அமாவாசை தினங்களில்
சாப்பிடும்
உளுந்த வடைகளில்
அம்மா
அவளது ருசியாக
எப்படியோ அவற்றில்
இறங்கிவிடுகிறாள்
அவள் உப்பில்
தரிக்கிறாளா
உப்பின்மையிலா?
அவள் இங்கிருந்து
கிளம்பிப் போன அன்று
என் வீட்டில்
வளர்க்கும்
டெசர்ட் ரோஸ்
பூப்பதை நிறுத்தியது
மண்சத்தா சூரியனின்
ஒளிச்சத்தா
அவள் தந்துவந்த
நிழல் சத்தா
எந்த ஊட்டம்
குறைந்ததென்று
தெரியவில்லை
ஏன் எனது டெசர்ட்
ரோஸ்
மீண்டும் பூக்கவேயில்லை
தொட்டியை இடம்
மாற்றி
தற்போது வைத்திருக்கிறேன்
டெசர்ட் ரோஸை
மீண்டும்
எப்படியாவது
பூக்க வைக்க வேண்டும்
நேற்று முன்மதியம்
ஒரு கருப்பு
வண்ணத்துப்பூச்சி
அதன்
இலைகளின் மேல்
பறப்பதைப் பார்த்தேன்
அது நற்சகுனமா
தீச்சகுனமா
மார்க்வெஸுக்கு
நிச்சயம் தெரிந்திருக்கும்
நான் செடிக்கு
மட்டுமா
தினசரி நீர்
ஊற்றுகிறேன்.
இரவில் நான் உறங்கும் அறையின் சுவரில்
தன் இலைகளின்
உருவைப் பெருக்கி
படர்த்துகிறது
அதற்கும் தானே
நீர் ஊற்றுகிறேன்.
அம்மா
உனக்குத் தெரிந்திருக்கலாம்
தாம் மட்டுமே
அலையும் இடமாக
பூனைகள் விதானங்களை
எப்போது ஆக்கிக் கொள்கின்றன?
Comments