Skip to main content

நான் பிறந்த க-வி-தை : 3 சாவின் சுவை நகுலன்


(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன். குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன் .அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகி வருகிறது.)

பிறந்து உலகின் விவரங்கள் சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கிய நாள் முதலாக மரணத்தைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் மரணங்களைப் பார்ப்பதன் வழியாக மரணத்தை நாம் உணர்வதில்லை; ஒவ்வொரு மரணத்தையும் சுற்றி இருக்கும் உயிர்ப்பை, உயிர்த் தன்மையை, உயிர்கள் தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. இங்கே ஒருவர் இறந்து ஒருவர் இருக்கும் குரூரத்தின் உயிர்ப்பைத் தான் பிறரின் மரணத்தில் அனுபவிக்கிறோம். இறுதிச் சடங்குகளில் சவப்பெட்டியோடு சணலில் கட்டப்பட்டு பயணிக்கும்  பறவை துள்ளி சவ வண்டியில் அலைவதைப் போன்ற உயிர்ப்பைத்தான் ரகசிய ஆசுவாசத்தைத் தான் நமக்கு இன்னொருவரின் மரணம் தருகிறது. 

சாவை மொழிவழி அனுபவமாக்கி  சாவை உண்மையாகத் தெரிந்துகொள்வதற்கு உதவியவர் நகுலன் தான். இந்த உலகத்தில் விளங்கும் ஒரு சாவு மட்டுமல்ல சாவு என்று எனக்குச் சொன்னவரும் நகுலன் தான். வாழ்வளவுக்கு சாவும் சாவின் ருசிகளும் பலவிதம் என்று உரைத்தவர் நகுலன். இருந்து இருக்கும் சாவு, சுகமுள்ள சாவு, தன்னைக் கழற்றிப் போட்ட சாவு, தன் கரைதலில் நிகழும் சாவு, கண்கள் கண்ணாடியாகும் போது சுயம் கண்ணாடியாக ஆகும்போது வரும் சாவு என்று அவர் அனுபவிக்கத் தரும் சாவுகள் அத்தனை. 

எந்திரப் பொறியியலில் டிப்ளமோ படித்து முடித்து அதுசார்ந்த வேலை எதிலும் தரிக்க முடியாமல், வேறு எந்த வேலைக்கும் என்னைத் தயார்ப்படுத்தியும் கொள்ளாமல் திருநெல்வேலியில் இருந்த நாட்கள் அவை. காப்ரியேல் கார்சியா மார்க்வேஸின் 'கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை' குறுநாவலில் வரும் கர்னலைப் போன்றே வராத ஒன்றுக்காகக் காத்திருந்தேன். வாசிப்பும் படைப்பு சார்ந்த கனவுகளையும் தவிர வெளியே புலப்படும்படியாக ஒன்றும் ஒரு வாக்குறுதியும் என்னிடம் இல்லை. வீட்டிலும் இருக்க முடியாமல் வெளியிலும் தரிக்க முடியாமல் அப்பாவின் கடுஞ்சொல்லுக்கும் அம்மாவின் கரிசனைக்கும் வேதனைக்கும் நடுவே குற்றவுணர்வோடு சுற்றிய வெயில் நாட்களில் ஒன்றில் தான் நகுலன் என் வீட்டுக்கு ஒரு கடிதம் வழியாக வந்திருந்தார்.

அப்போது திருநெல்வேலிக்கு இடம் மாறியிருந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன், விடுமுறையில் துவரங்குறிச்சிக்குப் போயிருந்த நாட்களில் அவரிடமிருந்து வந்த ரோஸ் கலர் இன்லேண்டு கடிதத்தில் தான் நகுலனின் 'வண்ணத்துப் பூச்சிகள்' கவிதை குறிப்பிடப்பட்டிருந்தது. மனுஷ்யபுத்திரன் கடிதத்தில் வேறு என்ன எழுதியிருந்தார் என்று எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர் கொண்டிருந்த மனநிலை அந்தக் கவிதையில் இருந்தது. எங்கோ போய்விட்டு சாயங்காலம் வீடு திரும்பிய எனக்கு அந்தக் கடிதம் பெரிய ஆறுதலையும் அரவணைப்பையும் தந்தது. நகுலன் தன் மொழியின் வழியாக செலுத்திய நஞ்சு அந்தச் சாயங்காலத்தை மிகவும் போதையாக்கியது. நகுலன் கவிதையில் வரும் அரளிப்பாலை அருந்தும் பறவை ஆனேன். இதுதான் கவிதை.

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன. 

