Skip to main content

ஒவ்வொரு எறும்பும், ஷேக்ஸ்பியரைப் போல அல்லது வால்ட் விட்மனைப் போல - ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்சின் கடைசி நேர்காணல்

 


ஞானக்கூத்தன் தனது வாழ்வின் சாயங்காலத்தில் எழுதிய கவிதைகளில் 12 வயதுச் சிறுவனின் களங்கமின்மையும் விந்தையும் சிரிப்பும் கூடிவந்தது. அவரது முந்தைய முத்திரைகளாக இருந்த விஷமமும் குத்தலும் நீங்கிய கனிவை அந்தச் சிறுவன் பெற்றிருந்ததை ‘பென்சில் படங்கள்’, ‘இம்பர் உலகம்’ கவிதைத் தொகுதிகளில் காண முடிந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ், இறுதியாக அளித்த நேர்காணலை வாசித்தபோது ஞானக்கூத்தனின் அந்த இயல்புதான் ஞாபகத்துக்கு வந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்சின் விந்தை, அநிச்சயம், நகைச்சுவை, பரிவு, நெகிழ்ச்சி, நிறைவை வெளிப்படுத்தும் முழுமையான நேர்காணல் இது. 12 ஆண்டுகள் உடன் வாழ்ந்து மறைந்த செல்லப் பூனை, காதல்கள், அம்மாவின் மீது இறுதிவரை கொண்டிருந்த பிரியம் என எல்லா ரசங்களும் வெளிப்படும் நேர்காணல் இது. லோபஸ் லெக்யூப்க்கு இந்த நேர்காணலை அளித்துள்ளார்.  

பார்வையின்மை தொடர்பான பேச்சிலிருந்து அந்த நேர்காணல் தொடங்குகிறது. பார்வையிழப்பு ஏற்பட்டவுடன் அவரிடம் மிஞ்சியிருந்த ஒரே நிறம் என்று மஞ்சளைக் குறிப்பிடுகிறார். தான் அறிந்த முதல் வண்ணம் என்று மஞ்சளைக் குறிப்பிட்டு அதை மிருகக் காட்சி சாலையில் புலிகளிடம் பார்த்ததாக நினைவுகூர்கிறார்.

நேர்காணல் செய்பவர் போர்ஹெசிடம், அவரது முகம் மற்றும் கைகளை நினைவு இருக்கிறதா என்று கேட்கிறார். போர்ஹே அதற்கு இல்லை என்று பதில் அளிக்கிறார். சவரம் செய்வதற்கு முன்னரும் பின்னரும் முகத்தைக் கைகளால் தொட்டுப் பார்ப்பேன் என்று சொல்லும் போர்ஹெஸ், ஆடியின் வழியாகத் தன் முகத்தைப் பார்க்கும் வயோதிகன் யார் என்று கேட்டு வியக்கிறார். தன்னால் அவனை அறிய முடியாதென்றும் கூறுகிறார். 1957-ல் தன் முகத்தை, கடைசியாகப் பார்த்ததாகக் கூறுகிறார்.

ஒரு மனிதர் மேல் காதலில் இருக்கும்போதுதான், அந்த மனிதர் உண்மையிலேயே எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்கப்படுகிறார். படைத்தவன் எப்படி அவனைப் பார்ப்பாரோ அப்படி என்று ஒப்பிடுகிறார்.

“அப்படி இல்லாதபோது ஒருவர் மீது இன்னொருவர் காதலில் எப்படி விழ முடியும்? ஒருவேளை ஒவ்வொரு நபருமே தனித்துவமானவராக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு எறும்பும் தனித்துவமானது, அப்படியில்லாவிட்டால் அத்தனை எறும்புகள் இருக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் ஏன் எறும்புகளை அத்தனை அளவுக்கு விரும்ப வேண்டும்? கோடிக்கணக்கான எறும்புகள் இங்கே உள்ளன. ஒவ்வொரு எறும்பும் தனித்துவமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஷேக்ஸ்பியரைப் போல அல்லது வால்ட் விட்மனைப் போல. அதேபோலத்தான் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்” என்கிறார் போர்ஹெஸ்.

நகுலன் எழுதிய ‘வீடணன் தனிமொழி’ கவிதையில் ராவணன், வீடணனிடம் ஒரு எறும்பைக் கூட இவ்வளவு ஈடுபாட்டுடன் பார்ப்பாயோ என்று கேட்பது ஞாபகத்துக்கு வருகிறது.

அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அவரது படுக்கையை ஏன் மாற்றவேயில்லை என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு தனக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார். அந்தக் கட்டிலை அங்கேயே வைத்திருப்பதன் வழியாக காலத்தைச் சற்று நிறுத்திவைக்கிறேன் என்றும், அம்மாவின் அறைக்குள் போகும்போது அவள் அந்த அறையில் இருப்பதாக உணர்வதாகவும் குறிப்பிடுகிறார். அம்மா, தனக்காக அந்த அறையில் காத்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்.

ஒரு எழுத்தாளனாக, தான் மறக்கடிக்கப்படுவதையே விரும்புவதாக உளமாற இந்த நேர்காணலில் கூறுகிறார். ஏற்கெனவே போதுமான அளவு நினைவுகள் இந்தப் பூமியில் இருக்கின்றன. நிறைய புத்தகங்களும் எழுதப்பட்டுவிட்டன என்கிறார். தன்னால் அடையாளம் காண இயலாத ஒருவரை எதிர்கொண்ட அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார். “போர்ஹெஸ், உங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லியபடி அறிமுகமாகிறார் அந்த நபர். “எழுத்தாளர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனை நீங்கள்தான் எனக்கு அறிமுகம் செய்தீர்கள்” என்று அவர் சொன்னதைக் குறிப்பிட்டு, தன் வாழ்க்கை வீண் இல்லை என்று உணர்ந்ததாகவும், ஒரு பெருமை மிக்க எழுத்தாளனை ஒருவருக்கு அறிமுகப்படுத்தியதற்காகவே இந்த வாழ்க்கை குறித்துப் பெருமை அடைவதாகவும் குறிப்பிடுகிறார்.

நேர்காணல் கொடுப்பதற்கு மற்ற சில எழுத்தாளர்களைப் போல நீங்கள் பணம் வாங்குவீர்களா என்று கேட்கப்படுகிறது. பணக்காரர்கள் கருமிகளாக இருப்பதும் பேராசையுடன் இருப்பதும் விந்தையானது என்று கூறி தன்னை ஒரு ஏழை என்று குறிப்பிடுகிறார். ஏழைகள் தாராளமனம் படைத்தவர்கள் என்கிறார். உடைமை என்பது திருட்டு தான் என்கிறார். 

Comments