும்போது அணியும் கவச உடை அணிவதைப் பற்றி ஜேம்ஸ் கதாபாத்திரத்தில்
நடித்த ரென்னர் பேசுகிறார். சக்திவாய்ந்த வெடிப்பில் அந்தக் கவச உடை, அணிந்திருப்பவரைக்
காப்பாற்றுவதில்லை. “அந்த உடைக்குள் சென்றவுடன் மிகவும் தனிமையாக இருக்கும். ஆனால்,
அதில் ஏதோ சொல்லமுடியாத நிம்மதி இருக்கிறது. ஜேம்ஸுக்கு அது கருப்பையாக இருந்திருக்கும்.
ஒரு மனித உயிரியாக ஜேம்ஸ் அந்த உடையில் மட்டுமே பாதுகாப்பாக உணர்ந்திருப்பான், ஒரு
ராணுவ வீரனாக அல்ல.” என்கிறார்.
ஹர்ட் லாக்கர்
போரின் சூழலை அப்படியே கொண்டுவர முயன்ற படம் என்பதால் நவீன போர் தளவாடங்களின் சத்தங்களை
உருவாக்குவது பெரும் சவால் என்று கூறியுள்ளார் ஒலிக்கலவை செய்த ரே பக்கெட்.
திரைப்படத்தின்
ஒவ்வொரு சட்டகத்திலும் பயன்படுத்தப்பட்ட ஒலி அங்கேயுள்ள சூழலுக்கு நெருக்கமானது. ஆயத்தமாக
கிடைக்கும் ஒலிகளைப் பயன்படுத்தவில்லை என்கிறார்.
போரால் பாதிக்கப்பட்ட
பாக்தாத்தை திரைப்படத்தில் சித்தரிக்க பாக்தாத்துக்கு சில மணிநேரங்கள் பயணத்தொலைவில்
உள்ள ஜோர்டானிலேயே படம்பிடித்திருக்கிறார் இயக்குனர்.
மூளை, தலைக்குள்
வேகுவது போன்ற 105 முதல் 110 டிகிரி வெப்பத்தில், வேலை செய்யவேண்டியிருந்ததை நடிகர்களும்
படப்பிடிப்புக் குழுவினரும் இந்த நூலில் பகிர்ந்துள்ளனர். உடலுக்கும் மனத்துக்கும்
மிக நெருக்கடியான சூழலில் இந்த வேலையைச் செய்தாலும் ஒரு மனிதஜீவியாக, அட்டகாசமான அனுபவம்
இது என்கிறார் ரென்னர்.
ஹர்ட் லாக்கர்
காண்பித்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் படையினரின் கதைக்கு அடிப்படையான தகவல்களையும்
இந்த நூல் நமக்குச் சொல்கிறது.
2004-ம் ஆண்டு
ஈராக்கில் 150 பயிற்சி பெற்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இருந்துள்ளனர். போர்க்களத்தைவிட
இறக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகம். வெடிகுண்டைச் செயலிழக்க வைக்கும் வீரர்களின்
தலைக்கு 25 ஆயிரம் டாலர் பிணைத்தொகையை தீவிரவாதிகள் வைத்திருந்தனர்.
வெடிகுண்டு
வெடித்து சிதறும்போது அதிலுள்ள உலோகத்துண்டுகள் நொடிக்கு இரண்டாயிரத்து 700 அடிகள்
பயணிக்கும்.
விவாகரத்துகளும்,
பிரிவுகளும், உறவுச்சிக்கல்களும் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் பிரிவில் இருப்பவர்களுக்கு
அதிகம்.
வெடிகுண்டைச்
செயலிழக்க வைக்கும் படையினர் முதலில் இரண்டாம் உலகப் போரில் உருவாக்கப்பட்டனர்.
ப்ளோரிடாவில்
உள்ள எக்லின் விமானப்படைத் தளத்தில் வெடிகுண்டு செயலிழக்க வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தன்னம்பிக்கை, நேரடித்தன்மை, அதீதமான சூழல்களிலும் அழுத்தங்களைத் தாங்கும் திறன், உணர்வு
ரீதியான திடம் உள்ளவர்களே இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எந்திரவியல் செயல்திறனில்
தேர்ந்தவர்களே கடும்பயிற்சிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஒரு போரில்
போர்வீரன் என்பவன் மனிதத்தன்மை களையப்பட்டு முற்றிலும் ஒரு ஆயுதமாக மாறுவதை ஸ்டான்லி
கூப்ரிக்கின் ‘புல் மெட்டல் ஜாக்கட்’ சித்தரித்திருக்கும். போரின் அதிதீவிர முனையில்
செயல்படுபவன் அந்தத் தீவிரத்தின் ஊசிமுனையைத் தவிர வேறெங்குமே தன்னைப் பொருத்திக் கொள்ள
முடியாமல் ஆகும் முறைப்பாட்டை, ஹர்ட் லாக்கரின் நாயகர்களில் ஒருவரான ஜேம்ஸ் நிஜமாக நிகழ்த்துகிறார்.
போரிலிருந்து
ஓய்வுக்காக அமெரிக்கா திரும்பி குடும்ப வாழ்க்கையில் ஒன்றமுடியாமல் மீண்டும் ஈராக்குக்குத்
திரும்பும் ஜேம்ஸை உந்தும் போதை எது.
மரண அபாயம்
என்று தெரிந்தும் ஏன் அந்த சாகசம் நமக்குத் தேவையாக இருக்கிறது. மனிதனுக்கு ஏன் போர்
தேவையாக இருக்கிறது என்ற கேள்விகளைத் தூண்டும் படமான ‘தி ஹர்ட் லாக்கர்’-ஐ நான் பெருந்தொற்று
நாட்களில் திரும்பத் தேடிப் பார்த்தேன்.
அதன் திரைக்கதைப் புத்தகம் எனக்கு அந்தத் திரைப்படத்தைப் பற்றிய புரிதலை மேலும் வழங்கியது. இயக்குனர் கேத்ரின் பிகலூவின் முன்னுரையும் குறிப்புகளும் புகைப்படங்களும் கூடுதலாகப் பயனுள்ளவை.
Comments