இந்தக் கவிதையில் என்னைப் பாதித்த வரிகள் அப்போது, ‘வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன' என்பது மட்டும்தான். 
அந்த வரிகளைச் சுற்றி ஒரு நிசப்தம்; பெரும் அமைதி; ஒரு இணக்கமான விபரீத உணர்வை இந்தக் கவிதை தந்தது. மனுஷ்ய புத்திரன் இந்தக் கவிதை முழுவதையும் எழுதியிருந்தாரா? அல்லது என்னைப் பாதித்த வரியை மட்டும் எழுதியிருந்தாரா என்று எனக்கு இப்போது துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த வரிகளைச் சூழ மரணம் இருந்தது.
வெயிலில் பறவைகள் அலையும், வெயிலில் வண்ணத்துப் பூச்சிகள் அலையும் காட்சி நம் எல்லாருக்கும் சகஜம் தான். ஆனால் நகுலன் சொல்லும் போது ஏற்படும் அமைதியும் விபரீதமும் அலாதியானது. அதற்குப் பிறகு சென்னைக்கு வந்தபிறகு பறக்கும் ரயிலின் கோணத்திலிருந்து கல்லறைத் தோட்டங்களில் விளையாடும் சிறுவர்களை எல்லாம் வெயிலில் அலையும் பட்டாம்பூச்சிகள் என்ற காட்சியைத் தவிர்த்துப் பார்க்க முடிந்ததில்லை.    
அதே காலகட்டத்தில் நகுலனின் படைப்புலகுக்கு நெருக்கமான உணர்வைத் தரும் நகுலனின் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை காஞ்சனை சீனிவாசன் எடுத்திருந்தார். அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் ஒன்றில் நகுலனின் 'ஸ்டேஷன்' கவிதையை தான் நடத்திய 'அகவிழி' பத்திரிகையின் பின் அட்டையில் வெளியிட்டும் இருந்தார். 

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான் 
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
"அது ஸ்டேஷன் இல்லை"
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

இந்தக் கவிதையில் புரியாத வார்த்தை, புரியாத கருத்து என்று ஒன்றுமேயில்லை. ஆனால் இந்தக் கவிதை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புரிந்தும் புரியாத ஒரு விந்தையை புதிரை மாயத்தை ஏற்படுத்துவது. மறைந்தும் தோன்றுவதுமான புலியின் வரிகளைப் போன்ற அனுபவத்தை ஏற்படுத்துவது. 
நகுலன் சொல்ல வருவது எந்த நிலையத்தை? ரயில் போனபிறகு நிலையம் உண்டா? ரயில் போனபிறகு அது நிலையமா? 
000

நகுலனது உலகத்தில் சாவு, ஒன்றில்லை. காதலுக்குப் பின்னர் தொழிலின் இறுதியில் உலகைவிட்டுப் பிரிகையில் சாவுக்கு அப்பால் முதலுக்கும் முடிவுக்கும் முன்னும் பின்னும் முழுவதுமாகப் பின்னிப் பிணைந்து நில்லாமல் நின்று இல்லாமல் இருந்து தெரியாமல் தெரிந்து சொல்லாமல் சொல்லி எல்லாரும் நினைப்பதுவாய் யாவரையும் கடந்ததாக புலனுக்குப் புரியாததாக பொருளுக்குச் சிக்காததாக என்றுமே கேளவியாக எஞ்சி நிற்பது அது அதுவேயாக(எழுத்து, 1962) தொடக்கத்திலிருந்து நகுலன் சாவை வேறுவேறு வகைகளில் பரிசீலிக்கிறார்.

    
‘வண்ணத்துப் பூச்சிகள்' கவிதையில் நவீனன் இறக்கும் போது, அவரது மற்ற படைப்புகள் வழியாக, நாம் அறிந்த நண்பர்கள் கேசவ மாதவன், சிவன், உண்ணூனிப் பிள்ளை யாரும் ஊரில் இல்லை. நவீனனுக்கு உற்ற நண்பர்கள் நமக்குத் தெரியாதவர்களும் இந்தக் கவிதையில் இருக்கிறார்கள். அவர்கள் நவீனனின் விருப்பப்படி அவனைத் தலைகீழாக அடக்கம் செய்துவிட்டனர். 
யாரைத் தலைகீழாக அடக்கம் செய்வார்கள்! தற்கொலை செய்தவர்களையும் பெரும் படுகொலை நிகழ்த்தியவர்களையும் தான் அக்காலகட்டத்தில் தலைகீழாகப் புதைப்பார்களாம். 
நகுலனின் உலகத்தில் கொலைக்கும் தற்சாவுக்கும் பஞ்சமேது.

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க 
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப் பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு. 

Comments