Skip to main content

சல்மான் ருஷ்டியின் தனிமைவாசம்


 பெரும்பான்மைவாதம், மத அடிப்படையிலான கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் அனைத்தும் கொள்ளை நோய்கள் தான். இந்தக் கொள்ளை நோய்கள் தொடரும்வரை அதனால் பாதிக்கப்பட்டவர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அந்தக் கொள்ளை நோய் சக்திகளுடன் இணையாமல் இருப்பதும் நம்முடைய  விருப்பின்பாற்பட்டதுதான் என்றும் நம்மை எச்சரிக்கிறார் ஆல்பெர் காம்யூ. கொள்ளை நோய் போன்ற சக்திகளுடன் இணையாமல் வாழ்வதென்பது அத்தனை சுலப சாத்தியமல்ல என்றாலும் அதுவே உண்மை என்றும் சொல்கிறார் காம்யூ.

மார்க்வெஸ் பற்றிய எழுதிய ஒரு கட்டுரை தவிர, சல்மான் ருஷ்டியின் புனைவெழுத்தில் ஒரு வாக்கியத்தைக் கூட நான் வாசித்திருக்கவில்லையாயினும், அவரது கல்லீரலில் கத்திக்குத்தித் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த இரவிலிருந்து, இரண்டு நாட்கள் அந்த வலியை நானும் உணர்ந்தேன். உச்சபட்சப் புகழிலும், சௌகரிய நிலையிலும் கூட,  அநாதை வாசத்திலிருந்த ஒரு எழுத்தாளனுக்கு நிகழ்ந்திருக்கும் தாக்குதல், என் போன்ற எல்லா உயிர்கள் மீதும் நிகழ்த்தப்பட சாத்தியமுள்ளதுதான்.

கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறி, உலகின் மிக சுதந்திரமான வெளி என்று கருதப்படும் அமெரிக்காவில், சல்மான் ருஷ்டியின் வயிற்றில் இறங்கியிருக்கிறது. அவர் தி இந்து ஆங்கில தினசரிக்காக டிஷானி தோஷிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இந்த அடையாளவாதம், தூய்மைவாதத்தைச் சந்தேகித்துப் பேசியுள்ளதைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்தியாவை இன்று ஆளும் பாஜக அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்து – முஸ்லிம் பிளவுவாதம் இந்த அடையாளவாதத்தை அடிப்படையாகக் கொண்டதே. பிரெக்சிட் தொடர்பான விவாதம் ஏற்பட்ட போது, இங்கிலாந்திலும் தேசிய அடையாளம் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டதை சல்மான் ருஷ்டி நினைவுகூர்கிறார். அதையொட்டி எழும் தூய்மைவாதம் குறித்து சல்மான் ருஷ்டி கூறிய கருத்து என்னைக் கவர்ந்தது.  

தூய்மைவாதம் குறித்து எப்போதெல்லாம் பேச்சு தொடங்குகிறதோ அதனோடேயே இன்னொரு புறத்தில் மக்களும் சாகத் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். ஜெர்மனியில் எப்போது நாஜிக்கள் இனத்தூய்மைவாதம் குறித்துப் பேசத்தொடங்கினார்களோ அதை, பெரும் இனப்படுகொலை ஒன்று தொடர்ந்ததை நினைவுகூர்கிறார்.

வாழ்க்கையை அதுபோகும் இயல்பில் கலந்து அழுக்காகவே விட்டால் என்ன என்று கேட்கிறார்.

குழந்தைகளும் நாய்க்குட்டிகளும் காதலும் அழுக்கு, தூய்மையற்றதற்கு அருகில் தானே வாத்சல்யமாக இருக்கின்றன. கலந்து உழைக்கும்போது கலந்து விளையாடும்போது அழுக்கும் வியர்வையும் சேரத்தானே செய்கிறது.

தனிமையின் அரங்கில்தானே தூய்மை, மயில்கள் உடனிருக்கும் பாவனையோடு, நமது தேசத்தின் தலைநகரத்தில் கொலு வீற்றிருக்கிறது.

நாம் அழுக்காக, தூய்மையின்றி இருந்தால் தான் என்ன? என்று சல்மான் ருஷ்டி கேட்பதன் மூலம், நாம் பிறரைக் கொல்லாமல் இருந்தால் என்ன என்றும் கேட்கிறார்.

நாம் எல்லாரும் நம்மை மிகக் குறுகலான வகையில் வரையறுத்துக் கொள்ள இந்த நாட்களில் நிர்பந்திக்கப்படுகிறோம். நமது சுயம் என்பது அப்படி வரையறுத்துவிட முடியாதது என்பதை வெளிப்படுத்தும் வடிவம்தான் நாவல் என்கிறார் சல்மான் ருஷ்டி. ஒரு நபரிடம் இருக்கும் சுயங்கள் மிகவும் சிக்கலானவையும் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையும் கூட என்கிறார்.

மனித சுயம் என்பது பலபடித்தானது என்ற கருத்துதான் இலக்கியத்தின் அடிநாதம் என்கிறார். நாவலின் வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான கதாபாத்திரங்களின் அடிப்படையும் இதுதான் என்கிறார் சல்மான் ருஷ்டி.  

கரமசோவ் சகோதரர்கள் நாவலின் நாயகிகளான கத்ரீனாவும், க்ரூசென்காவும் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றனர். தான் பேசியதற்கே முரணாகப் பேசி அடுத்தடுத்த பக்கங்களில்  நம்மைத் திணறடிப்பவர்கள். தந்தை கரமசோவ், கிட்டத்தட்ட தனக்கே எதிரான வாதங்களை வாசகர்களுக்கு மனமுவந்து தருபவர்.

பணமோ புகழோ ஒருவருக்கு நேசத்தைத் தந்துவிடாது என்கிறார் சல்மான் ருஷ்டி.

எவ்வளவு நண்பர்கள் சூழ இருக்கும்போது ஏதோ ஒன்று நம்மில் மிகத் தனிமையாக இருக்கிறதென்கிறார் சல்மான் ருஷ்டி. யாருடனும் இணைய முடியாத உடைந்த ஒரு பகுதி ஒவ்வொருவரிடமும் சிறியதாகவோ பெரியதாகவோ இருந்துகொண்டிருக்கிறதென்கிறார்.

அந்தத் தனிமையிலிருந்து, உங்களை உணர்கிறேன் ருஷ்டி. 

Comments