Skip to main content

Posts

Showing posts from October, 2024

குயில்

நம் தாமச இருட்டுறக்கத்தின் போர்வையைத் துளைத்துக் கிழிக்க முயல்கிறது மீண்டும் மீண்டும் அந்தக் குயிலின் குரல். கதியற்றவர்கள் நாம் என்று அறியுமா அது. எங்கெல்லாம் வந்திறங்கித் தரிக்கிறோமோ அந்த இடமெல்லாம் கதியற்றது என்பதை  அறியுமா அது. மேலான ஒரு கிளையிலிருந்து எங்களைக் குரைத்தெழுப்புவதால் அதுவே ஒரு கதியற்ற பறவை என்றதற்குத் தெரியாமல் போகுமா?

வேண்டாம் எரியட்டும்

நாதியற்றவர் நாம் என்று ஓர்மை மெலிதாய் தொடங்கும்போது உறக்கம், தன் நெசவை ஆரம்பித்துவிடுகிறது கர்மமோ சாவோ சில விளக்குகள் எரியாது. அதை எரியவைக்க முயற்சிக்கவும் வேண்டாம். சில விளக்குகள் அணையாது. அவற்றை அணைக்க முயற்சிக்கவும் வேண்டாம்.

உன் பூ

வெளியே நிசப்தத்தில் தன் மகத்துவத்தின் இருட்டில் யார் பார்வையும் படாத இந்நடுச்சாமத்தில் கொத்துக் கொத்தாய் பூத்து உதிர்ந்துகொண்டிருக்கும் சரக்கொன்றை மரமே எந்தப் பயங்கரத்திலிருந்து விடாமல் சொரிகிறது உன் பூ?

பேரிக்காய்

மூடிய ஒற்றை நிலைக்கதவுக்குப் பின்னால் அம்மா விசும்பிக் கொண்டிருக்க அப்பாவின் உறுமல் உயர்ந்தபடியிருந்த மத்தியான வேளை. வழக்கம்தானே இது என்று ஆறுதல் சொல்வதைப் போல அசந்தர்ப்பத்தில் வந்து சிமெண்ட் முற்றத்தில் என் முகத்தைப் பார்த்தபடி இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் அத்தை. வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் உரச்சாக்குப் பையிலிருந்து துழாவி பேரிக்காயை எடுத்துக் கொடுத்தாள். அன்று எனக்கு முதல்முதலாக அறிமுகமான பேரிக்காயைக் கடித்தபோது மிகக் கசப்பாகவும் அந்த மத்தியானத்தின் கனத்தை அதிகரிப்பதாகவும் இருந்தது. நானும் அத்தையும் அந்த வீட்டின் திண்ணையில் ஒன்றாகத்தான் அமர்ந்திருந்தோம். அத்தை எப்போது கிளம்பிச் சென்றாள்? எனக்கு ஞாபகத்தில் இல்லை. அன்றிலிருந்து பேரிக்காயை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பெங்கும் பரவுகிறது  அந்தக் கசப்பு.

திருப்பதி

மூன்றாம் சாமத்தின் முடிவு எதுவுமே தெரியாத எதுவுமே பிறக்காத இருட்டினுள் திருப்பதிக்கு அழைத்துச் சென்றாள் அம்மா பெருமாளைப் பார்ப்பதற்கு முன்னால் மலையில் சுற்றும் புலிகளைக் கடக்க வேண்டுமென்றாள். புலி வாயில் சிக்கினாலும் பெருமாளின் திருவடியைப் பார்த்தமாதிரிதான் அவள் உண்டாக்கிய இன்னொரு இருட்டில் கேலியா? சரணாகதியா? எனக்குத் தெரியவில்லை. தென்மூலையில் பிறந்த அம்மாவுக்கு திருப்பதி என்பது சிறுவயதில் கனவாகவும் கதையாகவுமே இருந்திருக்கும். பெருமாளே மகாலட்சுமியைத் தேடி இங்கே வந்தவன்தானே. காலம்காலமாக கூட்டம் கூட்டமாக ஜனங்களும் அந்த லட்சுமியைத்தான் தேடி வந்துகொண்டே இருப்பதாய் திருப்பதியின் திசையைக் காட்டிச் சொன்னாள் அம்மா. ஆட்டோவின் மங்கலான முன்விளக்கொளியில் வாழைத் தோப்புகள் கடப்பதைப் பார்த்தோம் சில்லிடும் ஐப்பசிக் குளிரில் அம்மாவின் உடலோடு நெடுங்காலத்துக்குப் பிறகு கதகதப்புக்காக கட்டிக்கொண்டேன் ‘மணி, இந்த இருட்டுதான் அம்மா’ அசரீரியா என் மனக்கோலமா தெரியவில்லை அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை. நடுவில் ஆட்டோ திடுக்கிட்டு நின்றது முன் பைதாவுக்கு சற்று முன்னர் வெள்ளை வேட்டி கட்டிய தடித்த சிவப்பு தேகம் வ